உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, March 26, 2017

நடிகர் ரஜினி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?

avargal unmaigal
நடிகர் ரஜினி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?

ரஜினி விஷயம். இலங்கை பயணத்தை சொந்தக்காரணங்களால் ரத்து செய்கிறேன் என்று சொல்லிவிட்டுபோயிருந்தால் தொல்லையில்லை.. ஏன் ரத்து என்பதற்கு, மூன்று பக்க அறிக்கை?

‘’நீங்கள் சொல்வது நியாயம் இல்லை என்றாலும் இப்போதைக்கு ஏற்றுக்கொண்டு ரத்து செய்கிறேன்.. ஆனால் மீண்டும் போகும்போது என்னை இப்படி தடுக்காதீர்கள்’’ என்ன தெளிவு… அடேங்கப்பா..

சரி விஷயத்திற்கு வருவோம். எட்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கை இனப்படுகொலை உலகை உலுக்கியது. தமிழகமே கொந்தளித்தது. அப்போது ஒரேயொருமுறை நிகழ்ச்சி ஒன்றில் ராஜபக்சேவை தூக்கிப்போட்டு மிதிக்கவேண்டாமா என்று ரஜினி ஆவேசமாக பேசினார்..

அதன் பிறகு பேசவில்லை. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டபோதும் இவர் கண்டிக்கவில்லை..

இதற்காக நாம் ரஜினியை குறை சொல்லமுடியாது. அவர் ஒரு நடிகர்..எல்லா நேரத்திலும் எல்லா பிரச்சினைக்கும் கருத்து கந்தசாமியாக மாறியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது..

ஆனாலும் அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என்று குழப்புவது, மோடி போன்றவர்களை வீட்டுக்கு வரவழைத்து அரசியல் செல்வாக்கை உலகத்திற்கு காட்டுவது.. இதைப்பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தால் எங்கோ போய்விடும், வேண்டாம்

இவ்வளவு நாள் கழித்து திடீர் ஞானோதயம் வந்த கதையாய், இலங்கைக்கு ரஜினி பயணம். அந்த நாட்டு அரசு அழைத்ததா? இல்லை. துயரத்தில் இருக்கும் தமிழர்கள் அழைத்தார்களா? அதுவும் இல்லை. தன் சொந்த விருப்பத்தின்பேரில் சொந்த பணத்தில் செல்ல விரும்பினாரா? அய்யய்யோ அதுவும் இல்லை.

லைகா நிறுவன உரிமையாளர் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார்...யார் இந்த லைகா நிறுவனம்.. ரஜினி நடித்து ஷங்கர் இயக்கும் பல நூறுகோடி ரூபாய் பட்ஜெட் கொண்ட எந்திரன் படத்தின் இரண்டாம் பாக தயாரிப்பாளர்.

ஆக தனது முதலாளி கூப்பிடுகிறார். தட்டமுடியாத சூழல் ஏற்பட்டிருக்கும்.. இவர் போகிறார்.. இதில் எங்கே வருகிறது இலங்கை தமிழர் பாசம்? புனிதப்போர், மாவீரர்கள் வாழ்ந்த பூமி,.. மண்ணாங்கட்டி சாமி என்பதெல்லாம்…

தமிழக மீனவர்கள் பிரச்சினைபற்றி இலங்கை அதிபரிடம் பேச நேரம் கேட்டிருந்தாராம்..அண்மையில் ஒரு ராமேஸ்வரம் மீனவ இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டு தமிழ்நாடே மத்திய அரசின் சட்டையை பிடித்து உலுக்கியது..அப்போது ரஜினி ஏதாவது பேசிவிட்டு இப்போது இதை சொல்லியிருந்தால்கூட ஒரு அடிப்படை நேர்மை இருந்திருக்கும்..

உலகிலேயே அண்டை நாட்டு மீனவர்களை நூற்றுக்க ணக்கில் சுட்டுக்கொன்றிருக்கும் ஒரே நாடு இலங்கை. அதன் அதிபரிம் பேச இவர் போகப்போகிறாராம் அதை தடுக்கிறார்களாம். இவர் போய் பேசியவுடன் இலங்கை வழிக்கு வந்துவிடும் என்பதை எந்த கூமுட்டையாவது நம்புவானா?

ரஜினி பேசவேண்டிய இடம் நம்ம மத்திய அரசிடம். அவருக்கு நெருங்கிய நண்பரான பிரதமரான மோடியிடம்.. அதைவிட்டுவிட்டு என்னென்னமோ சொல்கிறார்.

மக்களை மகிழ்விக்கும் கலைஞனாக மட்டுமே உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போனால் உங்களை யார் என்ன கேள்வி கேட்கப்போகிறார்கள்..

திடீர் திடீரென்று வந்து அரசியல் பேசி ஓடிவிடுவது, அரசியல், சினிமா இரண்டையும் தேவையில்லாமல் கலக்கப்பார்ப்பது. படம் வெளியாகும் நேரங்களில் மட்டும் பொதுவெளியில் பரபரப்பை உண்டுபண்ணுவது, விமர்சனம் எழுந்தால் நொந்துபோய் புலம்புவது..எத்தனை காலத்திற்கு இதையே செய்யப்போகிறார் என்றே தெரியவில்லை..

ரஜினியை போன்ற உலக அளவில் புகழ்பெற்ற கலைஞர்கள், நாடுகளுக்கான எல்லைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். கலாச்சார தூதுவர்கள். அவர்கள் நினைத்தால் பல பெரிய பிரச்சினைகளின் தீர்வுக்காண ஆரம்ப புள்ளியாக அமைந்து வழிகாட்டலாம். ஆனால் இதுவரை ரஜினி அந்த மாதிரி எந்த விஷயத்திலும் செய்ததில்லை..

1996ல் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வெற்றிபெற்றது ஒன்றையே அவர் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கிறார். பாமகவுக்கு எதிராக தேர்தல் நேரத்தில் ஆறு மக்களவை தொகுதிகளில் மட்டும் பொங்கி தனது பேச்சு எடுபடாமல் போனது போன்ற சம்பவங்கள்தான் அதன் பின் அதிகம் நடந்துள்ளன என்பதை ரஜினி மறந்துவிட்டார்.

சரியான நேரத்தில் சரியான விஷயத்திற்கு நேர்மையோடு குரல் கொடுக்க முடிந்தால் பொதுவெளிக்கு வருவது நல்லது.. இல்லாவிட்டால் தாம் நடிக்கும் படத்தை மட்டும்தான் வெளியேவிடவேண்டும்..

கோடிக்கணக்கான ரசிகர்களை பின்புலமாக வைத்துள்ள திரை ஜாம்பவான்கள். ஒன்றை செய்வதற்கு முன் பத்து முறை யோசிப்பது நல்லது..சின்ன சறுக்கலுக்குக்கூட எதிர் வினை வராமல் போகாது..பிரபலத்திற்கான விலை அது..


இதை பேஸ்புக்கில் எழுதி வெளியிட்டவர்  ஏழுமலை வெங்கடேஷன் (நன்றி)அன்புடன்
மதுரைத்தமிழன்
நடிகராக இருந்தால் அவர் நடித்த  சினிமாவை மட்டும் விமர்சிக்கலாம். ஆனால் நடிப்பை பொது வாழ்விற்கு கொண்டு வரும் போது அவரை விமர்சிப்பதில் தவறு இல்லையே

டிஸ்கி : ரஜினியின் இலைங்கை பயணம் பற்றி  விமர்சனம் செய்யலாம் என்ற நேரத்தில் என் கண்ணில் பட்டது ஏழுமலை வெங்கடேஷன் அவர்களின் இந்த விமர்சனப் பதிவு. அது மிகவும் சரியென என் மனதிற்க்கு பட்டதால்  எனக்கு எழுதுவது மிச்சம் என்பதால் நானும் விமர்சனம் பண்ணாமல் அதையே இங்கே நான் பகிர்கிறேன்..

விமர்சனம் ஏழுமலை வெங்கடேஷன் அவர்களுடையது தலைப்பும் படமும் என்னுடையது

18 comments :

 1. மோடியயை கூட தமிழக மக்கள் நம்ம்பினாலும் நம்புவார்களே தவிர ரஜினியை மக்கள் நம்ப தயாராக இல்லை என்பதுதான் தற்போது உள்ள நிலமை

  ReplyDelete

 2. சசிகலாவீற்கு அடுத்தபடியாக மக்கள் வெறுக்க ஆரம்பிக்கும் ஒருவராக ரஜினிகாந்த வந்து கொண்டிருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. அவர் எப்பவோ வந்துட்டார் .மக்கள் அவர் திரை நடிப்பை மட்டும் ரசிக்கவேண்டும்
   இது அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும்

   Delete
  2. இப்போது அவர் நடிப்பும் ரசிக்கும் அளவிற்கு இல்லையே அவர் நடித்த சிவாஜி படத்திற்கு அப்புறம் வந்த அனைத்து படங்களும் எனக்கு ரசிக்கும்படியாக இல்லை அவர் அமிர்தா பச்சன் மாதிரி வேறுப்பட்ட வேடங்களில் நடிக்க வேண்டும் அப்போதுதான் கொஞ்சமாக பார்க்கும் படியாக இருக்கும் என்பது என் கருத்து

   Delete
 3. ஹ்ம்ம் :( ஒரு விஷயம் மட்டும் வெறுப்பாக இருக்கு ..அந்த மாவீரர் மண் என்றெல்லாம் சொல்ராரே ..இவர் இந்த வார்த்தையை கர்நாடகாவில் இருந்து சொல்வாரா ..எனக்குரஜினியை ஒரு நடிகராக மட்டுமே பிடிக்கும் அவ்வளவே ..பொது வாழ்வில் ஈடுபடுவோர் விமர்சனங்களை தாங்கி எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற வேண்டும் ..

  ReplyDelete
  Replies
  1. முன்பு எனக்கு அவர் நடிகாராகமட்டுமல்ல ஒரு நல்ல மனிதராகவும் பிடிக்கும் ஆனால் இப்போது அவரின் சுயநல வாதி என்று தெரிவதால் அவர் எனக்கு மிக சாராசரி மனிதனாகவே தோன்றுகிறார்

   Delete
 4. தன் விலைமதிப்பைக் கூட்டிக் கொள்ள
  (அவ்வப்போது மிகக் குறிப்பாக
  தன்படம் வெளியிடப்படும் நேரங்களில்)
  பரபரப்பாகப் பேசத் தெரிந்தஒரு
  கைதேர்ந்த வியாபாரி
  அவர் அவ்வளவே...
  நாம்தான் அவருக்கு கூடுதல் மதிப்பளித்து
  அவ்வப்போதுஏமாந்துபோகிறோம்

  ReplyDelete
 5. வயிற்றுப்பிழைப்புக்கு தமிழகம் வந்த மனுசனை எங்கேயோ கொண்டு போய் வச்சது மக்களோட குற்றம்.

  ReplyDelete
  Replies

  1. உயர்ந்த இடத்திற்கு வந்தது ரஜினியின் திறமை அதற்கு நம்மக்கள் உடன் இருந்திருக்கிறார்கள் அவ்வளவ்வுதான் ஆனால் ரஜினி தேவை இல்லாமல் அடிக்கடி வாய் திறந்து அனாவசியமாக் பேசாமல் இருந்திருந்திருந்தால் அவரி யாரும் ஒன்றும் சொல்லி இருக்கமாட்டார்கள்தானே

   Delete
 6. Replies
  1. என் மனதிலும் நல்ல பகிர்வு எனப்பட்டதால் அதை இங்கே மறுபதிவு செய்து இருக்கிறேன்

   Delete
 7. கில்லர் ஜீ சொன்னதை ஆமோதிக்கிறேன். 100% உண்மை. சிகரெட்டை வாயில தூக்கிப் போட்டு ஸ்டைல் காட்டின கோமாளியை இந்த உயரத்துக்கு கொண்டு போனது நம்ம தப்பு.

  ReplyDelete
  Replies
  1. உயரத்திற்கு அவரே போனாரோ அல்லது மக்கள் அவரை கொண்டு போனார்களா என்பது இங்கு பிரச்சனை இல்லை உயரப் போகும் போதுதான் பலரின் கண்களுக்கு படுவதால் அந்த இடத்திற்கு போனவர்கள் தாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிக கவனத்துடன் செய்யவேண்டும்

   Delete
 8. மதுரைத் தமிழன் கருத்தில் உண்மை இருக்கிறது. பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது திரைப்படங்களில்தான் எடுபடும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வதும் சரிதான் நெல்லைதமிழன்

   Delete
 9. நம் மக்கள் சினிமா தலைகளைத் தூக்கி வைத்துக் கொண்டாடுவது ரொம்பவே! அப்படித்தான் இவரையும்...மக்கள் மட்டுமில்லை மீடியாவிற்கும் பங்கு உண்டு. ஒரு காலத்தில் அவரது நடிப்பு, அவரது நல்ல மனம் என்று பிடித்திருந்தது. இப்போது அது ஏனோ இல்லை...

  நல்ல பதிவு மதுரைத் தமிழன்.

  ReplyDelete
  Replies
  1. மனதிற்கு பிடித்தவர்கள் செய்யும் தவறான செயலால்தான் மனசுக்கு பிடிக்காமல் போய்விடுகிறது

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog