Tuesday, August 11, 2015



தமிழக கல்வி திட்டத்தால் நடுத்தெருவில் நின்ற மாணவி

ஞாயிற்றுக்கிழமை (9/8/15) காலையிலிருந்து ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப், இணையதள பக்கங்கள் என்று பரபரக்க ஆரம்பித்த அந்த செய்தி, இன்று நாளிதழ்களிலும் படபடத்துக் கொண்டிருக்கிறது!

'கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் சேர வேண்டிய ஏழைக் குடும்பத்து பெண் ஸ்வாதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு திசைமாறி வந்துவிட்டார். சில மணி நேரங்களே இருக்கும் நிலையில், கோவைக்கு விமானம் மூலம் சில நல்ல உள்ளங்களால் அனுப்பி வைக்கப்பட்டு, ஒரு வழியாக வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார்' என்பதுதான் அந்தச் செய்தி


இந்த செய்தி இணையத்தில் வலம்  வந்த போது  இது ஒரு போலிச் செய்திதான் என நினைத்து வந்தேன்.காரணம் வாட்ஸ்ஆப்பில் வந்த இந்த செய்தி அப்படியே  செய்திதாள்களிலும் இணைய இதழ்களிலும் பரவிய  இந்த செய்தியில்  முதலில் எந்த ஆதாரமும் இல்லாமல் மொட்டையாக வந்ததுதான். அதன் பின் தான் ஆதாரத்துடன் இந்த செய்திகள் வெளி வரத் தொடங்கின.


திருச்சி மாவட்டம், முசிறி பகுதியை சேர்ந்த விவசாயி ராஜேந்திரனின் ஒரே மகள் சுவாதி. படித்து வேளாண் விஞ்ஞானி ஆகவேண்டும் என்பது எதிர்கால ஆசை.  ப்ளஸ்-டூவில் 1,076 மதிப்பெண்கள் எடுத்திருந்த இவரின் விண்ணப்பம் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டது. ஏற்கெனவே தேர்வுபெற்ற மாணவர்கள் சிலர், வேளாண்மைக் கல்வியை விட்டு வேறு படிப்புகளுக்குச் சென்று விட்டதால், ஸ்வாதிக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சேரும் வாய்ப்பு கிடைத்தது.

ஆகஸ்ட் 8-ம் தேதி காலை 8.30 மணிக்கு கோயம்புத்தூர் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடக்கும் இறுதிகட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள வருமாறு மின்னஞ்சல் (இமெயில்) அழைப்புக் கடிதம் ஒன்றை ஸ்வாதிக்கு அனுப்பியது வேளாண்மை பல்கலைக்கழகம். அண்ணா கலையரங்கம் என்று இடம் பெற்றிருந்த வாசகத்தை அண்ணா பல்கலைக்கழகம் என்று தவறாக புரிந்துகொண்ட மாணவி ஸ்வாதி, அம்மாவுடன் சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அதேநேரம் வந்தடைந்தார். ஆனால் அவர் செல்லவேண்டியது கோவை அண்ணா கலையரங்கிற்கு; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அல்ல என தெரியவந்தபோது மாணவியும் அவர் அம்மாவும் குழம்பிதான் போனார்கள்.


அப்போதுதான்  அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்ட அவர்களுக்கு கைகொடுத்து பேருதவி செய்திருக்கிறார் எம்.சரவணன். டெக் மஹேந்திரா தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிபவர் . உடனே அவர் நண்பர்களுடன் கலந்து ஆலோசித்து அந்த ஏழைக் குடும்பத்தை விமானம் மூலம் அனுப்பி அந்த சீட்டு அந்த மாணவிக்கு கிடைக்க வழி செய்தார். அவரது மனிதாபி மானம் மிகவும் வியக்க வைக்கிறது. அதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

அப்படி அவருக்கு நானும் எனது பாராட்டை தெரிவித்து கொள்கிறேன்

இப்போது நாம் ஒரு விஷயத்திற்கு வருவோம். இந்த மாணவி அதிக மார்க் எடுக்க வைத்த தமிழக கல்வி அவருக்கு நடைமுறையில் வாழ அனுபவ பயிற்சி கொடுக்கவில்லை என்று பார்க்கும் போது வேதனையாகத்தான் இருக்கிறது. இதைத்தான் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்று முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றுள்ளனரோ? அதிக மார்க் எடுக்க வழி வகைகளை போதிக்கும் கல்வி அவளை ஒரு சின்ன விஷயத்தை கூட படித்து புரிந்து கொள்ள சொல்லி தரவில்லை என்று நினைக்கும் போது மன வேதனையைத்தான் தருகிறது. இப்படிபட்ட கல்வியால்தான் இந்த பெண்ணிற்கு இந்த நிலை. இந்திய கல்வி திட்டமும் பாடத்திட்டங்களும் மாறவேண்டும்



அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. மிக மிகச் சரியே. நேற்றுதான் மைத்துவிடம்....அதாங்க நம்ம மைதிலியிடம் பேசிக் கொண்டிருந்த போது இந்தச் செய்தியைப் பெருமையுடன் சொல்லிக் கொண்டிருந்தார். உதவி செய்தவர் தன் பெயரைக் கூட கொடுக்கவில்லை பாருங்கள்..என்ன ஒரு மனிதாபிமானம் என்று சொல்ல எனக்கும் மேனி சிலிர்த்தது. மனிதம் இன்னும் இருக்கிறது என்று இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். எத்தனையோ கெட்ட செய்திகள் வந்து கொண்டிருக்க இது போன்ற நல்ல செய்திகளைப் பற்றி பேசலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க...எனது மனதில் எப்போதுமே நம் கல்வி முறை பற்றி சிந்தனைகள் ஓடிக் கொண்டிருப்பதால், நீங்கள் சொல்லி இருக்கும் அதே கருத்து தோன்றவும்...அதைத் தோழி மைதிலி என்றாலும் டீச்சராச்சே அதுவும் பாசிட்டிவாகப் பேசியதால் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை...அடுத்த ஒரு கல்விப் பதிவாகப் போடலாம்...ஏட்டுப் படிப்பை விட நடைமுறைக் கல்வி, படிப்பதை அப்ளை செய்வது போன்ற கருத்துகள் சொல்லி.....மைத்துவும் அதை நிச்சயமாக ஒத்துக் கொள்வார்கள்...

    உதவியவர் யார் என்பதும் உங்கள் மூலம் தெரிந்துவிட்டது.....அவருக்கு எங்கள் மகிழ்ச்சியுடன், பாராட்டுகளுடன் பூங்கொத்து....."மனிதர்"
    நீங்கள் எனது கருத்தை இங்கு ப்ரதிபலித்து பதிவாக்கி விட்டீர்கள்.சகோதரரே. மிக்க நன்றி....பாராட்டுகள்...வாழ்த்துகள்..

    கீதா

    ReplyDelete
  2. இப்போதுதான் கீதா வாசித்தார். நேற்று மைதிலி அவர்கள் பேசியபோது சொன்னது என்று என்னிடம் சொல்லி இருவரும் நீங்கள் சொல்லி இருக்கும் ஏட்டு சுரைக்காய் பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தோம். கீதா இதைச் சொல்லி ஒரு கல்வி பற்றிய பதிவாக எழுதலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    மிகச் சரியான கருத்து. நமது கல்வித்திட்டம் மாற வேண்டும். இந்தியா முழுக்க. கீதாவின் பயணத்தின் போது கூட இரு வட இந்திய இளைஞர்கள் பயணச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டு தங்கள் இருக்கை எண்ணைக் கண்டுபிடிக்க தடுமாறியதைச் சொல்லிய போதும் அறிந்தது...இந்தியா முழுவதுமே கல்வித்திட்டம் மாற வேண்டும். நடைமுறை வாழ்க்கைக்கு உதவாத கல்வி பயனில்லை.

    நான் குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கும் போது, அவர்களுக்கு அதை நடைமுறையில் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான பயிற்சியும் கொடுப்பதுண்டு. உதாரணமாக, வங்கி, ரயில் பயணம் பதிவு செய்யும் விண்ணப்பம், வேலைக்கு விண்ணப்பம், இப்படி பல விண்ணப்பங்கள், கடிதங்கள் எப்படி செய்ய வேண்டும் ஆங்கிலத்தில் என்பதையும், தாய்மொழியிலும் எப்படிச் செய்வது என்பதையும் அவர்களைக் கொண்டே செய்யச் சொல்வதுண்டு....

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு,
    நானும் காலையில் செய்தியில் படித்து அந்த நல்ல உள்ளங்களை வாழ்த்தினேன்.
    கல்வி என்பது கற்றுக்கொடுக்கப்படுவதில்லை, கற்றுக்கொள்ள வேண்டியது,
    நம்ம சுட்டு விரல் எப்பவும் நீட்டியே,
    நன்றி.

    ReplyDelete
  4. நானும் இதைத்தான் இப்படித்தான் யோசித்தேன்

    ReplyDelete
  5. மிக சரியாகவே சொன்னீர்கள். இந்த மாணவியை மாதிரியே ஒரு சின்ன விஷயத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல் அதிக மார்க் வாங்க வழி செய்து கொடுக்கும் இந்திய பாடதிட்டங்களும் கல்வி முறையும் என்ன தரப்போகின்றதோ!

    ReplyDelete
  6. உதவியவரை பாராட்டலாம்! முகநூல், செய்தித்தாள்களில் படித்து அறிந்து கொண்ட செய்திதான். நீங்கள் சொன்னபடி ஏட்டு சுரைக்காய் அளவிலேயே இந்தியக் கல்வி முறை உள்ளது. இன்னும் பலருக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு பாரங்களைக் கூட நிரப்ப தெரியாது. ஆனால் மதிப்பெண் இயந்திரங்களாக மார்க்குகளை அள்ளிக் குவித்திருப்பார்கள்! இந்த நிலை மாற வேண்டும்.

    ReplyDelete
  7. இன்றைய பத்திரிக்கையை பார்த்தீரா?

    அந்த மாணவி B.Tech. படிப்பில் சேரவில்லையாம். she says she is interested in becoming a vet.

    குழப்பமான மன நிலையில் இருப்பார் போலிருக்கிறது.

    ஆனாலும் உதவி செய்தோரை பாராட்டியே ஆகவேண்டும். உலகம் இன்றைக்கும் சுழல இவர்கள்தான் காரணம்.

    God bless You

    ReplyDelete
  8. உதவி செய்தவருக்குப் பாராட்டுகளை சொல்லும் அதே நேரம், இன்றைய படிப்பு இப்படி இருக்கிறதே என்று யோசிக்கவும் தோன்றியது.

    ReplyDelete
  9. ungalukku mara kazhandu pochchunnu ninaikkaren..intha mugavriyai sariyakap padiththu counselling ponavngallame amerikkak kalvi padichavangale...

    ReplyDelete
  10. அதானே செங்கதிரோன் கேக்கிற மாதிரி எல்லா புள்ளயுமா ரோட்ல நின்னுச்சு!! ஆனாலும் 1117 மார்க்கு எடுத்த மாணவி இடம் கண்டுபிடிக்க முடியாமல் போனது மதிப்பெண் சார்ந்த தேர்வு முறையின் தோல்வியை தான் காட்டுகிறது:(( அந்த மனிதநேயர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் :)

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.