SBI ஐ வளைத்துப் போடும் அதானி குழுமம்
SBI-க்கு ஸ்கெட்ச் போடும் அதானி குழுமம், வலுக்கும் எதிர்ப்பு... ஆஸ்திரேலியாவில் என்ன நடக்கிறது?
பல இந்திய வங்கிகள் நாளுக்கு நாள் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் வேளையில், எஸ்.பி.ஐ இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது பலரின் கவலை தோய்ந்த பயமாகும்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (State Bank of India) என்று கூறியவுடன் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் அதனுடன் தொடர்பு படுத்திப் பார்க்கும் அளவுக்கு அதன் நீட்சி உள்ளது. அதற்குப் பல்வேறு காரணிகள் உள்ளன. இந்தியாவின் வங்கி வர்த்தகத்தில் நான்கில் ஒரு பகுதியைத் தன்னகத்தே கொண்டிருப்பதோடு மட்டுமன்றி, ஏறத்தாழ 2.5 லட்சம் வங்கி ஊழியர்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்து வருகிறது. அதிலும் கிட்டத்தட்ட நான்கில் ஒருவர் பெண் ஊழியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1806-ம் ஆண்டு பேங்க் ஆஃப் கல்கத்தாவாக (Bank of Calcutta) தோன்றி, பின்னர் பேங்க் ஆஃப் மதராஸ் (Bank of Madras), பேங்க் ஆஃப் பாம்பே (Bank of Bombay) போன்ற வங்கிகளுடன் இணைந்து, அதன் பின் பல்வேறு மாற்றங்களுடன் 214 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகவே வலம் வருகிறது ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா.
இவ்வாறு பல பெருமைகளை உடைய வங்கியை எதிர்த்து ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் மாணவர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடந்த 20-ம் தேதி (நவம்பர் 2020) அன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கு காரணம் ஆஸ்திரேலியாவில் உள்ள அதானியின் கார்மைக்கேல் நிலக்கரி சுரங்கத்துக்கு 1 பில்லியன் டாலர் பொதுக் கடனை இறுதி செய்வதற்கான முனைப்பில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ) உள்ளது என்ற செய்திதான். இது ஆஸ்திரேலியாவில் பெரும் சலசலப்பை உண்டு செய்துள்ளது.
முதலில் ஆஸ்திரேலியாவில் மக்களின் வரிப்பணத்தின் மூலமும் பின்னர் அங்குள்ள வங்கிகள் மூலமும் தன்னுடைய நிலக்கரி சுரங்கத்துக்கான அனுமதியைப் பெற அதானி குழுமம் முயன்றது. மக்களின் தொடர் எதிர்ப்பு காரணமாக இந்த இரண்டிலும் அது தோல்வியுற்றது. ஆஸ்திரேலியாவின் பெரிய நான்கு வங்கிகளான காமன்வெல்த் பேங்க் ஆஃப் ஆஸ்திரேலியா (Commonwealth Bank of Australia), ஏ.என்.செட் (ANZ), வெஸ்ட்பாக் (Westpac) மற்றும் என்.ஏ.பி (NAB) ஆகியவை அதானியின் குயின்ஸ்லாந்து நிலக்கரி திட்டத்துக்கு நிதியுதவி அளிக்க மாட்டோம் என விலகியது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர், பிற நாட்டு வங்கிகளிடம் சென்று முயற்சி செய்தது அதானி நிறுவனம். அதிலும் பார்கிலேஸ் (Barclays), ஜேபி மோர்கன் (JP Morgan), ஹெச்எஸ்பிசி (HSBC), பிஎன்பி பரிபாஸ் (BNP Paribas), சிட்டி பேங்க் (Citibank), ஆர்பிஎஸ் (RBS), மார்கன் ஸ்டான்லி (Morgan Stanley) போன்ற நிதி நிறுவனங்கள் நிதி அளிக்க மாட்டோம் என விலகிக் கொண்டன. இவை பின் வாங்கியதற்கு சுற்றுச்சூழல் காரணம் மட்டுமன்றி இதில் பொருளாதார சாத்தியக்கூறு (Economic feasibility) இல்லை என்பது முக்கிய காரணியாகும்.
எந்தவொரு தனியார் முதலீட்டாளரும் தொடத் துணியாத ஒரு திட்டத்திற்கு இந்திய மக்களின் பணத்தில் இயங்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உதவ முன் வருவது மிகவும் தவறானது எனவும் இந்தக் கடனை வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் போராட்டங்கள் நடைபெற்றன. கொரோனாவை முன்னிட்டு பல கட்டுப்பாடுகளுடன் இந்தப் பேரணிகளுக்கு அரசு அனுமதி அளித்தது. ஸ்டேட் பேங்க் குறித்த இந்தச் செய்தி வந்த 48 மணி நேரத்துக்குள் இந்தப் போராட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு நடந்துள்ளன.
பொதுப் பணம் பொது மக்கள் நலனுக்காகத்தான் பயன்படுத்தப்பட வேண்டும், தனியார் பெரு முதலீட்டாளர்களின் லாபத்தை அதிகரிக்கும் மற்றும் காலநிலை மாற்றத்தை வேகப்படுத்தக்கூடிய மாசுபாட்டைத் தீவிரப்படுத்தக்கூடிய நிலக்கரித் திட்டங்களுக்கு உதவக் கூடாது என்பது அவர்களின் கோரிக்கை ஆகும்.
காலநிலை மாற்றத்தின் நெருக்கடியில் உலகம் சிக்கித் தவிப்பதோடு மட்டும் அல்லாமல் கொரோனா ஏற்படுத்திய பொருளாதார மந்த நிலையும் சூழ்ந்துள்ள வேளையில் 6,000 கோடிக்கு மேல் இந்த சூழல் மாசுபடுத்தும் திட்டத்துக்கு மக்களின் பணத்தைத் தாரை வார்ப்பது என்பது சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு செயலாகும் என மார்க்கெட் போர்ஸஸ் (Market forces) என்கிற நிறுவனம் தெரிவித்துள்ளது. மார்க்கெட் போர்ஸஸ் என்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டங்களிலிருந்து மக்களின் பணத்தைப் பாதுகாக்க உதவுவதில் கவனம் செலுத்தும் பிரசாரக் குழு ஆகும்.
உலகின் மிகப் பெரிய வங்கிகள் மற்றும் முதலீட்டாளர்கள் உட்பட அதானியின் நிலக்கரி திட்டத்தில் எண்பத்தொன்பது (89) நிறுவனங்கள் ஈடுபட மறுத்துவிட்ட சூழலில் ஸ்டேட் பேங்க் இப்படியான திட்டத்தில் ஏன் இறங்குகிறது எனப் பல அடுக்கடுக்கான கேள்விகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.
அவை,
1. அதானியின் நிலக்கரித் திட்டத்தில் பொருளாதார சாத்தியங்கள் (Economic Feasibility) இல்லை என ஆய்வாளர்கள் கூறுகையில், எஸ்.பி.ஐ என்ன திட்டத்துடன் இதில் ஈடுபட முனைந்துள்ளது?
2. இந்தக் கடனில் என்ன விதமான ஒழுங்குமுறை மேற்பார்வை வைக்கப்படும், என்ன பிணைப்பு தரப்படும்?
3. மிகப்பெரும் பொருளாதார சரிவின் இடையில் ஒரு வெளிநாட்டு நிலக்கரி சுரங்கத்துக்கு 1 பில்லியன் டாலர் கடனை அளிக்க பல்வேறு செயல்படாத சொத்துகளைக் (Non Performing Assets) கொண்ட ஒரு வங்கி ஏன் முயல்கிறது?
இவைதாம் அந்தக் கேள்விகள்.
ஸ்டேட் பாங்கின் இந்த முடிவை எதிர்த்து சிட்னி மற்றும் மெல்போர்னில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா அலுவலகங்களின் எதிரிலும் பிரிஸ்பேனில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலும் கான்பெராவில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் போராட்டம் நடைபெற்றது. மேலே உள்ள கேள்விகளை போராட்டக் குழுவினர் வங்கியிலும் தூதரகத்திலும் எடுத்துச் சென்று தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். இந்தப் போராட்டம் ஆஸ்திரேலியா மட்டும் இன்றி பிற நாடுகளிலும் நடைபெற்றது. தற்போது கோவாவிலும் மாணவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தின் வெலிங்டனில், மக்கள் இந்திய தூதரகத்தில் ஒரு கடிதத்தைக் கையளித்து, அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு அரசுக்குச் சொந்தமான வங்கியின் கடனைக் கொடுக்க வேண்டாம் என்று இந்திய அரசாங்கத்தை வலியுறுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில், அதானியின் நிலக்கரித் திட்டத்துக்கு வங்கி நிதியளிப்பது குறித்த தங்கள் கவலைகளை தெரிவித்து NYC ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா துணைத் தலைவரை சந்தித்து வலியுறுத்தினார்.
பிஜி நாட்டில், சுவாவில் அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கடனை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டு இந்திய தூதரகத்தில் ஒரு கடிதத்தை வழங்கினர். இது பசிபிக் காலநிலை பாதிப்புகளை மோசமாக்கும் என அவர்கள் கவலை தெரிவித்தனர்.
லண்டனிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
உலகின் பல்வேறு இடங்களில் இந்தப் போராட்டம் ஆதரவு பெறுவதற்குக் காரணம் இந்தத் திட்டம் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் என்பதால்தான். மேலும், இந்தியாவில் புதைபடிம எரிபொருள்களைவிட சூரிய மற்றும் காற்றாலை ஏற்கெனவே மலிவானதாக இருப்பதால், அதானியின் நிலக்கரி சுரங்கத்துக்கு எஸ்.பி.ஐ நிதியுதவி செய்வது, மின்சார விலையை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும். இது இந்திய மக்கள் அனைவரையும் நேரடியாகவே பாதிக்கும் செயல் ஆகும்.
3 வருடங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்யத் தேவையில்லை எனும் சூழலில் அதானியின் 2017 திட்டத்துக்கு 6,200 கோடி வரை கடன் தர எஸ்.பி.ஐ ஏன் நிர்ப்பந்திக்கப்படுகிறது என காங்கிரஸின் அஜய் மேகன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தக் கேள்விகளை மாநிலக் கட்சிகளும் விவாதமாக்கும் பட்சத்தில் ஆளும் அரசின் நெருக்குதலில் இருந்து எஸ்.பி.ஐ சற்று தப்பிப்பதற்கு வாய்ப்புள்ளது என வங்கி நிபுணர்கள் கருதுகின்றனர்.
விஜய் மல்லையாவுக்கு கொடுத்த ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்க முடியாமல் தத்தளிக்கும் எஸ்.பி.ஐ, தன்னிச்சையாகச் செயல்படும் பட்சத்தில் மீண்டும் ஒருமுறை அதுபோன்ற தவற்றை செய்யுமா என்பது ஒரு கேள்விக்குறிதான் எனப் பலரும் எண்ணும் சூழ்நிலையில் வந்த இந்தச் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல இந்திய வங்கிகள் நாளுக்கு நாள் அதிக அழுத்தத்தை எதிர்கொண்டு வரும் வேளையில், எஸ்.பி.ஐ இதை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது என்பது ஒரு உண்மையான சவால் மட்டும் அல்ல; பலரின் கவலை தோய்ந்த பயமாகும்.
சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தும் திட்டத்துக்கு இந்திய மக்களின் வரிப்பணம் சென்றுவிடக் கூடாது எனக் கடல் தாண்டி பல குரல்கள் எழும்புவது, இந்தியாவிலுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் ஆகும்.
இருப்பினும் இந்தியாவில் உள்ள வங்கி காப்பாற்றப்பட வேண்டும் எனில் இந்தியாவில் உள்ள பொதுமக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நல்லெண்ணம் கொண்டவர்களும் எதிர்க்கட்சிகளும் அரசும் சிந்தித்தால் மட்டுமே சாத்தியம் என்பதே எதார்த்தமான உண்மை ஆகும்.
நன்றி : பொன்ராஜ் தங்கமணி
அன்புடன்
மதுரைத்தமிழன்
0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.