Friday, July 24, 2026

 மாணவர்களின் கொந்தளிப்புக்கான உண்மையான பின்னணி
      

StudentProtest #DelhiProtest #DelhiPolice #LathiCharge #JantarMantar


இன்று மதிய லஞ்ச்   வேளையில் முகநூலைப் பார்த்தபோது, என் கண்களில் பட்டவை  எல்லாம் டெல்லிப் போராட்டத்தில் மாணவர்கள் தாக்கப்படும் வீடியோக்கள்தான். அவர்கள் தாங்கள் உரிமைக்காக அமைதியாகத்தான் போராடுகிறார்கள். ஆனால், அரசுதான் காவல்துறை மூலம் அவர்கள் மீது வன்முறையை ஏவுகிறது. இந்த மாணவர்கள் மோடிக்கு எதிராகவோ அல்லது ஆட்சிக்கு எதிராகவோ போராடவில்லை; அவர்கள் போராடுவதெல்லாம் நுழைவுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளுக்குத் தீர்வு காணவும், அதற்கு உடந்தையானவர்களைத் தண்டிக்கவுமே  போராடுகிறார்கள். இது தவறா?

மாணவர்கள் அடிபடும் அந்த வீடியோக்களைக் கண்டு என் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது. என் வாழ்வில் நான் இப்படி என்றும் உணர்ச்சிவசப்பட்டதில்லை. முதல்முறையாக அப்படி உணர்ந்தேன். அமெரிக்கக் குடிமகனாகிப் பல்லாண்டுகள் ஆன போதிலும், அதனால் எனக்கு நேரடியாக எந்தவொரு பாதிப்பும் இல்லையென்றாலும், இந்திய மண்ணில் பிறந்த ஒரே காரணத்திற்காக இளைய தலைமுறை படும் துயரங்களைக் கண்டு மனம் உருகியதுதான் உண்மை. அதிலும், ஒரு 16 வயதுப் பெண் உடைந்து, ஆவேசமாகப் பேசியது அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. ஒருவித வேதனையுடன், அந்தப் பெண்ணைத் தத்து எடுத்து இங்கே கூட்டி வந்துவிடலாமா என்ற எண்ணம் கூட என் மனதில் எழுந்தது உண்மை.


ஏன் இப்படி மாணவர்கள் போராடுகிறார்கள் என்று பார்த்தால் மனம் கொதிக்கிறது. டெல்லியில் மாணவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதை, நுழைவுத் தேர்வுக்குப் படிக்க விரும்பாதவர்களின் சோம்பேறித்தனம் என்று எளிதில் கடந்துவிட முடியாது. இது அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் முறைகேடுகளுக்கு எதிரான ஒரு நியாயமான உரிமைக்குரல்.

இந்த விவகாரத்தில் மாணவர்கள் ஏன் இவ்வளவு தீவிரமாகப் போராடுகிறார்கள் என்பதற்கான உண்மையான காரணங்கள்:


மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளப் பயப்படவில்லை; மாறாக, பல மாதங்கள் மற்றும் ஆண்டுகள் தூக்கமின்றி அவர்கள் உழைக்கும் உழைப்பு, லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வினாத்தாளை விலைக்கு வாங்கும் ஊழல்வாதிகளால் சில மணிநேரங்களில் அடித்துச் செல்லப்படுவதைத்தான் அவர்களால் தாங்க முடியவில்லை. நேர்மையாகப் படிக்கும் மாணவர்களின் உழைப்புக்கு எங்குமே மதிப்பில்லை என்ற நிலை உருவாகும்போது, ஆத்திரம் கொள்வது இயல்பானதே. 

வெளிநாடுகளுக்குச் சென்று படிக்கவோ அல்லது போலிப் பட்டங்களை எளிதில் பெறவோ வசதி படைத்தவர்களால் மட்டுமே முடியும். ஆனால், அரசுப் பள்ளிகளிலும் சாதாரண நடுத்தரக் குடும்பங்களிலும் இருந்து வரும் கோடிக்கணக்கான மாணவர்களுக்கு இந்தத் தேர்வுகள்தான் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரே வழி. அந்த ஒற்றைக் கதவும் முறைகேடுகளால் அடைக்கப்படும்போது, அந்த இளைஞர்கள் எங்கு செல்வார்கள்?


தேர்வுத்துறை நிர்வாகத்தின் தொடர்ச்சியான குளறுப்படிகள், போட்டித் தேர்வுகளில் நடக்கும் ஊழல்கள் மற்றும் பொறுப்பற்ற அதிகாரிகளின் அலட்சியப் போக்கு ஆகியவற்றுக்கு எதிராக மாணவர்கள் வீதியில் இறங்கியுள்ளனர். இது அரசியல் நோக்கத்துக்காக அல்ல; தங்கள் உழைப்புக்கும் எதிர்காலத்துக்கும் பாதுகாப்பு கேட்டு அவர்கள் நடத்தும் தற்காப்புப் போராட்டம்.

கஷ்டப்பட்டுப் படிக்க எளிய மாணவர்கள் எப்போதுமே தயங்கியது கிடையாது; ஆனால், அந்த உழைப்புக்குரிய நியாயம் மறுக்கப்படுவதை எதிர்த்துத்தான் இன்று டெல்லி அனல் பறக்கிறது.

ஒவ்வொரு கசிவுக்கும் பிறகு மன்னிப்பு. ஒவ்வொரு தவறுக்கும் பிறகு மௌனம். ஒவ்வொரு போராட்டத்துக்கும் பிறகுஅடி. இது நிர்வாகமா? இல்லையென்றால் accountability-யை ஒழித்த அரசியல் மாதிரியா?

அன்புடன்,
மதுரைத்தமிழன்
#StudentProtest #DelhiProtest #DelhiPolice #LathiCharge #JantarMantar


Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.