Thursday, July 9, 2020

 
Five senses animals are better than six senses human

ஆறறிவு பெற்ற மனிதர்களை விட ஐந்து அறிவு பெற்ற மிருகங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கிறதோ?


மனித இனத்தைச் சார்ந்த நாம் நமக்குத்தான் அறிவு இருக்கிறது அதனால்தான் நாம் சிந்தித்து அலசி ஆராய்ந்து எந்த விஷயத்தையும் சிறப்பாகச் செய்ய முடிகிறது என்று நினைத்துக் கொள்கிறோம். ஒரு வகையில் அது உண்மை என்றாலும் எல்லோரும் அப்படிச் செயல்படுவதில்லைதானே. அப்படி என்றால் எல்லா மனிதர்களையும் மனித இனத்தில் சேர்க்க முடியாதுதானே.


நான் பல சமயத்தில் இப்படி நினைத்துப் பார்ப்பேன். மனிதன் ஆறறிவு உள்ளவன் சிந்திப்பவன் என்றால் எல்லா விஷயங்களையும் சிந்தித்துத்தான் செயல்படுகின்றானா? இல்லை என்றால் ஏதோ குருட்டாம்போக்கில் வாழ்கின்றானா என்று?
 
உதாரணமாக ஒருவன் ஒரு மதத்தைப் பின்பற்றும் போது அதைச் சிந்தித்து யோசித்துத்தான் அந்த மதவழிபாட்டைப் பின் பற்றுகின்றானா அல்லது அவனது பெற்றோர்கள் வழிபடுவதால் அதுதான் சிறந்தது என்று எண்ணி அவனும் அதைப் பின்பற்றுகின்றானா என்று எனக்கு அடிக்கடி நினைக்கத் தோன்றுகிறது.. அவனது பெற்றோர்கள் பின்பற்றுவதால் அது சிறப்பானது என்றால் மற்ற விஷயங்களிலும் அவன் பெற்றோர்கள் பின்பற்றும் அல்லது சொல்லும் விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது நமக்குத்தான் எல்லாம் தெரியும் என்று செயல்படுவதை என்னவென்று சொல்லுவது

எல்லோரும் அறிவாளிகளாக இருக்க முடியாதென்றால் அவர்கள் தேர்ந்தெடுத்துப் பின்பற்றும் மதங்கள் மட்டும் சரியானதா என்ன? ஆறறிவு படைத்த மனிதர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எல்லா மதங்களையும் பற்றிப் படிக்கச் செய்து அதில் தன் குழந்தைகளுக்கு எந்த மதம் பிடிக்கிறதோ அல்லது அவர்களின் அறிவிற்குத் தெரிகிறதோ அதைப் பின்பற்ற வழி வகைகளை ஏற்படுத்தாமல் தான் பின்பற்றும் மதத்தைக் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளச் செய்வது ஏதனால்? கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன்.


இன்று டிவிட்டரில் படித்த உண்மை சம்பவம் இதுதான் ஒரு பெண்மணி ஆசிரியாராகப் பணிபுரிந்து ரிட்டையர் ஆகியவர். தன் குடும்பநலனுக்காகக் கல்யாணம் செய்து கொள்ளாமல் அக்கா , தங்கை மற்றும் சகோதரிகளின் குடும்பத்திற்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்தவர்.குடும்பத்தில் பாசம் அதிக வைத்தவர். ஆனால் என்ன சகோதரியின் பிள்ளைகளின் தேவைக்காகத் தன் சொந்த விட்டையும் விற்றுக் கொடுத்து அவர்களுக்காக வாழ்ந்தவர்... ஆனால் என்ன இப்ப அவர் அந்தக் குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்டுத் தன் ஓய்வூதியம் பணத்தைக் கொண்டு விடுதியில் வாழ்ந்து வந்த அவர் விடுதியின் வாடகை அதிகரித்த அளவிற்கு அவரின் ஓய்வூதியம் தொகை வளராததால் இப்போது அனாதை நிலையைத்தை தேடிக் கொண்டிருப்பதாக அறிந்தேன்.


என்னுடைய கேள்வி இதுதான் பலருக்கும் அறிவை கற்றுக் கொடுக்கும் ஆசிரியருக்கும் தன்னின் வருங்காலத்தைப் பற்றியும் இன்றைய சூழ்நிலையில் மனிதர்களின் மனங்கள் மாறிவருவதையும் அவரின் அறிவால் சிந்தித்துச் செயல்பட முடியவில்லை என்றால் அந்த ஆறாம் அறிவு இருந்து என்ன பயன்?

இப்போது ஐந்து அறிவு பெற்ற விலங்கினங்களைக் கவனியுங்கள். எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.எந்த மாடும் படுத்துக் கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை சுயமாகத் தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டும் தனக்கு வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று தெரிந்தும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்யாது கொள்ளாமல், அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

அப்படியென்றால் ஆறறிவு பெற்ற மனிதர்களை விட ஐந்து அறிவு பெற்ற மிருகங்களின் வாழ்க்கை சிறப்பாகத்தான் இருக்கிறதுதானே

ஆறறிவு பெற்ற நாம் குழந்தைகளை வளர்க்கும் போது சுயநலத்துடன் வாழாதீர்கள் அது போலச் சுயநலத்துடன் வாழ கற்றுக் கொடுக்காதீர்கள். அவர்களுக்குப் பொது நலன்களை அறிய மற்றும் செய்யக் கற்றுக் கொடுப்பதோடு நீங்களும் பொதுநலனுக்காக ஏதாவது செய்யுங்கள் அப்படி நீங்கள் செய்யும் போதுதான் அவர்களும் உங்களைப் பார்த்து கற்றுக் கொள்வார்கள் செயல்படுத்துவார்கள்... அப்படி வளரும் குழந்தைகள் மட்டுமே வருங்காலத்தில் தன் சுயநலத்தை மட்டும் சிந்திக்காமல் தன்னை வளர்த்த உறவுகளுக்கும் சமுகத்திற்கும் உதவி வாழ்வான் அப்படிச் செய்வதுதான் ஆறறிவு படைத்தவர்கள் செய்யும் செயல்.. அப்படி இல்லையென்றால் அவர்கள் ஐந்தறிவு பெற்ற விலங்கினத்தைவிடக் கீழானவர்கள்தான்


ஆறு அறிவு என்றால் என்ன என்பதைத் தொல்காப்பியம் இப்படிச் சொல்லுகிறது என்பதை அறிந்தேன் அதை என்னவென்பதை அறியாதவர்கள் அறியக் கீழே தருகின்றேன்..


புல்லும் மரமும் ஓர் அறிவினவே
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
மக்கள் தாமே ஆறு அறிவு உயிரே.


தொடு உணர்வு மட்டும் இருந்தால் ஓர் அறிவு
தொடு உணர்வும் சுவையும் அறிந்தால் ஈர் அறிவு.
தொடு உணர்வு, சுவை மற்றும் முகரும் அறிவு இருந்தால் மூன்று அறிவு
தொடு உணர்வு, சுவை, முகரும் அறிவு மற்றும் பார்வை இருந்தால் நான்கு அறிவு
தொடு உணர்வு, சுவை, முகரும் அறிவு, பார்வை மற்றும் கேட்கும் திறன் இருந்தால் ஐந்து அறிவு
இவற்றுடன் சிந்திக்கும் திறன் இருந்தால் ஆறறிவு


ஓரறிவு உயிர் என்பது என்ன? இவை தத்தம் உடலால் தொடுவதை மட்டும் அறியும். அதுதான் புல், மரம்.-
மெய்யுணர்வு

தொடு உணர்வோடு நாவினால் சுவையையும் அறிபவை ஈரறிவு உடையவை. அவையே முரள் மற்றும் நந்து. முரள் என்றால் அட்டை. நந்து என்றால் நத்தை.

கரையான் எறும்பு போன்றவை மூன்றறிவு உடையவை. இவை தொடு உணர்வு, சுவை மற்றும் முகரும் பண்பினையும் கொண்டவை. மோப்பம் பிடிக்கும். அதனால் தான் கரையான் புத்தகம் எங்கே இருந்தாலும் வந்து அரிக்கிறது.

நான்கு அறிவு உடையவை என்பவை பார்வையும் சேர்ந்து உடையவை. நண்டு தும்பி ஆகியவை இதற்கு உதாரணம்.

ஐந்து அறிவு உடையவை விலங்கினங்கள். ஐந்தாவது அறிவு என்பது ஒலி அறிதல்.

ஆறாம் அறிவு என்பது தான் மனத்தால் அறியும் அறிவு.

 
madurai tamil guy

எனது முந்தையப் பதிவான வயதானவர்களை கேலி செய்யும் மனப்பான்மை அதிகரித்து வருகிறதா?    என்பதை படித்து அதற்கு தங்களின் பொன்னான நேரத்தை ஒதுக்கி சிறப்பாக கருத்துகள் இட்ட ரமணி சார், கில்லர்ஜி, தன்பாலன், ஸ்ரீராம் ,விசு மற்றும்  கோமதியம்மா அவர்களுக்கு எனது நன்றிகள்.
 


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

 1. அருமை நண்பரே நல்லதொரு கருத்தை ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறீர்கள்.

  யாரும், தனது மதத்தில் இருப்பதை பெருமையாக கருதுவதில்லை, தனது பெற்றோர் எந்த மதமோ அதில் இருக்கிறார்கள் அவ்வளவுதான்.

  இடைப்பட்ட வாழ்வில் அவனது சூழல் மதம் மாறவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான், சில நேரங்களில் பெண்ணுக்காககூட இருக்கலாம்.

  இவ்வுலகில் யாரும் மதத்தை உண்மையாக நேசிக்கவில்லை.

  தான் இந்த மதத்தில் பிறந்தவன் என்றும் கருதும் அனைத்து மனிதர்களுமே அந்தந்த மதத்துக்காரன்தான் என்பது யாருக்கு தெரியும் ? தாய்க்கு தெரியும் சில தாய்க்கே தெரியாத விசயங்களும் இருக்கிறது. ஆனால் இறைவனுக்கு மட்டுமே இந்த உண்மை தெரியும்.

  இப்பொழுது "டியூப் பேபி" என்று சொல்கிறார்களே இந்தக் குழந்தை எந்த மதம் ?

  மதத்தை நேசித்து, மதம் சொன்னதை உண்மையாக கேட்டு நடப்பவரும்,

  அல்லது...

  மதத்தை விட்டு முழுமையாக வெளியேறி விடுபவரும்தான் ஆறறிவு மனிதர்கள்.

  அதனுள்ளே இருந்து கொண்டு ஊழை வேலை செய்பவருக்கு இரண்டே முக்காலறைக்கால் அறிவுதான்.

  காரணம் மதங்கள் அனைத்துமே அன்பையே போதிக்கிறது.

  (அலைபேசியிலிருந்து... ஆகவே நிறுத்துகிறேன்)

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி பதிவை படித்து நீண்ட கருத்துமிக்க பதிலை பகிர்ந்தற்கு மிகவும் நன்றி... அதிலும் போன் மூலம் கஷ்டப்பட்டு கருத்து பதிவு செய்தற்கு மேலும் நன்றி...

   Delete
 2. மதம் மனம் உயர ஏணியாக இருப்பின் நன்று..அதுவே வேலியாக மட்டும் இருக்குமாயின் கொஞ்சம் எட்ட வைக்க வேண்டியதே..பிறர் நலம் பேணுபவர்கள் கொஞ்சம் சுய நலத்திலும் அக்கறை கொள்ளுவது நல்லது...தனக்குப் போகத் தானம் என்பதே சரி...

  ReplyDelete
  Replies
  1. ரமணி சார் மதம் மனிதர்களை மனிதானக்க வேண்டும் அப்படி இல்லாத மதமும் சரி மதவாதிகளும் சரி தள்ளி நிறுத்தப்படவேண்டும். தங்க்கு போகத்தான் தானம் என்பது மிக சரி

   Delete
 3. 'எதையும்' திணிப்பது என்பது இன்றைக்கு பலரும் ஏற்றுக் கொள்வதில்லை... அதுவும் நன்மைக்கே... நீங்கள் சொன்னதுபோல, தானாக உணர்வதும் அறிவு...

  கோழியை பாரு காலையில் விழிக்கும்
  குருவியை பாரு சோம்பலை பழிக்கும்
  காக்கையை பாரு கூடி பிழைக்கும்
  நம்மையும் பாரு நாடே சிரிக்கும்...

  எத்தனை பெரிய மனிதனுக்கு
  எத்தனை சிறிய மனமிருக்கு...

  எத்தனை சிறிய பறவைக்கு
  எத்தனை பெரிய அறிவிருக்கு...

  ReplyDelete
  Replies
  1. தனபாலன் உங்களின் கருத்தாழ்மிக்க பின்னூட்டத்திற்கு நன்றி பதிவிற்கு ஏற்ற பாடல்

   Delete
 4. ஆசிரியர் நிலை வருத்தம்தான்.
  அன்பு வைக்கலாம், பாசம் கூடாது என்பார்கள்.
  அவர் உண்மையாக நேசித்து உதவிகள் செய்து இருக்கிறார், உதவி பெற்றவர்கள் அவரை இப்படி அனாதை நிலையம் தேடவைத்து இருப்பது கொடுமை.

  ReplyDelete
  Replies
  1. கோமதியம்மா ஆமாம் இது மிகக் கொடுமைதானம்மா.. மனதை பாதித்தது

   Delete
 5. ஆறறிவு இருந்து என்ன பயன் ஐயா
  சிந்தனையிலும், செயலாக்கத்திலும் சுயநலன் பெருத்துவிட்ட காலம் இது

  ReplyDelete
  Replies
  1. ஜெயக்குமார் சார் நீங்கள் சொல்வதும் சரி சிந்தனையிலும் செயலலிலும் சுயநலன் மிகவும் பெருத்துவிட்டதுதான்

   Delete
 6. கொஞ்சம் ஹெவியான டாபிக்கை எடுத்து விவரமாக எழுதியுள்ளீர்கள் .எனக்கு என்னவோ ஆறு அறிவு மனுஷனுக்கு இருந்தாலும் எல்லா அறிவும் எல்லா நேரமும் ஒர்க் ஆகிறதில்லை .அதனால்தான்
  பிரச்சனையே . நாம் கூடப் பார்ப்போம் .ஆனால் பார்க்கிற அறிவை ஆக்டிவேட் பண்ணாமல் இயந்திரத்தனமாகப் பார்த்தால் மனதில் பதிவதில்லை . இது குழப்புச்சுன்னாக டெலீட் செய்துவிடுங்கள்

  ReplyDelete
  Replies
  1. அருணாம்மா அந்த ஆசிரியப் பெண்மணியை பற்றி அறிந்ததும் மனது கனத்து போனது.. இப்படியும் மனிதர்களா என்று நினைத்து போது எழுதியபதிவுதான் இது. நீங்கள் குழப்பவில்லை மிக தெளிவாகத்தான் சொல்லி சென்று இருக்கீங்கம்மா...நன்றி

   Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.