Sunday, July 19, 2020

 
Is there any difference between a black crowd and a saffron crowd?

கறுப்பர் கூட்டத்திற்கும் காவி கூட்டத்திற்கும் வித்தியாசம் ஏதுமில்லை?


எந்த மதத்தையும் விமர்சிப்பது தவறு இல்லை ஆனால் மதத்தை இழிவு படுத்துவதுதான் நோக்கம் என்றால் அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதுமட்டுமல்ல அது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய செயல்

விமர்சனம் பண்ணுவதற்கும் இழிவுபடுத்துவதற்கும் உள்ள வித்தியாசம் தெரியாதவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல தமிழகத்தைச் சார்ந்த பகுத்தறிவுவாதிகளும்


  
இந்தப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் கறுப்பர் கூட்டம் விமர்சிப்பதாகக் கருதி இழிவுபடுத்தி இருப்பதாகச் செய்திகள் அறிந்தேன், இன்னும் நான் அந்தக் காணொளியைப் பார்க்கவில்லை பார்க்கவிரும்பவும் இல்லை.


இந்த விஷயத்தை அல்லது இது போல வேறு எந்த மதங்களையும் விமர்சித்து இருந்தால் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அரசியலாக்கத் தேவை இல்லை என்பதுதான் என் கருத்து


கருத்துச் சுதந்திரம் உள்ள நாட்டில் இந்தக் கறுப்பர் கூட்டம் அவர்களின் கருத்துக்களைச் சொல்லி இருக்கிறது அது மிகவும் சிறிய கூட்டம் அந்தக் கூட்டத்தின் கருத்துக்களால் பெரும்பாலான மக்கள் யாரும் கடவுள் பக்தி கொண்டவர்கள் யாரும் தங்கள் மனதை மாற்றிக் கொள்ளப் போவதில்லை, அதுதான் நிதர்சனம்..

நாம் கோயிலுக்குச் செல்லும் போது சாக்கடை தண்ணீர் நம் மீது பட்டுவிட்டால் அதைக் கழுவிவிட்டு தான் செல்லுவோமே தவிர அந்த மொத்த சாக்கடையிலும் விழுந்து புரண்டு கொண்டு இருக்க மாட்டோம் அல்லவா அது போலத்தான் இதையும் அப்படியே கருதி விலகிச் சென்று இருக்க வேண்டும்.. ஆனால் அப்படிச் செல்லாமல் பக்தி காரணமாக அல்ல அரசியல் காரணமாக அதை மேலும் அசிங்கப் படுத்திக் கொண்டிருக்கிறோம்..


அந்தக் கறுப்பர் கூட்டம் அவர்களின் அறிவிற்குப் பட்டதைத்தான் கூற முடியும் அதற்கு மேல் அவர்களால் சிந்திக்கக் கூட முடியாது... காரணம் அவர்களின் பிறப்பு வளர்ப்பு கற்ற முறையும்தான் காரணமாக இருக்க முடியும்.... அவர்களை நாம் மிகப் பெரிய அறிவாளிகளாகக் கருதி பதில் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால் பைத்தியக்காரனுடன் நாம் சண்டை போட்டுக் கொண்டிருப்பது போலத்தான் இதுவும் ஒரு வேளை முட்டாள்கள் அப்படிச் சொல்லிக் கொண்டு இருக்கும் போது கடவுள் பக்தி கொண்ட அறிவாளிகள் என்ன செய் இருக்க வேண்டும்? தன் மதத்தைப் பற்றிய சிறப்புகளை மிக அதிகளவில் பேசி அதன் சிறப்பை அறியாதவர்களும் அறியச் செய்து இருக்க வேண்டும் அதுதான் நல்லவர்கள் படித்தவர்கள் செய்யும் முறை ஆனால் நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகின்றேன்


இங்கே படித்தவர்கள் பலர் கறுப்பர் கூட்டத்தை( அது வேற்று மதத்தவர்களின் கூட்டம் அல்ல அவர்களும் இந்துக்கள்தான்) கண்டிப்பதற்குப் பதிலாக இந்து மதத்தை இழிவு படுத்தியது போல மற்ற மதங்களையும் இழிவு படுத்த உங்களுக்குத் தைரியம் இருக்கிறதா என்று கறுப்பர் கூட்டத்தை நோக்கி கேள்விகளை எழுப்புகிறார்கள்.....இது என்ன மாதிரியான புரிதல் அல்லது அறிவுரை என்று எனக்குப் புரியவில்லை ஒருவன் இந்து மதத்தை இழிவுபடுத்தினான் என்றால் அதைக் கண்டிக்கலாம் அல்லது அதற்கு விளக்கம் சொல்லி அவர்களைத் தெளிவிக்க முயற்சி செய்யலாம் ஆனால் அதைவிட்டு விட்டு மாற்று மதங்களை இது போல இழிவு படுத்த முடியுமா என்று கேள்வி கேட்பது எந்த வகையில் பொருத்தமாக இருக்கிறது மாற்று மதங்களை இழிவுபடுத்துவதுதான் இதற்குப் பரிகாரமா என்ன? அப்படியானால் கறுப்பர் கூட்டத்தில் உள்ள அறிவாளிகள் போலத்தான் நீங்களுமா என்ன?

பிற மதத்தைச் சார்ந்தவர்கள் இந்து மதத்தை விமர்சனம் செய்தால் முதலில் உன் மதத்தில் உள்ளதைச் சரி செய் பிறகு அடுத்த மதத்தை விமர்சனம் செய்யலாம் என்று சொல்லாம் ஆனால் இங்கு விமர்சிப்பது இழிவு படுத்துவது எல்லாம் கறுப்பார் கூட்டம் என்ற இந்து மதத்தைச் சார்ந்தவர்கள்தானே?


ஒருவேளை இந்தக் கறுப்பர் கூட்டத்திற்கு ஆதரவாக வேறு மதத்தவர்கள் செயல்பட்டால் அதைக் கடுமையாகக் கண்டிக்கலாம் அதில் தவறு ஏதுமில்லை..

எனக்கென்னவோ இந்த விஷயம் வரும் தேர்தலை வைத்துக் காவிக்கள் செய்யும் அரசியலாகவே கருதுகின்றேன். அப்படி இல்லையென்றால் இராமர் பிறந்த இடம் இந்தியா அல்ல, நேபாளம் என்று நேபாளப் பிரதமர் அதிகாரப்பூர்வ  அறிக்கை விடுகிறார். இன்றைய மோடி தலைமையிலான் பாஜக ஆட்சி  ஆட்சி அமைவதற்கு அடிக்காரணமாக இருந்த ராமரின் பிறந்த இடத்தினைப் பற்றிய ஒரு தவறான விஷயத்தை நேபாளப் பிரதமர் பேசுகிறார் என்றால் இன்றைக்குத் தமிழகத்தில் பொங்கிப் பிரவாகம் எடுத்து யூடியுப் காணொளிகள், போராட்டங்கள் அறிக்கைகள் எனத் தகித்துக் கொண்டிருப்பவர்கள் இந்தியா முழுவதும் இந்த இராமர் விஷயத்திற்காகப் பொங்கி எழுந்து இருக்க வேண்டாமா என்ன? ஏன் சிறிதும் அது பற்றித் திருவாய் மலர்ந்தருள மாட்டேன் என்கின்றார்களே ஏன் என்று யாராவது கொஞ்சமாவது யோசித்தீர்களா என்ன?



அரசியல்வாதியை விடுங்கள் காவிகளை விடுங்கள்..கறுப்பர் கூட்டத்தை விடுங்கள். தமிழகப் பகுத்தறிவுவாதி கட்சிகளை விடுங்கள். கடவுள் அவர்களைப் பொறுத்தவரை அரசியல் செய்வதற்காக மட்டுமே அதுதான் அவர்களின் கடவுள் மறுப்பு அல்லது ஆதரவு கொள்கை.  இப்ப சொல்லுங்க  கறுப்பர் கூட்டத்திற்கும் காவி கூட்டத்திற்கும் வித்தியாசம் ஏதுமில்லைதானே?

 உண்மையான இறை பக்தர்களுக்குக் கடவுள் என்பவர் அது போல அல்லதானே ... கடவுள் பக்தி இருக்கும் ஒவ்வொருவரிடமும் மன்னிக்கும் எண்ணமும், அன்பு உள்ளமும் கண்டிப்பாக இருக்கும் அதைத்தான் இறை மனம் என்பது.


https://youtu.be/CfXXMZK9grE



நான் கறுப்பர் கூட்டம் வெளியிட்ட காணொளியை பார்ப்பதற்கு பதிலாக இந்த காணொளியை பார்த்து கேட்டு மகிழ்ந்தேன். நீங்களும் அது போல கேட்டு மகிழ்ந்து அவர்களை ஒதுக்கி செல்வோம்






ம.கா.சிவஞானம் என்பவர் முகநூலில் எழுதி இருப்பதை முடிவாக இட்டுப் பதிவை முடிக்கிறேன்


கந்த சஷ்டி கவசத்தை
இப்படி விமர்சிக்கலாமா என்றேன்
'நீ பெரியாருக்கு எதிரியா?'
என்று அதட்டினார்கள்

பெரியார் சிலையை
அவமதித்தது சரியா
என்று கேட்டேன்
'நீ பி.ஜே.பி-க்கு எதிரியா?'
என்று மிரட்டினார்கள்

நான்
பெரியாரைப் படிப்பவன்
முருகனை ஆராதிப்பவன்
என்றால்..
'அது கூடாது:
இரண்டில் ஒன்றை மட்டும் சொல்' என்கிறார்கள்

கேள்வி கேட்பவர்கள் எல்லாம்
ஏதோ ஒரு விதத்தில்
யாரோ ஒரு தரப்புக்கு
எதிரி ஆக்கப்படுகிறார்கள்

எதற்கு வம்பு என்று
ஒதுங்கிப் பதுங்குவது
அடிமையின் இயல்பாகிறது

உரிமைகள் பல கொண்ட
ஜனநாயக தேசம்
மெல்ல மெல்ல
அடிமைகளின்
கூடாரமாகிக் கொண்டிருக்கிறது..
தலைவர்கள்
மெல்ல மெல்லச்
செங்கோல்
ஏந்திக்கொண்டிருக்கிறார்கள்!



அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி; எல்லா விஷயங்களிலும் தன் முக்கை நுழைத்து கருத்துச் சொல்லும் திமுகத் தலைவர் ஸ்டாலின் தனக்கு மத நம்பிக்கை இல்லை என்றாலும் பெரும்பான்மையானவர்கள் பின்பற்றும் மதமான இந்து மத நம்பிக்கைகளை இழிவுபடுத்துவதைக் கண்டித்திருக்க வேண்டும் அதைவிட்டு விட்டு தன் கட்சி சார்பாக மற்றவர்களை விட்டுப் பேச சொல்லுவது சரியல்ல... அப்படி செய்வது அது கட்சியின் கருத்துதான் என் கருத்தல்ல என்பது போல இருக்கிறது Mr.Stalin Shame on you!




0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.