Saturday, April 4, 2020

ஒரு குறிப்பிட்ட சமுகத்தீன் மீது  கலங்கத்தை ஏற்படுத்த செய்தியை எப்படி போடனும் என்பதை இவங்களே முடிவு செய்றாங்க ?



இது பத்திரிக்கை செய்தி. இதில் உள்ள இரண்டு செய்திகளில் ஒரு செய்தி தமிழ்நாட்டில் உள்ள குழந்தைக்கூட தெரியும்!! இன்னொரு செய்தியைப் பற்றி எவருக்கும் தெரியும் தெரியாது..தெரிந்தாலும் கூட பெரிதாக உறுத்தாது!!

காரணம்??


தென்காசியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர் குடியிருக்கும் அந்தப் பகுதியில் நேற்று மதியம் சுமார் ஐம்பது பேர் பள்ளிவாசலில் தொழுகைக்கு கூடுகின்றனர்.

அந்தப் பகுதி 100% இஸ்லாமியர்கள் குடியிருக்கும் பகுதி! ஒரே ஒரு மாற்று சமூகத்தவர் கூட அந்த வீதிகளில் குடியிருக்கவில்லை. அப்படி இருக்க இப்படி சிலர் கூடி தொழுகை நடத்த இருப்பதை போலீஸூக்கு யார் சொல்லி இருக்க முடியும்? போலீஸ் அடித்து விரட்டுவதை வீட்டின் மாடியில் இருந்து வீடியோ எடுத்து இந்தத் தவறை யாரும் செய்யாதீர்கள் என்று சமூக வலைதளத்தில் விட்டது யார்? யோசியுங்கள்.

அங்கிருந்த சக இஸ்லாமியர்கள்தான் காவல்துறைக்கு தகவல் குடுத்து வந்து கலைக்கச் சொன்னவர்கள்.

அங்கிருந்த இஸ்லாமியர்கள்தான் படம் எடுத்து இப்படிச் செய்யாதீர்கள் உதை வாங்காதீர்கள் என்று வெளியிட்டவர்கள்!!

எந்த ஒரு மாற்று மதத்தவரும் போலீஸூக்கு தகவல் குடுத்து வரச் சொல்லவில்லை.. எந்த மாற்று மதத்தவரும் அங்கு வந்து படம் எடுத்து வெளியிடவில்லை.

ஆனால் போலீஸை வரச் சொன்ன.. படம் எடுத்து வெளியிட்ட இஸ்லாமியரை மனதில் வைத்து "இந்த இஸ்லாமியர்கள் மிக நல்லவர்கள்.. சமூக ஒழுங்கை சட்ட திட்டத்தைக் கடைபிடிப்பவர்கள்" என்று யாருக்கும் நல்லவிதமாக மனதில் தோன்றவில்லை!! ஐம்பது பேர் செய்த தவறுதான் மொத்த இஸ்லாமியர்களின் செயல்பாடும் என்ற பிம்பம் பொது புத்தியில் பதிகிறது!! இந்தத் துலுக்கனுங்களே இப்படித்தான் என்ற எண்ணத்தை உண்டாக்குகின்றது!!
தமிழகத்தில் வசிக்கும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சம் பேர் என்றால் அதில் நேற்று தொழுகை நடத்தக் கூடியவர்கள் வெறும் ஐம்பது பேர் தான்!! மிச்சம் உள்ள எழுபத்தி ஒன்பது லட்சத்து தொன்னுற்று ஒன்பதாயிரத்து தொளாயிரத்து ஐம்பது இஸ்லாமியர்களும் வீட்டில் இருந்தவர்கள்தான்!!! ஆனால் மாற்று மதத்தவர் மனதில் ஐம்பது பேர் வீட்டில் இருந்ததாகவும் மிச்சம் உள்ள 7999950 பேர் தொழுகைக்கு கூடியதாகவும் தான் மனதில் பதிந்து இருக்கும்!!!

அதே நேரத்தில் நேற்று மங்களம்பேட்டையில் நூற்றுக்கணக்கான இந்து பெருமக்கள் கூடி கோயிலில் வழிபாடு செய்துள்ளனர். அவர்களைப் பார்த்து எந்த ஒரு சிறுபான்மை சமூகத்தவரும் "இந்த இந்துக்களே இப்படித்தான்" என்று நினைப்பதே இல்லை. அப்படி ஒரு நினைப்பும் வராது.

இஸ்லாமியர்களோ கிருஸ்துவர்களோ உணர வேண்டிய விசயம் ஒன்றே ஒன்றுதான்.. நம்மில் யாரோ சிலர் செய்யும் தவறு பொது சமூகத்தின் புத்தியில் இந்த துலுக்கனுங்களே இப்படித்தான், இந்த கிரிஸ்டின்களே இப்படித்தான் என்ற எண்ணத்தையே உருவாக்கும். இதற்கு நாம் குறைபட்டுக் கொள்ளவும் முடியாது.

சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்த வரை இது நம்முடைய பூமி..நம் மூதாதையர் வாழ்ந்த பூமி என்று என்னதான் நாம் நினைத்துக் கொண்டாலும் இங்கு நாம் இரண்டாம் தரக் குடிமக்கள்தான். இதான் எதார்த்தம். வலித்தாலும் இதுதான் உண்மை. எனவே இங்கு ஒரே ஒருவர் தவறிழைத்தாலும் அது பட்டர்ஃபிளை எஃபெக்ட் போல மொத்தமாக அனைவரையும் பாதிக்கும். ஆனால் அனைவரும் கூடி நன்மை செய்தாலும் அது உணரப்படவேபடாது. எனவே நமது ஒவ்வொரு சொல்லிலும் செயலிலும் எண்ணத்திலும் ஒருமுறைக்கு நூறுமுறை கவனம் தேவை.

உணருவோம்.


மேலே உள்ள பதிவை எழுதியவர் M.m. Abdulla
கிழே உள்ள பதிவை எழுதியவர்  Sridhar Subramaniam



தப்லீக் ஜமாத் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஒருவழியாக தனிமைப் படுத்தப் பட்டு, தொற்று உள்ளவருக்கு சிகிச்சைகள் துவங்கி விட்டன. இதற்கு நடுவில் சிலர் கடுமையாக நடந்து கொண்டனர். அக்கறையற்று எச்சில் உமிழ்ந்தனர், என்றெல்லாம் தகவல்கள் வருகின்றன. சிலர் டாக்டர் மேல் எச்சில் உமிழ்ந்தார் என்றும் சிலர் இல்லை டாக்டருக்கு அருகில் தரையில்தான் உமிழ்ந்தனர் என்றும் சொல்கின்றனர். ஆடையின்றி மருத்துவ வளாகத்தில் சுற்றுகின்றனர் என்று புகார்கள். இப்பொழுது தென்காசியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு கூடிய கூட்டத்தை போலீஸ் துரத்தி அடித்த வீடியோ வலம் வருகிறது.

மருத்துவப் பணியாளர்களிடையே தகாத முறையில் நடந்து கொண்ட ஆட்களை, அவர்கள் குணமான பிறகு, சட்டப்படி வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டியது அவசியம். அதே போல காவலர்களுடன் ஒத்துழைக்க மறுத்தவர்களையும் உரிய முறையில் வழக்குப் பதிவு செய்து தண்டிக்க வேண்டும். தென்காசியில் தொழுகைக்கு ஏற்பாடு செய்த மசூதி நிர்வாகம் மீதும் நடவடிக்கை பாய வேண்டும்.

ஆனால் விஷயம் இதோடு நின்றால் பரவாயில்லை. இப்படிப்பட்ட செய்திகள் அடுத்த கட்டத்துக்குப் போகின்றன. அது என்ன? 'இந்தத் துலுக்கனுங்களே இப்படித்தான் சார்!' என்பதுதான் அது. இந்த வாக்கியம்தான் இந்துத்துவம் விரும்புவது. நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது. அந்த வாக்கியத்தை சொல்ல நாம் மறுக்கும் பொழுது அவர்களுக்கு பிரச்சினை வருகிறது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? முஸ்லிம்கள் வேண்டுமென்றே ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்பது. யார் கண்டது, அவர்கள் வேண்டுமென்றே கூட வைரஸை பரப்ப முயற்சிக்கலாம், அல்லவா?

இதை யோசித்துப் பார்ப்போம்: தப்லீக் ஜமாத்தில் கலந்து கொண்டவர்கள் 1500 பேர். இவர்கள் எல்லாருமே திட்டமிட்டு கொரோனாவை பரப்புவதற்கு என்று கூடி இருக்கிறார்கள். ஒருவருக்கு ஒருவர் வைரஸை கொடுத்துக் கொண்டார்கள். பின்னர் வெவ்வேறு நகரங்களுக்கு போய் விட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த நிகழ்வுக்கு திட்டமிட்டவர்கள், ஒருங்கிணைத்தவர்கள், சதிகாரர்கள் என்று எல்லாம் சேர்ந்து ஒரு 10,000 பேர் இருப்பார்களா? இந்தத் திட்டமிடல் ஃபோனில், வாட்சப்பில் அல்லது ஈமெயிலில், மீட்டிங்குகள் இவற்றில் எல்லாம் நடந்திருக்குமா? தேசிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டி இருந்தது என்றால் அது எப்பேர்ப்பட்ட மாபெரும் சதியாக இருந்திருக்கும்? அப்படி எனில் இப்படிப்பட்ட மாபெரும் சதிச்செயல் உளவுத்துறைக்கு எப்படி தெரியாமல் போனது? இது மத்திய அரசின், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் தோல்வி என்றல்லவா ஆகிறது? அதற்கு அமித் ஷாவிடம் ஏதாவது பதில் இருக்கிறதா?

சரி, அதை விடுவோம். அப்படி திட்டமிட்டு கூடியவர்கள் ஏன் பட்டப் பகலில் கூடினார்கள். ரகசியமாக யாருக்கும் தெரியாமல் கூட இருந்திருக்கலாமே? அதுவுமின்றி ஏன் அவரவர் ஊர்களுக்கு திரும்பப் போனார்கள்? பொதுமக்கள் கூடும் பகுதிகளுக்கு போயிருக்கலாமே? சற்றே ஊர் ஊராக சுற்றி எல்லாருக்கும் பரப்பி விட்டு அப்புறம் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கலாமே? கொஞ்சமேனும் யோசித்துப் பார்த்தால் இந்த அனுமானம் எவ்வளவு மோசமாக தொனிக்கிறது பாருங்கள்.

விஷயம் மிக எளியது: இந்தக் கூட்டம் கொரோனா பரப்புவதற்கு திட்டமிடப் பட்டதல்ல. உலகெங்கும் மத நிகழ்வுகள்தான் இந்த மாதிரி தொற்றுக்களை பரப்புகின்றன. காரணம் அங்கேதான் உலகெங்கும் இருந்து மக்கள் வந்து திரும்புகிறார்கள். ஆயிரம், லட்சம் என்ற விகிதத்தில் ஒரு இடத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்குப் பரவுகிறது. பிரிட்டிஷ் காலத்தில் ஒவ்வொரு கும்பமேளாவும் பிரிட்டிஷ் அரசுக்கு தலைவலியாக இருந்திருக்கிறது. ஒவ்வொரு கும்ப மேளாவிலும் பல்லாயிரக் கணக்கான மக்கள் காலரா தாக்கி இறந்து போயிருக்கிறார்கள். அதற்காக இந்துக்கள் தங்கள் ஆட்சிக்கு எதிராக சதி செய்யவே கும்பமேளா நடத்துகிறார்கள் என்று பிரிட்டிஷ் அரசு யோசித்திருந்தால் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கும்?

இது போலவே லாக் டவுனுக்குப் பின்னும் கூட அங்கே மாரியம்மன் திருவிழா, இங்கே கோயில் கும்பாபிஷேகம் என்றெல்லாம் வீடியோக்கள் வலம் வந்து கொண்டுதான் இருந்தன. அதையெல்லாம் வைத்து இந்துக்களை விமர்சித்து யாராவது செய்தி பரப்பி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?

இந்தியாவில் 21 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். அவர்களில் 20 கோடியே 99 லட்சத்து 98 ஆயிரம் முஸ்லிம்கள் அரசின் ஆணையை பின்பற்றி வீட்டுக்குள் அடங்கி இருக்கிறார்கள். ஒரு 2,000 பேர் மதிக்காமல் ஒழுங்கின்றி இருக்கிறார்கள். இந்துக்களிலும் அதே விகிதத்தில் மதியாதோர் இருப்பார்கள். இந்த உலகில் முரடர்கள், முட்டாள்கள், முரட்டு முட்டாள்கள் இருக்கிறார்கள். அவர்கள் முஸ்லிமாக, இந்துவாக, கிறித்துவர்களாக இருக்கிறார்கள். அவ்வளவுதான். இவர்கள்தான் இப்படி எல்லாம் பொறுப்பின்றி அலைபவர்கள். கலாட்டா செய்பவர்கள். போலீஸ் மேல் எச்சில் துப்புகிறவர்கள். இதே போல சம்பவங்கள் இங்கிலாந்திலும், நியூசிலாந்திலும் கூட சமீபத்தில் நடந்திருக்கிறது. தனக்கு கோவிட் இருக்கிறது என்று சொல்லி போலீஸ் மேல் எச்சில் துப்பிய ஒருவனை கைது செய்திருக்கிறார்கள். வழக்கமாக இவர்களை எல்லாம் பார்த்து தலையில் அடித்துக் கொண்டு கடப்பது மட்டும்தான் சரியாக இருக்கும். தற்கால சூழ்நிலையில் அவர்கள் சட்டத்தை மீறினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பிடித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

அப்படி செய்யாமல் தனி ஒருவனின் தவறை ஓட்டு மொத்த சமூகத்தின் மேல் போடுவதும் ஒரு வியாதிதான். அந்த வியாதியும் கூட ஒரு வித வைரஸால்தான் ஏற்படுகிறது அந்த வைரசுக்கு இந்துத்துவம், வஹாபிசம், ஜியோனிசம், நாஜிசம் என்றெல்லாம் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு பெயரிட்டு அழைக்கிறார்கள்.

*********************************************





"இப்படித்தான் இந்துத்துவா அரசும் மீடியாவும் மக்கள் மனதில் விஷத்தை விதைக்கின்றன"
 
அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு :

7 comments:

  1. தன்னை நிலைநாட்ட என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் தனபாலன்

      Delete
  2. அருமையான கண்ணோட்டம்
    பாராட்டுகள்

    ReplyDelete
  3. தொற்று மதம் பார்த்தோ சமூகம் பார்த்தோ ஸ்டேட்டஸ் பார்த்தோ தொற்றுவதில்லையே. யாராக இருந்தாலும் கண்டனத்த்ற்குரியவர்கள். கண்டிக்கப்பட வேண்டும்.
    மக்கள் சமூகவலைதளங்களில் குறிப்பிட்ட மதம் அல்லது சமூகத்தைப் பற்றி புரளிகள், கட்டுக்கதைகளைப் பரப்புவது மிக மிக மோசமான செயல். நாட்டிற்கு நல்லதல்ல.

    கீதா

    ReplyDelete
  4. கர்நாடக்த்தில் ஒரு குவாரண்டைன் ஹோமில் இஸ்லாமியர்கள் அத்து மீறி நடப்பதாக் தொலைக்காட்சியில் வந்தது

    ReplyDelete
  5. கொரோனா ஜிஹாத் என்று ஒரு தலைவர் கூறி இருக்கிறார்

    ReplyDelete
  6. வேதனை!!!
    அனைத்து மதத்தவர், இனத்தவர் என்று ஆங்காங்கே சிலர் தவறு செய்கின்றனர்... அதனை ஊதிப்பெரிதாக்கி எப்படி கலவரம் உண்டாக்கவேண்டும் என்று சிலர்.. இவர்கள் வாழும் தேசத்தில் தான் நாம் வாழ்கிறோம்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.