Sunday, March 8, 2026

 பெண்ணியம் போற்றும் 'ஸ்டேட்டஸ்'... பெண்மையை நசுக்கிய 'புரொபைல்'


மகளிர் தினத்தின் போலி முகமுடி
  

மகளிர் தினத்தின் போலி முகமுடி


மகளிர் தினம் அன்று  ஒரு விசித்திரமான  காட்சியைக்  பேஸ்புக்கில் கண்டேன்!

 ஒரு பக்கம் பெண்களே இந்த உலகின் கண்கள், பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும், அவர்கள் தன்னிச்சையாகச் செயல்பட வேண்டும் என்று மகளிர் தின வாழ்த்துகளை மாய்ந்து மாய்ந்து அள்ளித் தெளிக்கிறார்கள். சரி, தங்கை மற்றும் தோழிகளின் மீது பாசம் பொங்குகிறது என்று பார்த்தால்... அதே கையோடு தங்கள் புரொபைல் படத்தில் மறைந்த ஈரானிய அதிபரின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். 

என்ன ஒரு அற்புதமான புரிதல். பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்களை ஒடுக்குவதில் 'பெயர் பெற்ற' ஒருவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு, அதே வாயால் மகளிர் தின வாழ்த்துச் சொல்வதற்குத் தனித் திறமை வேண்டும்.

ஈரானில் 'மஹ்சா அமினி' (Mahsa Amini) என்ற இளம்பெண், ஆடைக்கட்டுப்பாட்டை மீறினார் என்ற காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டு, பின் உயிரிழந்த சம்பவம் உலகம் அறிந்தது. அதன் விளைவாக எழுந்த "பெண், வாழ்க்கை, சுதந்திரம்" (Woman, Life, Freedom) என்ற போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கிய ஒரு ஆட்சியைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுபவர்கள், இன்று இங்கே மகளிர் தின வாழ்த்துச் சொல்வது எத்தகைய அறியாமை? அல்லது எத்தகைய துணிச்சல்?

 அடுப்படியில் பெண்ணுரிமை பேசிவிட்டு, ஹாலில் வந்து சர்வாதிகாரத்தைப் போற்றும் இவர்களின் 'முற்போக்கு' சிந்தனையைப் பார்த்து வரலாறு வாய்விட்டுச் சிரிக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. இது வெறும் அறியாமை என்று மட்டும் கடந்து போய்விட முடியாது. இது ஒரு 'தேர்ந்தெடுக்கப்பட்ட முற்போக்கு' (Selective Progressivism).

ஒரு நாட்டின் அரசியல் அல்லது மத ரீதியான பிம்பத்தைப் பிடித்துப் போய் அவர்களைக் கொண்டாடுவது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், அதே பிம்பம் பெண்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்த வரலாறு கொண்டதாக இருக்கும்போது, அதே நபரால் எப்படி 'பெண்ணியம்' பேச முடிகிறது?

நீங்கள் மகளிர் தின வாழ்த்துச் சொல்லும் அதே வேளையில், பெண்களின் போராட்டங்களை நசுக்கியவர்களை உங்கள் 'ஹீரோ'வாக வைத்திருந்தால், உங்கள் வாழ்த்தில் துளியும் உண்மை இல்லை என்றுதான் அர்த்தம்.


உரிமைகளுக்காகப் போராடும் பெண்ணையும் பிடிக்கும், அந்தப் போராட்டத்தை ஒடுக்குபவரையும் பிடிக்கும் என்றால் - இங்கே கோளாறு அரசியலில் இல்லை, உங்கள் அறச்சீற்றத்தில்தான் இருக்கிறது!


முரண்பாட்டின் முகவரிகள்!

ஒரு கையில்
ரோஜாப்பூ ஏந்தி
மகளிர் தின வாழ்த்துச் சொல்கிறார்கள்!'

 இன்னொரு கையில்
 பெண்மையை சிறைப்படுத்திய
 தேசத்தின் அதிபர் படத்தை
 இதயத்தில் சுமக்கிறார்கள்!

 இவர்களின்
 புரொபைல் படமும் - இடும்
 பதிவுகளும்
 வட துருவமும் தென் துருவமும்!

பெண்ணியம் என்பது
ஸ்டேட்டஸில் வைக்கும்
வெறும் எழுத்து தானா?
இல்லை...
முரண்பாடுகளை
முகமூடியாய் அணிந்து கொள்ளும்
 ஒரு கலை தானா?

 பெண்களைக் கொண்டாடுவதற்கும், பெண்களின் குரலை நசுக்கியவர்களைக் கொண்டாடுவதற்கும் ஒரே ஒரு புரொபைல் பிக்சர் இடைவெளிதான் போலிருக்கிறது இவர்களுக்கு! என்ன ஒரு அழகான முரண்பாடு!"


ஈரானிய அதிபரின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த 'மஹ்சா அமினி' போன்ற போராட்டங்களையும், அங்கு பெண்களின் நிலைமையையும் தெரிந்த எவருக்கும் இந்த முரண்பாடு ரத்தக் கண்ணீரை வரவழைக்கும். 



கட்டிய தாலியை விடவும், பெற்றெடுத்த பிள்ளையை விடவும் திரையில் தோன்றும் பிம்பமே பெரிதென்கிறது ஒரு கூட்டம். ஊடகங்கள் ஊதிப்பெருக்கும் இந்த மாயக் குமிழிக்குள் சிக்கியிருக்கும் நிஜங்கள் என்ன? இதோ ஒரு திறந்த மடல்..


டிஆர்பி-க்காகத் தாலி அறுக்கும் ஊடகங்கள்: ஒரு திறந்த மடல்! 

https://avargal-unmaigal.blogspot.com/2026/03/blog-post_7.html




அன்புடன்
மதுரைத்தமிழன்

#பெண்ணியம் #மகளிர்தினம் #முரண்பாடு #அவர்களுண்மைகள் #மதுரைத்தமிழன் #WomensDay #MahsaAmini #WomanLifeFreedom #TamilWriter #SocialSatire

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.