உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, March 10, 2015

தாலி தேவையா தேவையில்லையா ?தாலி தேவையா தேவையில்லையா ?
தாலி இந்தக் காலத்திற்குத் தேவையா,

தேவையில்லையா என்று விவாதிப்பதைவிட
தாலி கட்டிக் கொள்ளுவதும், கட்டாமல் போவதும்
அவரவர் விருப்பமென்று சொல்லிச் செல்வதுதான்
பண்பாளர்களுக்கு அழகு!


காதலர் தினத்தன்று ஜோடியாக போகிறவர்களை பிடித்து
கல்யாணம் செய்து வைக்கும்
 கலாச்சார காவலர்கள்
 தாலிக் கொடியில்லாமல் செல்லும்
இந்துப் பெண்களை பிடித்து
அவர்கள் கழுத்திற்கு
ஒரு நாலு பவுன் தங்கத்தில்
ஒரு தாலிக் கொடியை வாங்கி தருவார்களா?
தாலியும் தமிழர்களும் :

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ”பண்பாட்டு அசைவுகள்” என்ற புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்: (நெட்டில் சுட்டது)

1. தாலி – என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.

2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.

3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல் ஒரு பெரிய விவாதமே நடந்தது. இதைத் தொடங்கி வைத்தவர் கண்ணதாசன். தாலி தமிழர்களின் தொல் அடையாளம்தான் என வாதிட்ட ஒரே ஒருவர் ம.பொ.சி மட்டுமே!

4. ‘கி.பி. 10-ம் நூற்றாண்டுவரை தமிழ்நாட்டில் தாலிப் பேச்சே கிடையாது’ – வரலாற்று ஆய்வறிஞர் அப்பாத்துரையார்.

5. ‘பழந்தமிழர்களிடத்தில் தாலி வழக்கு இல்லவே இல்லை’ – பெரும்புலவர் ஆய்வறிஞர் மா. இராசமாணிக்கனார்.

6. கி.பி. 7-ம் நூற்றாண்டில் திருமண சடங்குகளை ஒவ்வொன்றாகப் பாடுகின்ற ஆண்டாளின் பாடல்களில் தாலி பேச்சே கிடையாது.

7. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தோண்டி எடுக்கப்பட்ட புதைபொருள்களில் இதுவரை தாலி எதுவும் கிடைக்கவில்லை.

8. கி.பி. 10ம் நூற்றாண்டிற்கு பிறகே தமிழகத்தில் பெண்ணின் கழுத்துத்தாலி புனிதப் பொருளாகக் கருதப்பட்டு வந்துள்ளதாக கொள்ளலாம்.

9. இந்திய சிந்தனையாளர்களில் தந்தை பெரியார்தான் முதன்முதலில் தாலியை நிராகரித்துப் பேசவும், எழுதவும் துவங்கினார். அவரது தலைமையில் தாலி இல்லாத் திருமணங்கள் நடைபெறத் தொடங்கின.

10. பின்னர், 1968-ல் அண்ணா காலத்தில் நிறைவேற்றப்பட்ட சுயமரியாதைத் திருமணச் சட்டம் தாலி இல்லா திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரித்தது

11-ஆம் நூற்றாண்டில் கச்சியப்பரால் இயற்றப்பட்ட கந்தபுராணத்தில் தான் திருமணத்தின்போது தாலி கட்டப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
அன்புடன்
மதுரைத்தமிழன்

18 comments :

 1. தாலி வேலியா இருந்தால் சரி,

  ReplyDelete
  Replies

  1. மனதிற்கு வேலி இருந்தால் போதுமே தாலி தேவை இல்லையே...தாலி இந்து கலாச்சார பழக்க வழக்கம் அதை கடைப்பிடிபதில் தவறு ஏதும் இல்லை அதை செய்யமாட்டேன் என்று சொல்லுபவர்களை அவர்கள் வழியிலே விட்டு விட வேண்டும் யாரையும் எதற்காகவும் வற்புறுத்த கூடாது என்பதுதான் என் கருத்து

   Delete
 2. பேராசிரியர் பரமசிவன் எழதிய தகவல் தந்ததிற்கு நன்றி
  அமெரிக்காவில் எப்படிங்க திருமணமான தமிழ் பெண்கள் தாலியுடன் தான் திரிவார்களா?

  ReplyDelete
  Replies
  1. எனக்கு தெரிஞ்சு யாரும் தாலி அணிந்து இருப்பதாக தெரியவில்லை அடுத்த தடவை கோயில் சென்றால் பெண்களின் கழுத்தை உற்று பார்த்துவிட்டு சொல்லுகிறேன்

   Delete
 3. தாலி தேவையா இல்லையா என்பதை விட்டுவிட்டு அதன் மகிமையை தயவு செய்து எழுதுங்கள்...

  மலர்

  ReplyDelete
  Replies
  1. தாலி ஒரு கலாச்சார பழக்க வழக்கம் ஆனால் மகிமை என்று சொல்லுவதற்கு ஒன்றும் இல்லை அது ஒரு அடையாளம்மட்டுமே

   Delete
 4. பலருடைய கூற்றை எடுத்துக் காட்டி எழுதியுள்ள இப்பதிவு பாராட்டுக்குரியதே! ஐயமில்லை!

  ReplyDelete
  Replies
  1. முதல் இரண்டு கூற்று என்னுடையது கடைசியில் உள்ள பேராசிரியர் சொன்னது மட்டும் நெட்டில் படித்தது

   Delete
 5. தாலி என்பது ஒரு கலாச்சாரம்.
  அருமையான பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அது இந்தியர்களின் கலாச்சாரம்

   Delete
 6. தேவையா, தேவையில்லையா என்ற விவாதத்தை முன்வைத்து, வரலாற்றுரீதியாக தாலி தொடர்பான செய்திகளைத் தொகுத்துத் தந்த விதம் அருமையாக உள்ளது.

  ReplyDelete
  Replies
  1. தாலி பற்றி எனது கருத்துக்களை சொல்லும் போது அது பற்றிய வரலாற்று செய்திகளை தந்தால் படிப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதையும் சேர்த்து தந்திருக்கிறேன்

   Delete
 7. தாலி இருக்கட்டும். அப்படியாவது ஒரு ரெண்டு கிராம் தங்கம் வீட்டில் இருந்தால் நல்லது என்ற நிலமைதான் வசதி குறைந்தவர்களுக்கு.

  ReplyDelete
  Replies
  1. தாலி ஒரு சமுக மற்றும் கலாச்சாரத்தின் அடையாளம் அப்படி இருப்பதில் தவறே இல்லை அதனால் இருக்கட்டும்

   Delete
 8. தாலி ஒரு பெண் மணமானவளா இல்லையா என்று கண்டுபிடிக்க ஓர் அடையாளம். புறம்போக்கு நிலத்தில் வேலிபோட்டுவிட்டால், அந்நியர்கள் நுழைய மாட்டார்கள். அல்லது உங்கள் தரிசு நிலத்தில் வேலியில்லையென்றால் எவரும் உள்ளுழைந்து ஆக்கிரமித்துக்கொண்டு தனதாக்கிக்கொள்வார்கள்.

  நம் சமூகம் ஆண் தலைவன் என்றடிப்படையில் (பெட்ரியார்கி) உருவாக்கப்பட்டதால், பெண் ஒரு சொத்தாகிறாள். ஆதிகாலத்திலிருந்தே பெண் அப்படித்தான் பார்க்கப்படுகிறாள். தோல்வியடைந்த மன்னன் தன் மகளை வெற்றியடைந்த மன்னனுக்கு மணம் செய்விப்பது ஒரு முறை. அப்படிச்செய்யும் போது வெற்றியடைந்தவன் தோல்வியடைந்தவனிடம் நாட்டைப்பிடுங்காமல் விட்டுவிடுவான். இதுபோக பல சலுகைகள் கிடைக்கும். அதே சமயத்தில், தன் மகள் அவனுக்கு பத்தாம் தாரமாக இருந்தாலும் சரி. தரமாட்டேனென்றாலும் இழுத்துக்கொள்வான்; ஒன்றும் செய்யவியலா. பணபலம். உடல் பலம் இருக்கும்போது, தலித்துப்பெண்களும் ஏழைப்பெண்களும் சூறையாடப்படுவதைக் கண்டு ஒன்றும் செய்யவியலாது. Mitght is right.

  மணமாகாத பெண்ணையும், மணமாகி கணவனோடு வாழாத பெண்ணையும் ஆண்கள் விட்டுவைப்பதில்லை. ஏனென்றால் அவளை யாது செய்தாலும் கேட்பாரில்லை. //வேரில் பழுத்தபலா; அண்ணே கேட்பாரற்றுக்கிடக்குதும் இங்கே ?? என்று பாரதிதாசன் கவிதையில் வரும். அதாவது கேட்பாரற்றது என்றால் பாதுகாப்பு இல்லை. ஒரு விதவைப்பெண்ணைப் பார்த்துச் சொல்வதாக. விதவைகளுக்கு அலங்கோலமாக்கும்செயலில் அடிப்படை இதுவே. Beauty provoketh thieves sooner than gold என்றார் செகப்பிரியர். அழகே பெண்களுக்கு ஆபத்து. தாலியில்லாத பெண்ணும் கணவனைப்பிரிந்த பெண்ணும் அழகாக இருந்து தொலைத்துவிட்டால்? இரு வழிகளே அவளுக்கு: அவள் பொதுச்சொத்தாக வேண்டும். அல்லது தன்னை மாயத்துக்கொள்ள வேண்டும்.

  ஆக, பெண் என்பவளை சமூகவியல் வழியாகப்பார்க்கும் போது, அவள் நிலை விலங்குகளுக்கு சற்று உயர்வு மட்டுமே. ஒரு பொருள். உரிமை என்று போகும்.

  ஆனால், அதே நேரத்தைல அவள் ஒரு ஜீவன். அதைப்பாதுக்காப்பதற்கு நல்லோர் கடமை. எனவே மணம். மணத்திற்கு அடையாளம். கணவன் ஒரு பாதுகாப்பு பார்டிகார்டும் கூட.

  பெண்ணைப்பற்றி நான் மட்டமாக எழுதுவது போலத்தோன்றும். ஆனால் இதுவே உள்ளுறை பொருள்.

  தாலி வேண்டாமென்றால், வேறெதுவாது வேண்டும். அவள் இன்னொருவன் சொத்து என்பதைக்காட்ட. மற்றவன் உரிமை கொண்டாடாமல் தடுக்க. தாலி ஒரு வேலி.

  மேலைநாட்டு சமூகத்தில் இது தேவையில்லை. கற்பொழுக்கமும் களவொழுக்கமும் பெரிதாகப் பேணப்படா சமூகத்திலும், பெண்கள் ஆண்களுக்கு நிகராக தம்மைப்பாதுக்காத்துக்கொள்ளும் தன்மை உருவான சமூகத்திலும், இப்படிப்பட்ட அடையாளங்கள் தேவைப்படா.

  ReplyDelete
  Replies
  1. மலரன்பன் உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து உங்கள் கருத்தை சொன்னதற்கும் மிகவும் நன்றி

   தாலி ஒரு கலாச்சரா அடையாளமாக மட்டும் எடுத்து கொள்ளாலாமே தவிர வேலியாக எடுத்துக் கொள்ள முடியாது. அது மட்டுமல்லாமல் வேலியை தாண்டும் ஆடுகளாகவே இப்போது பலரும் இருக்கின்றனர்

   அடுத்தாக மேலைநாட்டு சமுகத்திலும் இது போன்ற பழக்கம் இருக்கிறது இங்கு தாலிக்கு பதிலாக மோதிரம் அணிந்து கொள்கிறார்கள் அது மட்டும் அல்ல இதை ஆண் பெண் இருவருக்கும் இது அவசியமாகவே இருக்கிறது, இங்குள்ள மேலை நாட்டினரிடம் தாலி பற்றி பேசும் போது அவர்கள் கேட்கும் கேள்வி இதுதான். தாலி அடையாளம் என்றால் அது ஆண் பெண் இருவருக்கும் சமமாகத்தானே இருக்க வேண்டும் ஆனால் உங்கள் சமுகத்தில் பெண்ணிற்கு மட்டும் அணிவிப்பது ஏன் என்று கேட்கிறார்கள் அதற்கு விடை தெரியாமல்தான் முழிக்க வேண்டி இருக்கிறது

   Delete
 9. தாலி ஒரு கலாச்சார அடையாளம் தான். நம் தமிழ் படங்களில் தான் தாலி சென்டிமென்ட்....அதைப் புனிதமாக அடையாளம் காட்டி. அப்படி அது ஒரு புனிதம், மகிமை பொருந்தியது, என்றால் எல்லா சமூகங்களிலும் இருந்திருக்க வேண்டுமே. கேரள சமூகத்தில் இந்த சென்டிமென்ட் இல்லையே.

  எனவே தாலி என்பது அவரவர் விருப்பம். தாலி கட்டிக் கொள்பவர்கள் கூட பல சமயங்களில் அதைக் கழட்டி வைப்பதும் உண்டு.....

  ReplyDelete
  Replies
  1. மிக சரியாக சொன்னிர்கள்.....

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog