உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 24, 2013

தமிழக முதல்வர் ஆகும் தகுதி கொண்ட ஒரு தமிழன்
தமிழக முதல்வர் ஆகும் தகுதி கொண்ட ஒரு தமிழன்

எழுத்தறிவித்தவன் இறைவன்" என்பதற்கு, எடுத்துக்காட்டாய் திகழ்கிறார், மதுரை ஞானஒளிவுபுரத்தை சேர்ந்த, தலைமை ஆசிரியர் கில்பர்ட், 47. இவர், அய்யப்பன்நாயக்கன்பட்டி, கள்ளர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் செய்யும் இவர் தொண்டை பார்க்கும் போது இந்த மாதிரி மனிதர்கள்தான் நம் தமிழக்த்திற்கு முதல்வராக வர வேண்டும். என்பது என் ஆசை.

ஆனால்  நமது கலாச்சாரத்தை பண்பாட்டை சிதைத்து எடுக்கப்படும் படங்களால் பாப்புலரான நடிகர்கள், மக்கள் பணத்தை சுரண்டும் கேடிகள் நமது அமைச்சராகவும் முதல்வராகவும் வர ஆசைப்படுகின்றனர் & வருகின்றனர். இது வெட்ககேடான விஷயம்

தலைமை ஆசிரியர் கில்பர்ட் ஏன் தமிழக முதல்வராக ஆக வேண்டும்? அவர் அப்படி என்ன செய்தார் என்று கேட்கீறீர்களா? கிழே உள்ளதை படித்து பாருங்கள். நான் ஏன் அவர் முதல்வராக வர ஆசைப்படுகிறேன் என்பது உங்களுக்கு புரியும்.

அன்புடன்
உங்கள் அபிமானத்திற்குரிய
மதுரைத்தமிழன் படித்ததில் பிடித்ததை உங்களுடன் பகிர்கிறேன்
-----------------------------------------------------------

மதுரை மாவட்டம், அய்யப்பன் நாயக்கன் பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளி. வழக்கமாய் மாலை வகுப்புகள் முடிந்ததும், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும், அவரவர் வீட்டிற்கு கிளம்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் கில்பர்ட் வயது 47. இவர் மட்டும் அதற்கு பின், வகுப்பறைகள், பள்ளி வளாகம் போன்றவற்றை, குப்பைகள் இல்லாமல் சுத்தம் செய்துவிட்டு, கூடுதலாக பள்ளியின் கழிப்பறைகளையும் சுத்தம் செய்துவிட்டே செல்கிறார்.

இதன் மூலம், மறுநாள் பள்ளிக்கு வரும் மாணவர்களை, பள்ளி வளாகம் சுத்தத்துடனும், சகாதாரத்துடனும் வரவேற்கிறது.
சுத்தமின்றி பல அரசு பள்ளிகள் இருக்கும் போது, இவரது பள்ளி மட்டும் எப்படி இவ்வளவுத்தமாக இருக்கிறது என்பது, பலருக்கு ஆச்சரியம். இதற்கு காரணம், தலைமை ஆசிரியரான கில்பர்ட்தான் என்பதே பலருக்கும் தெரியாது; அது தெரியவும் வேண்டாம் என்கிறார் கில்பர்ட்.

மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்தவரான கில்பர்ட், என்ன படிப்பது, எப்படி வாழ்க்கையை கொண்டு செல்வது என்பது தெரியாமல் இருந்தபோது, முன்பின் தெரியாத பாதர் லூர்துசாமி என்பவர், எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், இவருக்கு செய்த உதவியே, இவரை ஆசிரியராக்கியது.முன்பின் தெரியாத தனக்கு, எப்படி ஒருவர் உதவினாரோ, அதே போல, நாமும் முன்பின் தெரியாத பலரது முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இதே போல, சமூகத்திற்கு பயன்படும்படியாக வாழ வேண்டும் என்று வழிகாட்டிய பெரிய காமன், செல்லத்துரை, ராமச்சந்திரன், பாண்டி, சிவ.பாண்டியன் ஆகியோரின் வழிகாட்டுதலும் இவரை மென்மையும், மேன்மையும் படுத்தியது.


தன் சம்பளத்தில் ஒரு பங்கை ஒதுக்கி, பொருளாதாரம் காரணமாக, பள்ளியில் படிக்க முடியாமல் நின்ற குழந்தைகளை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை, செலவு செய்து படிக்க வைக்கிறார்.பள்ளி வளாகத்தில், மிட்டாய் விற்கும் மூதாட்டியின் குழந்தைகள் உட்பட, வறுமையான குடும்பத்து குழந்தைகளின் மொத்த படிப்புச் செலவையும் ஏற்று, படிக்க வைக்கிறார்.இவரை பொறுத்தவரை, எந்த குழந்தையுமே படிக்காமல் இருக்கக் கூடாது. தொடர்ந்து மூன்று நாள் ஒரு மாணவன் வகுப்பிற்கு வராவிட்டால், அந்த மாணவனுக்கு என்ன ஆச்சோ என்று, வீட்டிற்கு தேடிப்போய் பார்த்து, சம்பந்தப்பட்ட மாணவனின் பிரச்னையை தீர்த்து, வகுப்பிற்கு தொடர்ந்து வரும்படி பார்த்துக் கொள்வார்.

எப்போதுமே வீட்டில் இருந்து, தனக்கு போக, மேலும் இரண்டு பேருக்கு சாப்பாடு கொண்டு வருவார். அவசரத்தில் சாப்பாடு கொண்டு வராமல் வந்துவிடும் பிள்ளைகளுக்கு, கொண்டுவந்த கூடுதல் சாப்பாடை கொடுத்து விடுவார். தன்னிடம் கூடுதலாக ஒரு நூறு ரூபாய் இருந்தால் கூட போதும், உடனே, அந்த நூறு ரூபாய்க்கு மிக்சர் போன்ற நொறுக்குத் தீனி வாங்கிவரச் செய்து, குழந்தைகளிடம் வழங்கி மகிழ்ச்சியடைவார். இவரது வீட்டிற்கு உறவினர்கள் வாங்கிவரும் இனிப்பு, காரத்தைக் கூட பள்ளிக்கு கொண்டுவந்து பகிர்ந்து கொள்வார். விசேஷ நாட்களில், வீட்டில் செய்யும் விசேஷ உணவுகளும், பள்ளி குழந்தைகளுக்குதான்.
வெறும் உணவு மட்டுமின்றி, அவ்வப்போது ஜாமென்ட்ரி பாக்ஸ், பேனா, ஸ்கூல் பேக் போன்றவற்றையும் வாங்கி கொடுத்து, மாணவர்களை உற்சாகப்படுத்துவார். மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளார்.

இவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்த போது, தனக்கு ஏதாவது ஒரு சின்ன கிராமத்தில் வேலை கிடைத்தால் சேவை செய்ய முடியுமே என்று வேண்டிக் கொண்டார். அதன்படி கிடைத்த கம்மாளபட்டி என்ற கிராம பள்ளிக்குத்தான் வேலைக்கு சென்றார். அப்போது இருந்து இப்போது தலைமை ஆசிரியராக இருக்கும் இந்த பள்ளிவரை, இவர் விரும்பியபடியே கிராமத்து பள்ளியாகவே அமைந்து விட்டது."பள்ளிக்கூடத்திற்கு வந்துட்டா, அவங்கெல்லாம் நம்ம பிள்ளைங்க. நம்ம பிள்ளைங்க இருக்கிற இந்த இடத்தை, கோவில் மாதிரி வைச்சுக்கணும்...'ன்னு சக ஆசிரியர்களிடம் சொல்லி, அவர்களது ஒத்துழைப்போடு பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறார்.

எல்லாம் சரி, "கழிப்பறையை சுத்தம் செய்வது என்பதை, ஒரு சிலர் கேலியாக நினைப்பார்களே?' என்று கேட்ட போது, "யார் கேலியாக நினைத்தால் எனக்கென்ன, என் மனசு சொல்கிறது, நான் செய்வது சரிதான் என்று. இதில் எந்த தயக்கமும் கிடையாது. மாறாக, நிறைய மனத்திருப்தி தான் உண்டாகிறது...' என்கிறார் சாந்தமாக."பள்ளிக்குழந்தைகளின் பிரார்த்தனையால்தான், நான் ஒரு சோதனையில் இருந்து மீண்டேன். ஆகவே, அவர்களது கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்னையில், கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்கிறேன்...' என்றவர், "தனக்கு எவ்வித விளம்பரமும் வேண்டாம். இலைகளையும், கிளைகளையும், பழங்களையும் தரும் விதை, எங்காவது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறதா! அந்த விதை போல இருக்க விரும்புகிறேன்...' என்று புன்னகையுடன் கூறுகிறார்.

23 comments :

 1. கில்பர்ட் அவர்கள் பாராட்ட படவேண்டியவர் தான் தமிழகம் பழங்காலம் தொட்டே திரைப்பட மோகத்தில் தள்ளாடிக் கொண்டிருப்பது நமது மக்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்பதை பறை சாற்றுகிறது திரைப்படத்தை பொழுது போக்கு அம்சமாக நினைப்பதை தவிர்த்து நடிகர்களை தலைவர்களாகவும் தெய்வத்திற்கு இனையாக துதி பாடுவதும் வெட்கப்பட வேண்டிய ஒன்றுதான் ஊடகங்கள் சிறந்த அரசாங்க ஊழியர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதை தவிர்த்து தங்கள் வியாபார நோக்கை மட்டுமே கவனத்தில் கொள்ளவது வேதனைக்குரிய விஷயம் தான்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையை சொல்லி தரமான கருத்தை பதிவிட்டு சென்ற உங்களுக்கு நன்றி

   ஊடகங்கள் நல்ல செய்திகளை முதல் பக்கத்தில் வெளியிடவேண்டும் அது போல மக்களும் நல்ல செய்திகளை சமுக ஊடகங்கள் முலம் பல மக்களை சென்று அடைய செய்ய வேண்டும்.

   Delete
 2. மனதுக்கு நிறைவான ஒரு இடுகையைப் படித்த மகிழ்ச்சி!

  ReplyDelete
  Replies
  1. ஒரு நல்ல பதிவிற்கு கருத்து இட்ட உங்களுக்கு நன்றி. முடிந்தால் உங்கள் பாணியில் இந்த செய்தி பலரிடம் சென்று அடைய பதிவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்

   Delete
 3. Replies
  1. கருத்திற்கு நன்றி முடிந்தால் இந்த பதிவை எல்லோரிடமும் பகிரவும்

   Delete
 4. இன்றைய பத்திரிகைகளோ? தொலைக்காட்சியோ ஏன்? இப்படிப்பட்டவர்கள் பற்றிய செய்தியை வெளிச்சமிடுவதில்லை. புரியவில்லை.
  இந்த உலகில் இப்படிச் சேவை மனதுடன் வாழ மிகுந்த மனத் தைரியம் வேண்டும்.பிழைக்கத் தெரியாதவர் எனக் கேலி செய்தே சாகடித்து விடுவார்கள். ஆடைகட்டாதவன் ஊருக்குள் ஆடையுடன் போனவர் கதியே!
  அந்த ஊர் மக்கள் ,சக ஆசிரியர்களையும் இவருடன் பாராட்டியே ஆகவேண்டும்.
  படிக்க மிக மகிழ்வாக இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. கருத்திற்கு நன்றி முடிந்தால் இந்த பதிவை எல்லோரிடமும் பகிரவும்

   Delete
 5. மனிதர்கள் செய்யும்
  அசுத்தங்களை இயற்கை
  சுத்தம் செய்கிறது

  அவன் நதிகளில் விடும்
  கழிவுகளனைத்தையும்
  மழைக்காலத்தில் கடலில்
  கொண்டு தள்ளி
  அவனுக்கு உதவி புரிகிறது.

  அவன் செயற்கையாகஉருவாக்கிய
  ப்ளாஸ்டிக்கை மட்டும்
  அது ஒன்றும் செய்வதில்லை
  அதை அப்படியே விட்டுவிடுகிறது.
  அவர்களே அதன் தீமைகளை உணர்ந்து
  திருந்தட்டும். என்று விட்டுவிடுகிறது

  பலன் கருதாது
  இயற்கை மனிதர்களுக்கு
  செய்யும் கைம்மாறுகள்
  எண்ணிலடங்கா

  அதுபோல்தான் சில மனிதர்களும்
  செய்யும் இதுபோன்ற தொண்டுகளும்

  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 6. நான் தொடர்ந்து
  பதிவு செய்து கொண்டு வருகிறேன்
  படிப்பாரும் இல்லை கேட்பாரும் இல்லை.
  இருந்தும் நான் சலிப்பது கிடையாது.
  சளைப்பது கிடையாது. எண்ணங்கள் அழியாது
  அது என்றாவது ஒரு நாள் முளைத்தே தீரும்.
  என்ற உண்மையை உணர்ந்தவன் நான்

  ReplyDelete
 7. ஒரு ஆசிரியர் என்ற முறையில் தங்களின் இடுகையினைப் படிக்கும் போது, மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. கில்பர்ட் போன்ற ஆசிரியர்களின் தன்னலமற்ற சேவை மிகவும் பாராட்டிற்குரியது. ஊடகங்கள் கில்பர்ட் போன்றவர்களின் சேவையினை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டி மன நிறைவு அடைகின்றன.
  கில்பர்ட் போன்றவர்களின் சேவை அனைவருக்கும் தெரியப் படுத்தப் படுமேயானால், மற்றவர்களும் அவரைப் பின்பற்ற ஏதுவாகும்.
  ஆசிரியர் கில்பர்ட் அவர்களுக்கு, தங்களின் வலைப் பூ மூலம் எனது மனங் கனிந்த பாராட்டுக்களையும், மகிழ்வினையும் தெரிவித்து மகிழ்கின்றேன்.
  .நான் இதுவரை மூன்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். அந்நூல்களின் சில பிரதிகளை கில்பர்ட் அவர்கள் பணியாற்றும் பள்ளிக்கு நன்கொடையாக அனுப்ப விரும்புகின்றேன்.எனவே கில்பர்ட் அவர்களின் முகவரியினைத் தெரியப்படுத்த வேண்டுகின்றேன் அய்யா, நன்றி

  ReplyDelete
 8. நல்லதொரு நபரை அடையாளப்படுத்தியமைக்கு நன்றி சகோ!

  ReplyDelete
 9. திரு கில்பர்ட் போன்ற தலைமை ஆசிரியர்கள் தான் நமது நாட்டுக்கு, மாணவர்களுக்கு தேவை

  ReplyDelete
 10. திரு. கில்பர்ட் அவர்கள் பற்றிய செய்திகள் படித்தேன். வெகு அருமையாக உள்ளன. இதுபோன்ற் தன்னலமற்ற தியாகிகள் வெளியுல்குக்கே தெரியாமல் போய் விடுகின்றனர். அவர்களில் ஒருவரை இங்கு அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது நன்று. தகவல் கொடுத்ததும் மகிழ்ச்சியளிக்கிறது. >>>>>>>

  .

  ReplyDelete
 11. விதை போல இருக்க விரும்புபார்கள் விளம்பரம் தேட விரும்பவில்லை தான்..

  அழகான் தங்களின் இந்தப்பதிவுக்குப்பாராட்டுக்கள். இனிய நல்வாழ்த்துகள். நன்றியோ நன்றிகள்>

  ReplyDelete
 12. இவரை எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் சொன்ன செய்திகள் எல்லாம் புதிது.
  வாழ்க .. வளர்க ..

  தெரிந்த சிலருக்கு (பத்திரிகையாளர்கள் உட்பட) அனுப்பி வைக்கிறேன்.

  ReplyDelete
 13. இவர் முதல்வராக வரும்பட்சத்தில் இவர் பக்கமுள்ள ஓட்டை உடைசல்களை தேடிப்பிடித்து இவருக்கு வேறொரு பெயர் வைக்கும் நிலையில்தான் நம் சமூகம் உள்ளது. அவருக்கு வாழ்த்துகள். பணி தொடரட்டும்

  ReplyDelete
 14. இவ்விதம் விதைக்கு ஒப்பான மனிதர்களை ஏன் அனைவரும் அடையாளம் கண்டுகொள்வதில்லை. இவரை பின்பற்றி இளைய சமூகம் எழுச்சி பெறவேண்டும். பகிர்வுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 15. தலைமை ஆசிரியர் கில்பர்ட் அவர்களுக்கு தலைவணங்குகிறேன்.

  ReplyDelete
 16. நல்லதொரு மனிதரை பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
  மலையாள சேனல்களில் இதைப் போன்ற நல்லவர்களை பற்றி அதிகம் காட்டுகிறார்கள் ,தமிழ் சேனல்கள் பற்றி தெரியாது (நான் மலையாள சேனல்கள் மட்டும் பார்பதால் எனக்கு தமிழ் சேனல்கள் பற்றி தெரியாது

  ReplyDelete
 17. ORU NALLA MAANIKATHAI INTHA ULAKIRKU VELICHCHAPADUTHIUATHARKU MIKKA NANDRI

  ReplyDelete
 18. மிக மிக மிக அருமை.
  ஆசிரியருக்கு என் வணக்கமும், வாழ்த்துக்களும்.

  பயனுள்ள பதிவை பகிர்ந்ததற்கு நன்றி.

  என்னால் உங்கள் அளவிற்கு எழுதுவதெல்லாம் கடினம். ஆனால் என்னால் முடிந்தவரை எனக்கு தெரிந்த சமுக வலைத்தளங்களில் இந்த பதிவை ஷேர் செய்துவிடுகிறேன்.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog