வரலட்சுமி நோன்பு சடங்கா? நம்பிக்கையா? அல்லது சமூக அழுத்தமா?
காலையில் நோன்பு மாலையில் சண்டை ஒரு குடும்பச் சடங்கின் முரண்பாடுகள்.
நம்ம ஊருல காலம் காலமா நடந்து வர்ற சில விஷயங்களை கொஞ்சம் உத்துக் கவனிச்சா, அதுல இருக்கிற முரண்பாடுகள் நல்லாவே தெரியும். அதுல முக்கியமானது வரலட்சுமி நோன்பு ஒன்று
காலைல எந்திரிச்சதுல இருந்து ராத்திரி தூங்குற வரைக்கும் கணவனும் மனைவியும் எலியும் பூனையும் மாதிரி அடிச்சுக்குவாங்க. உங்களைப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட என்னைச் செருப்பால அடிக்கணும்னு மனைவி சொல்ல . நீ வந்ததிலிருந்து என் நிம்மதியே போச்சுனு கணவர் சொல்ல இப்படி சில வீடுகளில் சண்டை போடுற சத்தம் பக்கத்து வீட்டுக்கே தினசரி சீரியல் மாதிரி பழகிப் போயிருக்கும்.
ஆனா வரலட்சுமி நோன்பு வந்தா மட்டும் எல்லாம் ஒரு நாள் தலைகிழா மாறிவிடும் .
காலையிலயே குளிச்சு, பட்டுப்புடவை கட்டி பூஜை அறையை அலங்கரிச்சு பழம் பூ நைவேத்தியம் எல்லாம் வச்சு, என் கணவர் நீண்ட நாள் நல்லா வாழணும்னு சாமி கும்பிட உட்கார்ந்துடுவாங்க.
வெளியில இருந்து பார்க்கிறவங்களுக்கு இது கொஞ்சம் காமெடியாவும் இருக்கும். அதே நேரம், இது உண்மையிலேயே பக்தியா, சடங்கா, இல்லை ஊருக்காக செய்யுற ஒரு விஷயமா என்ற கேள்வியும் வரத்தான் செய்யும். அப்படி எனக்கு வந்ததினால்தான் இந்த பதிவு
இதுல எல்லாரையும் ஒரே மாதிரி சொல்ல முடியாது. சில பெண்களுக்கு இது உண்மையிலேயே நம்பிக்கை. அம்மா, பாட்டி வழியா வந்த வழக்கம். கணவன் நல்லா இருக்கணும், பிள்ளைகள் நல்லா இருக்கணும், குடும்பம் நிம்மதியா இருக்கணும் என்ற மனசார வேண்டுதல். தினமும் சண்டை போட்டாலும், ஒரு ஆபத்து வந்தா முதல்ல பதறுறது இதே மனிதர்கள்தான். வாயால திட்டிக்கிட்டாலும், உள்ளுக்குள்ள ஒரு பாசம் இருக்கத்தான் செய்யும். அதுதான் குடும்ப வாழ்க்கையோட விசித்திரம்.
ஆனா இன்னொரு பக்கமும் இருக்கு. பக்கத்து வீடுகளில எல்லாரும் செய்றாங்க, நாம மட்டும் செய்யலன்னா என்ன நினைப்பாங்க என்ற பயம். மாமியார் வீட்டுல வழக்கம் என்பதால் செய்ய வேண்டிய கட்டாயம். உறவுக்காரங்க என்ன சொல்வாங்க என்ற கவலை. மற்ற வீட்டைவிட பூஜை அறை அலங்காரம் குறையக்கூடாது என்ற போட்டி. இப்ப இங்கே பக்தியை விட ஊரு முக்கியமாகிடும்.
அதுமட்டுமல்ல இப்போ இருக்கிற சோஷியல் மீடியா காலத்துல இது இன்னும் ஒருபடி மேலே போயிருச்சு. நிஜ வாழ்க்கைல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்க்கப் பிடிக்காம சுத்துறவங்க கூட, இந்த ஒரு நாள் மட்டும் சேர்ந்து போட்டோ எடுத்து பேஸ்புக்ல போடுவாங்க. கீழே My World, My Life Partner, Blessed Coupleனு எழுதுவாங்க.
வீட்டுக்குள்ள சண்டை ஆனால் வெளியில பேஸ்புக்கல ஹேப்பி ஃபேமலி. வீட்டுக்குள்ள நிம்மதி இல்லை. ஆனால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்ல மட்டும் பெர்பெக்ட் கப்புல்ஸ் . ஹீஹீ
பூஜை செய்வது தவறு இல்லை. பட்டுப்புடவை கட்டுவது தவறு இல்லை. பூஜை அறையை அழகா அலங்கரிப்பதும் தவறு இல்லை. போட்டோ போடுவதும் தவறு இல்லை. ஆனால், மனசுக்குள்ள நிம்மதி இல்லாம, உறவுக்குள்ள மரியாதை இல்லாம, வெளியே மட்டும் நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம்னு காட்ட ஆரம்பிச்சா, அது பக்தியை விட ஒரு நாடக காட்சியாக மாறிடுது.
கல்யாண வாழ்க்கையில நம்பிக்கை இல்லாம, ரகசியங்கள் நிறைஞ்ச கள்ள உறவுகளில்கூட இந்தச் சடங்கு தொடர்ந்து நடக்குது என்றால், அங்கே உண்மையிலேயே என்ன இருக்கு பக்தியா பழக்கமா இல்ல சமூகத்துக்குக் காட்ட வேண்டிய பிம்பமா?
இந்தக் கேள்விக்கு ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பதில் இருக்கும்.
சிலருக்கு வரலட்சுமி நோன்பு உண்மையான நம்பிக்கை. சிலருக்கு குடும்ப வழக்கம். சிலருக்கு சமூகப் பயம். சிலருக்கு சோஷியல் மீடியா கண்டெண்ட்.
ஆனா ஒரு விஷயம் மட்டும் நிச்சயம் மக்களே.
வருடத்துல ஒரு நாள் கணவனுக்காக நோன்பு இருக்கிறதைவிட, வருடம் முழுக்க கணவன் மனைவி ஒருத்தருக்கொருத்தர் மரியாதையா பேசிக்கிறதுதான் பெரிய விஷயம். மனைவி கணவனின் ஆயுளுக்காக வேண்டட்டும். அதே மாதிரி கணவன், மனைவியின் மனநிம்மதிக்காகவும், உடல்நலத்துக்காகவும், சந்தோஷத்துக்காகவும் நினைக்கட்டும்.
அப்போதுதான் அது வெறும் சடங்காக இருக்காது. உண்மையான குடும்ப நலனுக்கான வேண்டுதலாக இருக்கும்.
டிஸ்கி : இது மத நம்பிக்கையை அல்லது சடங்கை இழிவுபடுத்தவோ அல்லது களங்கப்படுத்தும் நோக்கத்திலோ எழுதவில்லை. நாட்டில் நடப்பதை, பார்ப்பதை நான் உங்களின் சிந்தனைக்காக இங்கு எடுத்து சொல்கிறேன்
தவெக ஆட்சியாளர்களின் ஆடம்பரமும்... சாமானியனின் அவலமும்! https://avargal-unmaigal.blogspot.com/2026/08/tamilnadupolitics-politicalsatire.html
அன்புடன்
மதுரைத்தமிழன்
#CoupleGoals #FakeLife #FestivalVibes #TamilSarcasm #DeepThoughts #RealityCheck #SocialMediaCulture #TamilPblms #TrendingReels #DailyRealities #VaralakshmiVratham #VaralakshmiNonbu #SocialMediaReality #ModernLife #RelationshipGoalsVsReality #TamilComedy #TrendingNow #TamilCulture #LifeStyle


0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.