Thursday, August 20, 2026

 மலை ஏறப் போன நால்வருக்குக் கிடைத்தது சாகச அனுபவம் அல்ல 1,450 டாலர் பில்!
    

#America, #HikingRescue, #FranconiaRidge ,#MountLafayette, #NewHampshireHiking, #OutdoorSafety, #HikingMistakes, #SearchAndRescue, #NewJersey, #AvargalUnmaigal,


சினிமாவில் வருவது போல மலை ஏறப் போய், நிஜத்தில் உயிருக்கு ஆபத்து வந்த பிறகு தான் சிலருக்கு சாகசம் என்றால் என்ன என்று புரியும்.

நியூ ஜெர்சியைச் சேர்ந்த நான்கு 18 வயது இளைஞர்கள் நியூ ஹாம்ப்ஷயரில் உள்ள பிரான்கோனியா ரிட்ஜ் மலைப்பாதைக்கு சென்றிருக்கிறார்கள். ஏழு மணி நேரம், சில சமயம் ஒன்பது மணி நேரம் கூட எடுக்கக்கூடிய கடினமான பாதை அது.

ஆனால் இவர்கள் கிளம்பிய விதம் தான் கொடுமை.

இருட்டுக்கு விளக்கு இல்லை.
சாப்பாட்டுக்கு போதுமான உணவு இல்லை.
தண்ணீர் இல்லை.
குளிருக்கு சரியான ஆடையும் இல்லை.

இதெல்லாம் இல்லாமல் மலை ஏறப் போனால், மலை என்ன செய்யும் பாவம், சின்னப் பசங்க என்று பார்த்து அது வழிவிடாது. இயற்கை யாருக்காகவும் வளைந்து கொடுக்காது. நாம்தான் இயற்கையைப் புரிந்துகொண்டு, அதற்குத் தகுந்த பாதுகாப்போடு செல்ல வேண்டும்.

அந்த அடிப்படை விஷயம் கூட இல்லாமல் போனதால், போகும் வழியில் ஒருவருக்கு மூச்சுத்திணறல் வந்திருக்கிறது. காலிலும் வலி. நேரம் கடந்தால் மலையில் குளிர் அதிகரிக்கும் என்பதற்கான தயாரிப்பும் அவர்களிடம் இல்லை. அப்புறம் தான் மீட்புக் குழுவுக்கு அழைப்பு. நல்லவேளை அழைத்தார்கள்.

நாமே பார்த்துக்கலாம் என்று மேலும் இரண்டு மணி நேரம் பிடிவாதம் பிடித்திருந்தால் இப்போது இந்தச் செய்தி வேறு மாதிரி இருந்திருக்கும். நால்வரையும் மீட்டார்கள் என்று அல்லாமல், ஒருவரையாவது தேடுகிறார்கள் என்று வந்திருக்கும்.

மீட்புக் குழுவினர் இரவில் மலையேறி அவர்களைக் கண்டுபிடித்து கீழே கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கான செலவாக சுமார் 1,450 டாலர் வரை பில் போடப் போவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.

தயாரிப்பு இல்லாமல் போனது தவறு. அதற்குப் பொறுப்பு இருக்க வேண்டும். அந்தப் பணம் கட்டினாலும் தவறில்லை. அடுத்த முறை கிளம்பும்போது குறைந்தபட்சம் ஒரு டார்ச் லைட்டும் தண்ணீர் பாட்டிலும் எடுத்துக்கொண்டு போவார்கள்.

ஆனா இதுல ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுடக் கூடாது என்று என் மனம் கருதுகிறது .

அது உதவி கேட்டால் பெரிய பில் வரும் என்ற பயம் யாருக்கும் வந்துவிடக் கூடாது. ஆபத்தில் சிக்கியவன் இன்னும் கொஞ்சம் சமாளிக்கலாம் என்று தாமதிப்பது தான் உண்மையான விபத்துக்கு ஆரம்பம்.

அழைத்தால் செலவு ஆகும் இன்னும் கொஞ்சம் நடக்கலாம் இன்னும் கொஞ்சம் தாங்கிக்கலாம் என்று யாராவது காத்திருந்தால் அந்தக் கொஞ்ச நேரம்தான் சில சமயம் உயிருக்கும் மரணத்துக்கும் நடுவிலிருக்கும் இடைவெளி.

மலை ஏறுவது தவறு இல்லை. தயாரிப்பில்லாமல் மலை ஏறுவது தான் தவறு. ஆபத்தில் சிக்கிய பிறகும் உதவி கேட்காமல் இருப்பது அதைவிட பெரிய தவறு. இந்த நால்வரும் முதல் தவறு செய்தார்கள். ஆனால் இரண்டாவது தவறு செய்யவில்லை.

அதனால்தான் இன்று அவர்கள் வீட்டில் இருக்கிறார்கள். இல்லையென்றால் மலையேற்றத்தில் நான்கு இளைஞர்கள் பலி என்ற செய்தியாக வந்திருக்கும்.

இன்னொரு விஷயத்தை கவனியுங்கள். வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு அழைப்பு சென்றிருக்கிறது. மீட்புக் குழு இரவு 10:30 மணிக்கு மலையேறத் தொடங்கியிருக்கிறது. 4.2 மைல் ஆபத்தான பாதையைக் கடந்து, அதிகாலை 1:15 மணிக்குத்தான் அவர்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். தரைக்கு முழுமையாக வந்தது காலை 9 மணிக்கு.

மீட்புக் குழு வேகமாகச் செயல்பட்டும் இவ்வளவு நேரம் ஆகிறது என்றால் மலை என்ன மாதிரியான இடம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அந்தப் பாதைக்கு செல்லும் முன் என்ன எடுத்துச் செல்ல வேண்டும், வானிலை எப்படி இருக்கும், எவ்வளவு நேரம் ஆகும் என்று ஆன்லைனில் பத்து நிமிடம் தேடிப் படித்துவிட்டே கிளம்பலாம்.

தயாராகாமல் மலைக்குப் போவது சாகசம் இல்லை.   அப்படி இல்லையென்றால் வீட்டில் உங்களுக்கு சிறப்பான மாலை மரியாதை கிடைக்கும் ஆனால் அதை பார்த்து மகிழ உங்களால் முடியாது.  டாட்




அன்புடன்
மதுரைத்தமிழன்

#HikingSafety #AdventureGoneWrong #NewHampshire #TravelMistakes #TamilBlogs #MaduraiTamizhan America, #HikingRescue, #FranconiaRidge ,#MountLafayette, #NewHampshireHiking, #OutdoorSafety, #HikingMistakes, #SearchAndRescue, #NewJersey, #AvargalUnmaigal,

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.