Sunday, August 16, 2026

 கொள்கையும் கோட்பாடும் வியாபாரப் பொருளா? இந்திய அரசியலின் அப்பட்டமான நிஜம்!

தேர்தல் களம் இன்று தத்துவங்கள் மோதும் இடமல்ல. அதிகாரம், பணம், இலவசம், லாபம் கணக்கிடப்படும் அரசியல் சந்தை

#TamilNaduPolitics #TNPolitics #IndianPolitics #PoliticalCommentary #ElectionReality #DemocracyInIndia #PoliticalAnalysis #தமிழ்நாடுஅரசியல் #இந்தியஅரசியல் #அரசியல்விமர்சனம் #AvargalUnmaigal #MaduraiTamizhan

தமிழக மற்றும் இந்திய அரசியலின் தற்போதைய நிலையை மேலோட்டமாகப் பார்த்தால் ஏமாற்றமும், ஆழமாகப் பார்த்தால் அது ஒரு அப்பட்டமான வணிக வளாகமும் மட்டுமே கண்களுக்குப் படும். இங்கே கொள்கை, கோட்பாடு, சமூக நீதி அல்லது தேசியம் என்பவையெல்லாம் தேர்தல் காலத்து வியாபாரப் பொருள்களாக மாறி பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. திராவிடக் கட்சிகளாகட்டும், தேசியக் கட்சிகளாகட்டும், ஏன் புதிது புதிதாகக் கொடி பிடித்துக் கிளம்பும் கட்சிகளாகட்டும்; அனைவரின் இறுதி இலக்கமும் ஒரே புள்ளியில்தான் வந்து நிற்கிறது, அது அதிகாரமும் அதன் மூலமான லாபமுமே. இன்றைக்குத் தேர்தல் களம் என்பது மக்களின் மனங்களை தத்துவத்தால் வெல்லும் இடமல்ல. மாறாக, எந்தக் கட்சிக்குப் பின்னால் கோடிக்கணக்கான ரூபாய் பலம் இருக்கிறது, எந்தக் கட்சி கார்ப்பரேட் நிறுவனங்களைப் போல திட்டமிட்டுப் பணத்தையும் இலவசங்களையும் விநியோகிக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் சந்தை. இதில் எந்தத் தரப்பும் விதிவிலக்கல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும்போது தர்மத்தின் குரலை உயர்த்தும் பலரும், ஆளுங் கட்டிலில் அமர்ந்தவுடன் முந்தையவர்களை மிஞ்சும் அளவுக்கு அதிகாரக் குத்தகைதாரர்களாக மாறுவதுதான் நமது ஜனநாயகத்தின் மாறாத சாபக்கேடு.

அப்படியானால் வாக்காளர்களின் நிலைதான் என்ன. இதிலும் நாம் எமாந்து போய்விட முடியாது. இன்றைக்கு வாக்காளனும் அரசியல்வாதியும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் ஒரு விசித்திரமான வர்த்தக உறவுக்குள் சிக்கியிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் பணத்தையும் பொருள்களையும் வாங்கிக் கொண்டு வாக்களிப்பது இன்று எந்தக் குற்ற உணர்வும் இன்றி இயல்பான வழக்கமாக மாறிவிட்டது. எவன் ஆட்சிக்கு வந்தாலும் என் வாழ்க்கையை மாற்றப் போவதில்லை, அப்படியிருக்கும்போது தேர்தல் நேரத்தில் தருவதை வாங்குவதில் என்ன தப்பு என்ற எதார்த்தமான ஏளனம் மக்களின் அடிமனதில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இதை வெறும் பேராசை என்று சொல்லி நாம் எளிதாகக் கடந்துபோய்விட முடியாது. பல வருடங்களாக வேலைவாய்ப்பு, மருத்துவம், விலை உயர்வு, அரசு அலுவலக அலைச்சல் என வாழ்க்கை முழுக்க ஏமாற்றப்பட்ட மனிதனுக்கு, தேர்தல் நேரத்தில் கிடைக்கும் சில ஆயிரம் ரூபாய் கூட, ஐந்து வருடத்தில் கிடைக்கும் ஒரே நேரடி பலன் போலத்தான் தோன்றுகிறது.

சாதி, மதம், பணப் பலம் மற்றும் இலவச வாக்குறுதிகள் என்ற இந்த நான்கு தூண்களில்தான் இந்திய அரசியலின் தேர்தல் வெற்றிகள் தாங்கிப் பிடிக்கப்பட்டுள்ளன. இதில் தத்துவார்த்தம் பேசும் கட்சிகளால் எங்குமே தாக்குப்பிடிக்க முடியாது. இந்த எதார்த்தம் புரியாமல், ஆளுங்கட்சி எதைச் செய்தாலும் உடனே தெருவில் இறங்கிப் போராட்டம் நடத்துவது, அறிக்கை விடுவது, கண்டனம் தெரிவிப்பது என்று எதிர்க்கட்சிகள் செய்யும் சடங்குகள் பொதுமக்களிடையே எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை மாறாக அவர்களை மேலும் பரிதாபமானவர்களாகவே காட்டுகிறது.(*****திமுக தலைமை புரிந்து கொள்ள வேண்டிய  செய்தி இது***** )

இலவசம் என்றாலே தவறு என்று சொல்ல முடியாது. பசியோடு இருக்கும் குடும்பத்துக்கும், மருந்துக்குப் பணமில்லாத முதியவருக்கும், கட்டணம் செலுத்த முடியாத மாணவனுக்கும் அரசு உதவி தேவைதான். ஆனால் வேலைவாய்ப்பு, தரமான கல்வி, நம்பகமான மருத்துவம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கான தீர்வைத் தராமல், தேர்தல் நேரத்து வாக்கு வணிகத்துக்கு இலவசங்களைப் பயன்படுத்தும்போதுதான் அது மக்களை உயர்த்தும் உதவியாக இல்லாமல், மீண்டும் மீண்டும் அதே அரசியல் வாசலில் கையேந்த வைக்கும் சங்கிலியாக மாறுகிறது.

இந்தச் சூழலில், எதிர்க்கட்சிகளின் அடிப்படையான பலவீனமே அவர்களின் அகக் கட்டமைப்பில் உள்ள சுயநலமான வணிகக் கணக்குகள்தான். இரண்டாம் கட்டத் தலைவர்களும் மாவட்டச் செயலாளர்களும் கட்சிக்காகத் தியாகம் செய்த காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு ஒவ்வொரு நிர்வாகியும் அடுத்த தேர்தலில் தனக்கு சீட் கிடைக்குமா, அல்லது ஆளுங்கட்சியோடு ரகசிய ஒப்பந்தம் போட்டு தனது வணிகத்தைப் பாதுகாக்கலாமா என்றுதான் யோசிக்கிறார்களே தவிர, மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்காகத் தன் பதவியைத் துறக்கத் தயாராக இல்லை.
      
#TamilNaduPolitics #IndianPolitics #PoliticalCommentary #AvargalUnmaigal #MaduraiTamizhan #ElectionReality


ஆளுங்கட்சி செய்யும் ஒவ்வொரு சின்னத் தவறுக்கும் உடனே ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சிகள் பகற்கனவு காண்பது அவர்களின் அரசியல் அறியாமையைக் காட்டுகிறது. மக்களின் ஒட்டுமொத்தப் பொறுமை எப்போது எல்லை மீறுகிறதோ, அன்றாட வாழ்க்கையின் பொருளாதாரச் சுமைக்கும் ஊழலுக்கும் எதிராக அவர்களின் அமைதியான கோபம் வெடிக்கிறதோ, அந்தத் தருணம் மட்டுமே மாற்றத்துக்கான உண்மையான கதவைத் திறக்கும். அதுவரை பொறுமையைக் கடைப்பிடிக்கத் திராணியில்லாமல், தினமும் சப்பையான குற்றச்சாட்டுகளை வைப்பதும், மக்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்ள நாடகங்கள் ஆடுவதும் பலவீனமான எதிர்க்கட்சியின் அடையாளமே தவிர வெற்றிக்கான பாதை அல்ல. மக்கள் எதிர்க்கட்சியிடம் தினசரி கோபத்தையும் கண்டன அறிக்கையையும் மட்டும் எதிர்பார்ப்பதில்லை . நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எங்கள் வாழ்க்கையில் என்ன மாறும் என்ற கேள்விக்கான நம்பகமான பதிலைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அந்தப் பதில் இல்லாமல் மைக்கில் சத்தம் போடுவது எதிர்ப்பல்ல. தன் இருப்பை மட்டும் நினைவூட்டிக்கொள்ளும் பலகீனமான முயற்சி.


இறுதியில் ஒன்றுதான் நிஜம். மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கும் ஆளுங்கட்சிகளும், மக்களின் நிஜத் துயரங்களைப் புரிந்துகொள்ளாமல் வெறும் மேடை முழக்கங்களில் வாழும் எதிர்க்கட்சிகளும், இந்த அதிகாரச் சந்தையில் நீண்ட காலம் நிலைக்க முடியாது. காய்களை எப்போது நகர்த்த வேண்டும் என்ற கூர்மையான தொலைநோக்குப் பார்வையும், மக்களின் நிஜ வாழ்வோடு ஒட்டிய உண்மையும் இல்லாத எந்த அரசியலும் காலத்தை வென்று நிற்காது. இதுவே இன்றைய அரசியலின் கசப்பான, தவிர்க்க முடியாத தீர்ப்பு.


 
நியூ ஜெர்சியில் அணைந்த ஒரு இந்தியத் தாயின் உயிர் ஒரு இளம் மாணவனைச் சுற்றி எழும் கேள்விகள்!
https://avargal-unmaigal.blogspot.com/2026/08/americanewjerseyaccident-raritannj.html

அன்புடன்
மதுரைத்தமிழன்

#TamilNaduPolitics #TNPolitics #IndianPolitics #PoliticalCommentary #ElectionReality #DemocracyInIndia #PoliticalAnalysis #தமிழ்நாடுஅரசியல் #இந்தியஅரசியல் #அரசியல்விமர்சனம் #AvargalUnmaigal #MaduraiTamizhan

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.