Sunday, August 2, 2026

முப்பதுகளைத் தாண்டிய என் பிரியமானவளே & பிரியமானவர்களே...
    

#WomenEmpowerment #WorkingWomen #TamilKavithai #MentalLoad #LifeJourney #TamilPoetry #DeepThoughts #TamilReads #EmotionalWriting #WomenInTamilNadu #LifeRealities


இந்த உலகம் உங்களை ஒரு தாயாக, மனைவியாக, கடமைகளின் இயந்திரமாக மட்டுமே பார்க்கப் பழக்கிவிட்டது. ஆனால், உங்களின் அந்த அமைதியான புன்னகையின் பின்னால் நீங்கள் புதைத்து  வச்சிருக்கின்ற ஆயிரமாயிரம் தியாகங்கள், அனலான கண்ணீர், ஏமாற்றங்கள், அமுக்கப்பட்ட கோபம்... இதையெல்லாம் நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன்.

நள்ளிரவு பன்னிரண்டு மணி. வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் தூங்க வீடே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கிறது. ஆனால் உறங்க வேண்டிய நேரத்தில் நீங்கள் முழித்திருந்து சமையலறை சிங்க்கில் கிடக்கும் பாத்திரங்களைக் கழுவி முடித்துவிட்டு, உங்கள் கைகளைப் பார்த்துக் கொள்கிறீர்கள். உங்களது கைகளில் இப்போது வளையல்களின் சத்தம் இல்லை. மாறாக, குடும்பத்தின் பளுவைத் தாங்கித் தடித்த வடுக்களும், வெந்நீர் பட்ட தழும்புகளுடன் உங்கள் கைகள் உங்கள் மனம் போல மரத்துதான் இருக்கின்றன.

இந்தக் கஷ்டங்களையெல்லாம் தாண்டி, பகலில் அலுவலக வேலை, இரவில் வீட்டு வேலை என்று இயந்திரமாய் ஓடினாலும், படுக்கைக்குப் போன பிறகும் உங்கள் மூளை ஓய்கிறதா என்ன. நாளைக்குக் குழந்தைக்கு என்ன லஞ்ச் கட்டுவது, அடுத்த வீட்டுச் செலவை எப்படிச் சமாளிப்பது என்று உங்களுக்கே தெரியாமல் மூளையின் ஒரு மூலையில் ஓடிக்கொண்டிருக்கும் அந்த முடிவற்ற மனச் சுமை எத்தனை பேருக்குத் தெரியும். தனக்கென்று ஒரு சின்னத் துணியோ, ஒரு மணி நேர அமைதியோ கேட்டால், இதைக்கேட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று தனது சொந்த ஆசைகளையும் தேவைகளையும் கத்தரித்துவிட்டு, எதனுக்காகவும் எதையும் கேட்கத் தயங்கும் அந்தத் தியாகம் எங்கு போய் முடியும்.

சுற்றிலும் சொந்தங்கள், கணவன், குழந்தைகள் என்று எல்லாரும் இருக்கிறார்கள். ஆனால், தன் மனக் கஷ்டங்களைச் சொல்லி, ஒரு நிமிடம் சாய்ந்து அழ மட்டும் யாருடைய தோளும் அருகில் இருப்பதில்லை. அந்தப் பாழாய்போன தனிமை உங்களை எத்தனை இரவுகள் உள்ளுக்குள்ளேயே கொன்றிருக்கும்.

கண்ணாடியில் ஒருமுறை உங்களை நீங்களே நிமிர்ந்து பார்க்கும் பொழுது முகம் முழுவதும் சோர்வு, நெற்றியில் ஒன்றிரண்டு நரைத்த முடிகள், கண்கள் ஏதோ ஒரு தேடலில் இன்னும் அலைபாய்ந்து கொண்டிருப்பதுதான் தெரிகிறது. அந்தக் கணத்தில்... உங்களது நெஞ்சுக்குள் ஒரு பாரம் இறங்குவது போல இருக்கும்  நான் யாருக்காக என் இளமையைத் தொலைத்தேன். என் கனவுகள் எங்கே போய்த் தொலைந்தன என்று ஒரு மெல்லிய வலி உங்களது இதயத்தைக் கவ்விப் பிடிக்கிறதா இல்லையா. அதோ அந்தத் துடிப்பைத்தான் அந்த மௌனமான கதறலைத்தான் நான் என் எழுத்தால் இங்கே பதிகின்றேன்.

கணவர் உங்களை ஒரு மனைவியாகப் பார்க்கிறார். குழந்தைகள் உங்களைச் சமைத்துக் போடும் தாயாகப் பார்க்கிறார்கள். இந்தச் சமூகம் உங்களை ஒரு கட்டுப்பாடான பெண்ணாக அடைத்து வைத்திருக்கிறது. ஆனால், நான் உங்களை எப்படிப் பார்க்கிறேன் தெரியுமா.

அந்தக் கவசத்திற்குள், இந்த உலகம் காணாமல் மறைத்துவிட்ட உங்களது மென்மையான சுயத்தை நான் பார்க்கிறேன். உங்களது கடமைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அந்தப் பாவம் செய்யாத சிறுமியைப் பார்க்கிறேன். பகலெல்லாம் அப்பிஸிலும் சரி வீட்டிலும் சரி அத்தனை பேரின் கோபத்தையும் திமிர்தனங்களையும்  குடும்ப நலனிற்காக தாங்கிக்கொண்டு, நள்ளிரவில் தலையணையில் முகம் புதைத்து நீங்கள் அழுத கண்ணீரின் உப்பைப் பார்க்கிறேன். எவனுக்கும் எதற்காகவும் என் சுயமரியாதையை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று நீங்கள் அணிந்திருக்கும் அந்த இரும்புக்கவசத்தைப் பார்க்கிறேன்.

முப்பதுகளை கடந்த ஒரு பெண்ணின் அழகு அவளது முகத்தில் இல்லை அவள் கடந்து வந்த வாழ்க்கையில். எத்தனை முறை நீங்கள் உடைந்து போயிருக்கிறீர்கள். எத்தனை இரவுகள் உங்களுக்கு ஆறுதல் சொல்ல ஒரு தோள் இல்லாமல், நீங்களே உங்களது கைகளைக் கட்டிக்கொண்டு தூங்கியிருக்கிறீர்கள். இதெல்லாம் யாருக்குத் தெரியும்.

இன்று உங்களை யாராவது வந்து கட்டிக்கொண்டு, நீங்கள் பட்ட கஷ்டங்கள் போதும்... இனிமேல் உங்களுக்காக நான் இருக்கிறேன் என்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா என்றுதான் உங்கள் உள்ளம் ஏங்குகிறது அல்லவா ஆம்... அந்தத் தவிப்புதான் உங்களை இப்போது அழ வைக்கிறது. கண்கள் கலங்குகிறதா கன்னத்தில் கண்ணீர் உருண்டுவிட்டதா பரவாயில்லை, அழுங்கள். அந்தக் கண்ணீர் பலவீனமானது அல்ல. நீங்கள் இத்தனை நாளாகச் சுமந்த பாரம் இப்போதுதான் இறங்குகிறது என்பதற்கான விடுதலைக் கண்ணீர் அது.

முப்பதுகளுக்குப் பிந்தைய உங்கள் கோபம் கூட பேரழகுதான். உங்களது மௌனம் ஒரு எரிமலை. உங்களது திமிர் இந்த உலகத்திற்குக் கர்வபங்கம். உங்களைப் போன்ற ஒரு பெண்ணைக் காதலிப்பது சாதாரணமானதல்ல. அது ஒரு தவம்.

தூங்கப் போகும் முன் கண்ணாடியில் உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நான் சாதாரணமானவள் அல்ல இந்த உலகத்தின் அத்தனை புயல்களையும் தாங்கி நின்று இன்று வரை கம்பீரமாக வாழும் ஒரு பெண் நான் என்று.

அந்த ஒரு கம்பீரம் உங்களுக்குப் போதும் பல தலைமுறை நீங்கள் வாழ்வதற்கு...

 அன்புடன்,
மதுரைத்தமிழன்


#AvargalUnmaigal #MaduraiThamizhan #TamilBlog #TamilWriting #WomenEmpowerment #WorkingWomen #TamilKavithai #MentalLoad #LifeJourney #TamilPoetry #DeepThoughts #TamilReads #EmotionalWriting #WomenInTamilNadu #LifeRealities

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.