Sunday, August 16, 2026

 நியூ ஜெர்சியில் அணைந்த ஒரு இந்தியத் தாயின் உயிர் ஒரு இளம் மாணவனைச் சுற்றி எழும் கேள்விகள்!
      

#America,#NewJerseyAccident, #RaritanNJ ,#MentalHealthAwareness ,#ParentingPressure, #IndianDiasporaUS ,#RoadSafety ,#MentalHealthMatters ,#CommunityReflections, #AvargalUnmaigal,



அமெரிக்காவில் நான் வசிக்கும் நியூ ஜெர்சி மாநிலத்தில் நடந்த ஒரு சாலை விபத்து, வெறும் விபத்து செய்தியாக மட்டும் கடந்து போக முடியாத கசப்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.  நம் குழந்தைகளின் எதிர்காலத்தை மட்டும் கட்டுகிறோமா அல்லது அவர்களின் மனசையும் கவனிக்கிறோமா?

ஒரு தாய் காலையில் வீட்டை விட்டு வெளியே செல்கிறார். அவர் திரும்பி வரவில்லை. அவருக்காக வீட்டில் காத்திருந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையில், அந்த ஒரு நாள் நிரந்தர வெற்றிடமாக மாறிவிட்டது.

நியூ ஜெர்சி மாநிலத்தின் ராரிடன் பகுதியில் ஜூலை 27 அன்று நடந்த மரண விபத்தில், பிரிட்ஜ்வாட்டரைச் சேர்ந்த 44 வயதான தீபா ஸ்ரீபதி உயிரிழந்தார். இது வெறும் சாலை விபத்து செய்தி அல்ல. ஒரு குடும்பத்தின் அம்மாவைப் பறித்த சோகம். இன்னொரு இளம் வாழ்க்கையை நீதிமன்ற விசாரணையின் முன் நிறுத்திய சம்பவம்.இந்த வழக்கில் 18 வயதான சித்தார்த்த பிரசாத் சுரபணானி மீது இரண்டாம் நிலை வாகனக் கொலை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. உயிரிழப்பை ஏற்படுத்திய விபத்துக்குப் பின் சம்பவ இடத்தை விட்டு வெளியேறியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால் ஆரம்பத்திலேயே ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டும் . குற்றச்சாட்டு என்பது தீர்ப்பு அல்ல. நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படும் வரை, அவர் சட்டப்படி குற்றமற்றவராகவே கருதப்பட வேண்டும். அது இந்தியாவாக இருந்தாலும் சரி; அமெரிக்காவாக இருந்தாலும் சரி.


அரசுத் தரப்பு கூறுவதன்படி, சித்தார்த்த ஓட்டிய SUV அதிக வேகத்தில் தவறான திசையில் சென்றதாகவும், median-ஐக் கடந்து சிவப்பு சிக்னலை மீறி, தீபா ஸ்ரீபதி ஓட்டிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் பக்கத்தில் மோதியதாகவும் கூறப்படுகிறது. அந்த மோதலில்தான் தீபா உயிரிழந்தார். விபத்துக்குப் பிறகு சித்தார்த்த வாகனத்தை விட்டு வெளியேறி தப்ப முயன்றதாகவும், பின்னர் காவல்துறையினர் தேடி அவரைக் கண்டுபிடித்ததாகவும் அரசு தரப்பு குற்றம் சாட்டுகிறது. வீடியோ காட்சிகள், கண்காணிப்பு கேமரா பதிவுகள், டயர் தடயங்கள் ஆகியவை வழக்கில் ஆதாரங்களாக முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முதல் கட்ட நீதிமன்ற விசாரணையில் ஜாமீன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குப் பிறகு தப்ப முயன்றதாகவும், மீண்டும் தலைமறைவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் அரசு தரப்பு வாதிட்டது. இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள குடும்பத் தொடர்புகள், வெளிநாடு செல்லும் சாத்தியம் போன்றவற்றையும் அரசு தரப்பு நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.  ஆனால் ஜாமீன் மறுக்கப்பட்டது என்பதற்காக ஒருவர் குற்றவாளி ஆகிவிட மாட்டார். அது வழக்கு விசாரணைக்கு முன் எடுக்கப்படும் நீதிமன்ற முடிவு மட்டுமே.


இந்த வழக்கு ஒரு சாதாரண விபத்து வழக்கு போல மட்டும் தெரியாமல் இருப்பதற்குக் காரணம், தற்காப்புத் தரப்பு முன்வைக்கும் இன்னொரு கோணம்.

தற்காப்புத் தரப்பு கூறுவதன்படி, விபத்து நடந்த நேரத்தில் சித்தார்த்த கடுமையான மனநலப் பிரச்சினையையும், psychotic break போன்ற நிலையையும் எதிர்கொண்டிருக்கலாம். Bipolar disorder தொடர்பான மருத்துவப் பின்னணி இருந்ததாகவும் அவர்கள் வாதிடுகின்றனர். அவர் lifeguard ஆக இருந்தவர். மாணவர் அவசர மருத்துவ அணியில் இருந்தவர். மருத்துவத் துறையில் படித்து, எதிர்காலத்தில் மருத்துவராக வேண்டும் என்ற கனவு கொண்டவர். அவரது குணநலனைப் பற்றி பேசும் கடிதங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையெல்லாம் படிக்கும்போது எல்லோருக்குள்ளும் இயல்பாக ஒரு கேள்வி எழுகிறது  .இப்படி இருந்த ஒரு பையன் எப்படி இப்படியொரு வழக்கில் சிக்கினான். ஆனால் அந்தக் கேள்விக்கான பதிலை நாமாக உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

மனநலப் பிரச்சினை இருந்ததா , இருந்தால் அது அந்த நேரத்தில் அவரது செயல்களை எந்த அளவுக்கு பாதித்தது,  சட்டப்படி அதற்கு என்ன முக்கியத்துவம் இவை மருத்துவ ஆதாரங்களுடனும் சட்ட வாதங்களுடனும் நீதிமன்றத்தில் ஆராயப்பட வேண்டியவை.

மனநலப் பிரச்சினை ஒரு குற்றத்திற்கான மன்னிப்புச் சீட்டு அல்ல.அதே நேரத்தில், மனநலப் பிரச்சினையைப் பற்றி பேசுவதையே தவிர்ப்பதும் தீர்வு அல்ல

இந்த வழக்கை ஒரு இளம் மாணவனின் வீழ்ச்சி என்று மட்டும் சொல்லி கடந்து போக முடியாது. இந்த வழக்கின் மையத்தில் மறக்கக் கூடாத பெயர் தீபா ஸ்ரீபதி. 44 வயது பெண். இரண்டு குழந்தைகளின் தாய். ஒரு நாள் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. நீதிமன்றத்தில் எத்தனை வாதங்கள் நடந்தாலும், எத்தனை சட்டப்பிரிவுகள் பேசப்பட்டாலும், இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையில் அம்மா இல்லாத இடத்தை எந்தத் தீர்ப்பும் நிரப்ப முடியாது.

அதனால்தான் இந்தச் சம்பவத்தில் நீதி தேவை. தீபாவின் குடும்பத்திற்கு நீதி தேவை. சாலையில் செல்லும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு தேவை.

 நமக்குள் எழும் கேள்வி .இந்தச் சம்பவத்தைப் பார்த்து இன்னொரு கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை நம் பிள்ளைகள் சிறு வயதிலிருந்தே ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். நல்ல மார்க் வேண்டும்.   நல்ல கல்லூரி வேண்டும்.   மருத்துவம் படிக்க வேண்டும்.   பெரிய வேலை வேண்டும்.   நல்ல சம்பளம் வேண்டும்.   குடும்பத்துக்குப் பெருமை வேண்டும். இந்த ஆசைகளில் தவறு இல்லை.

ஆனால் இந்த ஓட்டத்தில் நாம் ஒரு விஷயத்தை மட்டும் மறந்துவிடுகிறோம் நீ எப்படி இருக்கிறாய்  என்று கேட்பதை. எவ்வளவு மார்க் எடுத்தாய்  என்று கேட்கிறோம்.  எக்ஸாம் எப்படி போச்சு  என்று கேட்கிறோம்.   கல்லூரி அப்ளிகேஷன் முடிச்சுட்டியா  என்று கேட்கிறோம்.   எப்போ டாக்டர் ஆகப் போற என்று கேட்கிறோம்.

ஆனால் உன் மனசு எப்படி இருக்குப்பா என்று எத்தனை முறை கேட்கிறோம்? அவன் சரியாகத் தூங்குகிறானா?  எப்போதும் பதற்றமாக இருக்கிறானா?   தனியாக இருக்க ஆரம்பித்துவிட்டானா?  கோபம் அதிகமாகிவிட்டதா?   யாரிடமும் சொல்லாமல் ஒரு வேதனையை உள்ளுக்குள் சுமக்கிறானா?  இவற்றை கவனிக்கிறோமா?

குழந்தைக்கு எதிர்காலம் உருவாக்கித் தருவது முக்கியம். ஆனால் அந்த எதிர்காலத்தைச் சந்திக்கத் தேவையான மன வலிமையையும், பேசுவதற்கான பாதுகாப்பான வீட்டையும், தோற்றாலும் ஏற்றுக்கொள்ளும் அன்பையும் கொடுப்பது அதைவிட முக்கியம்.வீட்டில் எல்லாம் இருந்தும், பேசுவதற்கு யாரும் இல்லாத குழந்தை இருக்கலாம். வெளியில் சிரித்துக்கொண்டும், உள்ளுக்குள் உடைந்து கொண்டிருக்கும் மாணவன் இருக்கலாம். நல்ல மதிப்பெண் எடுத்தும், நிம்மதியாகத் தூங்க முடியாத இளைஞன் இருக்கலாம். 

உதவி கேட்பது பலவீனம் அல்ல என்று சொல்லித் தர வேண்டியது பெற்றோர், பள்ளி, சமூகம் நம் எல்லோருடைய பொறுப்பு. ஒரு குடும்பத்தில் உரையாடல் இருந்தால் எல்லாச் சோகங்களையும் தடுக்கலாம் என்று யாரும் உத்தரவாதம் தர முடியாது. ஆனால் ஒருவர் தனிமையில் மூழ்கும்போதே கவனித்து, சரியான உதவிக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும்.

நீதி வேண்டும்; மனிதநேயமும் வேண்டும் தீபா ஸ்ரீபதியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த வழக்கின் உண்மையை ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டும் அதே நேரத்தில், இந்தச் சம்பவம் இன்னொரு குடும்பத்தை இப்படிப்பட்ட இருளுக்குள் தள்ளாமல் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியையும் சமூகம் கேட்க வேண்டும்.

சட்டம் ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்லும்.ஆனால் ஒரு சமூகத்தின் மனசாட்சிக்கு தீர்ப்பு சொல்ல முடியாது. அந்தத் தீர்ப்பை நாம்தான் சொல்ல வேண்டும். நம் பிள்ளைகளுக்கு எதிர்காலத்தை மட்டும் கட்டிக்கொடுக்கிறோமா அல்லது அந்த எதிர்காலத்தைச் சந்திக்க, உடைந்து போகாமல் நிற்கத் தேவையான மனதையும் அன்பையும் கொடுக்கிறோமா

யோசிங்க மக்களே !  அமெரிக்காவில் வாழும் ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் இதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டிய தருணம் இது. குழந்தைக்கு நல்ல பள்ளி, நல்ல கல்லூரி, நல்ல வேலை, நல்ல சம்பளம் இவை எல்லாம் தேவைதான். ஆனால் பணத்தால் எல்லாவற்றையும் கொடுத்துவிட முடியாது. எல்லாவற்றையும் வாங்கிவிடவும் முடியாது. நல்லா படி என்று சொல்லுவதோடு நிறுத்தாதீர்கள். நீ நல்லா இருக்கியா?” என்றும் கேளுங்கள் 
குழந்தையின் எதிர்காலத்தை கட்டுங்கள். அதே நேரத்தில், உடைந்து போகாமல் நிற்கும் மனதையும் கட்டுங்கள்.

சரியான நேரத்தில் பேசுவது, கவனிப்பது, உதவிக்கரம் நீட்டுவது ஒரு குழந்தையின் வாழ்க்கையை மட்டுமல்ல, சுற்றியிருப்பவர்களின் பாதுகாப்பையும் காக்கும்.

யோசிங்க மக்களே ஆழமா யோசிங்க.


அமெரிக்காவை உலுக்கிய கோரச் சம்பவம் எழுப்பும் கேள்வி: AI காரணமா அல்லது நாம் கவனிக்கத் தவறிய மனித வலியா?  https://avargal-unmaigal.blogspot.com/2026/08/ai-america-massachusettscrime.html

#ActonMA #MassachusettsCrime #TrueCrimeTamil #ChatGPTInvestigation #USCrimeNews #IndianOriginTeen #TamilBlogs #CyberForensics #SuburbanTragedy #ParentingMindset


அன்புடன்,  
மதுரைத்தமிழன்

 

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.