Sunday, November 15, 2026

  இசைக்கு ராஜாவாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் அல்ல!
         
  

#Ilaiyaraaja, #இளையராஜா, #Gondhal, #கோந்தல், #Oscars, #ஆஸ்கர், #CueSheet, #கியூஷீட், #TamilBlog, #மதுரைத்தமிழன்


‘கோந்தல்’ படத்தின் ஆஸ்கர் இசைப் பிரிவுப் பரிசீலனைக்காகக் ‘கியூ ஷீட்’ கேட்டது குறித்தும், அதற்கு இளையராஜா அளித்த பதில் குறித்தும் இயக்குநர் சந்தோஷ் தவாகர் பகிர்ந்ததாக ஒரு செய்தியைப் பார்த்தேன். இசை அனுபவத்தால் உருவாகிறது . அதற்கு ஆவணம் தேவையில்லை என்பதுதான் அவரது பதிலின் சாரமாக அந்தச் செய்தியில் சொல்லப்பட்டிருந்தது.

அந்தச் செய்தியில் கூறப்பட்டிருப்பதன் அடிப்படையில்தான் கேட்கிறேன். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கேட்ட கேள்விக்கும் இந்தப் பதிலுக்கும் என்ன சம்பந்தம்?

இளையராஜா அவர்களே,  அவர்கள் கேட்டது உங்கள் இசை ஞானத்துக்குச் சான்றிதழா? அல்லது உங்கள் மனதுக்குள் இசை எப்படிப் பிறக்கிறது என்று விளக்கச் சொன்னார்களா? படத்தில் பயன்படுத்திய இசையின் விவரங்களைத்தானே கேட்கிறார்கள்?

உனக்கு அறிவு இருக்கிறது என்பதை எந்த அறிவைக் கொண்டு சொல்கிறாய் என்று முன்பு கேள்வி கேட்ட இளையராஜாவிடம், இப்படிப்பட்ட பதில்களைத்தானே எதிர்பார்க்க முடியும்? இசைக்கு வேண்டுமானால் அவர் ராஜாவாக இருக்கலாம் . வயதும் அனுபவமும் இருந்தால் மட்டும் போதுமா? மற்றவர்களின் தேவையைப் புரிந்துகொண்டு பொறுப்பாக நடந்துகொள்ளவும் தெரிய வேண்டாமா?

உண்மையைச் சொல்லணும்னா, இதைப் படிக்கும்போது எரிச்சல்தான் வருகிறது. உங்களைப் போன்ற அனுபவமுள்ள ஒருவரிடம் இதையெல்லாம் விளக்க வேண்டியிருக்கிறதே என்று!

ஒரு விருதுக்கான பரிசீலனைக்குச் செல்லும்போது, அதற்காகக் கேட்கப்படும் விவரங்களைக் கொடுக்க வேண்டும். அந்தக் கோரிக்கையில் தவறு இருந்தால் அதைச் சொல்லுங்கள். தயாரிப்பதில் சிக்கல் இருந்தால் அதைப் பேசுங்கள். யார் தயாரிப்பது என்பதில் குழப்பம் இருந்தால் உட்கார்ந்து முடிவு செய்யுங்கள். அதை விட்டுவிட்டு, இசை அனுபவத்தால் வருகிறது என்று சொன்னால் என்ன பதில் அது?

இதைக்கூடப் புரிந்து கொள்ளாமல் பேசும்போது, என்ன கூமுட்டைத்தனமான பதில் இது என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

சினிமா என்பது உங்கள் இசை மட்டும் இல்லை. இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், ஒலிக்கலைஞர்கள் என்று எத்தனையோ பேரின் உழைப்பு அதற்குள் இருக்கிறது.
அந்தப் படத்தை இன்னொரு இடத்துக்குக் கொண்டுபோக இயக்குநர் முயற்சி செய்கிறார். அவருக்குத் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பதில் என்ன பிரச்சனை?

உங்களுக்கு ஆஸ்கர் முக்கியமில்லாமல் இருக்கலாம். அதைப் பற்றி உங்களுக்குக் கவலையே இல்லாமல் இருக்கலாம். ஆனால் அந்த இயக்குநருக்கு அது முக்கியமாக இருக்கலாமே? அந்தப் படத்துக்காக உழைத்த மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு பெரிய விஷயமாக இருக்கலாமே? உங்களுக்கு வேண்டாம் என்பதற்காக அவர்களுடைய எதிர்பார்ப்புக்கும் மதிப்பில்லையா என்ன?

நீங்கள் எத்தனையோ அங்கீகாரங்களைப் பார்த்திருக்கலாம். அதனால் புதிதாக ஓர் அங்கீகாரத்தை எதிர்பார்க்கிறவரின் ஆசை உங்களுக்குச் சாதாரணமாகத் தெரியலாம். ஆனால் அவருக்கு அது எத்தனை நாள் கனவோ! அந்த இடத்தில் கொஞ்சம் அவரைப் பற்றியும் யோசிக்க வேண்டாமா?

இதற்கும் சிலர் வருவார்கள். “ராஜாவுக்கு ஆஸ்கார் தேவையில்லை” என்று.

அடேய், ராஜாவுக்குத் தேவையில்லை என்பதுதான் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலா? அந்த இயக்குநருக்கும் தேவையில்லை என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்? அவர் கேட்ட ஒத்துழைப்பைப் பற்றிப் பேசினால், நீங்கள் ஏன் ராஜாவின் பெருமையைப் பற்றிப் பதில் சொல்கிறீர்கள்?

நானும் அவர் இசையை ரசிக்கிறவன்தான். அதற்காக இதையும் சரி என்று சொல்ல முடியாது. பிடித்த கலைஞரின் அணுகுமுறை தவறாகத் தோன்றும்போது அதைச் சொல்லக்கூடாதா?

உடனே அவர் போட்ட பாடல்களின் பட்டியலை எடுத்துக்கொண்டு வந்துவிடுவார்கள். அந்தப் பாடல்கள் நல்ல பாடல்கள்தான். அதை யார் மறுத்தார்கள்? இப்போது நாம் பேசுவது இந்தப் பதிலைப் பற்றி!

இளையராஜா தரப்பில் வேறு விளக்கம் இருந்தால் வரட்டும். அதையும் கேட்போம். ஆனால் இயக்குநர் பகிர்ந்ததாகச் செய்தியில் கூறப்பட்டிருப்பதுதான் நடந்திருக்கிறது என்றால், இந்த அணுகுமுறையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

உங்கள் திறமையை யாரும் குறைத்துவிடவில்லை. உங்கள் அனுபவத்தையும் யாரும் அவமதிக்கவில்லை. உங்களுடன் வேலை செய்த ஒருவர், தனது படத்துக்காக உங்கள் உதவியை எதிர்பார்க்கிறார். அவ்வளவுதான். அவருக்கு ஒத்துழைப்பதால் உங்கள் பெருமை ஒன்றும் குறைந்துவிடாது.
    


இசைக்கு நீங்கள் ராஜாவாக இருக்கலாம். ஆனால் உங்களுடன் உழைத்தவர்களின் எதிர்பார்ப்பையும் கொஞ்சம் மதியுங்கள். உங்கள் இசைக்கு மரியாதை கொடுக்கிறவர்கள், உங்கள் ஒவ்வொரு பதிலுக்கும் தலையாட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

இதைப் புரியும்படி இளையராஜாவிற்கு யாராவது எடுத்துச் சொல்லுங்க. இசையில் மேதை என்பதற்காக, பேசுவதெல்லாம் மேதாவித்தனம் ஆகிவிடாது!

அன்புடன்,  
மதுரைத்தமிழன்

#Ilaiyaraaja, #இளையராஜா, #Gondhal, #கோந்தல், #Oscars, #ஆஸ்கர், #CueSheet, #கியூஷீட், #TamilBlog, #மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.