திராவிட கழகத்தினர் மட்டுமல்ல திராவிடனாகிய உள்ள தமிழன் அனைவரும் மோடிக்கு நன்றி கண்டிப்பாக சொல்ல வேண்டும் ஏனென்றால் இவ்வளவு ஆண்டும் பெரியாருக்கு திராவிட கழகத்தினர் மட்டும் அவர் பிறந்த நாளை நினைவு கூர்ந்து வாழ்த்துக்கள் சொல்லுவார்கள் .ஆனால் இந்த வருடம் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு சமுக இணைய தளங்கள் எங்கு நோக்கினும் பெரியார் பிறந்தாநாள் செய்திகளும் அவரைப் பற்றிய செய்திகளுமாகத்தான் பரவிகிடக்கின்றது. தமிழகம் தவிர பிறமாநிலங்களில் மோடியின் பிறந்த நாள் செய்திகளை பார்க்க முடிகிறது.. தமிழகத்திலும் சில மோடியின் அடிமைகள் மட்டும் அதுவும் அவரால் பலன் பெறுபவர்கள் மட்டும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருகின்றனர்..
ஆனால் வரலாற்றிலே இல்லாத அளவு திராவிட கழகத்தினர் மட்டுமல்லாமல் அதிக அள்வில் பொதுமக்களும் அதுவும் குறிப்பாக பல பெண்களும் பெரியாரை பற்றி எழுதி அவரின் பிறந்த நாளை சிறப்பாக்கி இருக்கிறார்கள் என்பதை அறியும் போது மனசு சந்தோஷத்தில் குதிக்கதான் செய்கிறது..
பல வட மாநில தலைவர்கள் தமிழர்களுக்குள் பிளவை ஏற்படுத்தும் போது இந்த மோடி அவர்கள்தான் தமிழர்களிடையே ஒற்றுமையை உருவாக்கி கொண்டிருக்கிறார். அவர் தமிழருக்கு எதிராக செய்யும் எந்த செயலும் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரையும் மேலும் மேலும் ஒன்றினைத்து வருகிறது அதனால்தான் மக்களே நாம் அவருக்கு மிகவும் நன்றி சொல்ல வேண்டும்..
இன்று மோடிகளின் அடிமைகளான அதிமுக அரசு சேப்பாகத்தில் கருப்பு சட்டை அணிந்தவர்களை அனுமதிக்காமல் தடை செய்து இருக்கிறது என்று செய்திகள் படித்தேன்...கருப்பு சட்டையை கண்டு காவிகளுக்கு பயம் ஏற்பட்டதன் விளைவே இந்த நடவடிக்கை...
பெரியாரை மறந்த அடிமைகள்
கண்டிப்பாக படிக்க வேண்டிய பெரியார் களஞ்சியம்
நான் சொல்வது
‘நான் சொல்லுவதை நம்பு, இல்லாவிட்டால் பாவம்!’ என்று நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் நாடு முன்னேற்றமடையுமேயன்றி, ‘என்னுடைய பாட்டன், முப்பாட்டன் போன வழியில்தான் போகிறேன்’ என்ற மூடக்கொள்கையினால், நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என் புத்திக்கு எட்டியதை எடுத்துக் காட்டினேன். அதில் சரியானது எனத் தோன்றியதை ஒப்புக்கொண்டு அதன்படி நடக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நான் சொல்லுவதில் பிசகிருந்தால் என் அறியாமைக்குப் பரிதாபப்படும்படியும் கேட்டுக்கொள்கிறேன். (குடிஅரசு 28.05.1949)
மதம் என்பது?
‘நான் சொல்லுவதை நீங்கள் நம்புங்கள்! நான் சொல்லுவது கடவுள் வாக்கு; நம்பாவிட்டால் நரகம் வரும்; நாத்திகர்கள் ஆகிவிடுவீர்கள்’ என்ற வேதம், சாஸ்திரம், புராணம்போல நான் உங்களை அடக்குமுறைக்கு ஆளாக்கவில்லை. நான் சொல்வது, ‘உங்கள் அறிவு, ஆராய்ச்சி, புத்தி, அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள்; ஒத்துவந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரர்களுக்கும் இதைச் சொல்லி அவர்களையும் ஈடேற்றுங்கள்’ என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்வதனால் எனக்கு இதில் ஒரு சுயநலப் பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள்.
நான் எந்த மதக்காரனுக்காவது ஏஜண்டு அல்ல; அல்லது நானும் எந்த மதக்காரனுக்காவது அடிமையும் அல்ல. அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவங்களுக்கு மாத்திரம் ஆட்பட்டவன். ஆதலால், எனக்குப் பட்டதை உங்கள் முன் சொல்லுவதில் எனக்கு ஒரு கடமையும் ஆசையும் மகிழ்ச்சியும் இருப்பதால் சொல்லுகிறேன். மற்றபடி அதைப் பற்றிய உங்கள் கடமைகளை உங்கள் சுதந்திரத்திற்கே - அதாவது உங்கள் பகுத்தறிவுக்கே விட்டுவிடுகிறேன்.
மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ சமூகத்தையோ கட்டுப்படுத்தி, ஒற்றுமைப்படுத்துவதற்காகவா? பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டதா? அல்லது, ஒரு மனிதனின் மனச்சாட்சியைக் கட்டுப்படுத்தக் கூடியதா? மனிதனுக்காக மதமா? மதத்துக்காக மனிதனா? என்பவைகளைத் தயவு செய்து யோசித்துப் பாருங்கள்.
(குடிஅரசு - 11.09.1927)
மனிதனை மதிப்பது என்பது?
பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் ரிசர்வ் பேங்க்கைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத்தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் என்சைக்ளோபீடியா, ரேடியோ ஆகியவற்றை மதிக்க வேண்டும். இப்படியாக அனேகவற்றை, ஜீவனில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மனிதனை மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல.
ஜீவன் என்றால் சுயஉணர்ச்சி என்றுதான் கருத்து. சுயஉணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய, தன் வாழ்வைப் பற்றிய, தன் பாதுகாப்பைப் பற்றிய உணர்ச்சி என்பதாகத்தான் முடியும். இத்தன்மையை உடையவர்களை ஜீவப் பிராணிகளில் நத்தை, சங்கு, ஈ. எறும்பு, பாம்பு, தேள், குயில், கழுகு, புலி, சிறுத்தை, குதிரை, யானை, ஆடு, மாடு, குரங்கு, மனிதன் என்பதாக மனிதனை மற்றவைகளோடு சேர்த்துச் சொல்வதற்கு அல்லாத தனிக்குணம் வேறு என்ன பெரும்பாலான மனிதர்களிடம் இருக்கிறது என்று கருதிப் பாருங்கள்.
ஜீவ சுபாவ உணர்ச்சியான தன்மை உணர்ச்சியும், தன்னல உணர்ச்சியும் உள்ள மனிதன் இவற்றை (தன்னலத்தை) அலட்சியம் செய்து - அதாவது தன்னைப் பற்றிய கவலையும் தனது நலத்தையும், தன் மேன்மை பற்றிய கவலையும், தனது மேல்வாழ்வின் தன்மை என்பதையும் அடியோடு மறந்து, மனித சமுதாய வாழ்வின் மேன்மைக்காகப் பணியாற்றவே மற்ற மனித ஜீவன்களுக்கு இருக்க முடியாத வசதி என்னும் தன்மை, தொண்டாற்றும் சக்தி ஆகியவை இருக்கின்றன என்று கருதி தன்னலத்தையும், தன் மானாபிமானத்தையும் விட்டு, எவன் ஒருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற ஜீவப் பிராணிகளிடமிருந்து வேறுபட்ட மனிதத் தன்மை கொண்ட மனிதனாவான். மனித உரு ஜீவப்பிராணி என்பதில் மனிதனை மதிப்பதானாலும், நினைவு நாள் கொண்டாடப்படுவதனாலும் இந்தக் குணத்திற்காகத்தான் இருக்கலாமே ஒழிய வேறொன்றுக்கும் ஆக இருக்க முடியாது. (குடிஅரசு - 14.04.1945)
என்ன வெங்காய மொழி?
நம் கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்,
நம் மதம் சாதி காப்பாற்றும் மதம்,
நம் அரசாங்கம் - சாதி காப்பாற்றும் அரசாங்கம்,
நம் இலக்கியம் - சாதி காப்பாற்றும் இலக்கியம்,
நம் மொழி - சாதி காப்பாற்றும் மொழி,
இதை உயர்ந்த மொழி என்கிறார்கள். என்ன வெங்காய மொழி? இரண்டாயிரம் வருடங்களாக இருக்கும் தமிழ்மொழி சாதியை ஒழிக்க என்ன செய்தது? மொழி மீது என்ன இருக்கிறது? ஏதோ மொழி மீது நம்முடைய பற்று; விவரம் தெரியாமல் சிலருக்குப் பற்று. எந்த இலக்கியம் சாதியை ஒழிக்கிறது? நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - வெங்காயம் என்று பாடியிருக்கிறான்; இந்த மடையனும் தினமும் படிக்கிறான். அது முதல் பக்கத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை சாதியைக் காப்பாற்றுவதுதானே? அதை அனுசரித்துத்தானே புலவன் பாடியிருக்கிறான்? கோபித்துக் கொள்ளாதீர்கள்! நிலைமை அப்படி.
நம் மக்களை நெருக்கடியில் வைத்து, கீழே அதை எதிர்ப்பதற்கில்லாமல் ஏற்பாடு செய்தார்கள்; எதிர்த்த வர்களைக் கொன்றார்கள்; ஒழித்துக் கட்டினார்கள். எதிர்த்தால், இரணியனைப் பார்த்துக்கொள்; இராவணனைப் பார்த்துக்கொள்; சூர பதுமனைப் பார்த்துக்கொள் என்று சொல்லி மக்கள் எல்லோரையும் மடை யர்களாக்கிவிட்டர்கள். அதிலிருந்து வெளியில் வர யாரால் முடிந்தது? வெளியிலே வந்தால் அவர்கள் எல்லாம் நாத்திகர்கள்! துவேஷிகள்!
(சென்னையில் சொற்பொழிவு 16.09.1961)
மாறுதலுக்குக் கட்டுப்பட்டவனே மனிதன்
நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில் - என்னையே மகா பிற்போக்குவாதி என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாயிருக்கிறதே! மாறுதலுக்குக் கட்டுப்பட்டதன்றோ உலகம்? மாறுதலுக்கு வளைந்துகொடாத மனிதன் மாயவேண்டியதுதானே! இதுவரை மாறுதலை எதிர்த்து வெற்றிபெற்றவர்கள் கிடையாதே! நமது போக்குவரத்துச் சாதனங்கள், நமது வாத்தியங்கள், நமது உடைகள், நமது ஆபரணங்கள் இவையெல்லாம் இன்று எவ்வளவு மாறுபட்டுவிட்டன? 20 வருடத்திற்கு முன் எத்தனை பேர் கிராப் வைத்திருந்தார்கள் - இன்று எத்தனை பேர் குடுமி வைத்துள்ளார்கள்?
இப்பெரிய கூட்டத்தில் குடுமி வைத்தவர்கள் எத்தனை பேர் என்று சுலபத்தில் எண்ணிவிடலாமே! இயற்கை மாறுதலால் ஏற்பட்டதா இது? அல்லது சர்க்கார்தான் குடுமி வைத்திருக்கக்கூடாதென்று சட்டம் போட்டதா? இல்லையே! இன்று எத்தனை பேர் நெற்றியில் பூச்சுடன் காணப்படுகிறார்கள்? விரல்விட்டு எண்ணிவிடலாமே! பூச்சுடன் காணப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றா அரசு உத்தரவு போட்டுப் பூச்சுகள் மறையும்படி செய்யப்பட்டது? இல்லையே! காலம் மாறிவருகிறது; அம்மாறுதலுக்குக் கட்டுப்பட்ட மனிதனும் தானாக மாறுகிறான். பணக்காரர்களின் உயர்வெல்லாம் இன்று எங்கு போயின? அவர்களுடைய பிடிவாதம்தான் எங்கே போயிற்று?
முன்பெல்லாம் தாய்மார்கள் எத்தனை முழம் சேலை கட்டினார்கள்; இப்போது எத்தனை முழம் சேலை கட்டிக்கொள்கிறார்கள்? 18 முழத்துக்குக் குறையாது சேலை கட்டுவதுதான் பெருமை என்று கருதிய தாய்மார்கள், இன்று 6 கெஜத்துக்கு மேல் கட்ட கூச்சப்படவில்லையா? அன்று மட்டும் அவர்கள் தாமாகவா விரும்பினார்கள், 9 கெஜ சேலையை? சேலை சுற்றுக் குறைந்திருந்தால் எங்கே ஓடிவிடுவார்களோ என்று ஆண் பிள்ளைகள் செய்த தந்திரம் அது! அன்றிருந்த கட்டுப்பாடு அவ்வளவு! இன்று பெண்களுக்கு அவ்வளவு கட்டுப்பாடு இல்லை.
எனவே, நைசான சேலை கட்டிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். நகைகளில்தான் எவ்வளவு மாற்றம்! அன்று தங்கச் சங்கிலி எல்லாம் எருமைமாட்டுக் கழுத்து இரும்புச் சங்கிலிபோல் இருக்கும்; இன்று சங்கிலி கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாத அளவுக்கு நைசாக இருக்கிறதே! சட்டம் போட்டா இம் மாறுதல் செய்யப்பட்டது? இப்படி எவ்வளவு வேண்டுமானாலும் உதாரணம் காட்டிக்கொண்டே போகலாமே!. (விடுதலை - 24.10.1948)
புதிய பெயர் - பழைய கொடுங்கோல்
1935 வரை அகில இந்தியா என்று பேசிவந்த நான், வடநாட்டார் ஆதிக்கத்தை உணர ஆரம்பித்ததும் 1938-ல் திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை முக்கியக் கொள்கையாகக் கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். 1950 ஜனவரி 26-ம் தேதிய பலம் 1947 ஆகஸ்ட் 15-ம் தேதியைப் போல் ஒரு விலாசம் மாற்றும் தினமேயாகும். அதே முதலாளிதான்; அதே பணப்பெட்டிதான்; அதே தராசுதான்; அதே படிக்கல்தான்; அதே சரக்குதான்; அதே பித்தலாட்டம்தான்.
ஆனால், விலாசம் அதாவது ‘டிரான்ஸ்ஃபர்’ செய்யப்பட்டது மட்டும் மாற்றம் அடைகிறது. குடி அரசு ஆட்சி என்கிற புதுப்பெயரால் பழைய கொடுங்கோல் ஆட்சியே மேலும் அதிக பலத்துடனும், மேலும் அதிகப் பாதுகாப்புடனும் 26-ம் தேதி முதற்கொண்டு நடைபெறப் போகிறது. இந்த உண்மையைத் தெளிவாக உணரும் நாம் இதை ஏன் புரட்டு என்று எடுத்துச் சொல்லக்கூடாது? உண்மையை எடுத்துச் சொல்ல நாம் ஏன் பயப்பட வேண்டும்? அக்கிரமத்தை எடுத்துச் சொல்ல நமக்கேன் அச்சம்? (விடுதலை 20.01.1950)
சுகம் அனுபவிக்க வெட்கப்படுகிறேன்
இரயில் பிரயாணம் செய்யும்பொழுது மூன்றாம் வகுப்பில்தான் செல்வேன். அப்படி யாராவது வலுக்கட்டாயம் செய்து முதலாவது, இரண்டாவது வகுப்பு வண்டிகளில் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார்களானால் நான் அவர்களிடம் சரி என்று சொல்லிவிட்டு முதலாவது அல்லது இரண்டாவது வகுப்புக்கு உள்ள பிரயாணச் சீட்டின் கட்டணத்தை வாங்கிக்கொள்வேன். ஆனால், பிரயாணச் சீட்டு வாங்கும்பொழுது மூன்றாவது வகுப்புக்கு வாங்கிக்கொண்டு மீதி உண்டாகும் தொகையைப் பத்திரமாக முடிபோட்டு வைத்துக்கொள்வேன்.
ஏனெனில், அவசியமற்ற காரியத்துக்காகப் பணத்தை வீண் விரயமாக்குவது என்பது எனக்கு வெறுப்பானதும், பிடித்தமில்லாதது மானதாகும். காசு கையில் சிக்கிக்கொண்டது என்பதற்காகத் தேவையற்றதை அனுபவிக்க ஆசைப்படுவதா? இப்போதைய புதுப் பணக்காரர் பலர் இப்படித்தான் செய்து பணத்தைப் பாழாக்குகிறார்கள்.
நான் காங்கிரசுத் தலைவனாக இருக்கும்போதும் 3-ம் வகுப்பிலும், கட்டை வண்டியிலும்தான் செல்வேன். சுய மரியாதை இயக்கத் தலைவனாக இருந்தபோதும் கண்ணப்பர் செகண்ட் கிளாசில் வருவார். நான் கூடவே தேர்ட் கிளாசில் போவேன். ஆச்சாரியார், திரு.வி.க., டாக்டர் நாயுடு செகண்ட் கிளாசில் வருவார்கள். நான் தேர்ட் கிளாசில்தான் போவேன். (வேன் வழங்கியபோது 24.12.1955)
வெங்காயம்
எப்போதுமே நான் கடவுளையும் மதத்தையும் அவை சம்பந்தப்பட்டவை எவற்றையுமே ‘வெங்காயம்’ என்றுதான் சொல்லுவேன். வெங்காயம் என்றால் வித்து இல்லாதது; வெறும் சதை. அச்சொல்லின் பொருள் வெங்காயம் வெறும் காயம்; உயிரற்ற உடல் - விதை இல்லாதது; உரிக்க உரிக்கத் தோலாகவே சதையாகவே வந்து முடிவில் சூனியமாய் விதை இல்லாத தன்மையதாய் முடிவது என்பது பொருள்.
ஆகவே விதை, வித்து இல்லாத காரணத்தால்தான் அதற்கு வெங்காயம் என்ற பெயர் உண்டாயிற்று. அது போன்றவைதான் கடவுளும் மதமும் ஆகும். இச்சொற்களுக்கு இயற்கைப் பொருளே இல்லை; கற்பிக்கிறவர்கள் சொல்லும் பொருள்தான்.
ஆனால், சூரியன், சந்திரன், முதலானவைகளை அப்படிச் சொல்ல முடியுமா? முடியாது. ஏன் என்றால், அவை உண்மையானவை. எவ்வளவு மடையனும், எப்படிப்பட்ட பகுத்தறிவுவாதியும் அவைகளை மறுக்க மாட்டான் என்பதோடு ‘எனக்கு அவை இல்லை; என் கண்ணுக்கு, என் புத்திக்கு அவை தென்படவில்லை; ஒப்புக்கொள்ள மாட்டேன்’ என்று சொல்லவே மாட்டான். இதுதான் இயற்கைக்கும் - உண்மைப் பொருளுக்கும்; செயற்கைக்கும் - கற்பனைக்கும் ஏற்ற உதாரணம் ஆகும்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இந்தக் கடவுள், மத உணர்ச்சி இருந்தாலும் 24 அல்லது 30 வயதுக்கு உட்பட்ட மக்களிடம் கண்டிப்பாக இந்த உணர்ச்சி இருக்கவே கூடாது என்பது என் ஆசை. அப்படி, இந்தக் கடவுள் மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால்தான் மனிதப் பண்பு, மக்கள் யாவரையும் ஒன்றுபோல் கருதும் உணர்ச்சி, நேர்மை, நல்லதைப் போற்றவும் தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவரையும் ஒன்றுபோல் கருதிச் செய்யும் பொதுத்தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும். இன்று இவை சுத்த சுத்தமாய் இல்லாததற்குக் காரணம், இந்தக் கடவுள், மதம், மனிதத்தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப்பிறப்பு என்கிற உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான முடிந்த முடிவு.
விதவைகள் நிலை!
விதவைகளுக்கு விவாகம் செய்யலாமா என்பதற்கும் சாஸ்திரத்திற்கும் என்ன சம்பந்தம் என்பது எனக்கு விளங்கவில்லை. ஒரு சமயம், விவாகம் எந்த மாதிரி செய்வது என்பதுபற்றி யோசிப்பது என்றாலும் சமாதானம் சொல்லலாம். அப்படிக்கின்றி, விவாகம் செய்யலாமா, வேண்டாமா என்பதற்கே சமாதானம் சொல்லுவதென்றால், அது சுத்த முட்டாள்தனமென்று தோன்றவில்லையா?
என்னைக் கேட்டால், இந்தக் கொடிய நாட்டில் விதவைகளுக்குத் துன்பத்தை இழைத்தவர் நமது இராஜாராம் மோகன்ராய் அவர்கள் என்பதே அபிப்பிராயம். ஏனெனில், அவரால்தான் நமது விதவைகள் இருக்கவும் கஷ்டப்படவும் ஏற்பட்டுவிட்டது. எப்படி என்றால் மோகன்ராய் அவர்கள் உடன்கட்டை ஏற்றும் வழக்கத்தை நிறுத்தாதிருப்பாரானால், ஒவ்வொரு பெண்டும் புருஷன் இறந்தவுடனே அவனோடு கூடவே அவன் பக்கத்தில் மாங்கல்ய ஸ்திரீயாகவே உயிருடன் கட்டையில் வைத்துச் சுடப்பட்டுக் கற்புலோகத்தை அடைந்து, மோட்ச லோகத்திலிருப்பாள்.
கற்புலோகமும் மோட்சமும் எவ்வளவு புரட்டாயிருந்தாலும் ஒன்று மாத்திரம் நிச்சயம். அதாவது, உயிருடன் சுடப்பட்ட பெண்ணுக்கு ஒரு மணி நேரம்தான் கஷ்டம் இருந்திருக்கக்கூடும். ஆனால், அந்தப்படி நடவாமல் காப்பாற்றப்பட்ட விதவைப் பெண்ணுக்கு அவள் ஆயுள்காலம் முழுவதும் அங்குலம் அங்குலமாகச் சித்தரவதை செய்வது போன்ற கஷ்டத்தை விநாடிதோறும் அனுபவித்து வர நேரிடுகின்றதா இல்லையா என்றுதான் கேட்கிறேன்.
ஒரு பெண் சாதியை ஆண் கலியாணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி, எந்தப் பெண்ணாவது அபிப்பிராயம் சொல்ல வருகிறாளா? அப்படியிருக்க, புருஷனை இழந்தவள் கலியாணம் செய்துகொள்ளலாமா வேண்டாமா என்பதைப் பற்றி அபிப்பிராயம் சொல்ல புருஷனுக்கு என்ன பாத்தியம் என்பது நமக்கு விளங்கவில்லை. நாட்டில், சிறப்பாக நமது சமூகத்தில் விதவைகள் கர்ப்பமடைந்து கர்ப்பத்தை அழிப்பதும், பிள்ளைகளைப் பெற்றுக் கொலை செய்வதும், வீடுகளை விட்டுப் பெற்றோர் அறியாமல் நினைத்த புருஷர்களுடன் ஓடுவதும், பிறகு விபச்சாரிகளாகி குச்சுகள் மாறுவதும் முதலிய காரியங்களைத் தினமும் கண்ணால் பார்த்தும் தாங்களாகவே துன்பங்கள் அடைந்து வரும்போது, விதவா விவாகம் சாஸ்திர சம்பந்தமா, சாதி வழக்கமா என்று பார்க்கும் மூடர்கள் மனித வர்க்கத்தைச் சேர்ந்தவர்களா என்று கேட்கிறேன்.
சாஸ்திரத்தில் இடம் இருந்தால் என்ன? இல்லாவிட்டல் என்ன? சாதியில் வழக்கம் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? அதைப் பற்றிக் கவனிப்பதில் பலன் என்ன? புருஷனை இழந்த பெண்ணுக்குப் புருஷ இச்சை இருக்குமா, இருக்காதா? அவளுக்குப் புருஷன் வேண்டுமா வேண்டாமா என்பதைத் தானே கவனித்து முடிவுகட்ட வேண்டும்? அமாவாசையில் பிறந்த பிள்ளை திருடும் என்று ஜோசியத்திலிருந்து விட்டால், அந்தப் பிள்ளை திருடின திருட்டையெல்லாம் ஜோசியம் நம்புகிறவன் சும்மா விட்டுவிடுவானா என்று கேட்கிறேன்?
எந்தக் காலத்திலோ, எங்கிருந்தோ, யாராலோ, எதற்காகவோ, யாருக்கோ எழுதிய ஒரு புத்தகத்தை இந்தக் காலத்திற்கு, இந்த இடத்திற்கு, நமது நன்மைக்காக, நமது நன்மையில் கவலை கொண்டவர்களால் எழுதப்பட்டதென்றும் அதன்படி நடந்து தீர வேண்டும் என்றும் கருதுகின்றவன் மனிதனல்லன் என்பதுதான் எனது மாற்ற முடியாத உறுதியான அபிப்பிராயம் ஆகும். (குடிஅரசு - 27.10.1929)
அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி ( பெரியார் களஞ்சியம் தி ஹிந்து நாளிதழில் வந்தது. ) நன்றி
பெரியார் பற்றித் தெரியாதவர்களுக்கு அருமையான அறிமுகம் உங்கள் பதிவு !
ReplyDeleteஇந்த வகையில் உண்மையில் மோடி பாராட்டுக்கு உரியவர்தான் ,சந்தேகமே இல்லை :)
பெரியார் பற்றிய தகவல்களுக்கு நன்றி எம் ஜி ஆரின் நூற்றாண்டுக் கொண்டாட்டமாக நூறு ரூபாய்க் காயின்கள் வெளியிடுகிறார்களே இதுவும் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முயலும் ஒரு உத்தியோ
ReplyDelete