Sunday, August 7, 2022

 பகுத்தறிவாளர்களே உங்களிடம் ஒரு கேள்வி
 

 
@avargal unmaigal




தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வணங்கும் கோயிலின் வாயிலில் -

"கடவுளை மற மனிதனை நினை
கடவுள்  இல்லை கடவுள்  இல்லை கடவுள் இல்லவே இல்லை
பக்தி என்பது தனி சொத்து
ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து
பக்தி இல்லாவிட்டால் நட்டமில்லை ஆனால்
ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ் "-

என்ற வாசகங்கள் பொறித்து பெரியார் சிலையை வைத்திருப்பதன் மூலம் பக்தர்களுக்கு அறிவூட்டுகிறீர்களா அல்லது அவமதிப்பதாக நினைத்துக்   கொண்டிருக்கிறீர்களா? எது எப்படியோ ஆனால் பெரியாரின் சிலையைத் தாண்டி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்றால் அந்த கொள்கைகளால்   அவர்கள் தங்களை மாற்றிக் கொள்ளப்  போவதில்லை என்பதாகத்தான் இருக்கிறது(ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதாகத்தானே பொருள்படுகிறது .



பகுத்தறிவைப் புத்தி உள்ள மக்களுக்கு   எடுத்துச்  சொன்னால் அதைக் கேட்டு அவர்கள் பயனடைவார்கள் ஆனால் அதைப் பைத்தியக்காரர்கள்  இருக்கும் ஹாஸ்பிடலில் போய் பேசினால் எந்த   பயனும் இருக்காது. அது போலத்தான் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் கோவிலின் முன்னால் சொல்லிக் கொண்டிருப்பதுதான் பகுத்தறிவா?


உண்மையாகப் பகுத்தறிவை மக்களிடம் பரப்ப வேண்டுமானால் கோவிலுக்கு முன் சிலை வைப்பதை விடப் பள்ளிக்கூடங்கள் முன்னால் சிலைகளை வைத்து மாணவர்களுக்குப் பகுத்தறிவை கற்றுக் கொடுத்தாலாவது  வருங்கால சமுகமாவது பகுத்தறிவோடு வாழும்

இளம் வயதில் கற்றுக் கொடுக்கப்படும் ஏதும் மக்கள் மனதில் ஆளப் பதியும்தானே அதைவிட்டுவிட்டு கோவில்கள் முன்னால் சிலைகளை வைத்து மாலைகளை மட்டும் பெரியார் நினைவு நாள் அன்று போட்டுப் பகுத்தறிவு  வளரும் என்று நினைப்பதுதான்  பேசுவதுதான் பகுத்தறிவா என்ன?

பல பள்ளி மற்றும் கல்லூரி வாசலில் கோயில்கள் உள்ளன... ஆனால் பகுத்தறிவை ஊட்டும் புத்தங்கள் அந்த பள்ளிக் கல்லூரி நூலகங்களில் அனைத்து மாணவர்களுக்கும் படிக்கும் படி  கிடைக்கின்றனவா?


பக்தி உள்ளவன் ஒழுக்கவாதிகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம் இங்கு நான் சொல்லி இருப்பது உண்மையான பக்தியைத்தானே தவிரப் போலித்தனமான பக்தியை அல்ல ஆனால் பகுத்தறிவு உள்ளவன் எல்லாம் ஒழுக்கமாகத்தான் இருக்கிறார்கள் என்பதற்கு எந்தவித உத்தரவாதம்  இல்லைத்தானே



தமிழகத்தில் பகுத்தறிவு என்று சொல்பவர்கள் கல்யாணத்திற்கு ஐயரை அழைப்பதற்குப் பதில் தலைவர்களை அழைத்து கல்யாணம் செய்து கொள்கிறார்கள் என்னைப் பொறுத்தவரை ஐயரும் சரி தலைவரும்  ஒன்றுதான் ஐயர் மந்திரம் சொல்வதாலோ தலைவர் வாழ்த்துவதாலோ நாம் வாழ்க்கை இனிமையாகச் செல்லாது, நாம் ஒழுக்கத்துடன் வாழும் முறைதான் நம் வாழ்க்கையை இனிமையாக்கிச் செல்லும். என் மதமும் என் மனைவியும் மதமும் வேறு வேறாக இருந்தாலும் ஐயரோ தலைவரோ இல்லாமலும்   இந்திய அரசு சட்டத்தின்படி செய்த திருமணம்தான் 25 ஆண்டுகளுக்கும் மேல் எந்தவித ஒரு பிரச்சனைகளும் இல்லாமல் யாரின் உதவி இல்லாமல் எங்களது இருவரின் உழைப்பால் வாழ்க்கை இனிமையாகச் சென்று கொண்டிருக்கிறது, என் திருமணம் பகுத்தறிவு திருமணம் அல்ல. இரு மனங்கள் கலந்து ஏற்றுக் கொண்ட திருமணம்



அனைத்து சாதி மத  இனத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் களையப்பட வேண்டும் இதை எல்லாம் இளைய சமுதாய மக்களிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் அதைச் செய்யப் பகுத்தறிவாளர்கள் முதலில் முன்வருவார்களா? அல்லது பைபிளைக் கையில் கொண்டு சாலையில் வருவோர் போவோரிடம் கிறிஸ்துவின் மகிமையை எடுத்துச் சொல்வது போலக் கருப்பு சட்டையை அணிந்துகொண்டு கையில் பெரியார் எழுதிய புத்தகத்தை வைத்துக் கொண்டு அலையப் போகிறீர்களா?


கொசுறு : கடவுள் பக்தி என்ற பெயரில் மூடநம்பிக்கைகளை பரப்பி மக்களை ஏமாற்றி சம்பாதிப்பதற்கும் ,பகுத்தறிவு என்ற பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி சம்பாதிப்பதற்கும் ஏதாவது வேறுபாடுகள் இருக்கிறதா? விபரம் தெரிந்தவர்கள் எனக்கு கொஞ்சம் விளக்கி சொல்லுங்களேன் பளீஸ்


அன்புடன்
மதுரைத்தமிழன்


டிஸ்கி : டிஸ்கி : என் பதிவுகளைப் படிப்பவர்கள்  என்னைப் பற்றிய ஒரு சில வரிகளைப் படித்துவிடுங்கள். பல தடவை சொல்லி இருந்தாலும் சிலர் நான் சொன்னதை மறந்து விடுகிறார்கள் மேலும் புதிதாக வருபவர்களும் இருக்கிறார்கள் அவர்களுக்காக

நான் அறிவுஜீவி அல்ல மிகச் சாதாரணமான ஒருவன்..  நான் கடவுள் என்ற ஒரு சக்தி இருக்கிறது என்பதை நம்புபவன்...
ஆனால் கடவுளின் பெயரால் நடக்கும் எந்த விதமான மூட நம்பிக்கைகளில்    நம்பிக்கை இல்லாதவன் , நான் பகுத்தறிவாளன் இல்லை ஆனால் பகுத்தறிவாளர்களை விட ப்ராக்டிக்கலாக யோசித்துச் செயல்படுபவன். யாரின் தயவை எதிர்பார்த்தோ யாருக்கும் பயந்தோ வாழ்வதில்லை. நான்கு பேரால பேசப்படவேண்டும் & புகழப்பட வேண்டும் என்று எந்தவித முனைப்பும் செய்வதில்லை காரணம் அது  எனக்குப் பிடிப்பதில்லை.  டாட்

1 comments:

  1. அந்தக் காலத்தில் "கீழ்கள்" மட்டுமே கோவிலுக்குள் செல்ல முடியும்... மேலும் தொடர்ந்து சிந்திக்கலாம்...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.