Sunday, August 20, 2017

பிராமணர்களின் மதிப்பும் பெருமையும் வெகுவாகக் குறைந்துவிட்டதற்குக் காரணம் பிராமணர்களே


இக்கட்டுரை நாற்பத்தி ஒன்பது வருடங்களுக்கு முன் ஸ்ரீமான் ரா. கணபதி என்பவரால், சென்னை, மாம்பலம் ஸ்ரீ பக்தஸமாஜத்தின் 'ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளின் வைரவிழா மலரில்' வெளியானது. அதிலிருக்கும் தகவல்தான் கீழே தரப்பட்டு இருக்கின்றன:( நன்றி.பிராமிண்டுடே)




'வித்யை, வீரம், வாணிபம், விவசாயம் யாவுமே சமூகத்திற்கு அவசியமான தொழில்கள். இவற்றில் உயர்வு, தாழ்வு கிடையாது. இவற்றில் எந்தத் தொழிலை யார் தேர்ந்தெடுப்பது என்கிற பிரச்சினையும் போட்டியும் ஏற்படாமலிருக்கவே பிறப்பினாலேயே என்கிற பிரச்சினையும் போட்டியும் ஏற்படாமலிருக்கவே பிறப்பினாலேயே இன்னாருக்கு இன்ன தொழில் என்று சமூகத்தையே பல பிரிவுகளாக நமது மதத்தில் பிரித்தனர். தலைமுறைத் தத்துவமாகத் தொழில்கள் ஏற்பட்டதால் தொழிற்பிரிவினை. சரியான விகிதாச்சாரத்திலும் அமைந்தது. ஒவ்வொரு பிரிவினரும் அவரவரது தொழிலுக்கு ஏற்றபடி கடுமையான அல்லது நெகிழ்ச்சியான விதிகளைக் கடை பிடித்தனர். உடலை வருத்தி உழைப்பவர்களுக்கு, உழைப்பே உளத் தூய்மை தரும் என்பதால் அவர்களுக்கு அதிகக் கட்டுப்பாடுகள் இல்லை. அறிவு வேலை செய்பவர்களுக்கு, புத்தி தடம்புரண்டு போகாமலிருப்பதற்கே, அதிகமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எல்லா ராகங்களும் சேர்ந்து 'ஸங்கீதம்' என்பது போல, எல்லாத் தொழிலினரும் சேர்ந்து சமூகமாக அமைந்தார்கள். இதில் ஒருவித துவேஷ மனப்பான்மையும் இல்லாதிருந்தது.



எல்லாப் பிரிவினருக்காகவும் ஒரு சாரார் வேள்வி செய்தார்கள். எல்லாப் பிரிவினருக்காகவும் இன்னொருசாரார் உழவு செய்தார்கள். வாணிபம் செய்தனர் மற்றொரு சாரார். போர் புரிந்தனர் பிறிதொரு சாரார்.

நவாப் ராஜ்ஜியம், கிழக்கிந்திய கம்பெனி ராஜ்ஜியம், அதன்பின் பிரிட்டிஷ் முடியாட்சி இவை ஏற்பட்டதால், அரசு மான்யம் பெற்று வேதம் 'திவந்தவர்கள் அந்த வசதியை இழந்தனர். ஆயினும், வேத காரியங்கள் இருந்தால்தான் சமூகம் முழுவதற்கும் இஹ பர நலன்கள் கிட்டும் என்ற நம்பிக்கையில், சமூகம் அவர்களை ரக்ஷித்துவந்தது.

ஆங்கிலேயர்கள் சுதேசிகளை வேலைக்கு அழைத்தபோது, வேதத்தை ரக்ஷிக்க வேண்டியவர்களின் மனப்பான்மை, துரதிருஷ்டவசமாக மாறத் தொடங்கியது. அயல்நாட்டிலிருந்து நமது தேசத்திற்கு வேலைக்கு ஆட்களைக் கொண்டு வருவது கடினமாக இருந்தபடியால், ஆங்கில ஆட்சி உள்ளூர்க்காரர்களைக் குமாஸ்தா வேலைக்கு அழைத்தது. சமூகத்தை நம்பி வாழ்வதைவிட, சர்க்காரை நம்பி உத்யோகம் பெறுவது சிறந்தது என்று, ஑வேதரக்ஷணம்ஒ என்ற ஸ்வதர்மத்தை விட்டு, அந்தணர்கள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்குச் சென்று, ஆங்கிலக்கல்வி பயின்று, குமாஸ்தா உத்யோகங்களில் புகுந்தனர். அக்ரஹாரங்கள் காலியாவதும் வேத பாடசாலைகள் சத்திரமாக மாறுவதும் சகஜமாகத் தொடங்கின.

ஆங்கிலேயரின் பார்வையே இவர்களுக்கும் வந்தது! அவர்களைப் போலவே இவர்களும் உடையணியவும் வாழவும் தொடங்கினர். பொருளீட்டுவதில் நாட்டம் மிகுந்து, 'சமூகத்தின் நலனுக்காகக் கர்மாக்கள் செய்வது' என்பது போய், சொந்த நலனுக்காகத் தொழில் செய்யத் தொடங்கினர்! இவர்கள் வேதத்தை விட்டனர்; வறுமை இவர்களை விட்டது. இதனால் வகுப்புத் துவேஷங்கள் உண்டாகத் தொடங்கின.

பிராமணர்கள் வேதம் ஓதியும் ஓதுவித்தும் வாழ்ந்துவந்தவரையில், பொறுமைக்கும் நம்பிக்கைக்கும் பணிவுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிவந்த மற்ற சமூகத்தினர் இவர்களை மதித்தனர். இவர்கள் கூறும் வழியில் சென்றனர்.

உழவரின் வீட்டைவிட அதிக மாறுபாடில்லாத சாமான்ய வீட்டில் வசித்து, நன்செய் பயிர்கள் காய்கறிகளை உண்டு, எளிமையாக வாழந்த வரையில் இவர்களிடம் யாருக்கும் பொறாமையோ மனக்கசப்போ ஏற்படவில்லை!

மற்றவர்களின் கலைகளைப் பயன்படுத்திப் பணம் செய்யாமலும் கடுமையான ஆசாரங்களைக் கைக்கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்ந்துவந்ததாலும் இவர்கள் ஑உயர்ந்தவர்கள்ஒ என்று மற்றவர்கள் கருதியதில் நியாயமுண்டு. எத்தனையோ தொழிலாளிகளும் சிப்பந்திகளும் அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் வைத்தியர்களும் வழக்கறிஞர்களும் அரசியல்வாதிகளும் தங்கள் தங்கள் கடமைகளைச் சிறப்பாக ஆற்றிவந்த போதிலும் இவர்களையெல்லாம்விட உயர்வாக நடிகர், பாடகர், ஓவியர், கவிஞர், எழுத்தாளர்களைக் 'கலைஞர்கள்' என மதிப்பது போல.

ஆங்கிலேயர் ஆட்சியில், கடமையை மறந்து, ஊரையும் மறந்து நகரங்களுக்குச் சென்று இவர்கள் திரவியம் தேடத் தொடங்கியதால், நல்லதெற்கெல்லாம் இவர்களை வழிகாட்டியாக மதித்த இதர சமூகத்தினர் அதே போன்ற வாழ்வை நாடியதில் வியப்பில்லை. அனைவருக்கும் வேலை கொடுக்க முடியாமல்போன நிலை ஏற்பட்டபோது, நீண்டகாலமாகப் புத்தி வேலை செய்துவந்தவர்கள் அதிகமான உத்யோக ஸ்தானங்களைப் பெற முடிந்தது. எனவே மற்றவர்களுக்கு இவர்களிடம் மனக்கசப்பு ஏற்பட்டது. ஒன்றாக அன்புடன் இணைந்துவந்த சமூகத்தில் புரையோடத் தொடங்கியது. அவரவர்க்குரிய ஆச்சாரங்களைப் பின்பற்ற முடியாமல் எல்லாம் கலந்துபோயிற்று. சாஸ்திரம் விதித்த தொழில் போய்விட்டதால் ஆச்சாரங்களும் போய்விட்டன.

ஆன்மீக நலனைக் காப்பவர்கள், தேசத்தைப் பாதுகாப்பவர்கள், வியாபாரம் செய்பவர்கள், உடலுழைப்பு நல்குபவர்கள் என்ற ஒரே சமூகத்தினர்தாம் நான்கு விதமாகத் தொழில்களை வகுத்துக்கொண்டனர் என்பதே சாஸ்திரங்களிலிருந்து வெளிப்படும் உண்மை. இந்த நான்கு தொழிலினரும் பகவானின் அங்கங்களிலிருந்து தோன்றியதாகவே வேதம் கூறுகிறது. உயர்ந்த தொழில், தாழ்ந்த தொழில் என்ற எண்ணங்களையெல்லாம் அந்நிய மதப் பிரசாரகர்கள் இங்கு பரப்பியதோடன்றி, இனபேத மனப்பான்மையையும் நன்றாகத் தூண்டிவிட்டார்கள். நம்நாட்டு அறிவாளிகளும் இந்தக் கருத்துகளை அப்படியே ஏற்று, மேலும் வலிவு தந்தனர்.

அழுக்குப் படியாமல் செய்யும் வேலைகளுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியினரே தகுதிகளைத் தேடிக்கொண்டிருந்தபடியால் மற்றவர்களின் மனக்கசப்பு அதிகமாயிற்று. பிற்பாடும் இதற்காகவே அரசியலில் தனிக்கட்சி ஏற்பட வேண்டிய அளவுக்கு நிலைமை முற்றியது.

இதெல்லாம் ஒரு புறமிருக்க, இத்தனைக்கும் மூலகாரணமாக, தங்கள் தர்மத்தை விட்டுப் பட்டணங்களுக்கு வந்தவர்கள் சாஸ்த்ரோக்தமான வாழ்க்கையைவிட்டதால், சமூகம் முழுவதற்குமே சாஸ்திர நம்பிக்கை குன்றியது. ஜீவனோபாயத்திற்காக மட்டுமே சாஸ்திரத்தை முதலில் விட்டவர்கள், பிறகு அது கூறும் விதிகளையும் ஆக்ஷேபிக்கத் தொடங்கினார்கள். அந்நிய மதஸ்தர்களைவிட ஆவேசமாக நம்மவர்களே சாஸ்திரம் கூறுவதற்கெல்லாம் பகுத்தறிவுக்குப் பொருந்தும் விளக்கம் வேண்டுமென்று கேட்டார்கள்.

சுத்தத்திற்காகவும் சௌக்யத்திற்காகவும் மட்டுமின்றிச் சில கட்டுப்பாடுகளும் ஒழுக்கங்களும் இருந்தால்தான் கௌரவமாகச் சமூக வாழ்க்கை நடக்கும் என்பதற்காகவும் ஏற்பட்டவையே சாஸ்திர விதிகள். சாஸ்திர விதிகள் மனோபாவத்தை ஒட்டி மட்டும் எழுந்தவை அல்ல. நாம் காணாத உலகத்திலும் பிரவேசித்து அதற்கிசைய, காண்கிற உலகத்தின் ஒழுக்கங்களை அவை விதிக்கின்றன. ஆனால் நாகரிக மனிதனுக்கோ அந்தக் காணாத உலகத்திலேயே வர வர நம்பிக்கை குறைந்துவிட்டது. சாஸ்திரங்களில் கூறிய வாழ்க்கை முறையைக் காப்பாற்ற வேண்டுமென்று ஆதிசங்கரர் மடாதிபதிகளுக்கு விதித்துவிட்டுப் போய்விட்டார். 'சாஸ்திரோக்தமான வாழ்முறை அடியோடு சாகவில்லை. உயிர்போகிற நிலையில் அது இருப்பதாகவும் உயிர் போகவில்லை என்று தெரிந்தால் சுவாசம் வாங்கிக்கொண்டிருந்தாலும் பிழைப்பதற்கு முழு முயற்சியும் செய்யத்தானே வேண்டும்? பாரத மக்கள் அந்நிய ஆட்சியை வெளியேற்றியதால் மட்டும் சுதேசியாக இல்லாமல், வாழ்முறை - மனப்பான்மை இவற்றிலும் சுதேசியாக இருக்க வேண்டும்.' என்று ஸ்ரீ சரணர் விரும்பினார்.

சமுதாயம் முழுவதையும் புராதனரீதியல் மாற்ற இயலாவிடினும் ஒரு சிலராவது எளிய வாழ்க்கை வாழ்ந்து, வேதங்களை ரட்சித்து, ஸபக்ஷ்மமான முறையில் வேத சப்தத்தால் உலகுக்கு இஹ பர நலன்களைக் கூட்டிவைக்க வேண்டும். நமக்குப் பிற்காலத்தவருக்குப் பழைய ஆச்சாரங்களின் வழிமுறை அழிந்துபோய் விடாதிருப்பதற்காவது அவற்றைக் காத்துத் தரவேண்டும். நமக்குப் பொருள் புரியாவிடினும் பயன் இல்லாவிடினும் வருங்காலத்தில் யாருக்காவது சாஸ்திரோக்தமாக வாழ ஆசைப்பட்டால், அது நிறைவேறுவதற்காவது நாம் இதை ரக்ஷிக்க வேண்டும்.'-

நம்மில் பெரும்பாலோர் ஸ்வதர்மத்தைவிட்டு வெகுதூரம் வந்துவிட்ட காரணத்தால், இனி பழைய நிலைக்கு முழுவதுமாகத் திரும்பிவிடச் சாத்தியக்கூறு இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், நம்மவர்கள் திரவியம் தேட நகரங்களுக்கு வந்துவிட்டதோடுகூட, திரைகடல் தாண்டி வெளிநாடுகளுக்கும் 'வீட்டுக்கு ஒருவராவது' என்ற ரீதியில் போய்க்கொண்டிருப்பது இன்றைய நிலவரம்.

ஆயினும் ஒரு சமாதானம்! இன்றும்கூட ஆங்காங்கே வேதங்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு சில இடங்களில் யக்ஞங்களும் நடைபெறுகின்றன. ஆச்ரமங்களிலும் மடங்களிலும் பீடங்களிலும் ஆலயங்களிலும் பெரிய பெரிய ஹோமங்கள் செய்யப்பட்டுவருகின்றன. சாஸ்திரங்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கும் வேத விற்பன்னர்களும் புரோகிதர்களும் உபன்யாஸகர்களும் ஆசாரசீலர்களும் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். ஆன்மிகம் அழியவில்லை. பக்தி பெருகிக்கொண்டேயிருக்கிறது. பாரததேசம் தன் கலாச் சாரத்தையும் ஓரளவு பண்பாட்டையும் தக்க வைத்துக்கொண்டுதானிருக்கிறது. ஆக, நாம் செய்ய வேண்டியது என்ன? புறப்பட்ட இடத்திற்குத் திரும்பாவிட்டாலும் கூட, ஸ்வதர்மத்தை இன்றைய தேதியிலும் அனுஷ்டித்துக் கொண்டிருப்பவர்களை ஆதரித்துப் போஷிக்கலாம். யாகாதி கார்யங்களுக்கும் வேத பாடசாலைகளுக்கும் நிதியுதவி அளிக்கலாம். ஸத்ஸங்கத்தை வளர்க்கலாம். ஸ்வதர்மத்தைச் சிறிதளவாவது நம் சந்ததிகளுக்குவிட்டு வைக்கலாம். ஏதோ கொஞ்சமாவது நம்மிடம் ஒட்டிக்கொண்டிருக்கும் தர்மத்திலிருந்தும் ஆசார, அனுஷ்டானங்களிலிருந்தும் பிறழாமலிருக்கலாம்.



அன்புடன்
மதுரைத்தமிழன்
டிஸ்கி: நான் படித்த தகவலை பலரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இங்கே அது பகிரப்பட்டு இருக்கிறது...இதை படித்துவிட்டு யாரும் தரக் குறைவாக கருத்துக்கள் இட்டால் அது இங்கு கண்டிப்பாக பகிரப்படாது. அப்படி பகிர நினைப்பவர்கள் தங்கள் சமுகதளங்களில் அதை வெளியிட்டு கொள்ளலாம்.இங்கே எழுதி அதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம்


13 comments:

  1. sசில கருத்துகள் சொல்லப்பட்டால் அவை தரக் குறைவு என்று கருதப்பட்டால் வேண்டாம் சாமி எந்தக் கருத்தையும் பதிவு செய்யவிலை

    ReplyDelete
  2. அத்தனையும் உண்மை

    ReplyDelete
  3. உண்மைதான். நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  4. தரக்குறைவான கருத்து எது என்பதை தனக்கு பிடித்தவகையில் வருவதற்கு முன்பே மிரட்டும்படி சொன்னவுடன் எவர்தான் எழுதுவார்? கருத்தே வேண்டாமென்றால், வேண்டாமென்றே சொல்லியிருக்கலாமே? விவாதமில்லாமல் வாழ்க்கையில்லை. எத்தனை மனிதர்கள் இருக்கின்றார்களோ அத்தனை கருத்துக்களும் இருக்கும். அமெரிக்காவிலிருந்து வரும் பதிவில் கூட இப்படிப்பட்ட ஹிட்லர்தனமா?

    முதலில் தெரியவேண்டியது. இரா கணபதி, அவர் ஜாதியினருக்காக, அவர் ஜாதியினரால் நடாத்தப்பட்ட இதழில் எழுதியதை, அவர் ஜாதிக்காக நடாத்தாபடும் இன்றை இதழ் மீட்டெடுத்துப் போடும்போது, அதை அஜ்ஜாதியில் பிறந்த ஒருவரும் அஜ்ஜாதி அக்காலத்தைப்போலில்லையே என உருகும் இரா கணபதியின் மனப்பாங்கை உடையவரால் எடுத்துப்போடப்பட்டிருந்தால் ஒருவேளை ஏனப்படி செய்கிறார் எனப்புரியும்.

    தொடர்பேயில்லாத இன்னொருவர் எடுத்துப்போட்டு, கருத்தே சொல்லக்கூடாதென்று மிரட்டாமல் மிரட்டுவதை என்ன சொல்வது?

    Be bold. Receive points of view. Censor only the obscene words used. Not the whole points of view. How will you decide which is a view that shouldn't be allowed unless you are a fanatical bramanan?

    ReplyDelete
    Replies
    1. Vinayagam சார் நான் நெட்டில் உலாவம் பொது என் கண்ணில் இந்த பதிவு பட்டது... அதை படித்தவுடன் நீங்கள் சொன்னபடி ஒரு ஜாதியினரால் அந்த ஜாதி நடத்தும் இதழில் வெளி வந்ததை மறுபதிவாக அவர்களின் ஜாதியின் சார்பாக வெளிவரும் மற்றொரு இதழில் இது வந்தது. இந்த கட்டுரையை பலரும் படித்து பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை அந்த கட்டுறையின் கீழ் வேறு எந்த கருத்துகளும் இல்லை அதனால் அதை இங்கு வெளியிட்டு மற்றவர்களும் மற்ற ஜாதியினரும் படித்து அதற்கு என்ன மாற்று கருத்துக்கள் சொல்வார்கள் மாற்று ஜாதியினரின் வியூ என்ன அறிந்து கொள்ளும் பொருட்டே அந்த கட்டுரையை இங்கு வெளியிட்டு உள்ளேன். அப்படி வெளியிடும் பொது தரக்குறைவாக கருத்துக்கள் பதிவிட வேண்டாம் அப்படி இட்டால் இங்கு பிரசுரிக்க மாட்டேன் என்று சொல்லி இருக்கிறேன்


      ஆனால் மாற்றுக் கருத்துகளை சொல்ல வேண்டாம் என்று நான் எங்கும் சொல்லவில்லை....நியாமான வாதவிவாதங்கள் அழுத்தும் திருத்தமாக சொல்லாம் அதற்காக மாற்றுக் கருத்து தரக் குறைவாகத்தான் சொல்லுவேன் என்றால் அது இங்கு அவசியமில்லை.

      பொதுவாக சமுக வலைத்தளங்களில் ஜாதியை பற்றி அல்லது மாற்று மதத்தினரை பற்றி விவாதிக்கும் போது கருத்துக்கு மாற்று கருத்துகளை ஆணிதரமாக வைப்பதற்கு பதிலாக பலர் தரக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி விவாதிப்பதற்கு பதிலாக சண்டை போட்டு கொள்கிறார்கள் அது வேண்டாம் என்பதால்தான் பதிவின் இறுதியில் அப்படி குறிப்பிட்டேன்


      தரம் எது தரக் குறைவு எது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும் ஒரு வேளை தரக் குறைவு என்ன என்பது உங்களுக்கு தெரியாவிட்டால் அதற்கு கிளாஸ் எடுக்க எனக்கு நேரமில்லை.மேலும் அது பற்றிகூட தெரியாதவர்களுக்கு இந்த கட்டுரையை பற்றிவிமர்சனம் செய்ய தகுதியே இல்லை என்பேன்.

      இறுதியாக இந்தியாவில் இருந்து பதிவிட்டாலும் அமெரிக்காவில் இருந்து பதிவிட்டாலும் என் நோக்கம் ஒன்றே யாரையும் ,எந்த ஜாதியையும், மதத்தையும் காயப்படுத்த கூடாது என்பதே.


      இதை புரிந்து கொண்டால் யாரும் கருத்துக்கள் பறிமாறலாம் அல்லது தங்கள் சமுக வலைதளங்களில் என்ன வேண்டுமானாலும் பதிந்து கொள்ளலாம்

      Delete
    2. மாற்றுக்கருத்துக்கள் வைக்கலாம்; அதற்காக அக்கருத்துக்களை தரக்குறைவாகத்தான் வைப்பேன் என்றால் இங்கிடமில்லை என்கிறீர்கள். Vague. ஆபாசம் என்ற சொல்லிருக்கிற்து. அப்படி ஆபாசமாக வைக்கக்கூடாது என்றால் சரி. தரக்குறைவென்றால்? Who'll decide that ? It's your blog. If you want something in certain way, why not tell your visitors beforehand with a lits of the words you approve of? It 's no excuse to say that you won't.

      இங்கே கீதா என்பவரெழுதியதைப் படியுங்கள்; அந்நிய அரசுக்கு பார்ப்ப்னர்கள் ஆங்கிலம் கற்று கைகட்டிச் சேவ்கம் செய்தபடியால் அவர்களை கூஜா தூக்கிகள் என்றும் குறிப்பிட்டார்கள். பக்குவமாக கீதா தான் சொல்லவில்லை. அவர்கள் சொன்னார்கள் என்று விலகிக்கொண்டார். ஒருவேளை அவரே சொல்லிவிட்டார்; அல்லது இன்னொருவர் இங்கு சொல்லிவிட்டார் என்றால் தரக்குறைவான சொல்லாடல் என்று தடுப்பீர்கள். இரா கணபதியே அதை வேறு சொல்லின் சொல்லியிருக்கிறார் படித்துப்பாருங்கள். அந்நியர்களுக்குச் சேவகம் செய்து அந்நிய ஆட்சிக்கு உதவியதை பாரதியார் கடும் சொற்களால் பாடியிருக்கிறார். அதைத்தரக்குறைவு என்பீர்கள். நிச்சயமாக! பின்னர் இரா கணபதி சுட்டிக்காட்டியதை எப்படித்தான் சொல்வார்கள்? அதாவது கீதா சுட்டிக்காட்டிய அந்த அவர்கள்? .அமெரிக்க அதிபரான ஒபாமாவிடம் முகநூலில் உங்களை அசிஙகமாகவும், ஆபாசமாகவும் எழுதுகிறார்கள் என்றவுடன் ஒருவரையும் தடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். இது அமெரிக்கா. ஏகாதிபத்திய நாடன்று. மோடிக்கு எதிரான முகநூலில் எழுதிய மாணவன் சிறையிலிருக்கிறான். அமெரிக்க பிரஜையான நீங்கள் இந்தியரைப்போல இருக்க விழைகிறீர்களா? பிறஜாதியினரைன் கருத்துக்களையறிய விரும்புகிறேன் என்றெழுதிய பின்னும் எவரும் வரவில்லை. மாறாக இரா கணப்தியின் ஜாதிக்காரகள் மட்டுமே பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் கவனித்தீர்களா? தரக்குறைவாக எவரேனும் அனுப்பினால் அதை தடுக்க உங்களால் இயலுமென்னும்போது என்ன பிரச்சினை உங்களுக்கு? இனி, இரா கண்பதியின் பதிவுக்கு வரலாம்.

      Delete

    3. நான் தரக்ககுறைவு என்று சொன்னது ஆபாசமாக எழுதுவதைத்தான் அப்படி எழுதுவதைத்தான் இங்கு பகிரமாட்டேன் என்று சொல்லி இருக்கிறேன். மாற்றபடி மாற்றுக் கருத்துகளை பகிர்வதி எனக்கு ஆட்சேபணை ஏது இல்லை

      Delete
  5. கணபதி எழுதினது விநாயகத்துக்கு பிடிக்கல :-)

    சீர் திருத்தம் என கருதும் ... பெண்கள் படிப்பு , பெண்கள் வேலை , மறு மனம் , விவாகரத்து , எல்லாவற்றிலும் பிராமணர்கள் முன்னோடி . அப்படி புதியது புகும் பொழுது , அந்த வேகத்தில் பழையன ( சம்பிரதாயங்கள்) சில அடித்து செல்லப்பட்டன . வேதத்திலும், உபநிஷத்திலும் , புராணங்களிலும் சொல்லப்பட்ட கருத்துக்கள் உண்மையான வலிமை கொண்டவை , எந்த ரூபத்திலியாவது திரும்ப வரும்...உண்மை இல்லை என்றால் வலுவிழக்கும் , அழிந்து போகும்

    ReplyDelete
  6. உண்மைதான்! நல்ல பகிர்வு. பதிவு வெளியானதுமே படித்துவிட்டேன். ஆனால் கமென்ட் போட்டு போகவே இல்லை! நெட் பிரச்சனை செய்து கொண்டே இருந்தது...

    ரா கணபதி அவர்கள் நிறைய ஆன்மீகப் பதிவுகள் எழுதியிருக்கிறார். அவர்தான் பரமாச்சாரியாரின் தெய்வத்தின் குரல் புத்தகத்தைத் தொகுத்தவர். பரமாச்சாரியார் கருத்துகள் சொல்லச் சொல்ல எழுதியதால் "மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல கணபதி எழுதியது போல பரமாச்சாரியார் சொல்லச் சொல்ல இந்த ரா கணபதி எழுதினார் என்றும் இவரைப் பற்றிச் சொல்லுவது உண்டு.

    கருத்து உண்மைதான். இருக்கலாம். பொதுவாகவே சொல்வதுண்டு...ப்ரிட்டிஷ் காலத்தில் பிராமணர்கள் ஆங்கிலத்தை எளிதாகக் கற்றுக் கொண்டதால் (கூஜா தூக்கினார்கள் என்றும் கூடச் சொல்லுவதுண்டு அதற்காகவே பிழைத்துப் போகவதற்காக அதாவது காலத்திற்கேற்றவாறு பிழைத்துக் கொளல்) அவர்கள் உள்ளே அரசாங்க வேலைகளில் சேர்ந்தது சுதந்திரம் பெற்ற பிறகும் தொடர்ந்து எல்லாவற்றிலும் அவர்கள் டாமினேட் செய்தார்கள் என்று தான் வாதங்கள் வைக்கப்பட்டு பிறரும் பயன்பெற வேண்டும் என்று அம்பேத்கார், பெரியார் போன்றோர் போராட என்று வரலாறு போகிறதுதான். ஆனால் காலம் மாறும் போது எல்லோரும் எல்லா வேலைகளுக்கும் போகும் சூழல் ஏற்படத்தானே செய்கிறது...அது போல இதுவும்...குலக்கல்வி என்றெல்லாம் சொல்லப்பட்டது...ஆனால் எனக்கு இதில் தனிப்பட்ட முறையில் மாறுபட்டக் கருத்துண்டு. அப்படிக் குலக்கல்வி என்று வந்திருந்தால் என் மகன் தான் விரும்பிய கால்நடைத் துறை படிப்பை படித்திருக்க முடியாது. ஏனென்றால் என் வீட்டில் அவன் படிப்பிற்குப் பலத்த எதிர்ப்பு வந்தது. மருத்துவத் தொழிலை ஏற்க முடிந்தவர்களால் கால்நடைப் படிப்பை ஏற்க முடியய்வில்லை. இரண்டுமே ஒன்றுதான். உயிர் ஒன்றுதான். உருவம் தான் வேறு. மனிதனை அறுத்தாலும் நாறத்தான் செய்வான்...விலங்கினை அறுத்தாலும் நாற்றம்தான்...இதில் என்ன சாதி வந்தது என்று தெரியவில்லை... அவனை உட்கார்த்தி வைத்து அட்வைஸ் கூடக் கொடுத்தார்கள். இப்படிப்பு நமது ஜாதிக்குச் சரிவராது நல்லதல்ல. நம் ஜாதியில் இதைப் படிக்க மாட்டார்கள் என்றெல்லாம்....ஆனால் மகனோ பிடிவாதமாக மறுத்துவிட்டான் நானும் அதற்கு ஆதரவு!! பல எதிர்ப்புகளுக்கிடையில்தான் படித்தான். அது போலவே பல மாணவர்களும்...அவர்கள் விரும்பியதைப் படித்திருக்க முடியாதோ என்று தோன்றும்...

    கீதா

    ReplyDelete
  7. மாற்றுக்கருத்துக்கள்:

    இரா கணபதியை தமிழர்கள் (படித்த வர்க்கம்) அனைவருக்குமே தெரியும். பழுத்த சநாதனவாதி. சநாதன்வாதிகளுக்கெல்லாம் தலைவரான காஞ்சி சங்கராச்சாரியாரின் அடிப்பொடி. இவர் கருத்துக்கள் ஸ்நாதன மதக்கருத்துக்கள் அனைத்தும் 100/100 சரியே என்ற கொள்கையைக்கொண்டவை. எக்கருத்துமே 100/100 சரியாக இருக்கவே முடியாது. அப்படித்தான் இருக்குமென்றால் அதன் பெயர்தான் அடிப்படை வாதம். ஃபனாடிசிசம். இரா கணபதியின் பதிவு அவரை ஒரு ச்நாதன ப்னாடிக்காக காட்டுகிறது. ஒருவன் தன்னை 100/100 நல்லவன் என்று சொன்னால் என்ன நினைப்பீர்கள்?

    சநாதன வாதிகள் செய்யும் ஒரு பெரிய தவறென்னவென்றால் பிராமணன் எனற் சொல்லின் பயன்பாட்டில். பிராமணன் என்பது ஒரு கான்செப்ட். இவர்களுக்குத் தெரியும் ஆனால் நடிக்கிறார்கள். எனவே அச்சொல்லைப்பயன்படுத்தி ஒரு ஜாதியினரைக்குறிப்பிடுகிறார்கள். அஜ்ஜாதியின் பெயர் பார்ப்ப்னர்கள் எனப்தே. அவர்களை இவர்கள் பிராமணர்கள் ஆக்கிவிடுவது மனசாட்சிக்கு விரோதமான செயல். அதன் நீட்சியாகவே இப்பதிவு போகிறது.

    முதல் பத்தி ச்நாதன அடிநாதமான வருணக்கொள்கையை வழிமொழிந்து ஒரு பொய்யைப் பகர்கிறது. வருணக்கொள்கைபடி வாழ்ந்த சமூகத்தில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தார்கள் என்பதே அது. வருணக்கொள்கை பிற்ப்பிலேயே வாழ்க்கை அமைகிறது அமைய வேண்டும் என்கிற்து எனப்தை இரா கணப்தி வழிமொழிகிறார். பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் எனபதே கொளகையுடைவர்கள் இதைக்கண்டிப்பார்கள். இக்கொள்கை நாலுகுலங்களை மட்டுமே பேசுகிறது. அதற்கப்பால் - அதாவது குலங்களுக்கும் சமூகத்திற்கும் அப்பால் வெளியே வைக்கப்பட்டு விலங்கினும் கீழாக நடாத்தப்பட்ட மனிதவர்க்கம் எக்காலத்தில் இக்கொள்கை வந்ததோ அன்றிலிருந்து வெள்ளைக்காரர் காலம் வரை நைந்தது. ஆனால் இரா கணப்தி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து எல்லாரும் நலமுடன் வாழ்ந்ததாக பொய் புனைகிறார்கள். பிராமணர்கள் எல்லாரும் நலமுடன் வாழ யாகங்கள் செய்தார்கள் என்கிறார். யாகம் செய்த போது வேத ஒலி ஒரு தலித்தில் காதில் விழுந்தால் ஒழுக்ககேடு என்று வேதமோதுவதை நிறுத்தினார்கள் ஓர் ஆழ்வார் வந்த போது. எங்கே இவர்கள் பொதுநலம்? உங்கள் நினைப்பிலேயே கோடிக்கணக்கான ஒரு மக்கட்கூட்டம் இல்லை! ஆனால் அவர்களிலிருந்தும் மாபெரும் இறைப்புனிதர்கள் தோன்றி குலஙக்ளாக நாலிலொன்றும் நான் பிறக்கவில்லை. உன்னைத்தவிர என்க்கு துணையுமில்லை என்று இறைவனிடம் அரற்றியது இரா கணப்தி படிக்கவேயில்லையா?

    மூன்றாவது பத்தியில் தனது ஜாதியினரை 100/100க்கு புனிதர்களாகக் காட்டும் முயற்சி. இதை அவர் ஜாதியினரில் ஜாதிவெறியனைத்தவிர எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காரணம் வருணக்கொள்கையால் மமதை ஏறி, தலித்துக்களை மட்டுமன்றி, மற்றெல்லா ஜாதியினரையுமே தீண்டத்தகாதவர்களாக நடாத்தியமை வரலாறு என்பதை ஏற்காதவர்களே கிடையா. அப்படி எங்கள் முன்னோர்கள் செய்ததது தவறே. அதற்காக இத்தலைமுறையின் மீது பழி போடக்க்கூடாதென்பதே அவர்கள் வாதம். போன மாதம் யூ டயூப் ஒன்றை மதிமாறனுக்கு எதிராக எஸ் வி சேகர் வெளியிட்ட காணொளியைக் கூர்ந்து கேட்டால் இச்சொற்றொடரை லேசாகத் தொடுவார். மனசாட்சி இருக்கிறதெல்லாருக்கும். இரா கணப்திக்கு இல்லவே இல்லை. எனவே 100/100 என்ற் ப்னாடிசிசம்.

    வருணக்கொள்கை இறைவன் தந்தது. அவனை மகிழ்விக்க நாம் அதைக்கொள்ளவேண்டுமென்பதே இப்பதிவின் மையக்கருத்து. இறைவன் வந்திருந்தால், இரா கணபதியின் மண்டையில் ஒரு போடு போட்டு நன்கு மனிதாபிமானத்தோடு சிந்திக்கக் கற்றுக்கொள் என்றுதான் சொல்லியிருப்பான். உண்மையில் அப்படி மமதை கொண்ட பிராமணன் எனச் சொல்லியலைந்தவர்களை இறைவன் தண்டித்ததாக புராணக்கதைகள் உள.

    இப்பதிவில் இன்னும் நிறைய இருக்கின்றன விமர்சிக்க. ஆனால் நீண்டுவிடும்.

    ReplyDelete
    Replies

    1. இங்கே நீங்கள் பகிர்ந்த விதத்தை நான் வரவேற்றுகிறேன் இப்படிதான் விமர்சனம் இருக்க வேண்டும் ஆபாசம் ஏதும் இல்லாமல் அதே நேரத்தில் உங்கள் மனதில் தோன்றியதை சொன்னதை வரவேற்கிறேன்.கருத்து நீண்டாலும் பரவாயில்லை எழுதுங்கள். இணையத்தி யாரவது இதை பற்றி சர்ர் செய்யும் போது மாற்று கருத்துக்களை படிக்கும் போது அவர்களுக்கு ஒரு நல்ல தெளிவு ஏற்படும்

      Delete
  8. இரா கணபதி அவர்கள் தொட்டுச் சென்ற கருத்து ஓரளவு ஏற்கத்தக்கது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

    'மற்றெல்லா ஜாதியினரையும் தீண்டத் தகாதவராக நடத்தியது' - இதெல்லாம் ஆராய்ச்சிக்குரியது. 'வரலாற்று உண்மை' என்று போகிறபோக்கில் சொல்லிவிடமுடியாது. நிறைய நேரம், தாத்பர்யத்தை விட்டுவிட்டு வெறும் 'செயலை'த் தொடர்வது என்பதைத்தான் இரா.கணபதி அவர்கள் சொல்லியிருக்கிறார்.

    கீதா அவர்கள் சொல்லியதிலும் நடைமுறைப் பிரச்சனைகளைப் பார்க்கமுடிகிறது.

    மதுரைத் தமிழன்-உங்கள் பதிவுகளை நான் எப்போதும் படித்துவிடுவேன் (அன்றன்றைக்கு இல்லாவிட்டாலும், மொத்தமாக எதையும் பெரும்பாலும் விடமாட்டேன். 'உங்கள் இடுகைகளுக்கு, அதுவும் அரசியல் சம்பந்தமானவைகளுக்கு' கருத்திடுவதில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.