Monday, February 6, 2017

உப்புமா கொடுமைகள்  (ந)கைச்சுவை

கொடுமைகள் பலவிதம் அதில் உப்புமா கொடுமைகள் ஒருவிதம். ஆண்களை டார்ச்சர் பண்ணுவதற்ககாக பெண்களுக்கு இறைவன் கொடுத்த வரப் பிரசாதம் இந்த உப்புமா....


ஆண்கள் கஷ்டப்பட்டு மாடாக வேலைப்பார்த்துவிட்டு இரவில் வீட்டுக்கு பசியோட திரும்பும் போது இன்ன்ரு மனைவி நன்றாக சமைத்து வைத்திருப்பாள் அதை மூக்கு முட்டாக சாப்பிட்டுவிட்டு நல்லா ஒரு தூக்கம் போடனும் என்று வரும் போதுதான் அன்று வீட்டில் மனைவி உப்புமா சமைத்து வைத்திருப்பாள் அப்ப நம்ம உடலில் ஒருவிதமான் பிரஷர் ஏறும் பாருங்க அதை சக்தியாக மாற்றினால் செவ்வாய்கிரகத்திற்கு நான் ராக்கெட்டையையே விட்டுவிடலாம்



சரி அதைவிடுங்க நம்ம வீட்டில் நல்ல சாப்பாடு சமைத்து இருக்கும் போது அதை எப்படித்தான் நம்ம நண்பர்கள் மோப்பம்  பிடிப்பார்களோ தெரியாது ஆனால் அன்று மட்டும அட்டையை போல ஒட்டிவருவார்கள் ஆனால் உப்புமா பண்ணி இருக்கும் நாட்களில் மட்டும் அவர்கள் அதை எப்படிதான் மோப்பம் பிடிப்பார்களோ தெரியாது அன்று நம்ம வீட்டு பக்கம் தலைவைத்து கூட பார்க்க மாட்டார்கள் பாவிகள்

உப்புமா பண்ணி இருக்கும் நாட்களில் அவர்கள் வந்தால் அவர்களுக்கு அந்த உப்புமாவை கொடுத்து இது என் மனைவி பண்ணியது மிக நன்றாக் இருக்கும் என்று சொல்லி நம்ம பங்கை அவர்களிடம் கொடுத்து சாப்பிடச் சொல்லாம் அல்லது மனைவிடம் சொல்லி பாரும்மா எங்க ரெண்டு பேருக்கும் இந்த உப்புமா பத்தாது என்பதால் நாங்கள் உணவை வெளி இடங்களில் முடிய்\து கொள்கிறோம் என்று சொல்லி தப்பித்துவிடலாம் ஆனால் உப்புமா கிண்டும் அன்றுதான் நம்ம வீட்டிற்கு யாரும் வர மாட்டார்கள்

சரி பக்கத்து வீட்டுகாரணுக்கு ஒரு ஹாய் சொல்லி நலன் விசாரித்து அவன் வீட்டில் ஒரு வாய் நல்லா சாப்பிட்டு வரலாம் என்று போனால் அன்றுதான் அவன் வீட்டில் சமையல் ஏதும் செய்யாமல் ஹோட்டலுக்கு போய் சாப்பிட  தயாராகிக் கொண்டிருப்பார்கள் இப்படி எல்லாம் பலவிதமாக தாங்கள் உப்புமாவால் கஷ்டப்படுவதாக இந்தியாவில் உள்ள ஆண்கள் சொல்லிவருகிறார்கள்

அவர்களுக்கு இப்படி பிரச்சனைகள் வருகிறது என்றால் நமக்கு அதற்கு மாற்றாக வருகிறது. நான் என்ன வீட்டம்மாவிற்கு போன் போட்டு இன்று இரவு டின்னருக்கு என்ன உணவு என்று கேட்டேன் அதற்கு அவர் உப்புமா என்றார்.  அதற்கு நான் உப்புமாவா அதற்கு பதில் பூரி பண்ணலாமே என்று கேட்டேன் அதற்கு அவள் பூரிக்கட்டை ஞாபகம் இருக்கிறதா என்றாள் அதன் பின் மறு பேச்சு பேச முடியுமா என்ன


எல்லோரும் இரவு நேரத்தில் ஒன்றாக உடகார்ந்து சாப்பிடுவதுதான் எங்க வீட்டு வழக்கம் என்பதால் இரவு டின்னர் நேரத்தில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம். என் மனைவி எல்லோருடைய தட்டில் உப்புவாவை போட்டுவிட்டு நான் சொன்ன படி உருளைக்கிழங்கு  சேர்காமல் எண்ணெய் மிக குறைவாக விட்டுதானே செய்தீர்கள் என்று  கேட்டாள் .அதற்கு நான் நீ சொன்னபடி தான் செய்தேனம்மா உன் பேச்சை மீற முடியுமா என்றேன். சரி சரி  எனக்கு பசிக்கு அதிகம் பேசாமல் சாப்பிடுங்கள் என்றாள்


உப்புமா செய்தது நாந்தான் என்றாலும் அதை  எளிதில் சாப்பிடத்தான் முடியுமா என்ன அதனால் கொஞ்சம் கொஞ்சமாக அழுது கொண்டே சாப்பிட ஆரம்பித்தேன் எனக்கு நேர்ந்த இந்த கொடுமை உலகத்தில் யாருக்கும் நேர கூடாது


மற்ற வீட்டில் எல்லாம் பொண்டாடிதான்  உப்புமாவை( விஷத்தை )  கொடுத்து கணவரை கொல்லுவார்கள் ஆனால் என் வீட்டில் விஷத்தை நானே தயாரித்து நானே  சாப்பிட வேண்டும்

விஷம் தயாரிப்பது எப்படி? (உப்புமா தாயாரிப்பது எப்படி )

ரவை : 1 கப்
பெரிய வெங்காயம் 1
உருளைக் கிழங்கு 1
இஞ்சி சிறிய துண்டு
பச்சைமிளகாய் 4
கருவேப்பிலை தேவையான அளவு


ரவையை முதலில் வறுத்து தனியாக எடுத்து கொள்ளுங்கள். அதன்  பாத்திரத்தில் தாளிப்பதற்கு தேவையான அள்விற்கு எண்ணெய்விட்டு ( நான் சிறிது அதிகமாக விடுவேன் ) அந்த எண்ணெய் காயந்ததும் அதில் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு கடுக நன்றாக வெடித்தவுடன் அதில்  சிறிது பெருங்காயப் பவுடர் போட்டு தாரளமாக கருவேப்பிலையும் போடவும் அதன் பின் அதில் சிறதளவு பொடியாக நறுக்கிய இஞ்சியை அல்லது இஞ்சி பேஸ்ட் இருந்தால் அதில் போட்டு ஒரு வதக்கு வதக்கி அதில் பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் நீளமாக கீறி வைத்த பச்சைமிளகாயை போடவும் அதன் பின் பொடியாக நறுக்கி வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும். வதக்கும் போது சிறிதளவு மஞ்சப் பொடியை சேர்க்கவும்(கேரட்டும் இது போல சேர்க்கலாம் ) அதன் பின்  ஒரு கப் ரவைக்கு   2 அரை கப் தண்ணிர் விட்டு அதை கொதிக்கவிடவும். தண்ணி நன்றாக கொதித்தவுடன் அதில் வறுத்து வைத்த ரவையை சிறிது சிறிதாக போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும் ரவை போடும் போது மொத்தமாக போட்டு விட்டால் அதன் பின் ரவைக்கு பதில் ரவை கொழுக்கட்டைதான் வரும் அதனால் சிறிது சிறிதாக போடவும்.

ரவையை இறக்கும் போது ஒரு ஸ்பூன் நெய்விடவும் மனமாக இருப்பதுடன் சுவையாகவும் இருக்கும்.


ரவைக்கு தொட்டு சாப்பிட பொரிகடைலைதேங்காய் சட்னி, அல்லது ஊறுகாய் அல்லது முந்திய நாள் வைத்த மிளகுரசம் நல்ல காம்பினேஷன்.

நான் ரவை மீது துருவி வைத்த தேங்காய் பூவை போட்டு அதன் மேல் சீனியை தூவு பிசைந்து சாப்பிடுவேன் அதாவது விஷத்தை கூட இனிப்பு போட்டு கொடுத்தால் சாப்பிடுவேன்  ஹீஹீ அப்ப வரட்டா>

இந்த பதிவை படித்த பெண்கள் உடனே உப்புமா செய்து போட்டு எனக்கு சாபத்தை வாங்கி தராதீர்கள்

டிஸ்கி : நான் வேலை பார்க்கும் நிறுவனம் என் வீட்டிற்கு அருகே இருப்பதாலும் நான் வேலையில் இருந்துசிக்கிரம் வந்துவிடுவதாலும் மேலும் ருசியாக சமைப்பதில் எனக்கு இருப்பாதாலும் அனேக நாட்களில் நாந்தான் உணவு தயாரிப்பேன் விக்கெண்டுகளில் மட்டும் என் மனைவி உணவு தயாரிப்பார். இப்படி ஒருத்தருக்கு ஒருத்தர் அட்சஸ்ட் பண்ணி போவதால் எங்கள் காதல் வாழ்வு இன்று வரை மலர்ந்து கொண்டுதான் இருக்கிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்





upma  Kodumaigal humour post plus recipe

24 comments:

  1. (Manasukkul) nggoyyala Engela Partha epdi theriyithu innooru thadavava uNNA thamizhnaatla paaththen?!, paaththen edaththulalaye... "UPPUMA" kuduththu' senjiruven'

    ReplyDelete
    Replies
    1. அப்பனே சிவ பெருமானே இனிமே கருத்து போட்டா தமிழ்லே போடுப்பா நீ என்ன சொல்லவரேன்னு எனக்கு சத்தியமா புரியலைப்பா? இதுக்கு நான் பேசாமல் உப்புமாவையே தினமும் மூன்று வேளை சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பேனப்பா

      Delete
  2. சத்தியமா சொல்லுங்கோ இது உங்கள் சொந்த ரெசிப்பியோ?:)

    ReplyDelete
    Replies
    1. இது என் சொந்த ரிசிப்பிதான் இப்படிதான் நான் உப்புமா செய்வேன்

      Delete
    2. அதிரா இப்படியான ஒரு கேள்வியெல்லாம் மதுரைத் தமிழனிடம் கேட்கலாமா!!!!!!?

      கீதா

      Delete
  3. ஏன் உப்புமாவை இவ்ளோ வெறுக்கிறீங்க நல்லாத்தானே இருக்கு... எங்கள் வீட்டில் உப்புமாவே கிடையாது, எப்பவாது வருடத்தில் 2,3 தடவை ஆசை வந்தால் மட்டும் செய்வதுண்டு, அதனால உப்புமா ரொம்ப புய்க்கும்:).

    ReplyDelete
    Replies
    1. நான் உப்புமாவை வெறுக்கவில்லை உப்புமா சாப்பிடுவதைத்தான் கஷ்டம் என்கிறேன். மேலும் இங்கே அதை பதிந்தற்கு காரணம் என்றாவது ஒரு நாள் உங்களை போல உள்ளவர்களின் வீட்டிற்கு வழி தவறி வந்துவிட்டால் உப்புமா செய்து எனகு போடுவிடக் கூடாது அல்லவா

      Delete
  4. இது உங்கட டிஸ்கிக்கான பதில்:))..

    ஓவரா கூச்சப்படுறீங்க:), நீங்க சமைப்பதால் நாங்களெல்லாம் ஏதும் நினைச்சிடுவமோ என அப்படி நினைக்காதீங்க... வெளிநாட்டில் ஆண்கள்தான் அதிகமா விரும்பி:) சமைக்கிறார்கள்.. சுவையாகவும்..:))...

    அதனால கீப் இட் மேலே:)... மிக அருமையான குறிப்பு.

    ஊசிக்குறிப்பு:
    அடுத்தமுறை, உங்கள் சமையல் வீடியோக் குறிப்பை எதிர்பார்த்திருக்கிறோம்... இப்படிக்கு நியூஜெர்ஷி சமையல் மன்ற ரசிகைகள்:).

    ReplyDelete
    Replies
    1. எனக்கு புதிதாக பார்ப்பவர்களிடம் அதுவும் பெண்களிடம் பேச மட்டுமே கூச்சப்படுவேன் சமைக்க அல்லது அதைப்பற்றி சொல்ல கூச்சப்படவே மாட்டேன். நேற்று இங்கு சூப்பர் பவுல் என்ற அமெரிக்க புட் பால் பைனல் கேம் நடந்தது அதை சேர்ந்து பார்ப்பதற்கு என் வீட்டருகில் இருந்த 6 குடும்பங்களை கூப்பிட்டு இருந்தேன் டின்னருக்காக எல்லாப் பெண்களும் அவர்களின் க்டும்பத்தினரும் அமர்ந்து டிவி பார்க்க நாந்தான் சரக்கு அடித்தவாறே எல்லோருக்கும் உணவு தயாரித்து வழங்கினேன் என் மனைவி சாம்பார் மட்டும் வைத்தார் நான் பஜ்ஜி,மீன் கறி, பாவு பாஜி, இட்லி, பைங்கன் பர்த்தா, சில்லி சட்னி, தேங்காய் சட்னி, என்று செய்து கொடுத்தேன் சாப்பிட்டதுமட்டுமல்லாமல் மீதியை அனைவரும் தங்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர்

      Delete
    2. என் மனைவியும் வெஜிடேரியன் உணவை நன்றாக சமைப்பார்கள் ஆனால் என்ன காய்கறியை நான் தான் கட் பண்ணி கொடுக்கணும்.

      Delete
    3. ஆஆவ்வ்வ்வ்வ் நாங்களும் நைட் முழிச்சிருந்து பார்த்தமே, ரீயும் குடிச்சு பிஸ்கட்டும், இலங்கைப் பக்கோடாவும் சாப்பிட்டுக்கொண்டு... ஆனா நான் முக்கால்வாசியோடு நித்திரையாகிட்டேன்ன், எங்களுக்கு சாமம் 1மணிக்கு மேல் ஆகிவிட்டது முடிய.
      ஹா ஹா ஹா சமைப்பது பெரிய வேலை இல்லை, இந்த வெட்டிக்கொடுப்பதும் கிளீன் பண்ணுவதும்தான் பெரிய வேலை:).

      Delete
    4. கேம் முக்கால் வாசிக்கு அப்புறம்தான் இண்டிரஸ்ட்டிங்காக இருந்தது...... தாலிகட்டுர நேரத்தில தூங்கி போன மாப்பிள்ளை போல உங்கள் நிலைமை ஆகி போச்சே

      Delete
  5. கலக்குங்க உப்புமா பிரமாதம். எல்லோரும் உப்புமா உப்புமா என்று அலறுகிறீர்கள். எனக்கு உப்புமா பிடிக்கும். அதிரா, ஹை-பைவ் :)
    பட்டாணி, கேரட் சேர்ப்பேன் சகோ. உருளைக்கிழங்கு சேர்த்ததில்லை.

    ReplyDelete
    Replies
    1. அய்யோ நீங்களும் என் மனைவிகட்சியிலே சேர்ந்திட்டிங்களா சகோ... நல்லவேளை என் மனைவிக்கு ஆதரவாக இவ்வளவு பேர் இருக்கிறீர்கள் என்று அவருக்கு தெரியாது தெரியாதவரைக்கும் நான் தப்பிச்சேன்

      Delete
    2. கிரேஸ், அதிரா எல்லாருக்கும் ஹைஃபை!! என்னையும் சேர்த்துக்கங்க. மீ டூ வெஜ்ஜிஸ் சேர்த்துச் செய்வதுண்டு...

      கீதா

      Delete
  6. உப்புமாக்கு பெருங்காயம் போடுறதை இப்பதான் கேள்விப்படுறேன்....

    உளுத்தம்பருப்போடு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்துக்கிட்டா இன்னும் நல்லா இருக்கும்

    ReplyDelete
    Replies


    1. கடுகு உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கும் எல்லாவற்றிலும் பெருங்காய தூளை தூவுவது என் வழக்கம்

      Delete
  7. உப்புமாவில் உருளைக்கிழங்கு காம்பினேஷன் இப்போதான் கேள்விப்படறேன் .எங்க வீட்லஉப்புமா சாப்பிட எனக்கு கொடுத்து வைக்கலை.. அதனால் கணவரும் மகளும் தப்பிச்சிட்டாங்க :) எனக்கு உப்புமா ரொம்ப பிடிக்கும் முந்தாநேத்து செஞ்ச வத்தக்குழம்பும் அதுக்கு தொட்டுக்க நல்லா இருக்கும் எனிவே தேங்க்ஸ் new ரெசிபிக்கு :) விருந்தினர் வந்தா செஞ்சுடலாம் :)

    ReplyDelete
    Replies
    1. உருளைக்கிழங்கை மிக சிறிய துண்டுகளாக நறுக்கி வதக்கி சேர்க்கவும்...விருந்தினர் வந்தால் கண்டிப்பாக செய்யுங்கள் அப்பதான் அவர்கள் உங்கள் வீட்டில் தங்க மாட்டார்கள். ஒன்று சொல்ல மறந்துட்டேன் நான் உங்களுக்கு விருந்தினர் அல்ல உறவினர்தான் மறக்க வேண்டாம் இதை

      Delete
    2. ஏஞ்சல் சூப்பரா இருக்கும் ஏஞ்சல். உருளையும், குடை மிளகாயும் கூட கடைசில போட்டு ரொம்ப அது வெந்து கலர் மாறாம செய்து பாருங்க அதுவும் வித்தியாசமான ஃப்ளேவரோடு நல்லா இருக்கும்..

      மதுரை ப்ரொ அடிக்க வராதீங்க!!ஹிஹிஹி

      Delete
  8. துளசி: மதுரைத் தமிழன்! நான் வீக் என்ட் தான் பாலக்காட்டிலிருந்து வீட்டுக்குப் போவதால் வாரநாட்கள் பல நாட்கள் இந்த ஈசி உப்புமாதான் இரவு எனக்குச் சோறு! ஹிஹி...ஆனால், பழகிவிட்டது!! வீட்டிலும் வீக் என்ட் அல்லது லீவு நாட்களில் செய்வார்கள்!! உ. கி போடவே மாட்டார்கள்!!! வெங்காயம் மட்டும் போட்டு வெறும் உப்புமாதான். எண்ணையும் அதிகம் விடாமல்தான் செய்வது. எனவே எனது வாழ்வில் உப்புமா இணை பிரியா ஒன்றாகிவிட்டது!!!

    கீதா: அது ஏன்னு தெரியல பலரும் உப்புமாவை இப்படி எழுதுகிறார்கள்!! நீங்களும் அதுவும் நன்றாகச் சமைக்கத் தெரிந்த நீங்களுமா மதுரை!!!!!!!! இதே மெத்தட்தான் நானும் செய்வது. பெருங்காயம் சேர்த்தும்.. சில சமயம் உருளைக் கிழங்கு வேற காய்களும் காரட், பட்டாணி, பீன்ஸ் போட்டும் செய்வதுண்டு. நன்றாகவே வரும். பிடிக்கவும் செய்யும் வீட்டிலும் எல்லோரும் சாப்பிடுவார்கள்!.....இதையே பங்களூரில் செய்வது போன்று காராபாத் என்றும் செய்வதுண்டு. உடுப்பி ஸ்டைல் உப்பிட்டு என்ற வகையிலும் செய்வதுண்டு..மஞ்சள் பொடி சேர்த்து...எல்லா காயும் சேர்ப்பது என்றால் மஞ்சள் தூள் கொஞ்சம் சேர்ப்பேன்..சேர்க்காமலும்..என்று..வெரைட்டி ப்ரொ வெரைட்டி!!! அப்ப உப்புமா சப்புமா ஆகாது!!! ஸோ உப்புமாவுக்கு என் ஓட்டும் சேர்த்துக் கொள்ளூங்கள்!!! சரி என்ன நீங்கள் இன்னும் வீடியோ போடாம இருக்கீங்க!! சீக்கிரம் போடுங்க எதிர்பார்க்கிறோம்...உங்க முகம் காட்டாமலேயே கூடப் போடலாமே!!!

    ReplyDelete
  9. என்ன சகோ ஆண்கள் யாருக்குமே உப்புமா பிடிக்காதா??!!! அப்படித்தான் இப்ப நீங்களும் இப்படிப் போட்டதும் புள்ளிவிவரம் சொல்லுது இங்க நாங்க பெண்கள் சப்போர்ட் கூட்டமா இருக்கே ஹிஹிஹி...அது சரி ஏன் எங்கள் ப்ளாக் ஆஜர் வைக்கலை!!!!!!

    ReplyDelete
  10. பொருத்தமான படம்! :) உப்புமா சாப்பிடுங்க! எஞ்சாய் பண்ணுங்க!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.