Sunday, May 31, 2026

 ஆதவ் அர்ஜுனா: தமிழக அரசியலின் புதிய கார்ப்பரேட் சாணக்கியனா?
      

#TVK, #விஜய் ,#திமுக ,#VCK ,#திராவிடஅரசியல் ,#மதுரைத்தமிழன், #MaduraiThamizhan


தமிழக அரசியலில் சிலர் பதவியால் உயர்வார்கள். சிலர் மக்கள் செல்வாக்கால் உயர்வார்கள். ஆனால் மிகச் சிலரே தங்களின் அசாத்திய அரசியல் வியூகங்களால் ஒட்டுமொத்த அதிகார மையங்களையும் அசைத்துப் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெயராக இன்று ஒட்டுமொத்த கோட்டையையும் கலகலக்க வைத்துக் கொண்டிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா!

அரசியல் உலகில் 'சாணக்கியன்' என்ற வார்த்தைக்குப் பின்னால் எப்போதுமே ஒரு தந்திரமும், அசாத்திய உழைப்பும் ஒளிந்திருக்கும். ஒரு காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞரைத் தான் அரசியல் உலகம் சாணக்கியன் என்று அழைத்தது. எப்பேர்ப்பட்ட தோல்விகள் வந்தாலும் சோர்ந்து போகாமல் கட்சியைத் தூக்கி நிறுத்துவது, தனக்கு சாதகமாகச் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவது எனப் பல வித்தைகளைச் செய்தவர் கலைஞர். எல்லாவற்றிற்கும் மேலாக, தனக்குப் பின் தன் வாரிசுகளின் கைகளில்தான் அதிகாரம் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து, கட்சியில் தனக்கு இணையாக வளர்ந்த எவரையும் தலைதூக்க விடாமல், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கே வைத்துவிட்டுச் சென்ற மகா சாணக்கியன் அவர்.

இன்று, அதே கலைஞர் விட்டுச் சென்ற அந்த 'சாணக்கிய' இடத்தைக் குறிவைத்து, திராவிடக் கோட்டையின் அஸ்திவாரத்தையே ஆட வைத்திருக்கிறார் மிகச் சாதாரண பின்னணியில் இருந்து வந்த ஒரு மனிதர்.

ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்திலேயே பல சவால்களை எதிர்கொண்டவர் ஆதவ். சிறு வயதிலேயே தாயை இழந்த போதிலும், கல்வி, விளையாட்டு, நிர்வாகத் திறன் என ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை வளர்த்துக்கொண்டார். சென்னை லயோலா கல்லூரி மாணவராக இருந்த காலத்திலேயே கூடைப்பந்து விளையாட்டில் தேசிய அளவில் முத்திரை பதித்தவர். அந்த விளையாட்டுத் துறை தான் இவருக்கு தமிழகத்தின் பெரும் புள்ளிகளின் 'எலிட்' வட்டாரங்களை அறிமுகம் செய்தது. அந்த நெட்வொர்க்கைப் பயன்படுத்தி, இந்தியாவின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகளைக் கரம் பிடித்தார்.

அரசியலுக்குள் நேரடியாகக் குதிப்பதற்கு முன்பே தேர்தல் வியூக உலகில் தன்னை நிரூபித்தார் ஆதவ். 2021 தேர்தலில் திமுகவின் வெற்றிக்காகப் பின்னணியில் இருந்து ஐ-பேக் (I-PAC) அமைப்பை இயக்கியவர்களில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ஆனால், திறமை இருந்தாலும் திமுகவில் இருக்கும் வாரிசு அரசியல் தனக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை உணர்ந்து, அதை வெளிப்படையாகவே மேடைகளில் விமர்சித்துவிட்டு விசிக-வில் தஞ்சமடைந்தார்.


2023-ல் விசிக-வின் துணைப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற ஆதவ், கட்சியை டிஜிட்டல் மயமாக்கினார். ஆனால், வெறும் 'திரைமறைவு கார்ப்பரேட் கன்சல்டன்ட்' ஆக இருக்க அவர் விரும்பவில்லை. கொள்கை அதிகாரத்தை நேரடியாகக் கைப்பற்றத் துடித்தார். "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற முழக்கத்தைக் கூட்டணிக்குள் இருந்துகொண்டே அதிரடியாக முன்வைத்து, தலித் மற்றும் விளிம்புநிலை மக்கள் வெறும் ஓட்டு வங்கியாக மட்டுமே இருக்கக் கூடாது என்று பேசி திமுக தலைமைக்கு வேர்த்து விறுவிறுக்க வைத்தார்.

விசிக-வின் சீனியர்கள் இவரின் அசுர வளர்ச்சியைக் கண்டு அஞ்சத் தொடங்கிய வேளையில், தவெக தலைவர் விஜய்யுடன் ஒரே மேடையில் வாரிசு அரசியலை எதிர்த்துப் பேசினார். விளைவு? விசிக-வில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டவுடன், சற்றும் தயங்காமல் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்தில்' (TVK) தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளராகக் களம் இறங்கினார்.

ஒரு காலத்தில் திமுகவின் போர்வாளாகக் கருதப்பட்ட வைகோ, வாரிசு அரசியலுடன் ஏற்பட்ட மோதலால் தனிப் பாதையைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், காலம் முழுக்கத் தனிக்கட்சி நடத்திப் போராடிய வைகோவின் அரசியல் பயணம், இறுதியில் அவரை மீண்டும் திமுக கூட்டணிக்குள்ளேயே கொண்டு வந்து நிறுத்தியது.

ஆனால் ஆதவ் அர்ஜுனா முற்போக்குச் சிந்தனையுடைய கார்ப்பரேட் சாணக்கியன். வைகோவை போலத் தனிக்கட்சி ஆரம்பித்துத் தன் எனர்ஜியை வீணடிக்காமல், சாணக்கியத்தனமாகச் செயல்பட்டு 'யாரை எங்கே பிடித்து எப்படி மேலே வர வேண்டும்' என்ற தந்திரத்தைக் கையாண்டார். திமுகவின் ஓட்டுகளைப் பிரித்து, கூட்டணி ஆட்சியை அமைப்பதே இவரின் வியூகமாக இருந்தது. அதன் விளைவு தான், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடித்ததும், இவர் வில்லிவாக்கம் தொகுதியில் வென்று அமைச்சரானதும்!



இன்று அமைச்சரவையில் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜுனா இருந்தாலும், அரசியல் உலகிற்குத் தெரிந்த அந்தப் பகிரங்கமான உண்மை என்னவென்றால்... அவர்தான் திரைக்குப் பின்னால் 'ஆக்டிங் முதலமைச்சராக' (De Facto CM) ஒட்டுமொத்த அரசாங்கத்தையும், கட்சியையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்! 

நம் தளபதி விஜய்யோ முதலமைச்சராக மேடையிலும் கேமராவின் முன்னாலும் 'ஆக்டிங்' (Acting) மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்!

விஜய் கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் வலம் வந்தாலும், பின்னணியில் சைலண்டாகக் களம் இறங்கித் தனக்கான காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார் ஆதவ். கட்சியில் உள்ள முக்கியப் புள்ளிகளைத் தன் ஆதரவாளர்களாக மாற்றும் வேலைகள் ரகசியமாகத் தொடங்கிவிட்டன. விஜய் எந்தளவிற்கு ஸ்மார்ட்டாகச் செயல்படுகிறார் என்பதைப் பொறுத்துத்தான் அவரின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது. விஜய் கொஞ்சம் அசாக்கிரதையாக இருந்தாலோ...அல்லது "விஜய் கொஞ்சம் அசந்தாலோ...".. விஜய்யின் இடத்தைக் கூட ஆதவ் அர்ஜுனா பிடித்துவிடுவார் என்பதுதான் தற்போதைய நிதர்சனம்!

காலம் எப்போதும் ஒருவரையே வெற்றி பெறச் செய்து கொண்டிருக்காது என்பதற்கு இணங்க, திராவிடப் பேரியக்கத்தைக் கீழே தள்ளி ஆதவ் ஒரு பெரும் புள்ளியாக மேலே வந்து கொண்டிருக்கிறார். இன்றைய சூழலில் ஆதவ் அர்ஜுனா ஒரு அமைச்சரா? தேர்தல் வியூக நிபுணரா? அல்லது எதிர்கால அதிகார மையத்தை நோக்கி அமைதியாக நகரும் அரசியல் சாணக்கியனா?

சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் வட்டாரங்களைத் தவிர பொதுமக்கள் அதிகம் அறியாத ஒரு பெயராக இருந்த ஆதவ் அர்ஜுனா, இன்று தமிழக அரசியலின் முக்கிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறார். அதுவே அவரது அரசியல் வெற்றியின் முதல் கட்டம்.

அவர் அடுத்த கட்டமாகத் தமிழக அரசியலின் அதிகார மையங்களில் நிரந்தர இடம் பிடிப்பாரா, அல்லது தமிழக அரசியலின் இன்னொரு நிறைவேறாத அரசியல் கனவாக மாறுவாரா? அதற்கான பதிலை வரலாறும் காலமும் இணைந்து எழுதும்!

 


ஊட்டி ஏரியில் படகு சவாரியா? இல்லை... சமூக நீதியின் மீதான சவாரியா? திருமாவளவனுக்கு ஒரு சாட்டையடி கேள்வி! https://avargal-unmaigal.blogspot.com/2026/05/thirumavalavan-vck-ootyboathouse.html



அன்புடன்,
மதுரைத்தமிழன்

#TVK, #விஜய் ,#திமுக ,#VCK ,#திராவிடஅரசியல் ,#மதுரைத்தமிழன், #MaduraiThamizhan #ஆதவ்அர்ஜுனா ,#AadhavArjuna, #தவெக ,#தமிழகவெற்றிக்கழகம் , #தமிழகஅரசியல்2026 ,#அரசியல்சாணக்கியன்,#அவர்கள்உண்மைகள்,#மதுரைத்தமிழன் ,#TNPolitics2026, #PoliticalChanakyan #அரசியல்சாணக்கியன்  #தமிழகஅரசியல்2026 (TNPolitics2026) #வாரிசுஅரசியல் (DynastyPolitics) #அதிகாரப்பங்கு (PowerSharing) #CoverStory #PoliticalAnalysis #தமிழகவெற்றிக்கழகம் (TVK Party) #தவெக (TVK) #விஜய் (Vijay) #திமுக (DMK) #விசிக (VCK) #திருமாவளவன் (Thirumavalavan) #ஆதவ்அர்ஜுனா ,#AadhavArjuna, #தவெக ,#தமிழகஅரசியல்2026 ,#அரசியல்சாணக்கியன்,#அவர்கள்உண்மைகள்,#மதுரைத்தமிழன் ,#TNPolitics2026, #PoliticalChanakyan


0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.