ராஜதந்திரச் சதுரங்கம்: பிரிக்ஸ் மேடையில் இந்தியா... மகுடம் சூடியதா? அம்மணமாகி மௌனம் சாதித்ததா?
2026-ல் பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு இந்தியாவிற்கு வந்ததும், சங்கிகள் ஆரவரித்தனர். இது மோடியின் சக்தியை உலகிற்குக் காட்டுகிறது என்றெல்லாம் பாராட்டிக் குவித்தனர். ஆனால், அந்தக் கூட்டமைப்பு மாநாடு ஏப்ரலில் நடந்த போதுதான் நம்ம ஜீயின் உண்மையான பலம் அம்பலப்பட்டு, அசிங்கப்பட்டு நின்றது. இதைச் சங்கிகளும் ஊடகங்களும் பேசவே இல்லை என்பதை விட, மறைத்துவிட்டுப் பல மாநிலங்களில் நடைபெற்று வரும் தேர்தல்களில் களமிறங்கி நம்ம ஜீயின் வீரப் பிரதாபங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், மற்ற நாட்டு ஊடகங்கள் எல்லாம் மோடியின் கையாலாகாத்தனத்தைப் பேசி வருகின்றன.
இப்போது இந்தியாவின் கையில் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பிற்கான (BRICS) தலைமை. ஆனால், தலைமை தாங்குவது வேறு, வழிநடத்துவது வேறு என்பதை காலம் நமக்குக் கசப்பாக உணர்த்திக் கொண்டிருக்கிறது. 11 நாடுகளாக விரிவடைந்து இருக்கும் இந்தக் கூட்டமைப்பை, ஒரு நோக்கமே இல்லாத ஒரு கூடாரமாக இந்தியா மாற்றுகிறதா? டிரம்ப், சீனா, ஈரான் என மூன்று முனைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் ராஜதந்திரத் தவிப்பு பற்றித்தான் உலகின் மற்ற நாடுகளின் ஊடகங்கள் எதார்த்தமாக அலசிப் பேசி வருகின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் டெல்லியில் நடந்த பிரிக்ஸ் ஆலோசனைக் கூட்டத்தைப் பார்த்தவர்களுக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது. எல்லாம் சுபம் என்று ஒரு கூட்டு அறிக்கையைக் கூட வெளியிட முடியாத அளவுக்குக் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கி நிற்கின்றன. காசா முதல் சிரியா வரை, லெபனான் முதல் லிபியா வரை... உலகமே போர்க்களமாகிக் கிடக்கும் நிலையில், உலகின் நண்பன் (Viswa Mithra) என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தியா, ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்கி நிற்கிறது.
நாற்காலி நமது ஜீயிடம், ஆனால் ஆட்டம் மற்றவர்களுடையதாக இருக்கிறது என்பதுதான் இப்போது உலக அரசியல் வல்லுநர்களின் பேச்சாக இருக்கிறது.
ஏப்ரல் மாதம் டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரு கூட்டு அறிக்கை (Joint Statement) கூட வெளியிட முடியவில்லை. காரணம், ஈரானுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் (UAE) இடையே ஏற்பட்ட நேரடி மோதல். ஒரு பிரிக்ஸ் உறுப்பினர் இன்னொரு உறுப்பினரைத் தாக்கும்போது, அமைதியாக இருப்பதுதான் இந்தியாவின் ராஜதந்திரமா? ஈரான் கண்டனம் கோருகிறது, அமீரகம் ஈரானைச் சாடுகிறது. இந்தியா எனக்கு இதில் சம்பந்தம் இல்லை என்பது போல மௌனம் காப்பது, தலைமைப் பண்பிற்கு அழகல்ல.
இந்தியா இப்போது ஜீயின் ஆட்சியில் ஒரு 'திரிசங்கு' நிலையில் இருக்கிறது. அதற்கான மூன்று முக்கியக் காரணங்கள்:
அமெரிக்காவில் மீண்டும் டிரம்ப் வந்த பிறகு, எங்களுடன் இருந்தால் மட்டும் போதாது, எங்கள் எதிரிகளுடன் கை கோர்க்கக் கூடாது என்ற ஒற்றை வரியில் மிரட்டுகிறார். ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி என்ற கத்தி இந்தியாவின் தலைக்கு மேல் தொங்குகிறது. டிரம்பின் இந்த கொடுக்கல்-வாங்கல் அரசியல் இந்தியாவின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது.
அடுத்ததாக பிரிக்ஸ் அமைப்பின் மொத்த வருமானத்தில் 70% சீனாவினுடையது. இந்தியா தலைவராக இருந்தாலும், பணபலம் கொண்ட சீனாவே பின்னால் இருந்து ஆட்டுவிக்கிறது. சீனா இதை ஒரு மேற்கத்திய எதிர்ப்பு தளமாக மாற்றப் பார்க்கிறது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் சீனா ஒரு பிக் பிரதர் போலச் செயல்படுகிறது. எல்லைப் பிரச்சினையில் நம்மைத் தொல்லை கொடுக்கும் சீனா, இன்னொரு பக்கம் பிரிக்ஸ் மேடையில் தன்னைத் தலைவனாகக் காட்டிக் கொள்கிறது. சீனா விரிக்கும் வலையில் விழாமல் தப்பிப்பதற்கே இந்தியாவுக்குப் பெரும் நேரமாகி விடுகிறது. இந்த இழுபறியில் இந்தியா தனிமைப்படுத்தப்படுவதுதான் மிச்சம்.
மேலும் 2024-ல் ஈரானை உறுப்பினராகச் சேர்த்தபோது, இந்தியா தங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால், இன்று ஈரானின் எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்திவிட்டது. பழைய நண்பனைப் புதிய கூட்டாளிகளுக்காகக் (அமெரிக்கா) கைவிட்டுவிட்டோம் என்ற விமர்சனம் இப்போது சர்வதேச அரங்கில் உரக்கக் கேட்கிறது.
வியூகரீதியான தெளிவற்ற நிலை (Strategic Ambiguity) என்பது ஒரு காலத்தில் நமக்குக் கைகொடுத்திருக்கலாம். ஆனால், இன்று உலகம் ஒரு தெளிவான முடிவை எதிர்பார்க்கிறது. 11 நாடுகளாக விரிவடைந்துள்ள பிரிக்ஸ் அமைப்பில், 3.5 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். இவ்வளவு பெரிய பொருளாதார மற்றும் மக்கள் சக்தியை வைத்துக் கொண்டு, இந்தியா நான் தலைமை தாங்குகிறேன், ஆனால் வழிநடத்தவில்லை என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி நிற்கிறது. ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டை எடுக்கத் தயங்குவது ராஜதந்திரப் பின்னடைவுதான்.
|
"பல்லக்குத் தூக்கிட்டுப் போறவங்க எல்லாம் ராஜாவாக முடியாது. பல்லக்குக்குள்ள உட்கார்ந்து கட்டளை போடுறவன் தான் ராஜா. இப்போதைக்கு இந்தியா பல்லக்கைத் தூக்கிட்டுப் போற வேலையைச் சரியாச் செய்யுது, ஆனா அந்தப் பயணத்தின் திசையைத் தீர்மானிக்கிற அதிகாரம் யார்கிட்ட இருக்குங்கிறதுதான் கேள்விக்குறி!" |
தலைமை என்பது வெறும் அலங்காரப் பதவி அல்ல. அது இக்கட்டான நேரத்தில் எடுக்கும் முடிவு. அமெரிக்காவைச் சமாளித்து, சீனாவை எதிர்கொண்டு, ஈரானுக்குப் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கிறது. சமநிலை என்ற பெயரில் நாம் எடுக்கும் ஒவ்வொரு மௌனமும் நம்மைத் தனிமைப்படுத்திவிடுமோ என்ற அச்சம் எழுகிறது.
செப்டம்பர் மாதம் டெல்லியில் நடக்கப்போகும் பிரிக்ஸ் மாநாடு, மோடிக்கு ஒரு மிகப் பெரிய அக்னிப் பரீட்சை. அங்கு இந்தியா லீட் செய்யுமா அல்லது சீட்டில் மட்டும் உட்காருமா?
பொறுத்திருந்து பார்ப்போம்...போலியான பிம்பங்கள் இந்திய ஊடகங்களில் பெரிதாகப் பேசப்படும் அதே நேரத்தில்... உண்மைகள் உரக்கச் சொல்லப்படும் அவர்கள் உண்மைகள் வலைத்தளத்தில்.
உண்மையை மக்கள் தெரிந்து கொள்ளும், உணரும் நேரத்தில் இந்தியாவின் நிலை உலக அரங்கில் மிக மோசமாக இருக்கும் என்பது உறுதி.
இதைப் பற்றி இந்திய ஊடகங்கள் பேசவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் மோடியை எதிர்க்கும் தமிழகத்தில் இது பற்றி எந்த ஊடகங்களும் பேசவில்லை என்பதுதான் எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
அன்புடன்,
மதுரைத் தமிழன்
#டிரம்ப் #சீனா #ஈரான் #இந்தியாசீனா #அமெரிக்கா #Geopolitics #ChinaFactor #IranIssue #TrumpFactor #InternationalRelations #பிரிக்ஸ்2026 #BRICS2026 #ராஜதந்திரம் #வெளியுறவுக் கொள்கை #இந்தியஅரசியல் #இந்தியா #மோடி #தலைமை #Diplomacy #India#அவர்கள்உண்மைகள் #மதுரைதமிழன் #கையாலாகாத்தனம் #அம்பலமானஉண்மை #மௌனம் #StrategicFailure #DiplomaticEmbarrassment #ModiGovernment #RealFaceOfBJP #தமிழ்வலைப்பதிவு #தமிழ்செய்தி #உண்மைஉரக்கச்சொல்லப்படும் #TamilBlog #TamilPolitics #AnalyticalWriting #TrendingTamil #DeejDurai #MaduraiThamizhan

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.