Thursday, May 28, 2026

 ஊட்டி ஏரியில் படகு சவாரியா? இல்லை... சமூக நீதியின் மீதான சவாரியா? திருமாவளவனுக்கு ஒரு சாட்டையடி கேள்வி!

    

#Thirumavalavan #VCK #OotyBoatHouse #AvargalUnmaigal



தமிழ்நாடு எத்தனையோ கூத்துக்களைச் சமீபகாலமாகப் பார்த்துக்கிட்டுதான் இருக்கு. எளிய மக்களோட குரல், விளிம்பு நிலை மக்களோட அரண் அப்படின்னு மேடைக்கு மேடை தங்களை அடையாளப்படுத்திக்கிற தலைவர்களுக்கு இங்க பஞ்சமே இல்லை.  விஜய் கட்சியின் புதிய தலைவர்கள் , நாங்க தமிழ்நாட்டை ஆய்வு செய்யப் போகிறோம்னு  கிளம்பினார்களோ இல்லையோ... இங்க இருக்குற சீனியர் தலைவர்களில் இருந்து கத்துக்குட்டிகள் வரைக்கும் எல்லாரும் திடீர்னு ஆய்வுங்கிற பெயரில் ரீல்ஸ் போடுற கலாச்சாரத்தை ஆரம்பிச்சுட்டாங்க!  அதிலதான் நம்ம திருமாவளவனும் குதித்து இருக்கிறார். சமீபத்துல ஊட்டி ஏரியில அவரு சொகுசா உட்கார்ந்து, அரசுச் செலவுல படகு சவாரி செஞ்சுகிட்டு ஆய்வு நடத்துறதா செய்தி மற்றும் ஒரு போட்டோ வெளியாகி இருக்கு பாருங்க... அதைப் பார்த்ததும் நெட்டிசன்களுக்கும் நடுநிலையான மக்களுக்கும் அற்பனுக்கு வாழ்வு வந்தா... அப்படின்னு சிரிப்பாய் சிரிச்சு வறுத்தெடுக்கிறாங்க!

கோடை காலத்துல ஊட்டிக்கு போய் ஜாலியா ரெஸ்ட் எடுத்தேன்னு சொன்னாக்கூட அதுல ஒரு நேர்மை இருக்கும் திருமாவளவன் சார். அதை யாரும் குறை சொல்லப் போவதில்லை ஆனால் அதை விட்டுட்டு, அரசு கட்டுப்பாட்டுல இருக்குற ஒரு டூரிஸ்ட் போட் கிளப்பை ஒரு எம்பி நேர்ல போய் ஆய்வு செஞ்சாருன்னு சொல்றது என்ன மாதிரியான நியாயம் திருமாவளவன் சார்? அங்க என்ன புதுசா தீண்டாமைப் பிரச்சனையா ஓடிக்கிட்டு இருக்கு? ஏரித் தண்ணியில போட் ஓட்டுறதுக்கு நீங்க எதுக்கு சார் எம்பி ஆகணும்? டூரிஸ்ட் கைடா போயிருந்தாலே நல்லா துடுப்பு போட்டிருக்கலாமே! மக்கள் உங்களுக்குக் கொடுத்த ஓட்டு, பாராளுமன்றத்துல விளிம்பு நிலை மக்களுக்காக சண்டை போட... ஊட்டில போட் கிளப்ல ஆய்வு நடத்த இல்ல!

இங்க நம்ம கேள்வி கேட்க வேண்டியது திருமாவளவனை மட்டும் இல்லைங்க; இந்தச் செய்தியை ஏதோ உலக மகா வரலாற்றுச் சாதனை மாதிரி போற்றிப் பாடி நியூஸ் போடுற நம்ம ஊர் நடுநிலை(?) ஊடகங்களைத்தான் முதல்ல கேட்கணும். இந்த இன்பச் சுற்றுலாவை தலைவரின் அதிரடி கள ஆய்வு அப்படின்னு மகுடம் சூட்டி மகிழுறாங்க. அதே மாதிரி தமிழ்நாட்டோட ஆளும் தரப்போ, எதிர்க்கட்சிகளோ இந்த விஷயத்துல பெருசா வாய் திறக்கப் போறது இல்லை. ஏன்னா, தேர்தல் கூட்டணி அரசியலுக்காகவும், ஓட்டு வங்கி கணக்குக்காகவும் ஒருத்தரை ஒருத்தர் சொறிஞ்சு விட்டுக்கிற அரசியல் வியாபாரம் இங்க ரொம்ப கச்சிதமா நடந்துட்டு இருக்கு. எளிய மக்கள் சந்திக்கும் அன்றாடப் பிரச்சனையை விட, தங்களோட கூட்டணி பலம் தான் முக்கியம்னு நினைக்கிற எல்லா அரசியல் கட்சிகளுமே இந்த மௌனத்துக்குக் கூட்டுதான்!

திருமாவளவன் சார், நீங்க தீவிரமா ஆய்வு செய்ய வேண்டிய நிஜமான களம் ஊட்டி ஏரியோட குளுமையான தண்ணீர் கிடையாது! தமிழ்நாட்டோட பட்டிதொட்டியெங்கும் இன்னமும் மறைமுகமாவும் நேரடியாவும் உயிரப்போட இருக்குற சமூகக் கொடுமைகள் தான் உங்க கண்ணுக்குத் தெரியணும்.

எத்தனையோ கிராமங்களில் இன்னமும் பட்டியல் இன மக்களுக்குத் தனித்தனி குவளைகளில்தான் டீ கொடுக்குற கொடூரமான ரெட்டை குவளை முறை நீடிக்குதே, அங்க எப்ப நீங்க நேர்ல போய் ஆய்வு செய்யப் போறீங்க? மரணத்துக்குப் பிறகும் தொடர்ற சாதியக் கொடுமையா, தலித் மக்களோட பிணங்களை பொதுத் தெரு வழியா எடுத்துட்டுப் போகக் கூடாதுன்னு இன்னமுமா சாதி வெறி ஆட்டம் போடுதே, அந்தப் பாதைகள்ல இறங்கி நீங்க எப்ப போராடப் போறீங்க?

ஊட்டி ஏரியில துடுப்பு போட்டு படகு சவாரி செஞ்சா தமிழ்நாட்டோட வாழ்வாதாரப் பிரச்சனை தீர்ந்தடுமா? நீங்க துடுப்பு போட வேண்டியது ஊட்டி ஏரி தண்ணியில இல்லை சார்; இன்னமும் சமூக அநீதியால வெந்துக்கிட்டு இருக்குற கிராமத்துத் தண்ணீரிலும், பிணங்களை எடுத்துட்டுப் போகக்கூட பாதை இல்லாம தவிக்கிற எளிய மக்களின் கண்ணீரிலும் தான்!

திமுக கூட்டணியில் இருந்து ஆட்சியில் பங்கேற்காத போதே வேங்கைவயல் போன்ற சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து போராடாத திருமாவளவன், கள்ளக்குறிச்சியில கள்ளச்சாராயம் குடிச்சு எத்தனையோ எளிய மக்கள் செத்து மடிஞ்சப்பவும் இதே கூட்டணி பாசத்துக்காக மௌனம் காத்ததுதானே உங்க சமூக நீதி? அப்பெல்லாம் வராத ஆய்வு ஆர்வம், இப்போ ஊட்டி ஏரியில சில்லுனு காத்து வாங்கும்போது மட்டும் பொத்துக்கிட்டு வருதோ? மேடைகள்ல 'அதிகாரத்தில் பங்கு, ஆட்சியில் பங்கு'னு முழங்கிட்டு, இப்போ வெளியே இருந்துதான் ஆதரவு என்று சொல்லிவிட்டு, ஆட்சியில் பங்கேற்ற பின் மொத்த கொள்கையையும் அடகு வச்சுட்டு, ஊட்டில போயி போட் சவாரி செய்றதுதான் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக நீதிக்கான அதிகாரப் பங்கீடா திருமாவளவன் சார்? இப்போ ஆட்சியில் பங்கேற்றபின் தலித் மக்களுக்காக போராடுவாரா என்ன?

அரசியல் ஆதாயத்துக்காக மேடைகள்ல மட்டும் 'சமூக நீதி' பேசிட்டு, நிஜ வாழ்க்கையில இன்பச் சுற்றுலாக்கள்ல திளைக்குற இந்த போலித்தனத்தை மக்கள் இப்பெல்லாம் நல்லாவே புரிஞ்சு வச்சிருக்காங்க. ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் இதுக்கு வக்காலத்து வாங்குறதை நிறுத்திட்டு, நிஜமான சமூகப் பிரச்சனைகளை நோக்கி தங்களோட பார்வையைத் திருப்பணும்.

அதை விடுத்துட்டு ஊட்டில போயி போட்டுல உட்கார்ந்து ஆய்வு பண்ணா... ஆள விடுங்கப்பா, உங்களையும் உங்க சமூக நீதி அரசியலையும்!

அன்புடன்,
மதுரைத்தமிழன்

டிஸ்கி: சாதியக் கட்சித் தலைவராகத் தொல். திருமாவளவன் வலம் வந்தாலும், கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாதவராக இருந்ததால், சாதி மத வேறுபாடுகள் இன்றிப் பொதுமக்களால் கௌரவமாக மதிக்கப்பட்ட தலைவர் அவர். கடந்த கூட்டணியிலும் சரி, இப்போதைய கூட்டணியிலும் சரி... பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் அவர் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளும்போது, பொதுமக்களின் மனதில் இருந்து மெல்ல மறைந்து கொண்டு இருக்கிறார். பலர் நல்ல தலைவராக உருவாகிறார்கள், ஆனால் கடைசியில் பணம், பதவி, அதிகாரம் முன்னே அடிபணிந்து விடுகிறார்கள்!

முன்பு என்னால் பெருமதிப்பிற்குரியவராகக் கருதப்பட்ட திருமாவளவன், இப்போது அந்த இடத்தில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருக்கிறார் என்பதுதான் நிஜம். அந்த நிஜத்தின் வெளிப்பாடே இந்தத் தார்மீகப் பதிவு!

 


#Thirumavalavan #VCK #OotyBoatHouse #AvargalUnmaigal  #மதுரைத்தமிழன் #அரசியல்சாட்டையடி #PoliticalSarcasm #சமூகநீதி #போலிஅரசியல் #களஆய்வு #ரீல்ஸ்அரசியல் #ரெட்டைகுவளை #வேங்கைவயல் #கூட்டணிஅரசியல்  
#Thirumavalavan #VCK #OotyBoatHouse #TamilNaduPolitics #SocialJustice #AvargalUnmaigal #TrendingTamil #TamilReels

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.