Monday, June 8, 2026

 ஸ்கிரிப்ட் இல்லாத அரசியல்: அமெரிக்க அதிபரின் மோதலும், நம் ஊடகங்களின் 'செட்-அப்' கூத்துகளும்!
     

#ScriptedPolitics #MediaFreedom #TamilNaduPolitics #முதுகெலும்பற்றஊடகங்கள் #அரசியல்சாட்டை


 
அமெரிக்க சமூக ஊடகங்களில் ஓடிக்கொண்டிருக்கும்  அமெரிக்க அதிபரின் வீடியோவை உற்றுப் பார்த்தபோது நெஞ்சில் உறைத்தது நம் ஊர் ஊடகங்களின் கேடுகெட்ட நிலைமையும், அரசியல்வாதிகளின் கோழைத்தனமும்தான். அமெரிக்காவில் ஒரு சாதாரண நிருபர், நாட்டின் ஆகப்பெரிய அதிகாரத்தில் இருக்கும் அதிபரை விரட்டி விரட்டிக் கேள்வி கேட்கிறார். அதிபரும் அதற்குப் பதறி ஓடாமல், தன் வாதத்தை முன்வைக்கிறார். அது தப்போ ரைட்டோ, அங்கே ஒரு துணிச்சல் இருக்கிறது, நேருக்கு நேர் மோதும் நெஞ்சுரம் இருக்கிறது. ஆனால், அப்படியே நம் தமிழ்நாட்டுப் பக்கமும் இந்திய அரசியல் பக்கமும் திரும்பிப் பார்த்தால் என்ன லட்சணம் வாழ்கிறது?
      


இங்கே எந்த ஒரு ஊடக ரிப்போர்ட்டருக்காவது -சமஸ், பாண்டே, குணசேகரன், கார்த்திகை செல்வன் போன்றவர்களுக்கு ,அப்படி ஒரு தலைவனைப் பார்த்து நேருக்கு நேர் கேள்வி கேட்கும் துணிச்சல் இருக்கிறதா? அல்லது எந்த ஒரு அரசியல் தலைவனுக்காவது எழுதி வைக்காத ஸ்கிரிப்ட் இல்லாமல், முன்கூட்டியே செட் செய்யப்படாத கேள்விகளை எதிர்கொள்ளும் துணிவு இருக்கிறதா? இல்லை என்றுதான் நெஞ்சில் கைவைத்துச் சொல்ல வேண்டும். அதிகார வர்க்கம் போடும் விளம்பரப் பிச்சைகளுக்கும், எஜமானர்கள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கும் ஆசைப்பட்டுத் தங்கள் பேனாக்களை விற்றுவிட்ட இந்த ஊடகக் கூட்டத்தை என்னவென்று சொல்வது? மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்னைகளோ, விலைவாசியோ, ஊழலோ இவர்களுக்கு முக்கியமில்லை. அரசியல்வாதிகள் எப்போது தும்முவார்கள், எப்போது மைக்கைப் பிடிப்பார்கள் என்று அவர்களுக்குச் சாமரம் வீசுவதே இவர்களின் பிழைப்பாகப் போய்விட்டது.

அதேபோலத்தான் நம் தலைவர்களின் வீரமும். மேடைப் பேச்சிலும், காசு கொடுத்துக் கூட்டப்படும் தொண்டர்களின் கைதட்டல் சத்தத்திலும் மட்டும்தான் இவர்களின் வீரம் வழிகிறது. தப்பித்தவறி ஒரு நிருபர் நியாயமான கேள்வியைக் கேட்டுவிட்டால் போதும், 'தப்பிப் பிழைத்தோம்' என்று ஓடுவதும் அல்லது உடனே "நீ எந்தக் கட்சி?", "உனக்கு யார் காசு கொடுத்தா?" என்று முத்திரை குத்தி அலறுகிறார்கள். இன்னும் கொஞ்சம் போனால் மைக்கைப் பிடுங்குவதும், பிரஸ் மீட்டை விட்டுவிட்டு ஓடி ஒளிவதும்தான் இவர்களின் லட்சணம். தவறோ சரியோ, ஒரு கேள்வியைக் கூட நேருக்கு நேர் எதிர்கொள்ளத் துப்பில்லாத இந்தத் தலைவர்களையும், அவர்களுக்குக் கூஜா தூக்கும் இந்த ஊடகங்களையும் முதுகெலும்பற்ற கோழைகள் என்று சாடுவதைத் தவிர வேறு வழியில்லை. சவால்களைச் சந்திக்கத் தைரியமில்லாத இவர்களை ஆண்மை இல்லாத அரசியல்வாதிகள் என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை.

வெள்ளை மாளிகையில் சிங்கம் போலப் பாயும் செய்தியாளர்கள் அங்கே... அறிவாலயத்திலும், பனையூரிலும், டெல்லி தர்பாரிலும் சொம்படிக்கும் அடிமைக் கூட்டங்கள் இங்கே! இந்த அவலத்தை நாம் இன்னும் எத்தனை காலம் சகித்துக் கொள்ளப் போகிறோம்? அதிகாரத்தைப் பார்த்து நடுங்கும் பேனாக்களும், கேள்விகளைக் கண்டு அஞ்சி ஓடும் கோழைத் தலைவர்களும் இருக்கும் வரை இங்கு ஜனநாயகம் என்பது வெறும் பேச்சளவில் மட்டுமே. மாற்றம் என்பது இவர்களிடம் இருந்து வராது, சாமரம் வீசுவதை நிறுத்திவிட்டுச் சீறும் பேனாக்களிடம் இருந்தும், சுயசிந்தனையோடு தட்டிக்கேட்கும் மக்களிடம் இருந்தும் மட்டுமே தொடங்க வேண்டும். நெஞ்சில் கைவைத்துச் சொல்லுங்கள்... இந்தத் துணிச்சலற்ற ஊடகங்களும், கோழை அரசியல்வாதிகளும் நமக்குத் தேவையா?

இதுல வேற அமெரிக்கர்கள் முட்டாள்கள், தாம்தான் பெரிய அறிவாளிகள், நம்மிடம்தான் பண்பாடு கலாச்சாரம் போன்றவை இருக்கிறது என்று பெருமை பீத்தல் வேற? அடேய்... உங்க பெருமை பீத்தல்களைக் கூவத்திலோ அல்லது கங்கையிலோ போடுங்கள்! அசுத்தங்களைத் தேக்கி வைக்கும் இடங்களான அவைதான், உங்க கலாச்சாரப் பெருமைகளைச் சேர்த்து வைக்கப் பாதுகாப்பான இடம்!


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.