தவெக-வின் 'நாடாளுமன்ற' தியாகம்: வியூகமா? பயமா?
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தனக்குக் கிடைத்த முதல் ராஜ்யசபா சீட்டை, தாராள பிரபுவாக மாறி காங்கிரஸிற்குத் தூக்கிக் கொடுத்திருப்பதைப் பார்த்துவிட்டு, "என்னடா இது மகா தியாகமாக இருக்கிறதே!" என்று சில தவெக தொண்டர்கள் உருகிக் கொண்டிருக்கிறார்கள். 108 எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு டெல்லிக்குத் தன் கட்சியின் முதல் ஆளை அனுப்பத் துப்பில்லாமல், அதை வெறும் 5 எம்.எல்.ஏ-க்கள் வைத்திருக்கும் காங்கிரஸுக்கு அள்ளிக் கொடுத்திருப்பதன் பின்னணியில் இருக்கும் 'அரசியல் யோக்கியதையை' நாம் கொஞ்சம் தோலுரித்துப் பார்க்க வேண்டும்.
முதலாவதாக, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனாவுக்குத் தங்கள் கட்சியில் டெல்லிக்கு அனுப்ப 'தகுதியானவர்கள்' யாரும் தற்போதைக்கு இல்லை என்ற உண்மை ஒருவழியாகப் புரிந்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் தவெக-விற்கு ஓட்டு போட்டது, அந்தந்தத் தொகுதிகளில் நின்ற வேட்பாளர்களின் லட்சணத்தைப் பார்த்தோ அல்லது உள்ளூர் நிர்வாகிகளின் அரிய தொண்டைக் கண்டு உருகியோ அல்ல; அவர்கள் ஓட்டு போட்டது 'விஜய்' என்ற ஒரே ஒரு சினிமா முகத்திற்காக மட்டும்தான். மற்றபடி, தவெக-வில் நின்றவர்களின் தகுதி என்ன என்பது அவருக்கும் தெரியும், நமக்கும் தெரியும்.
சரி, கட்சியில் ஓரளவாவது விவரம் தெரிந்த ஆள் என்று பார்த்தால் ஆதவ் அர்ஜுனா மட்டும்தான். அவரோ இங்கே விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறையைக் கவனிக்கும் முக்கிய அமைச்சர். அவரை டெல்லிக்கு அனுப்ப வேண்டுமென்றால், எம்.எல்.ஏ பதவியையும், அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்ய வைக்க வேண்டும். ஏற்கனவே 108 இடங்களை வைத்துக் கொண்டு, பெரும்பான்மைக்குத் தட்டுத்தடுமாறும் தவெக அரசுக்கு, இருக்கும் அமைச்சரவையை ஆட்டிப்பார்ப்பது என்பது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதற்குச் சமம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
அடுத்ததாக, காங்கிரஸிற்கு இந்த சீட்டைத் தூக்கிக் கொடுப்பதன் மூலம், "திமுகவில் நீங்கள் ஒரு சீட்டுக்காகக் கெஞ்ச வேண்டும், ஆனால் தவெக உங்களுக்குத் தாராளமாக அள்ளிக்குடுக்கும்" என்ற பிம்பத்தை விஜய் உருவாக்கியிருக்கிறார். இதன் மூலம் எதிர்காலத்தில் காங்கிரஸ் மீண்டும் திமுக பக்கமே திரும்பிப் பார்க்க முடியாதபடி ஒரு வலுவான 'அரசியல் அணைக்கட்டைக்' கட்டியிருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
ஆனால், இதையெல்லாம் தாண்டி மிக முக்கியமானக் காரணம் டெல்லி சுல்தான்கள் (பாஜக) பற்றிய பயம்!
மேடைகளில் ஏறி, மைக் கிடைத்தால் "பயமில்லை, அஞ்சமாட்டோம், எவனுக்கும் அடிபணிய மாட்டோம்" என்று எவ்வளவுதான் சினிமா பாணியில் பஞ்ச் பேசினாலும், மத்திய அரசை நேரடியாகப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்ற அச்சம் விஜய்யிடம் அப்பட்டமாகத் தெரிகிறது. தன் கட்சியிலிருந்து ஒருவரை டெல்லிக்கு அனுப்பினால், அவர் நாடாளுமன்றத்தில் பாஜக-விற்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைப் பேச வேண்டியிருக்கும். அப்படிப் பேசினால், நேரடியாக தவெக-வே பாஜக-வை எதிர்ப்பது போன்ற தோற்றம் உருவாகிவிடும். இப்போதைக்கு மத்திய அரசை நேரடியாகப் பகைத்துக் கொண்டால் அது தங்களின் புதிய ஆட்சிக்கு ஏதேனும் குடைச்சலைக் கொடுத்துவிடுமோ என்று விஜய் பயந்திருக்கிறார்.
அதனால்தான், "நாம் ஏன் வம்பில் மாட்ட வேண்டும்? பேசாமல் காங்கிரஸையே பேச வைப்போம்" என்று புத்திசாலித்தனமாக அந்தப் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதன் மூலம் காங்கிரஸின் நன்மதிப்பைப் பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியைத் தக்க வைப்பதோடு, தவெக-வின் எண்ணங்களை டெல்லியில் தங்களின் 'ப்ராக்ஸி' (Proxy) குரலாக ஒலிக்க வைக்கவும் ஒரு மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், இந்த முடிவு தவெக-வின் பெருந்தன்மையால் எடுக்கப்பட்டதல்ல; மாறாக, தங்கள் ஆட்சிக்கு எந்தச் சேதாரமும் வந்துவிடக் கூடாது என்ற எதார்த்தமான பயத்தால், நாடாளுமன்றத்தில் தனக்காகப் பேசக்கூடிய ஒரு 'பலம் வாய்ந்த மனிதரை' விஜய் அங்கே கூலிக்கு அமர்த்தியிருக்கிறார் என்பதே நிஜம்!
அன்புடன்,
மதுரைத்தமிழன்
#TVK #Vijay #RajyaSabha #Congress #TamilPolitics #PoliticalAnalysis #TVKNews #VijayPolitics #TamilPoliticalNews #PoliticalCommentary #அரசியல்அலசல் #தமிழகஅரசியல் #ராஜ்யசபா #காங்கிரஸ் #விஜய் #தவெக #தவெகவியூகம் #உண்மைகள்தலையங்கமுத்திரை #MaduraiThamizhan #PoliticalSatire

0 comments:
Post a Comment
நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.