Thursday, June 24, 2021

 எது சொர்க்கம் வாழ்ந்த தமிழ்நாடா அல்லது வாழும் அமெரிக்காவா?

உள்ளூர் மாடு  விலை போகாது என்பதற்கிணங்க, உள்ளூரில் / உள்நாட்டில்  வெற்றி பெற முடியாதவர்கள்  வெளி  ஊரில்/வெளிநாடு வந்து வெற்றி பெற்று அங்கு வசித்துக் கொண்டே  சொர்கமே என்றாலும் அது நம் ஊரைப்/நாட்டைப் போல வருமா? அட என் நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடா ஆகுமா? என்று பாடியும் அதைப்பற்றிப் பேசி சிலாகித்துக் கொண்டு இருப்பது என்னவோ நம் ஊரில் அல்ல அமெரிக்காவில்தான் காரணம் பேச்சுக்கும் செயலுக்கும் எந்த வித சம்பந்தம் இல்லாது இருப்பவர்கள்தானே நாம்.  

அமெரிக்கா வாழ்வில் இந்திய வாழ்க்கையைப் போல் தினமும் அதிகச் சவால்களைச் சந்திக்க வேண்டியதில்லை இருந்த போதிலும் இந்தியாவைத்தான் நாம் சொர்க்கம் என்பது போலபேசிக் கொண்டிருக்கிறோம், என்னாடா, அப்படி அமெரிக்காவில் இல்லாததை இந்தியாவில் நீங்கள் பார்க்கிறீர்கள் என்றால்?

அமெரிக்காவில் இல்லாத பல சுதந்திரம் இந்தியாவில் நமக்கு இருப்பதாகக் நினைக்கிறார்கள். அதனாலேயே, அதைச் சொர்க்கம் என்று நினைப்பவர் பலர் இருக்கிறார்கள். அவர்கள் சொல்லும் சுதந்திரம் என்பது சட்ட விதி மற்றும் தனி மனித ஒழுக்கங்களைப் பின்பற்றாதது இருப்பதைத்தான், உதாரணம் சாலை ஓரம் சிறுநீர் கழிப்பது ,வாகனங்களைத் தன் இஷ்டத்திற்கு ஒட்டுவது, குழந்தைகளுக்கு அவர்களின் லைசன்ஸ் எடுக்கும் வயதிற்கு முன்பே வாகனங்கள் வாங்கிக் கொடுப்பது, நினைத்த இடங்களில் குப்பை போடுவது ,மேலை நாட்டில் உள்ளவர்கள் செய்த ஆராய்ச்சி கட்டுரைகளைப் பல்கலைகழங்களில் சமர்பித்துவிட்டு முனைவர் பட்டம் மிக எளிதாகப் பெறுவது இது போன்ற பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். இதைத்தான் அவர்கள் தங்கள் உரிமைகள் அல்லது சுதந்திரம் என்று நினைத்துக் கொள்கிறார்களோ என்னவோ. அதனாலேயே அதைச் சொர்க்கம் என்று நினைக்கிறார்கள் போல

சில சமயங்களில் கொஞ்சம் ஆழ்ந்து யோசிக்கும் போது, மற்ற நாடுகளை  இந்தியாவோடு ஒப்பிடும் போது இந்தியருக்குத்தான்   உரிமைகள் அதிகம் இருப்பது போலத் தோன்றுகின்றன. ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும், கூட  இந்தியாவில் எந்த வித உரிமைகளையும் சரி வர நம்மால் பயன்படுத்த முடியாத வகையில்தான் அங்குள்ள சூழ்நிலைகள் உள்ளன .அதற்கு என்ன காரணம் என்று  யோசித்துப் பார்த்தால் அங்குள்ள அரசியல் சூழ்நிலைகள் நம்மை அப்படி  மாற்றி இருக்கின்றன.


நியாயமாக யோசித்துத்தான் பாருங்களேன். உரிமைக்குக் கூட நம்மால் குரல் கொடுக்க முடியாது. நியாத்திற்க்காக போராடினால் நம் உயிர் அநியாயமாக்கப் பறிபோகிவிடும் நிலையைத்தான் அங்கு இப்போது காண முடிகிறது . தனிமனிதனாக மட்டுமல்ல ஒரு சமுகமாகச் சேர்ந்து கூடப் போராட முடியாது . இதற்கு தூத்துக்குடி சம்பவமே ஒரு உதாரணம்.  தேசத் துரோகிகளை எதிர்த்து குரல் கொடுப்பவன்தான் தேசத்துரோகியாக முத்திரை குத்தப்படுகின்றான்.. இதுதான் சொர்க்கமாக நாம் பார்க்கும்   தற்போதைய  நம் ஊரின் நிலைமை இவ்வளவு இருந்தும் கலாச்சாரம் பண்பாடுகளின் சொர்க்க பூமி இந்தியா என்று பழம் பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  


மனிதநேயத்தைத் தொலைத்து விட்டுத்தான் வாழவேண்டி உள்ளது .அன்றாட வாழ்க்கையில் அங்குச் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு அளவே இல்லை எனலாம். அரசியல் தலைவர் முதல் அரசுத்துறை ஊழியர்கள் வரை லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடுகிறது இங்கும் அமெரிக்காவிலும் அப்படி ஊழல்கள் நடந்து கொண்டுதான் உள்ளது. ஆனால் என்ன அது மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்காத வகையில் உள்ளது. கண்ணுக்குத் தெரியாத அளவில் தான் உள்ளது. இங்கும் சில இடங்களில் உயிருக்குப் பயந்து பயந்து தான் வாழவேண்டி உள்ளது. ஆனால் இந்த நிலை மிகவும் குறைவான விகிதமே என்று கூறலாம்.

 அதே நேரத்தில் பலர் பார்வையில் கலாச்சாரச் சீர்கேடுகளின் சொர்க்க பூமி அமெரிக்க என்ற நினைப்பு பலருக்கும் உண்டு ஆமாம் சீர்கேடுகளின் சொர்க்கம் எனப்படும் அமெரிக்காவில்தான் எந்த ஒரு பெண்ணும் 'இடிமன்னர்களின்' தொந்தரவு இல்லாமல் பொது போக்குவரத்தைப் பயன்படுத்த முடிகிறது கலாச்சாரச் சீர்கேடுகள் நிறைந்த நாடு என்று சொல்லப்படும் நாட்டில் ஒரு சில இடங்களைத் தவிர மற்றைய பகுதிகளில் பெண்கள் இரவு நேரத்தில் தனியாகச் சென்று வரமுடிகிறது ஆனால் இந்தியாவில் இரவு நேரத்தில் ஆண்கள் கூடத் தனியாகச் சென்று வராத நிலைதான் உள்ளது. இதைத்தான் அவர்கள் சொர்க்கம் என்கிறார்களா என்ன?


பெண்கள் பாதுகாப்புக் கேலிக்குரியதாக்க இருக்கிறது கூட்டுப் பாலியல் பலாத்காரம் என்பது இயல்பு என்ற நிலைக்குச் சென்று கொண்டு இருக்கிறது அடிப்படை கல்வி விபசாரமாக மாறி இருக்கிறது. ஆமாம் இப்போது சொல்லுங்கள் நம் இந்தியா இப்பொழுது எங்கே போகிறது கலாச்சாரத்தில்?.

கலாச்சாரத்தில் சீர்கெட்ட நாடு என்று சொல்லப்படும் நாட்டில் நம்மைப் பெரிதும் ஈர்ப்பது இங்கு உள்ள ஒழுங்கு முறை, அரசாங்க விதிமுறைகள் மக்களை மதிப்பது, தூய்மை, பாதுகாப்பு, என இப்படிப் பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகலாம். இங்குள்ள ஒழுங்கு மற்றும் விதிமுறைகளை யாரும் மீறவில்லையா என்றால் இங்கும்  சட்டத்தை மீறுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார், ஆனால் அப்படி மீறுபவர்கள் யாராக இருந்தாலும்  நாட்டின் அதிபர் முதல் சராசரி குடிமகன் வரை தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அதனால் தவறு செய்பவர்கள் தண்டனையை கண்டிப்பாக்க அனுபவித்துத்தான் ஆக வேண்டும் இப்படி இருந்த போதிலும் தவறு செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.... அப்படி அவர்கள் சட்டவிதிமுறைகளை மீறுவது பொதுவாகப் பொது ஜனங்களை அதிகளவில் பாதிக்காத வண்ணம் இருக்கிறது என்று சொல்லாம்

ஆனால் இந்தியாவில் இதற்கு எதிர் மாறாகவே இருக்கிறது மனிதனுக்கும் மதிப்பு இல்லை, தண்டனைக்கும் மதிப்பு இல்லை.பணத்திற்கும், செல்வாக்கிற்கும் அதிகாரத்திற்கும்தான் மதிப்பு. இன்னும் சொல்லப் போனால் மிகப் பெரிய தவறுகளைச் செய்பவர்களுக்குத்தான் மதிப்பு அதிகம் ஏன் அவர்களை மிக திறமையானவர் என்று சொல்லி தலைவர்களாகவே எண்ண ஆரம்பித்துவிடுகிறோம்


ஆனால் அமெரிக்கா வந்த இந்தியர்கள்/ தமிழர்கள் நமது நாட்டின் பண்பாட்டைக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள் என்று பார்த்தால் ஆம் நம் கலாச்சாரப் பண்பாட்டில் இருக்கும் பல நல்ல விஷயங்களைப் பின்பற்றிக் கொண்டி இருக்கிறார்கள் அதில் எந்தச் சந்தேகமும் அல்ல மேலும் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழைக் கற்றும் கொடுத்து வருகிறார்கள் அதற்குச் சான்று இப்போது இங்குப் பெருகி வரும் தமிழ்ப் பள்ளிகளே அதுமட்டுமல்ல வாழும் நாட்டில் உள்ள ஒழுங்கு முறை, அரசாங்க விதிமுறைகள் பலவற்றைக் கற்றுச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ளவர்களோ நமது பாரம்பரிய கலாச்சாரத்தை மறந்து மேலை நாட்டுக் கலாச்சாரத்தில் உள்ள நல்லவைகளைக் கற்றுக் கொள்ளாமல் மோசமான விஷயங்களைக் கற்றுக் கலாச்சாரத்தைச் சீரழித்து வருகிறார்கள்

சொர்க்கமே என்றாலும் நமது ஊரைப் போல வருமா என்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் வசிப்பவர் பாடினால் என்னால் அதை மறுத்துச் சொல்லி இருக்க முடியாது. காரணம் அப்போது இருந்த தமிழகம் வேறு இப்போது நாம் காணும் தமிழகம் வேறு அப்போது மதத் துவேஷங்கள் இல்லாமல் மிகச் சந்தோஷமாகச் சகோதரர் போலப் பழகி வாழ்ந்த காலம் அது பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்த காலம் அடுத்த வீட்டுப் பெண்களுக்கும் மரியாதை கொடுத்த காலம் .ஆசிரியரை குருவாக மதித்த காலம் அண்டை அயலாருடன் சொந்தம் போல ஒட்டி உறவாடிய காலம் ஆனால் இன்றைய நிலையோ எதிர்மறையாக இருக்கிறது .நிலமை அப்படி இருக்க சொர்கமே என்றாலும் நம்ம ஊரைப் போல வருமா இன்று நாம் பேசிக்  கொண்டிருந்தால் நிச்சயம் நமது மூளை வளராமல் இருக்கிறது என்று சொல்வேன்

அமெரிக்க போன்ற நாடுகளுக்கு வந்து வாழ்ந்து வளர்ச்சி பெற்று விட்டு சொர்க்கமே என்றாலும் நமது ஊரைப் போல வருமா என்று சொல்லுபவர்களே அது சொர்க்கம் என்றால் அங்கு உங்கள் குழந்தைகளை அனுப்பி வாழச் செய்வதுதானே குழந்தைகளுக்கு நாம் செய்யும் நல்ல செயல். அதைவிட்டுவிட்டு நரகத்தில் வாழ  வைப்பது எந்த விதத்தில் நியாயம்?



இறுதியாக இந்த உலகில் "எதுவும் நிரந்தரமில்லை... வாழ்க்கை எவ்வளவு நிலையற்றது!" அதனால் வாழ்க்கை நன்றாகச் செல்லும் போது நாம் வசிக்கும் இடமே சொர்க்கம் அப்படி இல்லை என்றால் எல்லா இடமும் நரகம்தான்


அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments:

  1. மகிழ்ச்சியை வாழும் இட(மு)ம் தீர்மானிப்பதில்லை...

    ReplyDelete
  2. நல்ல பதிவு மதுரை. நல்ல பாயின்ட்ஸ். இதே கருத்துகள் எனக்கும் உண்டு. கூடவே ஆதங்கமும் எழும் நம்மூரைப் பற்றி. உலகிலேயே சுதந்திர நாடு என்றால் இந்தியாதான் என்று இரு தினங்கள் முன்பு கூடச் சொல்லிக் கொண்டேன்.

    சுதந்திரம் என்ற தலைப்பில் ஒரு பதிவு நான் முன்பு எழுதிய நினைவு..
    சட்டதிட்டங்கள் ஒழுங்காக இருந்தால் எல்லாமே அழகாக இருக்கும்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்திய சுதந்திரமான ஒரு நல்ல நாடாக இருந்தது.. முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்த இந்தியா இப்போது அங்கு இல்லை எல்லாம் தலைகிழாக மாறி இருக்கிறது.. ஒரு நல்ல நாட்டை சிதைத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் என் ஆதங்கம் கூட

      Delete
  3. DD சுருக்கமாகச் சொல்லி விட்டார்.  அதேதான் என் கருத்தும்.

    ReplyDelete
    Replies
    1. தனபாலன் சுருக்கமாக இல்லை மிக தெளிவாக ஒரே வரியில் நச் என்று பதில் தந்து இருக்கிறார்

      Delete
  4. அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் ஒப்பிட்டால் இந்தியாவை விட அமெரிக்கா நிலப்பரப்பில் ஐந்து மடங்கு பெரியது மக்கள் தொகையில் ஒப்பிட்டால் இந்தியாவை விட ஐந்து மடங்கு குறைவு எது ஒன்றும் அதிகமாக இருந்தால் அது மனிதனாகவே இருக்கட்டும் அது மதிப்பு குறைவு எவ்வாறு தங்கம் குறைவாக இருக்கிறதோ அதற்கு விலை அதிகம் அலுமினியம் அதிகமாக கிடைப்பதால் அதற்கு விலை குறைவு என்பதே என் கருத்து

    ReplyDelete
    Replies
    1. எதையும் எதையுடன் ஒப்பிட்டு பார்ப்பது சரியில்லை... ஆனால் இந்த பதிவு எழுத காரணம் சிலர் இங்கு வந்த பின் மிக நல்ல நிலையில் இருந்து கொண்டு எல்லா வசதி மற்றும் செளரியங்களை அனுபவித்து கொண்டு சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரை போல வருமா என்று ஏதோ உடந்தை ரிக்கார் போல சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் சொல்வது உண்மை என்றால் நல்ல வசதி வாய்ப்புக்கள் வந்தவுடன் சொந்த ஊருக்கு நாட்டுக்கு சென்றௌ வசிப்பதுதானே சரி அல்லது தங்கள் வாரிசுகளை அங்கு அனுப்பி வாழ செய்வதுதானே சரி.. அப்படிப்பட்டவர்களிடம் பல் முறை உங்கள் வாரிசுகளை உங்கள் ஊருக்கே அனுப்பி வாழ செய்யுங்கள் என்று சொன்னால் அப்பா வேற மாதிரி பாட்டு பாடுகிறார்கள் அப்படிப்பட்டவர்களுக்கான பதிவுதான் இது

      Delete
  5. இங்கும் வரும் செய்திகள் அனைத்தும் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து அனுபவிப்பார் வளைக்க சிறு துன்பம் வந்தாலும் பெரிய அளவில் அதை விளம்பரப்படுத்துகிறார்கள் எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் அன்றாடம் வேலை செய்து மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் அவர்களுக்கு எந்தத் துன்பமும் நேர்வதில்லை சதவீதக் கணக்கில் அதிகமாக நன்றாக உள்ளார்கள் என்பதே என் எண்ணம்

    ReplyDelete
  6. அனுபவிப்பவர்களுக்கு

    ReplyDelete
  7. உதாரணம் கொரோனாவில்
    100 நபர்களுக்கு இரண்டு நபர்களை இறப்பு ஆனால் எண்ணிக்கையில் 5 ஆயிரம் என்று கூறுகிறார்கள் 130 கோடி மக்கள் தொகையில் ஒரு 5 ஆயிரம் நபர்கள் பெரிய எண்ணிக்கை அல்ல இறப்பவர்களை விட இங்கு அதிகம் பிறப்பவர்கள் எந்த நிமிடத்திலும் உள்ளார்கள் இறப்பு மட்டுமே செய்திகளில் கூறுவார்கள் எத்தனை நபர்கள் குறிப்பிட்ட நாட்களில் பிறந்தவர்கள் என்பதை எந்த ஊடகமும் கூறுவது இல்லை என்பதே உண்மை

    ReplyDelete
  8. உண்மை விதிகளை இங்கு எளிதில் மீறலாம் ,நேர்மையானவர்களை இந்தியர்கள் விரும்புவதில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.