Monday, November 4, 2013உங்கள்  பணத்தை கரியாக்க  வார இதழ்கள் வெளியிடும் தீபாவளி மலர் அல்ல பலரின் கைவண்ணத்தில் பூத்திருக்கும் தீபாவளி மலர்

 
avargal unmaigalஅன்புள்ள பாட்டிமார்களே! தாத்தாமார்களே! அண்ணன்மார்களே! தம்பிமார்களே! தங்கைமார்களே அக்காமார்களே சித்தப்புக்களே பெரியப்புகளே சிஷ்யர்களே சிஷ்யைகளே தோழர்களே தோழிகளே
நீங்கள் அனைவரும் மிக நல்லபடியாக தீபாவளி கொண்டாடி இருப்பீங்க என நினைக்கிறேன்


ஆமாம நீங்க எல்லோரும் பலகாரம் செய்து இருப்பீங்க. அதை எனக்கு அனுப்பி வைக்க ஆசைப்பட்டீங்க.. நிறைய பேர் எனக்கு மெயில் அனுப்பி விலாசம் எல்லாம் கேட்டு இருக்கீங்க... இப்படி விலாசம் கேட்டு ஆயிரக்கணக்கான மெயில்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஒவ்வொருத்தருக்கும் தனி தனியாக பதில் சொல்ல நேரம் இல்லாததால் இங்கே சொல்லுகிறேன். நீங்க அனுப்புற பலகாரம் எல்லாம் இங்கே வருவதற்குள் அதெல்லாம் கெட்டுப் போகிடும். இல்லை அதை நீங்க நெக்ஸ்டே சர்வீஸில் அனுப்பி அதை நான் சாப்பிட்டா என் உடல் நலம் கெட்டுவிடும். மேலும் சிலர் புது வேஷ்டி சட்டை, கோட் சர்ட் வாங்கி அனுப்ப ஆசைப்பட்டு இருக்கிங்க. அதனால்தான் உங்களுக்கு என்னால் பதில் தர வில்லை

நான் பதில் தரவில்லை என்று இப்போது பலரும் மனம்வருந்தி மெயில் அனுப்பிக் கொண்டிருக்கீங்க. சரிங்க உங்க மனவருத்தத்தை சரி செய்ய நான் முடிவு செய்துவிட்டேன்

அதனால் நான் இங்கே என் பேங்க் அக்கவுண்ட நம்பர்  தந்து இருக்கிறேன் அதில் நீங்கள் பணத்தை ட்ரான்ஸ்பர் பண்ணலாம்.. பணத்தை பலகாரத்திற்காக அல்லது சீர்வரிசையாக புது துணிமணி எடுக்கவா என்று குறிப்பிட்டால் உங்கள் பெயரை சொல்லி அதன் படி செலவிடுவேன்,

இப்படி என் மேல் அளவில்லாத அன்பு வைத்திருக்கும் உங்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா அதனால் உங்களுக்கு நான் தீபாவளி மலரை உங்களுக்கு பரிசாக தருகிறேன். படிங்க ரசிங்க படித்து விட்டு அடிக்க வேண்டுமென்றால் எனது மனைவியின் அக்கவுண்டில் பணம் செலுத்தினால் உங்கள் சார்பாக அவள் பூரிக்கட்டையால் கவனித்து கொள்வாள்.

 இந்த மலரை அலங்கரிக்க போவது நான் அல்ல. ரமணி, ஜோதிஜி, பாலகணேஷ், சீனு, சசி, ராஜி, உஷா அன்பரசு, மஞ்சு சுபாஷினி ஜி.ஜே.தமிழ்ச்செல்வி,  தனபாலன் என்ற     பதிவுலகின் பிரபலங்கள். இதில் பலர் வலைத்தளத்துடன் நின்றுவிடாமல் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளனர். அவர்களையும் அவர்களின் எழுத்துக்களையும் அவர்கள் அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறேன். அதை படித்து ரசித்து இந்த தீபாவளியை சந்தோஷமாக கொண்டாடுங்கள். கண்ணிய குறைவான  எந்தவிதமான வார்த்தைகள் & கருத்துகளை இவர்களின் எழுத்துக்களில் பார்க்க இயலாது

நாட்டில் நல்லவர்களே இல்லைங்க படிக்க நல்ல விஷயங்களை யாரும் வெளியிடுவதில்லை இல்லைங்க என்று கூறுபவர்களா நீங்கள் அப்படின்ன நான் அறிமுகப்  படுத்தும் இவர்களின் எழுத்துக்களை படித்து பாருங்கள் & இவர்களுடன் பழகிப் பாருங்கள் அப்புறம் உங்கள் எண்ணத்தை கண்டிப்பாக மாற்றிக் கொள்வீர்கள் என்பதில் ஐயமில்லை
எனது தீபாவளி மலரின் இறுதியில் நீங்கள் தின்னது செரிக்க எனது பதிவை மறுபதிவாக வெளியிடுகிறேன். படித்து பலன் அடையுங்கள்
தீபாவளிக்கு முன்னாலே இந்த மலரை வெளியிட நினைத்து இருந்தேன் ஆனால் நேரப்பிரச்சனைகாரணமாக இதை சிறிது தாமதத்துடன் வெளியிடுகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்
அன்புடன்
மதுரைத்தமிழன்

வயதில் பெரியவரான ரமணி அவர்கள் தன் கருத்துகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல வலைத்தளத்தில் தனது எழுத்துக்களை பதித்து வருபவர். அவரின் எழுத்துக்களை இங்கு பரிசாக எனது தளத்திற்கு வருபவர்களுக்கு தருகிறேன்

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள் எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்


தேடுதலையே...
நினைவுகளில் தீர்க்கமாய்
வாழ்வின் நோக்கமாய்
எக்கணமும் கொண்டவர்கள்
எப்போதும்
அலுத்து அமர்வதோ
சலித்து ஒதுங்குவதோ இல்லை

இலக்குகளை....
எல்லைகளாகக் கொள்ளாமல்
இளைப்பாறிச் செல்லும்
இடமாகக் கொள்பவர்கள்
என்றுமே
தேங்கி நிற்பதோ
சோர்ந்து சாய்வதோ இல்லை

சிகரங்களை....
சாதனையாகக் கொள்ளாமல்
மறுசிகரம் காட்டுகின்ற
குறியீடாகக் கொள்பவர்களுக்கு
எச் சூழலிலும்
கிரீடங்களில் நாட்டமோ
சரிவுகளில் பதற்றமோ இல்லை

விடியலை...,
மற்றுமொரு நாளாக
மனதினில் கொள்ளாது
புத்தம்புது நாளாக
புதியதொரு வாய்ப்பாக
என்றென்றும் கொள்பவர்கள்
வெற்றிக்கு தடையினை
காண்ப தில்லை எப்போதும்.
நிருபர் மன்மோகன் சிங்கிடம் : தீபாவளி அன்றும் பாகிஸ்தான் ராணுவம் எல்லை பகுதியில் துப்பாக்கி சூடு நடத்திராங்களாமே :
மன்மோகன் சிங்க் :  அதெல்லாம் பொய் செய்திங்க...அப்படியெல்லாம் கிடையாது பாகிஸ்தானியர்கள் நம் கலாச்சார பெருமையை உணர்ந்து அவர்களும் தீபாவளி கொண்டாடுகிறார்கள்


காதல் உணர்வு இல்லாதவர்கள், பட்டணத்தில் வசிக்கும் இந்த கிராமத்து குயிலான திருமதி. சசி அவர்களின் கவிதைகளை படித்தால் உடனடியாக காதல் வசப்பட ஆரம்பித்துவிடுவார்கள். இவரின் மற்ற கவிதைகள் பள்ளிக் கூட புத்தகங்களில் வெளி வர தகுதி வாய்ந்தவைகள். அவரின் எழுத்துக்களை இங்கு பரிசாக எனது தளத்திற்கு வருபவர்களுக்கு தருகிறேன். தென்றலின் கனவு என்ற கவிதை புத்தகம் ஒன்று இவரால் வெளியிடப்பட்டு இருக்கிறது
காதலாகி கசிந்துருகி
கவிதையாக நீ சிரிக்க
கண்ணிமையும் சொக்கிடுதே
கன்னி வெடியும் பொசுங்கிடுதே.

படபடக்கும் காதலைத்தான்
கம்பி மத்தாப்பு சொல்லிடுதே'
கண்மணியே விளங்கலையா ?
கண்ணன் குரல் கேட்கலையா ?

சித்திரமே நீ சிரிக்க
சங்கு சக்கரமும்
உனை சுத்துதடி..

பூச்சரமே நீ நடக்க
புஸ்வானமும் தரை
நோக்குதடி..

மினுமினுக்கும்
உன்னழகில்..
மின்னலாச்சி
ராக்கெட்டும்..

செண்பகமே
சிறுமொட்டே
பார்த்து நீயும்
சிரிப்பதென்ன ?

மனசெல்லாம் மத்தாப்பு
உதட்டினிலே பூஞ்சிரிப்பு
மன்னவனே
உன்னருகே பெண்ணிருக்க
உவகைக்கும் குறையேது ..?

இந்த கவிதை இது வரை எங்கும் வெளிவராதவை. இது இந்த தளத்திற்காக அவர்கள் எழுதி தந்த தீபாவளி பரிசு. மிகவும் நன்றி


என்னடி அதிசயம் இது
வெண்டைக்காய் நடந்திடுமோ ?
வாசலில் கோலமும் வரைந்திடுமோ ?
என்றே கேட்டான்.
பிடுங்கித் தின்ன வெட்கத்தோடே
பிடிகொடுக்காமல் எங்கே என்றேன்.
விரலதனை பிடித்து அவனும்
வில்லங்கமாய் சிரித்து நின்றான்.

குளக்கரைக்கு நானும் போனேன்
குளத்து மீனும் எம்பிகுதித்து
குத்தாட்டம் போடுதென்றான்
புரியாமல் புருவம் உயர்த்த
புது வகை மீனினம் (கண்கள்)-உன்
புது வரவை காண என்றான்.

பூபறிக்க நானும் போனேன்
அடிபாதகத்தி வண்டெல்லாம்
உன் பின்னே வர...
வாடிப்போச்சே பூக்கள் என்றான்..

என்னடி வம்பா போச்சி
வாய் ஜால மன்னனிவன்
வார்த்தையோட மல்லு கட்ட
வழியிருந்தா சொல்லிப்போயேன்.

சசி : என்னங்க நான் லேப்டாப் உபயோகப்படுத்துறது பிடிக்கவில்லை என்றால் சொல்ல வேண்டியதுதானே அதுக்காக லஷ்மி வெடியை அதோடு இணைத்து வெடிக்கவைக்க முயல்கிறீங்க?

வூட்டுகாரர் : இல்லைம்மா நீதானே மதுரைத்தமிழனுக்கு லஷ்மி வெடியை அட்டாச் பண்ணி மெயில் பண்ண சொன்னே?
சசி : ஙே......


இரக்க குணமும் உதவும் மனப்பான்மையும் உள்ளவர் திருமதி.உஷா அன்பரசு. இவரின் எழுத்துகளை தமிழ் வார இதழ்களில் பார்க்கலாம். இவரி எழுத்துக்கள் நெஞ்சை நெகிழ வைக்கும்

உஷா அன்பரசு : எதுக்குங்க நான் செஞ்ச அல்வாவை மதுரைத்தமிழனுக்கு அனுப்பு சொல்லுறீங்க?
வூட்டுகாரர் : நீ தானனேடி அடிக்கடி சொல்லுறே அவன் வாயை தொறந்து ஏதாவது எடக்கு மடக்காக மனைவிகிட்ட சொல்லி பூரிக்கட்டையால அடி வாங்கி வாய்விட்டு அழுகிறான் என்று

உஷா அன்பரசு : அதுக்கு???
வூட்டுகாரர் : நீ பண்ணிய அல்வாவை அவன்சாப்பிட்டா அதுக்கு அப்புறம் அவன் வாயை திறக்கவே முடியாதல்ல....

உஷா அன்பரசு : ஙே......
" டாடி.. அணா.. செப்பு தகடு இதெல்லாம் எப்படி இருக்கும்? ஸ்கூல்ல பழங்கால பொக்கிஷம்- னு அசைன்மென்ட் பண்ணனுமாம் .."

சித்தப்பா பெண்ணின் திருமணத்திற்காக துணிகளை எடுத்து வைத்து கொண்டிருந்த சூர்யா, பிரவீனை கட்டிக்கொண்டு.." ம்ம் .. சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறப்பவே எத்தனை அசைன்மென்ட்..? யோசித்தவன் .. அப்பா ஊருக்கு போறேன் .. அங்க தாத்தா வீட்டுல நான் படிக்கிறப்ப நிறைய கலெக்ட் பண்ணி வைச்சிருக்கேன் . அதெல்லாம் பாட்டி அப்படியே பத்திரமா எடுத்து வைச்சிருகாங்க.. நான் வரும்போது எடுத்துட்டு வர்ரேன்.. சரியா..? கிளம்பினான்.

" சூர்யா .. நீ மட்டும்தான் வந்தியாப்பா .? பிரவீனை பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு ..? கல்யாணம் .. காட்சி.. இந்த சாக்கிலாவது அவனை அழைச்சுட்டு வரலாம் இல்லே...?"

" அம்மா உனக்கு ரேவதி யை பத்தி தெரியாதா.. அவனை கூட விடமாட்டா .. விடு !.. நானா
தேடிகிட்டது.. அதான் நான் அப்பப்ப...வந்து பார்க்கிறேன் இல்லே ...நீ வீணா கவலைபடாதே .."
அப்பா அதை கூட கேட்கவில்லை.. அமைதியாக " வாப்பா " என்றார்.

"எப்ப வந்திங்க ..? நல்லா இருக்கீங்களா ...? காபி ட்ரே யை... நீட்டியவளை பார்த்து சூர்யா ஒரு நிமிஷம் திகைத்து பதில் சொல்லிவிட்டு காபி எடுத்துகொண்டான். மலரா இது ..? என்னமாய் மாறி விட்டிருக்கிறாள் ..? முகத்தில் பள பளப்பு .. கூடியிருந்தது .. தலை முடியை லூசாக விட்டுஇருந்தது.. அவளை அழகு தேவதையாய் காட்டியது. அவளை பார்த்து ஆறு.. வருடமிருக்கும் .." வருபவர்களை ஓடி ஓடி உபசரித்து கொண்டிருந்தாள்.

அப்பாவிற்கு என்னமோ சொந்தம் விட்டு விடக்கூடாது என்று மலரை அவனுக்கு கட்டி வைக்கத்தான் விருப்பம் .... மலர் இவன் வீட்டிலேயே அத்தை.. அத்தை என்று சுத்தி வருவாள் . இவனுக்குத்தான் அவளை கண்டாலே பிடிக்காது ..மாநிறமாய் எண்ணெய் அப்பி கொண்டு தலை வாரி நாகரிகம் தெரியாத அவளை மனதுக்குள் கூட நினைக்க முடியவில்லை .. .. அவனுடன் வேலை பார்க்கும் ரேவதியை காதலித்து ..

avargal unmaigal

அப்பாவிடம் பிடிவாதம் பிடித்து .. சம்மதம் வாங்கி திருமணம் நடந்தது.. அப்பா அந்த கோபத்திலேயே மலருக்கு இவனை விட அதிகம் சம்பாதிக்கும் வரனை பார்த்து அடுத்த மாதத்திலேயே ஜாம் ஜாம் என்று அவளுக்கு திருமணம் செய்தார். நகரத்து வாழ்க்கை அவள் தோற்றமே மாறி இருந்தது..

அண்ணிகள் .. அக்கா.. தங்கைகள் என கும்பலை அரட்டை கச்சேரி நடந்து கொண்டு இருந்தது ..இதில் ரேவதி மட்டும் தான் மிஸ்ஸிங் .. எல்லா விசேஷதிர்க்கும் .. இவன் மட்டும் தனியாய் எதோ இழந்தது போல் இருக்கும் .. காதலிக்கும் போது கண்ணை மறைக்கும் விஷயங்கள் ... திருமணதிற்கு பிறகுதான் விஸ்வரூபம் எடுக்கிறது.. ரேவதியிடம் அழகு உள்ளத்தில் இல்லை.. யாரையும் மதிப்பதில்லை.. ஈகோ பிடித்தவள் .. இவன் வீட்டு சொந்தங்களை ஓரம் கட்டி விட்டாள். ப்ரவீனுக்காக விட்டு கொடுத்து போகிறான் .

" தம்பி படிப்பு முடிச்சுட்டு நல்ல வேலைக்கு போய்ட்டான் .. இந்த வருஷம் கல்யாணம் முடிச்சிடலாம் பெரியப்பா.. நல்ல பொண்ணா பாருங்க.. "

பொண்ணு எப்படி இருக்கணும்..? என்ன எதிர்பாற்கிரிங்க..?

" என்ன பெரிசா எதிர்பார்ப்பு... வேணும்கிறது நம்ம கிட்டேயே இருக்கிறது. பொண்ணு இப்படி இருக்கணும்னு பெரிசா ஒண்ணும் கண்டிஷன் கிடையாது .. இப்பதான் பியுட்டி பார்லர் போய் காசை கொட்டினா ஆளையே மாத்திடறாங்க.. ஆனா தங்கமாட்டம் மனசு தானாதான் வரும் .. பிறவி குணம் இயல்பா அழகா இருக்கணும் .. பொண்ணு நல்ல குணமா இருந்தா போதும்...!"

பந்தியில் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது .. யாரோ யாரிடமோ பேசி கொண்டிருந்தது சூர்யாவின் காதில் விழுந்து மனதை என்னமோ செய்தது.

அம்மா கல்யாண பலகாரங்களை ப்ரவீனுக்கு தரும்படி எடுத்து வைத்தாள். " அப்போ நான் கிளம்பரேன்மா .." என்றவன் சட்டென்று ஞாபகம் வந்தவனாய் உள்ளே சென்று அலமாரியை திறந்து பிரவீன் கேட்ட நாணயங்கள் .. செப்பு தகடுகளை எடுத்து சூட்கேசில் வைத்து கொண்டான் . ஏனோ ஒரு நிமிடம் மலர் மனதுக்குள் வந்து போனாள்.. வாழ்க்கையின் பொக்கிஷமாய் தன்னுடன் பயணிக்க வேண்டியவளை புறக்கணித்ததை நினைத்து வருத்தமாய் இருந்தது.. இப்போது சூர்யாவின் மனசில் அருக்காணியாய் இருந்த மலர் அமராவதியாய் மாறி வலிக்க செய்தாள்...!பாலகணேஷ் இவர் வலையுலக வாத்தியார். மிக நல்ல மனசு கொண்டவர் அதனால்தான் வலையுலக பெண்களிடம் இவர் மிக பாப்புலர்.சிறந்த நகைச்சுவை எழுத்தாளர். பத்திரிக்கை & பதிப்பக துறையில் அனுபவம் மிக்கவர், சரிதாயணம் என்ற மிக நகைச்சுவை புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்

எனது தளத்திற்க்காக அவர் எழுதிதந்த பதிவு இது. அவருக்கு எனது சார்பாகவும் எனது தளவாசகர்களின் சார்பாகவும் மிகவும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்


தீபாவளிப் பண்டிகை ரொம்பக் கிட்டத்துல வந்தாச்சு... இன்னேரம் ‘‘புதுப் புடவைகளும் சுடிதார்களும் பர்ச்சேஸ் பண்ணப் போலாம்"னு மனைவி ஒரு பக்கம் இழுக்க, ‘‘அப்பா... புதுசா வந்துருக்கற பட்டாசு டைப் எல்லாம் வாங்கி வெடிச்சுரணும்" என்று மகன்/மகள் ஒரு புறம் இழுக்க, சராசரி குடும்பத் தலைவர்கள் விழிபிதுங்கி (தீபா)வலியுடன் இருக்கும் நேரம். தீபாவளிப் பண்டிகையைப் பத்தின சில தகவல்களை இப்ப நான் சொல்லப் போறேன்.
பாலகணேஷ் : டேய் ஸ்கூல்பையா ராக்கெட் வெடி வெடிக்கும் போது அதற்கு கிங்க்பிஷர் சரக்கு பாட்டிலை உபயோகிக்காதே..
ஸ்கூல்பையன் : ஏன் வாத்தியாரே?
பாலகணேஷ் : கிங்க்பிஷர் மாதிரி அது பறக்காது.....
ஸ்கூல்பையன் : ஙே......

தீபாவளியை இந்தியா முழுக்க கோலாகலமாக் கொண்டாடறாங்க. தீபம்ங்கறது ஒளி தருகிற ஒன்று. ஆவளி-ன்னா வரிசைன்னு அர்த்தம். தீபங்களை வரிசையா ஏற்றி இருளை நீக்கும் பண்டிகைதான் தீபாவளி. அவங்கவங்க மனசுல இருக்கற இருட்டை எரிச்சு வெளிச்சமாக்கிக்கணும்கறது இதனோட உள்ளர்த்தம். மனசிலாயோ! நரகாசுரனை கிருஷ்ணர் காலி பண்ணினதால தீபாவளின்னும், சக்தியோட கேதார கௌரி விரதம் முடிஞ்சு சிவனோட அர்த்தநாரீஸ்வரரான தினம்னும் (ஸ்கந்தபுராணம்), தங்கக் கோயில் கட்டுமானப் பணி துவங்கிய நாள் இதுங்கறதால இதான் தீபாவளின்னு சீக்கியர்களும், மகாவீரர் மகாநிர்வாணம் அடைஞ்ச தினமான இதுவே தீபாவளின்னு சமணர்களும் வேறவேற விதமாச் சொன்னாலும் எல்லாரும் கொண்டாடறாங்க. ஆக... இந்தியா முழுக்க ஜாதி, மதம்னு பேதமில்லாம கொண்டாடப்படற ஒரு நாள் இது.

அதுல பாருங்க... சின்ன வயசுல எப்படா புது டிரஸ்ஸையும் பட்டாசுகளையும் கொடுப்பாங்கற பரபரப்புல... ராவெல்லாம் தூக்கமே வராது. இப்பவோ... கோழி கூவுறதுக்கு முன்னாலயே நடுராத்திரியில (நமக்கெல்லாம் காலைல 4 மணியே நடுராத்திரி மாதிரிதானே... ஹி... ஹி...!) எழுப்பி விட்டுடறாளேன்னு இல்லத்தரசி மேல (வெளிய காட்ட முடியாத) எரிச்சல்! தீபாவளி அன்னிக்கு மட்டும் உலகத்திலுள்ள எல்லாத் தண்ணீரிலும் கங்கை வியாபித்திருக்கறதா ஒரு ஐதீகமாம்.

avargal unmaigal

அதனால எல்லாரும் ‘கங்கா ஸ்நானம் ஆசசா?'ன்னு விசாரிச்சுக்கறதை வழக்கமா வெச்சிருக்காங்க. எதிர் வீட்டு கங்காவைப் பாத்து நான் ஒரு தடவை இப்படிக் கேக்கப் போய்.... ஓ, மேலே கேக்காதீங்க!

தீபாவளி நாள்ல சேட்டுங்கல்லாம் மகாலக்ஷ்மி பூஜை செய்து, புதுக் கணக்கு எழுதவும், புது தொழில் தொடங்கவும் உகந்த நாளா கொண்டாடறாங்க. இமாசலப் பிரதேசத்துல பலவித மண்பாணடங்களை வர்ணம் பூசி அழகுபடுத்தி பிரார்த்தனை பண்ணி அதை மத்தவங்களுக்குப் பரிசாத் தந்து (எவ்ளவு நல்ல பழக்கம்!) கொண்டாடறாங்க. ராஜஸ்தான்ல ஒட்டகம், யானைல்லாம் வெச்சு அணிவகுப்பு நடத்தி, குன்றுகள்ல பெரிய தீபம் ஏத்தி, கலர்கலரா டிரஸ் பண்ணி குதூகலமா கொண்டாடறாங்க. ஒரிஸ்ஸாவுல முன்னோர்களுக்கு படையல் வெச்சு, இந்த தினத்தைக் கொண்டாடறாங்க. பீஹார்ல அரிசி மாவுல லக்ஷ்மி படம் வரைஞ்சு (சினிமா நடிகை இல்லீங்க... கடவுள்!) பட்டாசு வெடிச்சு, துளசிச் செடிக்கு முன்னால படையல் போட்டு தீபாவளியை கொண்டாடி மகிழறாங்க. நாமல்லாம்... காலைல பலகாரத்தை சாம்பிளா டேஸ்ட் பாத்து கொறிச்சுட்டு, தலயோட ரம்பம் படம் பாக்க தலதெறிக்க ஓடி தீபாவளியக் கொண்டாடப் போறோம்... ஹி... ஹி... ஹி...!

தீப்வாளிப் பண்டிகையப் பத்தி மகாத்மா காந்தி சொன்ன கீழ்க்கண்ட வரிகளை அப்படியே உங்களுக்கு சப்மிட் பண்ணிட்டு நான் ஜுட் விட்டுக்கறேன். ஸீ.யு...!

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது குழந்தைகளுக்குக் குதூகலத்தை ஏற்படுத்துகிறது என்பது எனக்கு ஒன்றும் தெரியாத விஷயமல்ல. ஆனால் இந்தப் பழக்கத்தையெல்லாம் முதலில் அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பது நம்மைப் போன்ற பெரியவர்கள்தானே? ஆப்பிரிக்காவில் உள்ள சிறுவர்கள் பட்டாசு வெடிக்க விரும்புவதாக நான் கேள்விப்பட்டதில்லை.

கடைகளில் விற்கப்படும் தரக்குறை வான இனிப்புகளை விட ஆரோக் கியமான விளையாட்டுகளும், உபயோகமான ஓர் இடத்துக்கு பிக்னிக் செல்வதும் எவ்வளவோ நன்மை விளைவிக்கும். ஏழைச் சிறுவர்களாக இருந்தாலும் சரி, பணக்கார வீட்டு சிறுவர்களாக இருந்தாலும் சரி, இதுபோன்ற விடுமுறை நாட்களில் வீடுகளை வெள்ளையடித்துச் சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுக்க வேண்டும். உழைப்பின் கெளரவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தீபாவளியன்று கரியாக்கப்படும் பணத்தில் ஒரு பங்கையாவது மிச்சப்படுத்தி காதி இயக்கத்துக்குக் கொடுங்கள். அதில் விருப்பம் இல்லாவிட்டால் வறுமையில் வாடும் ஏழைகளுக்குச் சேவை செய்யக் கூடிய ஏதாவது ஓர் இயக்கத்துக்கு அந்தப் பணத்தைக் கொடுத்து உதவுங்கள்.

-‘யங் இந்தியா' இதழில் காந்திஜிசீனு வலையுலகத்தின் இளம் கதாநாயகன் & செல்லக் குழந்தை. ஆனால் இவர் எழுத்துக்கள் அனுபவம் மிகுந்த எழுத்தாளர்களுக்கு இணையாக இருக்கும். எதிர்காலம் மிக பிரகாசமாக இருக்கும் என்பதில் அதிசயம் ஏதுமில்லை. சீனுக்கு கல்யாணம் ஆகும் வரை இவர் பாலகணேஷின் சிஷ்யனாக இருப்பார்அடுக்களையில் தொங்கும் குண்டு பல்பு வெளிச்சத்தில் விடியும் அந்த நாளுக்கும் சூரிய வெளிச்சத்தில் விடியும் மற்ற நாட்களுக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.


சீனு ; ( கனவில் மிதந்து கொண்டே ) மதுரைத்தமிழா நான் என் காதலிக்கு சந்திரனை பிடித்து தர ஆசையா இருக்கு...
மதுரைத்தமிழன் : ( சரக்கு அடித்து கொண்டே) அது ரொம்ப சிம்பிள்

சீனு ; எப்படி?

மதுரைத்தமிழன் : நான் தீபாவளிக்கு வாங்கின வெடியில ராக்கெட் வெடி ஒன்று மிச்சமாய் இருக்கு அது மேலே நீ உட்காரு அதன் பின் அதை நான் பத்த வைக்கிறேன். அதன் பின் நீ சந்திர மண்டலத்துகே போய்விடலாம்

சீனு :  ஙே....

avargal unmaigal

தீபாவளி அன்று காலையில் மெல்ல முழிப்பு வரும்பொழுது சர்வமும் இருளாக இருக்கும், மெட்ராஸில் இருந்து வந்திருக்கும் அப்பா. அடுக்களையில் எரிந்து கொண்டிருக்கும் குண்டுபல்பின் அடியில் உட்கார்ந்து அம்மிக்கல்லை உருட்டிக் கொண்டிருக்கும் பாட்டி. அதிகாலையிலேயே குளித்து முடித்து தலை காயவைக்கக் கூட நேரமில்லாமல் சுழன்று கொண்டிருக்கும் அம்மா. இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு விறகடுப்பின் முன் வெந்து கொண்டிருக்கும் தாத்தா. இவர்கள் அனைவரும் அதிகாலையிலேயே இவ்வளவு மும்மரமாக செய்து கொண்டிருப்பது நிச்சயம் ப்ராஜெக்ட் பஜ்ஜியாகத் தான் இருக்கும்.

பஜ்ஜி சொஜ்ஜிக்களின் மணம் அந்த இடத்தையே நிறைத்திருந்தாலும் எங்கிருந்தோ கேட்கும் அந்த ஒற்றை யானை வெடிச்சத்தம் போதும் என் கைகால்களை பரபரக்கச் செய்யவும் அன்றைய தினத்தை சுறுசுறுப்பாக்கவும். எழுந்த வேகத்தில் அரங்கு வீட்டிற்குள் நுழைந்து எனக்கென பங்கு பிரிக்கப்பட்ட வெடிகளில் இருந்து ஒன்றை எடுத்து வெடியை வெடிக்கும் போது கிடைக்கும் சந்தோசமானது எல்லையில் பணிபுரியும் சதீஷ் அண்ணன் தனது எதிரியை வீழ்த்தும் போது அடையக் கூடிய சந்தோசத்திற்கு ஈடானதாகத் தான் இருக்கும்.

தீபாவளிக்கு முந்தைய தினத்தில் இருந்து தீபாவளி தொடங்கும் வரையிலான அந்த மனநிலையை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. சிறுவயது தொடங்கி நம்மை அதிகம் சந்தோசத்தில் ஆழ்த்திய, அதிகம் எதிர்பார்க்க வைத்த, அதிகம் உற்சாகம் கொள்ளச் செய்த ஒரு பண்டிகை உண்டென்றால் அது நிச்சயம் தீபாவளியாகத் தான் இருக்கும்.

நினைவு தெரிந்து முதன்முதலில் வெடிக்கப் பழகியது என்னவோ ரோல் கேப் தான், ரோல் நிரப்பிய அந்த துப்பாக்கியை கையில் எடுத்தாலே அடுத்த ஒரு வாரத்திற்கு "தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்" தான். கண்ணில் பட்ட தீவிரவாதிகளை எல்லாம் ஆசை தீர சுட்டுத் தள்ளலாம்.

ரோல் வெடி தீர்ந்து போகும் நேரம் பொட்டு வெடி, இருப்பதிலேயே கடியைக் கொடுக்கக் கூடியது என்றால் அது இந்த பொட்டு வெடிதான், இதனை வெடிக்கவைக்க ஒரு கல் வேண்டும், மேலும் இந்த வெடியை மண்ணில் போட்டு லொட்டு லொட்டு என்று தட்டினால் வெடிக்கவே வெடிக்காது, அதற்கு ஏதுவான ஒரு சிமின்ட் தரையை தேட வேண்டும். சிமிண்ட் தரையே கிடைத்தாலும் ஒரே லொட்டில் வெடிக்க வைக்கும் திறமை நமக்குக் கிடையாது என்பதால் பக்கத்து வீட்டு கிழவி கொட்டப்பாக்கை தட்டுவது போல் அதனுடன் சேர்ந்து போராட வேண்டும், அதே நேரம் பத்து பொட்டு வெடியை போட்டுத் தள்ளுவதற்குள் சிமெண்ட் தரையில் பாதி பெயர்ந்திருக்கும். சிமிண்ட் தரைக்கு சொந்தக்கார கிழவியும் நம்மைக் கண்டதும் சுட தயாராக காத்திருப்பாள்.

அடுத்தது யானை வெடி, சிகப்பு கலரில் கொஞ்சம் நோஞ்சான் போல் இருக்கும் அந்த வெடிக்கு எவன் யானை வெடி என்று பெயர் வைத்தான் என்று தெரியவில்லை. நெல்லை தவிர்த்து மற்ற ஊர்களில் அந்த வெடியை பிஜிலி வெடி என்பார்கள், பெயரா முக்கியம்? வெடி தான் முக்கியம்.

டவுசர் போட்ட பால்ய காலங்களில் நம்மை ஹீரோவாக்கும் ஒரே வெடி இந்த யானை வெடி தான். வெடியை கையில் வைத்து வெடிக்கப் பழகும் அத்தனை லிட்டில் சூப்பர் ஸ்டாருக்கும் யனையார் தான் ஆபத்பாந்தவர். வெள்ளை நிறத்தில் நீண்டிருக்கும் யானையாரின் காதைத் திருகி அதன் வாலில் கங்கை வைத்த பின், பொறிபறக்க, வெடிக்க தொடங்கும் அந்த நொடியில் வானை நோக்கி வீசி எரிய வேண்டும், ஒரு வேலை நாம் தூக்கி எறிந்த வெடி வானில் வெடிக்காமல் தரையில் விழுந்து வெடித்தால் நமக்கு இன்னும் பயிற்சி சரியில்லை என்று அர்த்தம், ஒரு வேளை அந்த வெடி வானத்திலேயே வெடித்து, அந்நேரம் அக்காட்சியை நாம் நோக்கும் பிகர் நோக்கினால் கன்பார்ம் லவ்வு என்று அர்த்தம், ஒருவேளை மேலே தூக்கி போட்ட வெடி பக்கத்து வீட்டு கிழவி மேல் விழுந்துத் தொலைத்தால் கட்டம் சரியில்லை என்று அர்த்தம்.

சமயங்களில் யானை வெடியை ஆல் இன் ஆல் அழகுராஜா போலவும் பயன்படுத்தாலம், யானையாரின் வயிற்றில் ஆபரேசன் செய்து, திரியைப் பற்ற வைத்தால் சங்குசக்கரம், ஆபரேசன் செய்யப்பட்ட அதே வெடியை முக்கோண வடிவில் தரையில் வைத்தால் புஸ்வானம், பலபிஜிலியை குஜிலியாக்கி பற்றவைத்தால் சரவெடி. இதுவே தத்துவார்த்தமான பதிவு என்றால் சரவெடியை சுறுசுறுப்புடன் ஒப்பிடலாம், பாருங்கள் சரவெடி எவ்வளவு சுறுசுறுப்பானது என்று,வாழ்கையை சரவெடியைப் பார்த்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பீட்டர் விடலாம்.

அடுத்தது லஷ்மி வெடி, என்ன கொஞ்சம் முன்கோபி, பற்றவைத்த வேகத்தில் கோபம் தலைக்கேறிவிடும், கைநடுக்கம் தொடைநடுக்கம் இருப்பவர்கள் அனைவரும் கொஞ்சம் அந்தாண்ட நின்று வேடிக்கைப் பார்க்க வேண்டிய வெடி. இந்த வெடி வெடிப்பதில் இருக்கும் ஒரு சுவாரசியம் மற்ற வெடிகளில் கொஞ்சம் குறைவு தான். லக்ஷ்மியாரின் வாகனம் குருவி வெடி, யானைக்கு சீனியர், லக்ஷ்மிக்கு ஜூனியர், கொஞ்சம் நடுத்தரம். நடுத்தரம் என்றாலே பிரச்சனை தானே.

வெடி வகையறாக்களில் ட்விஸ்ட் கொடுப்பவரே இந்த டபுள் ஷாட் தான், எப்போது கவிழ்ந்து எவன் காலில் சென்று வெடிக்குமோ என்று கடைசி நிமிடம் வரை நம்மை கூடிய அத்தனை தகுதிகளையும் மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்தவர் இவர் ஒருவர் தான். அமெரிக்க மாப்பிள்ளைகள் போல் சில வெடிகள் உண்டு, பட்டர்பிளை வெடி, பறக்கும் பாம்பு வெடி, ரயில் வெடி, விசில் வெடி என்று ஆனால் பாவம் இவர்கள் எல்லாரும் கடைசி வரை அமெரிக்க மாப்பிள்ளைகளாகவே இருக்க வேண்டியது தான்.

இவர்களைத் தொடர்ந்து வருபவர் தான் நம் ஹீரோ. மிஸ்டர் அணுகுண்டு அடிகளார். இவரை வெடிக்க சரியான நேரம் எது என்று கேட்டால் அது மதியம் மூன்று மணி தான் என்பேன், எல்லாரும் நிம்மதியாக தூங்கத் தொடங்கி இருக்கும் அந்த சொப்பன நேரத்தில் தான் நாம் விஸ்வரூபம் எடுக்க வேண்டும். அத்தனை கதவுகளும் கண நேரத்தில் திறக்கப்பட்டு "ஏம்ல உசுர வாங்குறீங்க, நிம்மதியா தூங்க விடுங்கல" என்று அவர்கள் கதற வேண்டும் அவ்வளவு பவர்புல் பாம் தான் நம் அணுகுண்டு அடிகளார். இவரை வெடிக்க வைப்பது என்பது பொக்ரானில் அணுகுண்டு போடுவது போல சவாலான ஒன்று, தெருவில் வரும் சைக்கிள், பைக், தொடங்கி அந்த இடத்தைக் கிராஸ் செய்யும் பிகர் மொத்தக் கொண்டு நிறுத்தி வைத்து விடவேண்டும். இந்நேரம் நம் சகாக்கள் மறித்து நிற்பார்கள், ஒருவரையும் எல்லைக்குள் அனுமதித்து விடக் கூடாது.


சிலருக்கு பொறுமை இருக்காது, "அண்ணே வெடிச்சிரும், நீங்க போம்போது வெடிச்சிருச்சுனா எங்கள சொல்லக் கூடாது" என்று மிரட்ட வேண்டும், ஒதுங்கி நிற்கும் கூட்டத்தில் பிகர் ஏதும் நின்றால் "மாப்ள பாத்துடா, அணுகுண்டு டா வெடிச்சிரப் போகுதுடா" என்று உசுபெத்த வேண்டும். ஆனாலும் பல நேரங்களில் இந்த அணுகுண்டானது மெகாபட்ஜெட் ஹீரோ என்றது எப்போது சொதப்பும் என்றே தெரியாது. ஒட்டுமொத்த கூட்டத்தையும் நிறுத்தி வைத்திருப்போம், சிலபல பிகர்கள் குண்டையே பயத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும், இந்நேரம் நம் பவர்புல் ஸ்டார் பவர் ஸ்டாராகி புஸ் ஆகியிருப்பார். அணுகுண்டு வைத்தவனுக்கு மட்டும் தான் தெரியும் அது வெடிக்கவில்லை என்றால் அவன் மானம் கப்பலேறும் என்று கற்றது தமிழ் ராம் போல் கவிதை எழுத வேண்டியது தான்.

ராத்திரி நேர டப்பாசுகள், நாம் வாங்கி வந்த வரத்தின் அடிப்படையில் நமக்கு வாய்ப்பது என்னவோ ஒரு புஸ்வானம் டப்பா, ஒரு சங்கு சக்கரம் டப்பா, ஒரு சூரிய காந்தி அட்டை இவ்வளவு தான், இதை எல்லாம் போட்டு தீர்த்துவிட்டு, எவனாவது வானவேடிக்கை காட்டுவான் அதைப்பார்த்துக் கொண்டே கம்யுனிசம் பேசவேண்டியது தான்.

வெடி அத்தனையும் தீர்ந்து போனபின் சோம்பி உட்கார்ந்து விடக்கூடாது, பின் எதற்காக புது டிரெஸ் எடுத்துள்ளோம், நாம் நோக்கும் பிகர்கள் இருக்கும் தெருக்களில் எல்லாம் வலம் வந்து கொண்டே இருபதற்காகத்தானே, நமது வீதிவுலாவை உடனடியாகத் தொடங்கிவிட வேண்டும். அவள் பார்க்கிராளா இல்லையா என்பது வேறுவிசயம், அவளைப் பார்க்கப் போகும் சாக்கில் வேறு எவளாவது நம்மைப் பார்த்து நாமும் அவளைப் பார்த்து, என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் பாஸ்.

வெடி புத்தாடை பலகாரம் விடுமுறை மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என்று மிக உற்சாகமாகக் கழியும் அந்த ஒருநாள் எப்போதுமே கொஞ்சம் வழக்கத்திற்கு மாறான நாளாகத் தான் இருக்கும்.


சென்னை வந்தபின்பு தீபாவளி என்பது நாளை மற்றொரு விடுமுறை நாளே என்பது போலாகிவிட்டது. உறவினர்கள் இல்லை, உற்சாகம் இல்லை, வெடி இல்லை, முக்கியமாக எனது நண்பர்கள் இல்லை. ஐந்து வருடங்களுக்குப் பின் தென்காசி செல்கிறேன் தீபாவளி கொண்டாடுவதற்காக... இப்போது என்னுள் இருக்கும் இந்த தீபாவளி மனநிலையைக் கூட எப்படி விவரிப்பது என்று தெரியாத ஒருவித தீபாவளி மனநிலையில் தான் நானும் உள்ளேன் காரணம் தென்காசி செல்கிறேன் தீபாவளி கொண்டாடுவதற்காக.ஜோதிஜி. இவர் திருப்பூரில் உள்ள ஏற்றுமதி துறையில் மிக உயர்ந்த பதவியை வகிப்பவர். இவரது பார்வை மிக அழமானவை விஷயங்களை மிக அழகாகவும் தெளிவாகவும் எடுத்து வைப்பதில் வல்லவர். இவர் முழுநேரத்தையும் எழுத்துக்காக செலவழித்தால் இப்போது உள்ள தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் பின்னுக்கு தள்ளப்பட்டு முண்ணனி எழுத்தாளராக ஆகிவிடுவார். இவர் உபயோகப்படுத்தும் லேப்டாப்புக்கு வாய் இருந்தால் அழுதுவிடும் காரணம் இவர் சிந்திக்கும் வேகத்திற்கு இணையாகவும் இவரது கைவிரல்களின் வேகத்திற்கேற்றவாறு அதுவும் செயல்பட வேண்டுமல்லவா?

இவர் எழுதி வெளியிட்ட டாலர் நகரம் மிக பிரபலமாகி இருக்கிறது
மதுரைத்தமிழன் :தமிழ் பற்று கொண்ட ஜோதிஜி  வீட்டுல வெடி எல்லாம் எப்படி வெடிக்கும் தெரியுமா?

பதிவர் :தெரியலையே?

மதுரைத்தமிழன் . டமில் டமில் (தமிழ் தமிழ் ) என்றுதான்

பதிவர் : ஙே....
பண்டிகைகள் ஒவ்வொன்றுக்கும் ஓராயிரம் அர்த்தங்கள். எந்த மதமாகயிருந்தாலும் கொண்டாடப்படும் விசேடங்கள் பல உறவுச் சங்கிலிகளை இணைத்து வைத்துக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது இது போன்ற நாட்கள் நுகர்வோர் கலாச்சாரத்தின் விளைவாக உருவாகும் விலைவாசிக்கு ஒரு காரணமாக இருக்கிறது. எப்போதும் மாவட்டத் தலைநகரங்களில் எந்த பண்டிகைகளுக்கும் உண்மையான முக்கியத்துவம் கிடைப்பதில்லை. தலையா? இல்லை கடல் அலையா? என்று சொல்லும் தி நகர் சாலைகள் முதல் சராசரி நகர்புறங்கள் வரைக்கும் மக்களுக்கு தேவையோ தேவையில்லையோ உற்சாகமாய் தங்கள் வேட்டையை தொடங்குவது போலவே மாறிவிடுகிறார்கள்.

தினந்தோறும் நெரிசலுடன் வாழும் நகர்புற மக்களைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு பண்டிகை தினமென்பது மற்றொருமொரு விடுமுறை தினம். ஆனால் நான் வாழ்ந்த கிராமத்து பண்டிகை காலங்களை இப்போது நினைத்துப் பார்க்கும் போது இயல்பான மனித பழக்கவழக்கங்கள் காலமாற்றத்தில் மாறிப் போயிருக்கின்றது என்பதை உணரமுடிகின்றது.

விவசாய வேலைகளை அடிப்படையாகக் கொண்ட கிராமத்து வாழ்க்கையும், அந்த கிராம மக்களின் விளைச்சல் பொருட்களுக்கு ஆதார சந்தையாய் விளங்கும் அருகே உள்ள சிறிய நகர்ப்பகுதிகளுக்கும் இந்த பண்டிகைகள் மிக முக்கியமானது. கிராமத்து தமிழர்களின் வாழ்க்கையில் பொங்கல் பண்டிக்கைக்கு உள்ள முக்கியத்துவம் போல தீபாவளிக்கும் முக்கியத்துவம் உண்டு.
.

சேமித்த பணத்தை செலவழிக்க வைத்தது. உறவுகளை தேடிப்போக வைத்தது. உணர்வுகளை பறிமாற வாய்ப்புகளை உருவாக்கியது. வாக்குவாதம், விவாதம், முட்டல், மோதல் என்ற ஆயிரம் பிரச்சனைகள் உறவுகளுக்குள் இருந்தாலும் எல்லாநிலையிலும் விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய அவஸ்யத்தை மறைமுகமாக உணர்த்த வைப்பதில் இந்த பண்டிகைகள் முக்கிய காரணமாக இருந்தது.

நான் வாழ்ந்த கிராமத்து பள்ளியில் விரல் விட்டு எண்ணக்கூடிய முஸ்லீம் நண்பர்கள் இருந்தார்கள். கிறிஸ்துவம் என்று பார்த்தால் பணிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஒற்றை இலக்கத்தில் இருந்தார்கள். கல்லூரிக்கு வந்த போது தான் இந்த மத மாச்சரியங்களின் வித்யாசங்களே தெரிய ஆரம்பித்தது. ஊருக்குள் இருந்த சின்னபள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் என்று இரண்டு தொழுகைக்கான இடங்களும் சுற்றிலும் உள்ள இஸ்லாமிய மக்களும் இயல்பாக வாழ்ந்த காலம்

இன்று அத்தனையும் மாறிவிட்டது. ஊருக்குள் இருந்த சில கிறிஸ்துவ குடும்பங்களும் பணி மாறுதல் காரணமாக வந்த அரசாங்க ஊழியர்களாக இருந்தனர். ஒவ்வொரு ஞாயிறு அன்று பக்கத்தில உள்ள காரைக்குடிக்கு தான் சென்று கொண்டுருந்தனர். மற்றபடி பழக்கவழக்கங்கள், பார்வைகளில் உள்ள வித்யாசங்கள் எதையும் நான் பார்த்தது இல்லை.

என்னுடைய பள்ளி நண்பர்கள் அணைவருக்கும் ஒவ்வொரு பண்டிகைக்கும் உள்ள அர்த்தங்கள் தெரியாமல் எப்போதும் போல கூடுதல் விடுமுறை தினம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாய் இருந்தது.


வீட்டில் பண்டிக்கைக்கு தேவைப்படும் பலகார வகைகளின் தயாரிப்புகள் மும்முரமாய் நடந்து கொண்டுருக்கும். ஒவ்வொரு தீபாவளிக்கு மூன்று நாளைக்கு முன்பே முக்கிய எண்ணெய் பலகாரங்கள் தவிர்த்து அத்தனையும் ஒவ்வொரு தூக்கு வாளியில் பத்திரப்படுத்தப்பட்டு இருக்கும். தொட அனுமதி கிடைக்காது. "சாமிக்கு படைத்த பிறகே சாப்பிடவேண்டும்" என்ற வாக்கியத்தை கேட்டு விட்டு குறுக்கு வழி யோசித்து சமயம் பார்த்து காத்திருப்பது உண்டு. குறிப்பிட்ட அறையில் ஆட்கள் போகாத நேரம் பார்த்து டவுசர் பைக்குள் அடைத்துக் கொண்டு சிட்டாக பறந்து விடுவதுண்டு. யாரும் பார்க்காத இடத்தை தேர்ந்தெடுத்து உட்கார்ந்து தின்று முடிக்கும் போது எதையோ வென்ற திருப்தியாய் இருக்கும்.,

மொத்தமாக துவைக்க போட்டுருக்கும் துணிகளில் எண்ணெய் வாடை பார்த்து குதறிப்போட்ட எலிகளை வைத்தே நம் திருட்டுத் தனம் வெளியே வரும். தீபாவளி நாளில் காலை ஐந்து மணிக்கு அப்பா போட்ட சப்தத்தில் அலறியடித்துக் கொண்டு வரிசையாக நிற்க எண்ணெய் அபிஷேகம் நடந்து கோவணத்துடன் குளித்த வெந்நீர் குளியல் கண்களில் உள்ள பாதி தூக்கத்தை போக்கியிருக்கும். ஆனால் வருடத்திற்கு ஒரு முறை என்றாலும் சாமி படத்தின் முன் படையலுடன் வைக்கப்பட்ட புதிய பள்ளிச்சீருடைகளை அணிந்த பிறகு தான் அன்றைய தினத்தின் உற்சாகம் தொடங்கும்.

குடும்பத்தினரை பொறுத்தவரையில் காலையில் சாமி கும்பிட்டு காலைச் சாப்பாடு முடிந்தவுடன் பாதி தீபாவளி முடிந்து விடும். திருடித் தின்ற அத்தனை பலகாரங்களும் இலையில் இருந்தாலும் வெளியே ஒலித்துக் கொண்டுருக்கும் விடாத வெடிச்சத்தங்கள் இருப்பு கொள்ளாமல் தவிக்க வைக்கும். வாங்கி வைத்துள்ள வெடிக்கட்டு இரவு தான் பிரித்துக் கொடுப்பார்கள். புஸ்வாணம், கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், பாம்பு மாத்திரை என்று ஆபத்தில்லாத மொத்த வெடிகளும் அப்போது தான் பார்வைக்கு வரும். அன்றைய தினத்தின் பொழுது மாறி அடுத்த நாள் கறிச்சாப்பாடு முடிந்ததும் தீபாவளியும் காணாமல் போய்விடும். எப்போதும் போல பள்ளிச்சீருடை கழட்டப்பட்டு பத்திரப்படுத்தப்படும்.

நம்முடைய விருப்பங்கள் எதுகுறித்தும் தெரிந்து கொள்ளாமலேயே எத்தனையோ பண்டிகைகள் கடந்து போய்விட்டது. ஒவ்வொரு விசேடத்தின் போதும் வீட்டுக்கு வந்து போயக் கொண்டுருக்கும் ஒவ்வொருவருக்கும் படித்துக் கொண்டுருக்கும் கல்வியைப் பற்றி ஒப்பிக்க வேண்டிய சூழ்நிலை பலவற்றையும் உணர்த்திக் காட்டியது. ஆனால் இன்று அப்பாவாய் வாழும் போது வருடத்திற்கு இரண்டு முறை இந்த தீபாவளி வரக்கூடாதா? என்று கேட்ட குழந்தைகளின் கேள்விகள் தான் யோசிக்க வைத்துக் கொண்டுருக்கிறது.


வீட்டில் குழந்தைகள் மூவருக்கும் மூன்று பாதைகள். . ஒருவர் என்னைப் போல ஆடைகளில் பெரிதான ஆர்வம் இல்லாதவர். ஆனால் மற்ற இருவரும் ஆள் உயர கண்ணாடி முன்னால் நின்று கொண்டு தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆர்வத்தை ஒளிந்து நின்று பார்க்கும் போது சிரிப்பாய் வருகின்றது. அதிலும் கடைக்குட்டி எல்லாவிசயத்திலும் கரை தேர்ந்தவர். கட்டி அணைத்து ஒரு முத்தம் கொடுத்து தன்னுடைய விண்ணப்பத்தை எடுத்து வைக்கும் போதே அது உறுதிப்படுத்தப்பட்டதாகவே மாறிவிடும். இவரிடமிருந்து மீள முடியவில்லை அல்லது இயல்பாகவே ஏமாந்து விடுவது போல் நடித்து விடுகின்றேன்.


ஆடைகள் எடுக்க துணிக்கடைக்குள் நுழைந்து நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டேயிருந்த போது தனக்குத் தேவையான நாகரிக உடைகளை கொண்டு வந்து காட்டும் புத்திசாலித்தனத்தை என்ன சொல்வது? மானத்திற்கான உடைகள் இன்று மனதுக்கு பிடித்து உடைகள் என்று மாறிவிட்டது. குழந்தைகளின் ஒவ்வொரு ஆசைகளுக்குப் பின்னாலும் ஒவ்வொரு ஊடக விளம்பரத்தின் தாக்கம் அதிகமாகவே இருப்பதை உணர முடிகின்றது.


avargal unmaigal

இன்றைய தொலைக்காட்சி இல்லாத கிராமத்து மக்களின் வாழ்க்கையில் பேசிப் பழக நிறைய நேரம் இருந்தது. ஆசைகாட்டும் ஊடக விளம்பர மோகம் இல்லை. எவருக்கும் தகுதிக்கு மீறிய ஆசைகள் இல்லாத காரணத்தால் தன்னுடைய வருமானத்தை உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கையின் அடிப்படையே இன்று மாறியுள்ளது. காலமாற்றமும், விஞ்ஞான வளர்ச்சிகளும் விசேடங்களை தந்துள்ளதைப் போலவே பல விபரீதங்களையும் தந்துள்ளது.

வருமானம் இல்லாத போதும் கூட வட்டிக்கு வாங்கி செலவழிக்கும் ஆசைகள் இல்லாமல் ஒவ்வொரு மனிதர்களும் இயல்பான பழக்கத்தில் தனது தகுதியை உணர்ந்து வாழ்ந்து கொண்டுருந்த சூழ்நிலையும் மாறிவிட்டது.

கடன் வாங்கியாவது தங்களது கௌரவத்தை நிலைநாட்டும் பண்டிகைகளின் முழுமையான அர்த்தமும் இன்று வேறு விதமாக தெரிகின்றது.

எண்ணெய் பார்க்காத தலைகளும், காலை குளியல் மறந்து, உணவுகளை தவிர்த்து ஒவ்வொரு மனிதனும் எந்திரமாகவே மாறிப் போன உலகில் தற்போதைய பண்டிகைகள் என்பது நுகர்வோர் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக தெரிகின்றது.


நமக்கு எது தேவையானது என்பதைவிட " மற்றவர்களின் பார்வையில் நாம் எப்படித் தெரிகின்றோம் " என்பதாக ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையும் மாறியுள்ளது. தற்போதைய பண்டிகைகள் பணம் இருப்பவர்களுக்கு ஓய்வு நாள். இல்லாதவர்களுக்கு ஆசைகளை வளர்க்கும் நாள்.

நண்பர்கள் அணைவருக்கும் தீப ஓளி திருநாள் வாழ்த்துகள்.ராஜி. சமுக வலைத்தளங்களில் நேரம் செலவிடும் பெண் கெட்டுப் போவார்கள் என்ற கூற்று பொய் என்று நிருபித்து காண்பித்த மணமான பெண்மணி இவர். இவரை வலையுலகத்தின் பெண் சூப்பர் ஸ்டார் என்று கூட கூறலாம். சமீபத்தில் சென்னையில் நடந்த பதிவாளர் திருவிழாவில் இவர் மேடை ஏறியதும் அரங்கமே அதிர்ந்ததாம்..(அவ்வளவு வெயிட்னா பெண்ணா என்று எல்லாம் கேட்கப்படாது) விசில் சத்தம் காதை கிழித்ததாம் ( அவர் இனிமேல் எழுதக் கூடாது என்பதற்க்காகவா என்று எல்லாம் கேட்கப்படாதுங்க ) இவர் தனது அனுபவங்களை மிக அழகாக எழுதி வெளியிட்டு வருகிறார்பிள்ளையார் பண்டிகை என்னிக்குன்னு பார்க்க காலண்டரை அம்மா கேட்கும்போதே.., தீபாவளி என்னிக்குன்னு பார்த்துடுவேன். அன்னியிலிருந்து கவுண்டவுன் ஸ்டார்ட் ஆகிடும். இன்னும் 100 நாள் இருக்கு, இன்னிலிருந்து 45வது நாள் தீபாவளி ன்னு கணக்கு பார்ப்பேன். தோழிக்கிட்டலாம், இந்த கலர் டிரெஸ் எடுப்பேன், இவ்வளவுக்கு பட்டாசு வாங்குவேன்னு போட்டி வச்சுக்குவோம். எல்லாரும் வெவ்வேறு தெருவுல இருக்கோமே எப்படி யார் அதிக பட்டாசை கொளுத்துனதுன்னு தெரிஞ்சுக்குறதுன்னு ஒரே குழப்பம்.

ராஜி : என்னங்க என் சகோ மதுரைதமிழன் மீது அவ்வளவு பாசமா நான் பண்ணிய மைசூர் பாகு எல்லாத்தையும் அனுப்ப சொல்லுறீங்க?

வூட்டுகாரர் : அட அது இல்லைம்மா அவன் வீடு கட்டணும் உங்களால் முடிந்த உதவி பண்ணுங்க என்று கேட்டான். அதனால இதை நான் அனுப்புறேன் இதை வைச்சு அவன் வீடுகட்டட்டும்.

ராஜி : ஙே......
அப்புறம், ரொம்ப புத்திசாலித்தனமா(?!) யோசிச்சு யார் வீட்டு வாசல்ல அதிக பேப்பர் இருக்கோ அவங்கதான் ஜெயிச்ச மாதிரினு முடிவெடுத்தோம். ராத்திரி 8மணிக்கு எல்லார் வீட்டுக்கும் விசிட்டுன்னும் முடிவு பண்ணினோம்.


தீபாவளி கிட்ட நெருங்கி, வர வர அப்பா, இன்னிக்கு கடைக்கு கூட்டிபோய் டிரெஸ், பட்டாசு வாங்கித் தருவார்ன்னு தினம் தினம் எதிர்பார்த்து ஏமாறுவேன். அவரும் ஜெயலலிதா கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பிரிச்சு குடுக்க, நாட்களை கடத்துன மாதிரி நாட்களை கடத்தி, தீபாவளிக்கு முதல் நாள் கடைக்கு கூட்டி போவார். அங்க போனா மனசுக்கு பிடிச்ச கலர், டிசைன்லாம் தீர்ந்து போயி, அப்புறம் நாலு கடை ஏறி இறங்கி அப்பா டென்ஷனா முறைக்கும்போது, மனசுல நினைச்ச மாதிரி கலர்ல டிரெஸ் எடுத்து ஒரு மாதிரியாய் ஒப்பேத்தி...,

காலைல 4 மணிக்கு எழுந்து தலைக்கு குளிச்சு, புது டிரெஸ் போட்டுக்கிட்டு பட்டாசை கொளுத்தனும்னு கனவு கண்டுக்கிட்டே விடிகாலை 3மணிக்கு தூங்கி..., எழுந்துப் பார்த்தால்.., மணி ஏழு ஆகியிருக்கும். சரின்னு அவசர அவசர குளிக்க ரெடியாகும்போது, அம்மா 1/2லிட்டர் எண்ணெயை தலையில கவுத்து, சீயக்காத்தூளை கொட்டின்னு தடபுடலா எண்ணெய் குளியல் போட்டு வந்து பார்த்தால்...,
பிடிச்ச மாதிரி ஆட்டுக்கறி குழம்பும், தோசையும், வடையும் நம்மளை முறைச்சு பார்க்கும். சில தோசைகள், பல வடைகளை உள்ளிறக்கி ஒரு வழியாய் பட்டாசை கொளுத்த தெருவுக்கு வந்து பார்த்தால்....,

அடைமழை வந்து உயிரை வாங்கும். அப்படி இப்படின்னு பட்டாசை கொளுத்திக்கிட்டு இருக்கும்போது.., அம்மா தொணதொணன்னு இந்த மாவை பிசைஞ்சு குடு, அரிசியை ஊற வை, வீட்டை கூட்டு, பலகாரத்தை கொண்டு போய் அத்தை வீட்டில் குடு, கோடி வீட்டு மாமிக்கிட்ட குடுன்னு கடுப்பை கெளப்புவாங்க. போட்டியில பொண்ணு ஜெயிக்கனும்ன்னு எங்காவது அக்கறை இருக்கா பாருங்க அம்மாவுக்கு.


எப்படியோ ஒரு வழியா பட்டாசை கொளுத்தி, வாசலை கூட்டி, பட்டாசு கொளுத்துன பேப்பரையெல்லாம், சேர்த்து வச்சுட்டு பலகாரம் தின்னுட்டு வரலாம்ன்னு உள்ளே போயிட்டு வந்து பார்த்தால், அம்மா அந்த பேப்பரையெல்லா கொளுத்திட்டு இருக்காங்க. அதை பார்த்ததும் உசிரே போயிடுச்சு.
மணி 7.30ஆச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல பிசாசுங்களாம் சாரி தோழிங்களாம் வந்துடுவாங்களேன்னு இல்லாத மூளையை யூஸ் பண்ணி சிந்திச்சுக்கிட்டே இருந்தேன். அப்பதான் சூப்பர் ஐடியா தோணுச்சு..., நேரா ஒரு மஞ்சப்பையை கொண்டு போனேன். அக்கம் பக்கம் வீடுகளில் சேர்த்து வச்ச பேப்பர்களை பொறுக்கி எடுத்து வந்து அம்மாவுக்கு தெரியாமல் ஒரு ஓரமா குவிச்சு வச்சேன்.
மணி 8ஐ தாண்டி போயி 10ஐ நெருங்கியும் யாரும் வரலை. என்னன்னு தெரியலையேன்னு யோசனையிலேயே தூங்கி எழுந்து, மறுநாள் ஸ்கூலில் போய் கேட்டால் சொன்னாளுங்களே ஒரு பதில். நான் அப்படியே ஷாக்காகி நின்னுட்டேன்.
”லூசு அந்த குப்பையெல்லாம் வந்து ஆராய்ச்சி பண்றதுதான் எங்களுக்கு முக்கியமா? கேபிள் டிவில அண்ணாமலை படம் போட்டாங்க அதை பார்த்துக்கிட்டு இருந்தோம்னு..,
கிர்ர் டமால்..., வேறென்ன? நான் மயங்கி விழுந்த சத்தம்தான்...,

இப்படிலாம் பெற்றோர், உறவினர், சுற்றத்தார், தோழிகள்ன்னும், பலகாரங்களை மத்தவங்களுடன் ரொம்ப மகிழ்ச்சியாய் தீபாவளியை கொண்டாடினேன் நான்.


ஆனால், இன்று என் பிள்ளைகள், ஒரு மாதத்திற்கு முன்னே டிரெஸ் எடுத்து, தீப்பாவளியன்று முக்கி முனகி, என்னிடம் திட்டு வாங்கி எண்ணெய் குளியல்..., 1 இட்லி, 1/2 தோசைன்னு சாப்பிட்டு செல்போனிலும் மெயிலிலும் வாழ்த்துக்களை சொல்லிக்குதுங்க. அப்புறம் பலகாரம் சுட கூப்பிட்டால்.., உன்னை யாரு இதெல்லாம் செய்ய சொல்றது? கடையில வாங்காமல் நல்ல நாளும் அதுவுமா ஏம்மா எங்க உயிரை எடுக்குறீங்கன்னு டிவிப்பொட்டியை விட்டு எழுந்துக்காமல், விடிகாலையும், சாயந்தரம் 6 மணிக்கும் ஏதோ சடங்குக்காய் சில பட்டாசுகளை கொளுத்திட்டு மீண்டும் டிவியில உக்காந்துக்குதுங்க...,
அன்று பண்டிகைகளை உண்மையான நோக்கில உற்றார் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தோம்.
இன்று? நம் பிள்ளைகள் நிஜமான அர்த்தங்களுடந்தான் கொண்டாடுகிறார்களா?!
 வாழ்த்தும்போது வாழ்வை வாழ்த்துவோம் - இனிப்பு
வழங்கும்போது நட்பை வழங்குவோம்
வெடிக்கும்பேது வெறுப்பை வெடிப்போம் - இன்று
ஒருநாளேனும் ஒழுங்காய் குளிப்போம்.

தெய்வங்கள் என்றும் காத்திருக்கும் சிலைகளாக
மனிதன்தான் கண்ணிமைக்கும் முன் மறைந்து போகிறான்
ஏழையின் வயிறும் கோயில் உண்டியல்தான்
புண்ணியம் சேர்ப்பதில்
பகிர்வோம்.
பதார்த்தம் பகிர்வோம்,
பண்டிகையைப் பகிர்வோம்.

கண்களை மூடிக்கொண்டு இருட்டென்கிறோமாயின்
கண்களில் விளக்கேற்றுவோம் - குறைந்தபட்சம்
கண்களை திறப்போம்.

காற்றில் பொருட்டென்றில்லாமல்
மிதக்கும் தூசிபோல
இயற்கையில் நாம் என உணர்வோம்
அகந்தைஎனும் அரக்கனை அழிப்போம்,
அன்பை மட்டுமே விதைப்போம்.
பண்டிகைகள் Funடிகைகளாக
அந்த Sun டி.வியை அணைப்போம் -அன்பில்
குடும்பம் நண்ர்களை இணைப்போம்
அரவணைப்போம்.ஜி.ஜே.தமிழ்ச்செல்வி இளம் பெண்ணான இவர் தன் சிந்தனைகளை கருத்துக்களை சிலை போல அழகாக செதுக்கி கவிதையாக தருபவர்.இவர் சமீபத்தில் தன் முதல் கவிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தைப் பற்றி இவர் சொல்லுவது இதுதான் "வாழ்வில் எதுவும் நிகழாதிருந்திருந்தால் இதுவும் நிகழாதிருந்திருக்கும். இந்த நெகிழ்ச்சிக்கு இந்த நிகழ்தல் விதிக்கப்பட்டது என்று எண்ணுகிறேன்.
இது நிகழாதிருந்திருக்கலாம் – என்ற முதல் கவிதைப் புத்தகத்தை இவர் வெளியிட்டு இருக்கிறார்வன்மத்தின் வாசலின் வார்த்தைகள் தொக்கி நிற்கிறது
யாரையேனும் குத்தி கிழித்தற் பொருட்டு
கீறல்களில் வழியும் இரத்தத்தை ருசிக்கவென
மாமிச பட்சிணிகள் வெறித்த பார்வையில் கவனத்தோடு
யாரேனும் தவறக்கூடும் தேள் கொடுக்கால் கொட்டி
உயிருக்கு ஒன்றுமில்லை கொஞ்சம் வலிதான்
சிரித்தபடி சொல்லி நகரலாம்


வாழ்க்கையின் பயணத்தில் படிகள் பல கடந்த பின்பே
பரிசீலிக்கப்படுகிறது முதல் படியின் தப்பும் தவறும்
ஒடுங்கி நிற்கவா என்று எண்ணிய கணம்
தூக்கிப்போடு முன்னேறு அடுத்த படி உன் இலக்கு
முரசுக்கொட்டி துரத்துகிறது உள்ளுணர்வு
நகர்வாயோ நடப்பாயோ பறப்பாயோ
முறைகள் அல்ல தொடர் இயக்கம் தான் வாழ்வுதிகைத்து தான் நிற்கிறேன் அனுபவ ஆசான் முன்
பேசும் மொழி புரிதலற்றவளாக
புரிபடா அதட்டல்களும் கண்டிப்புகளும்
தாய்மொழியில் மழலை பேசும் போது
தூக்கி எறிகிறேன் வலிகளை துச்சங்கள் என
இதோ அடுத்த வாசலின் வழி
வலிகளின் உயிர்ப்பில் ஒளிர்கிறது வெற்றியின் விதை
மஞ்சு சுபாஷிணி. அரபு நாட்டில் வேலை பார்த்து வருபவர். இவரை பற்றி சொல்ல வேண்டுமென்றால் குணத்தில் அன்னை தெரசா. மிக வாஞ்சையுடன் எல்லோருடன் பழகி வருபவர். இவர் பதிவு எழுதுவதைவிட மற்றவர் எழுதிய பதிவுகளுக்கு இவர் வெளியிடும் கருத்துக்கள் மூலம் மிக பிரபலமானவர். சுயநலமற்ற பெண்மணி. மனக் காயப்பட்டவர்களுக்கு இவர்களின் வார்த்தைகள் மருந்து போல இருக்கும்.
காதலில் தோன்றி
அன்பில் திளைத்து
பாசத்தில் மூழ்கி
முத்துக்களை பெற்றெடுத்தோமே
காதலல்லாது வேறென்னவாம்.....

பசித்தால் தானும் பகிர்ந்துண்டு
வலித்தால் தானும் துடித்து தவித்து
மரணித்தால் அழுது புரண்டு
உண்டானால் மகிழ்ச்சியில் திளைத்து
காதல் அல்லாது வேறென்னவாம்

உலகமே காதலில் தோன்றியது
காதல் இல்லாத உயிரினமும் இல்லை
மிருகங்களுக்கும் காதல் உண்டு
பட்சிகளுக்கும் காதல் உண்டு
மனிதருக்கு காதல் இல்லாமல்
வாழ்க்கையே இல்லை....

குழந்தையில் பொம்மை மேல் காதல்
பள்ளி வயதில் புத்தகத்தின் மேல் காதல்
பருவ வயதிலோ முதல் காதல்
திருமணத்தின் பின்னோ உண்மை காதல்
முதிர்ந்த பின் துணையின் மேல் காதல்
மரணம் நெருங்க இறைவன் மேல் காதல்

உலகமே காதலின் பிடியில்
இதில் உண்மை காதலென்ன
உடையாத காதலென்ன
பிரியாத காதலென்ன
பிடிபடாத காதலென்ன
பார்க்காத காதலென்ன

பெண்ணை பிடிக்க காதலை முயற்சிக்கிறான்
பிடித்த பின்னோ காதலை முறிக்கிறான் தேவன்

முறித்த காதலின் வலியில் துடிக்கிறான் காதலன்
காதலனை காக்க வருகிறாள் மற்றொருத்தி மனைவியாக

காதல் வார்த்தை மட்டுமல்ல
காதல் வாழ்க்கை கூட
காதல் இல்லா கவிதையும் இல்லை
காதல் இல்லா வாழ்க்கையும் இல்லை
மதுரைத்தமிழன் : என்னங்க மஞ்சு பொட்டு வெடி வெடிக்க பயப்படுறீங்க..
மஞ்சு ; இல்லைங்க மதுரைத்தமிழன் நான் என் கையால யாரையும் அடித்தது இல்லை. அப்படி இருக்கும் போது சுத்தியலால் பொட்டு வெடிமேல அடிக்க என் மனசு இடம் கொடுக்கவில்லை
மதுரைத்தமிழன் : ஙே....
திண்டுக்கல் தனபாலன். திண்டுக்கல்லுக்கு பூட்டு பிரபலம் என்பது போல வலையுலகத்தில் இந்த தனபாலன் பிரபலம். இணைய தளத்தில் இந்த கால சிறுவர்கள் இளைஞர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய எழுத்துக்கு சொந்தகாரர் இந்த தனபாலன் . இவரிடம் அனுமதி கேட்டு இவரது பதிவை வெளியிட நேரம் கிடைக்காததால் இவரது வலைத்தளத்திற்கான இணைப்பை இங்கே வெளியிட்டுள்ளேன்
 


avargal unmaigal
33 comments:

 1. ஹா ஹா... எல்லாரும் நான் விரும்பிப் படிக்கும் பதிவர்கள்...

  ReplyDelete
 2. அது சரி, போஸ்ட் ஏன் ரொம்ப நேரமா காணாம போச்சு?

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பதிவாளர்களின் பதிவுகளை மிகவும் கலர் புல்லாக (பேக்கிரவுண்ட்) செய்து இருந்தேன். ஆனால் அதை அப்லோடாக அதிக நேரம் எடுத்தது அதுமட்டுமல்லாமல் டவுன் லோடு ஆகவும் நேரம் எடுத்தது. அதனால் அதை நீக்கி மீண்டும் பதிவிட்டேன்

   Delete
 3. சரி... சரி ... நல்ல நாளு அதுவுமா உங்களுக்கு எதாவது செய்யனும்... அக்கவுண்ட் நெம்பர் வேற கொடுத்துட்டிங்க... நான் அனுப்பிற' கேஷை 'வச்சி அடுத்த தீபாவளி(லி) வர்ற வரைக்கும் போதுமான பூரிக்கட்டை வாங்கி உங்க வீட்ல கொடுத்திடுங்க.... எதோ என்னால முடிஞ்ச அன்பான கிப்ட்...!

  நேர நெருக்கடி புரியுது .. நிறைய கலர்புல்லா படக்கலவைகள் எதிர்பார்த்தேன்...

  பாக்ஸ் ஜோக்ஸ் உங்க தீபாவளி மலருக்கு ஹிட்...! ஹா... ஹா... அதிலும் சீனு, ஜோதிஜி , மஞ்சு ஜோக்ஸ்...
  அப்புறம் நான் அல்வா கொடுத்துதான் உங்க வாயை டேமேஜ் பண்ணமுடியும் நினைக்காதீங்க... இந்த தீபாவளிக்கு நான் முதன் முதலா " முறுக்கு..." ன்னு ஒண்ணு ட்ரை பண்ணேன்.. அத சாப்பிட்டாலும் உங்க உங்க வாய் டேமேஜ்தான்... பின்ன முப்பத்து இரண்டும் கழண்டுட்டா... பொக்ஸ்தானே..! அப்பறம்.. நீங்க என்ன பேசினா என்ன... வெறும் பக்.. பக்.. தான்..!

  அப்புறம் சகோதரி ராஜியின் மைசூர் பாக் வைத்து பில்டிங்கை முடிச்சிருலாம்னு நினைக்கிற உங்களை வ(உ)ண்மையாக கண்டிக்கிறேன்... ! நல்லா சமைக்கிறவங்களை பார்த்து இப்படியெல்லாம் சொல்லக்கூடாது யுவர் ஆனர்...!

  ஜோதிஜி அவர்களின் கிராமத்து தீபாவளி நிறைய செய்திகளை சொன்னது.

  எப்படியிருந்தாலும் இது போல் பண்டிகைகள் நம் பரபரப்பை ஒரு நாளாவது நிறுத்தி வைத்து ரசிக்கத்தான் வைக்கிறது.... ! இரண்டு நாள் எனக்கு ரொம்ப ஜாலியாத்தான் இருந்தது...!

  தீபாவளி மலர் மணம் வீசவே செய்கிறது... மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு பதிவாளர்களின் பதிவுகளை மிகவும் கலர் புல்லாக (பேக்கிரவுண்ட்) செய்து இருந்தேன். ஆனால் அதை அப்லோடாக அதிக நேரம் எடுத்தது அதுமட்டுமல்லாமல் டவுன் லோடு ஆகவும் நேரம் எடுத்தது. அதனால் அதை நீக்கி மீண்டும் பதிவிட்டேன்.

   நிறைய செய்ய ஆசைதான் ஆனால் கடைசி நேரத்தில் வேலை பார்ட்டி என்று கடந்த 3 நாட்களாக பிஸியாகிவிட்டது.

   இது ஒரு குறுகியகால முயற்சி. என்னால் முடிந்த வரை நல்ல செய்திகளை தர முயற்சித்து இருக்கிறேன். இன்னும் பலரை அறிமுகப்படுத்த ஆசை ஆனால் இந்த மலர் மிக நீண்ட பதிவாக போய்விட்டது

   Delete
  2. இன்னுமா நம்மளை இந்த ஊர் நம்புது!?

   Delete
 4. உங்க மாமா மைசூர்பாகு உங்களுக்கு அனுப்புறது வீடுக் கட்ட அல்ல. உங்க மனைவிக்கிட்ட கொடுத்து உங்க பல்லை உடைக்கத்தான்.

  ReplyDelete