Saturday, July 27, 2024

 அமெரிக்கத் தமிழர்கள் Vs தமிழகத் தமிழர்கள்

 
 




அமெரிக்காவில் வார இறுதியில் பொழுது போகவில்லையென்றால். நண்பர்கள் ஒருவருக்கொருவர் போன் செய்து யாரவது ஒருவர் வீட்டில் சந்திப்பதாக முடிவு செய்து அதன் பின் ஆளுக்கொரு உணவைத் தயார் செய்து எடுத்துக் கொண்டு போய் எல்லோரும் மாலை 6 அல்லது ஏழு மணியளவில் கூடிப் பேசி மகிழ்வார்கள் அந்த பேச்சில் அவர்களின் குடும்பம் பிள்ளைகளின் வளர்ச்சி பற்றிப் பேசுவார்கள்.. அப்போது வந்த புதிய படங்களைப் பற்றியும்  அன்றைய அரசியல் நிகழ்வு பற்றியும் தாங்கள் வாங்கிய புதிய கார் மற்றும் சாதனங்கள் பற்றியும் அல்லது வாங்க வேண்டியது பற்றி இப்படி பலவற்றைப் பேசி மகிழ்ந்து புரிந்து கொண்டு ஏதாவது ஒரு விளையாட்டு விளையாடி கடையில் ஒரு செல்ஃபி பிக்சர் எடுத்துக் கொண்டு கலைந்து செல்வார்கள்.


இதைத் தமிழக தமிழர்கள் எப்படிச் செய்வார்கள் என்றால்..

பொழுது போகவில்லை என்றால் ஒருவரை ஒருவர் வாட்ஸப்பில் பேசி சந்திப்பதாக முடிவு எடுத்துக் கொள்வார்கள் அப்படி அவர்கள் சந்திப்பதற்கு ஒரு சங்கம் அல்லது குழு அல்லது சிந்தனை வட்டம் என்று பெயரைத் தெரிவு செய்து   ஒரு பேனரையும் ரெடி பண்ணி தலைவர் செயலாளர் உறுப்பினர்கள் என்று  அவர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் நியமித்துக் கொள்வார்கள். அதற்கு அப்புறம்  அவர்களுக்கு ஒரு பிரச்சனை வரும் இப்படி சங்கம் குழு என்று ஏற்படுத்திக் கொண்டோமே அப்படியானால் அந்த குழு கூடி விவாதிப்பது எங்கு என்று கேள்வி வரும்.. ஆனால் அவர்கள் யாரும் அவர்களின் வீடுகளில் இந்த சந்திப்பை நடத்த மாட்டார்கள் அதனால் அவர்களில் யாரவது ஒருவர் அல்லது அவர்களுக்குத் தெரிந்தவர் ஒருவர் ஏதாவது பிஸினஸ் நடத்தில் கொண்டு இருந்தால் அவரை பற்றி மிகப் பெருமையாகப் பேசி அவர்களின் தொழில் நடத்தும் இடங்களில் உள்ள  ஹாலில் தங்களது சந்திப்பை வைத்துக் கொள்வார்கள்...


அவர்கள் சந்திப்பு நடக்கும் போது ஒரு போஸ்டரையும் அடுத்து பொதுவெளியிலும் வைத்து விட்டு அனைவரும் வாருங்கள் என்று அழைப்பு விடுவார்கள். அந்த சங்கத்திலோ அல்லது குழுவிலோ சந்திப்பு நடக்கும் போது அந்த 10 பேர்மட்டுமே கலந்து கொள்வார்கள் என்றாலும் அதற்கு போஸ்டர் மட்டும் தவறாமல் அடிக்க மறக்கமாட்டார்கள். அமெரிக்கத் தமிழர்கள் சந்திக்கும் போது அவரவர் வீட்டில் தயாரித்த  உணவுப் பொருட்களை கொண்டு வருவது போலத் தமிழக தமிழர்கள் இந்த சந்திப்பின் போது மறக்காமல் ஒரு பொன்னாடை வாங்கி வந்து  ஒருவருக்கொருவர் போர்த்திப்  புகழ்ந்து புகைப்படங்கள் எடுத்து தங்களது சமுக இணையதளங்களில் பகிர்ந்து கொள்வார்கள்

அப்புறம் சந்திப்பின்  போது என்ன பேசுவார்கள் என்றால் இந்த காலத்தில் தமிழகத்தில் புத்தகங்கள் எழுதி வெளியிடாத ஆட்களை இல்லை என்பதால் ஒவ்வொரு சந்திப்பின் போதும் ஒருவர் எழுதி புத்தகத்தை விமர்சித்து அதாவது புகழ்ந்து பேசி அவர்களுக்கு ஒரு பொன்னாடை போர்த்துவார்கள்  அது மட்டுமல்ல வெளியூரிலிருந்தோ வெளிநாடுகளிலிருந்தோ அந்த குழுவில் உள்ள  யாரவது ஒருத்தருக்குத் தெரிந்தவர் அவர்கள் இருக்கும் ஊருக்கு வந்தால் அவர்களுக்கு ஒரு சிறப்புப் பொன்னாடை போர்த்திப்  ஒரு விருது கொடுத்து  புகழ்ந்து பேசுவார்கள். அமெரிக்காவில் இப்படிச் சந்திப்பு நடக்கும் போது ஒருவருக்கொருவர் அருகிலிருந்து பேசுவார்கள் ஆனால் தமிழகத்தில் அப்படி அருகிலிருந்தாலும் அவர்களுக்கு ஒரு மைக் கொடுத்துப் பேச வைப்பார்கள்..


உங்களின் ரகசியங்களை பகிர்வதில் எச்சரிக்கையாக இருங்கள் 

 

எதையும் தள்ளிப் போடாதீர்கள். பின்னர்  என்பது "ஒருபோதும் இல்லை" என்று மாறிவிடும்.  


அன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.