Sunday, June 19, 2016



விகடனின் மாணவப் பத்திரிகையாளர் எழுதிய மனதை நெகிழ வைத்த கட்டுரை

இன்று இணைய விகடனில் வெளிவந்த கட்டுரையை படிக்க நேர்ந்தது. அதை எழுதியவர் ந. ஆசிபா பாத்திமா பாவா என்ற மாணவப் பத்திரிகையாளர். மிக அழகாக ஒவ்வொரு ஆணின்(அப்பாக்களின்) மனதை கவரும் வண்ணம் எழுதி இருக்கிறார். இன்று தந்தையர் தினத்தில் சமுக வலைதளங்களில் பலரும் பல தகவல்களை சொல்லி தந்தையர் தினவாழ்த்தை சொல்லி இருந்த போதிலும் மிக எளிமையாக தெளிவாக எடுத்து சொல்லிய இந்த கட்டுரை என் மனம் கவர்ந்தது. எழுதியவருக்கும் வெளியிட்ட விகடன் நிறுவனத்திற்கும் எனது மனம் திறந்த பாராட்டுகள்.

பல பதிவுகளில் விகடன் தலையில் கொட்டி இருக்கிறேன். ஆனால் இன்று இந்த பதிவை படித்ததும் தட்டிக் கொடுக்க வேண்டும் தோன்றுவதால் அவர்களை பாராட்டி அந்த கட்டுரையை இங்கே வெளியிட்டு இருக்கிறேன்




அப்பாக்களின் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணங்கள்'

வாழ்வில், ஆணானாலும் பெண்ணானாலும் பல பரிணாமங்களைக் கடக்கின்றனர். ஒரு பெண் மகளாக, மனைவியாக, தாயாக, சகோதரியாக, தோழியாக எனப் பலவற்றைக் கூறலாம். ஆனால், நாம் யாரும் அநேகமாக பெண்ணுக்கு நிகரான ஆணின் பங்கைப் பற்றி பேசுவதில்லை. அதுவும் முக்கியமாக ஓர் ஆண் 'அப்பா'வாக மாறுவதைப் பற்றி யாரும் உரையாடுவது இல்லை. தாய்மை பற்றியும், குழந்தைப் பேறு பற்றியும் கவிதைகள் எழுதி எழுதி, அப்பாவைப் பற்றி சற்று யோசிக்க மறந்து விட்டோம். எந்த அளவுக்கு எனில் 'தாய்மை' என்ற சொல்லுக்கு இணையான ஆண்பால் சொல்லே நமக்குத் தெரியாதே!

தாயின் மனநிலையை பலமுறை, பல கோணங்களில் கேள்விப்பட்ட நாம் இன்று, சில நொடிகள் நம் தந்தையைப் பற்றிச் சிந்திக்கலாம். சில நேரங்களில் செல்லமாகவும், அநேகமாக கறாராகவும் இருக்கும் நம் அப்பாக்களின் வாழ்வில், அவர்கள் ஆழ் மனதில் புதைந்து கிடக்கும் மறக்க முடியாத தருணங்கள் பற்பல.

1. முதல் முத்தம்!

முதன்முதலில், தன் குழந்தையின் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட அந்த நொடி! அந்த உணர்ச்சியை எந்த கவிஞனாலும், எழுத்தாளனாலும் இன்று வரை கூற முடிந்ததே இல்லை. தன் ரத்தம், தன் வாரிசு, தன் குழந்தை, அடுத்த சில வருடங்களில் தன்னைத் தாங்கப் போகும் தூணான, அக்குழந்தையை முதன்முதலில் கையில் ஏந்தி, முத்தம் கொடுத்த அந்த நொடியை எந்த ஒரு அப்பாவாலும் மறக்கவோ, விளக்கவோ முடியாது.

2. ஆள்காட்டி விரல்!

குழந்தை தன் பிஞ்சு கைகளால், அந்த மெல்லிய விரல்களால், முழு கையையும் வைத்து அப்பாவின் ஆள்காட்டி விரலைப் பிடிக்கும். அந்த அழகை ரசிக்கவே அப்பாவிற்கு ஆயிரம் கண்கள் வேண்டுமே! என்ன செய்வார் அவர்? நேரம் கிடைக்கும் போது எல்லாம் தன் விரலை குழந்தையிடம் நீட்டி நீட்டி விளையாடும் அப்பாக்களை தினமும் பார்க்கலாம். அதன் பின்னால், எவ்வளவு பேரானந்தம் ஒளிந்து இருக்கிறது என்பதை நம்மால் ஒருகாலமும் உணர முடியாது.

3. ராஜகுமாரியின் சேட்டைகள்!

ஒரு அப்பாவுக்குப் பெண் குழந்தை பிறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். அந்த குட்டி தேவதையை தன் மடியைவிட்டு இறக்கவே மாட்டார். தன் மார்பில் அவள் எட்டி உதைக்கும் சுகமும், அவளின் அழகிய கொஞ்சல் சிரிப்பும் அப்பாவை வீழ்த்தும் அஸ்திரங்கள். ராஜகுமாரியை கொஞ்சி கொஞ்சி நாட்களைக் கழிக்கும் அப்பாவின் மனதில் இருக்கும் ஒருவித உணர்ச்சி... அதை குறிக்க சொற்களை கண்டுபிடிக்கத்தான் வேண்டும்!

4. அப்பா...!

'ங', 'க', 'ஆ', 'ஊ' என தன் குழந்தையின் ஓசைகளையும், அழுகுரலையும் கேட்டு கேட்டு திருப்தி அடைவதற்குள் 'அப்பா' என ஒரு குரல் கேட்கும்! கட்டுக்கடங்காத காட்டாறு போன்ற மகிழ்ச்சிதான் அங்கு பாயும். ஆனால், நம் அப்பாக்களுக்குத்தான் அம்மாவைப் போல மகிழ்ச்சியை வெளிப்படுத்த தெரியாதே, அதனால் வாயெல்லாம் பல்லாக, 'அப்பா சொல்லு, அப்பா சொல்லு' எனக் கூறிக் கொண்டே இருப்பார்கள்!

5. முதல் அடி!

தன் மார்பிலும், முதுகிலும், தோளிலும் தவழ்ந்த அந்த பிஞ்சு பாதங்கள் முதல் அடியை எடுத்து வைத்ததும், அம்மாவின் சிரித்த முகம்தான் அநேகமாக முதலில் தெரியும். ஆனால், அப்பாவின்  ஆனந்தக் கண்ணீரும், மகிழ்ச்சியும் நமக்கு அவ்வளவாக தெரிவதில்லை. காரணம், அவர்கள் நாம் விழாமல் இருக்க நமக்குப் பின்னால் நம்மைத் தாங்கிக் கொண்டு இருப்பார்கள்.

6. வெற்றி இல்லை சாதனை!

மெல்ல அப்பாவின் சுண்டு விரலை பிடித்து நடை பயின்ற தன் கண்மணியின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அப்பாவின் வெளிப்படுத்தப்படாத குதூகலம் ஒளிந்து இருக்கும். நம்முடைய ஒவ்வொரு சிறு வெற்றியைக் கூட மிகப் பெரிய சாதனையாக எண்ணி நம் அப்பா கர்வப்படுவார். நம்முடைய ஒவ்வொரு செயலையும் சாதனையாக மாற்றுவதில் அப்பாவிற்கு பெரும் பங்கு இருக்கிறது! ஆனால், நம் அப்பா எதையும் வெளிக்காட்டுவதில்லை, கண்டிப்பைத் தவிர! ஆனால், அதே கண்டிப்புதான் நம்மை ஒரு சிறந்த ஆளுமையாக மாற்றுகிறது என்பதை காலம்தாதான் நமக்கு உணர்த்தும்.

7. குட்டிதேவதை வளர்ந்த நொடி!

தன் விரல் பிடித்து நடந்த தன் குட்டி தேவதை பருவ வயதில், பூப்பெய்தியதும், தன்னை அறியாமல் ஒரு ஆனந்தமும், பயமும் அப்பாவின் உடல் எங்கும் பரவும். அந்த உணர்வை எப்படி சொல்லலாம்? தன் பெண்ணைப் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும், அவளுக்குத் தேவையானதைச் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பும், இன்னும் வெகுசில வருடங்களில் அவள் இன்னொருவனின் மனைவி என்கிற எண்ணத்தின் தாக்கமும், பேரானந்தமும் ஒருசேர ஒருவித உணர்ச்சியை அப்பாவின் மனதில் உருவாக்கும். அதைப் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களால் மட்டுமே உணர முடியும்.

8. திருமணம்!

காலங்கள் உருண்டோட 'நேற்று பிறந்த குழந்தை போல' தோன்றும் தன் பிள்ளைக்கு திருமண நாள் குறிக்கப்படும். மகனாக இருந்தால், அவனை நல்ல ஒரு ஆண்மகனாக வளர்த்து, தன்னை நம்பி வரும் பெண்ணை தன் தாய்க்கு நிகராக நடத்துபவனாக மாற்றி இருக்க வேண்டும். மகளாக இருந்தால், அவளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். தன் மகளின் கைகளை தன்னைவிட பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் ஓர் ஆடவனிடம் ஒப்படைக்கும் நொடி... நம் மகளின் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒருபுறமும், இனி இவள் மீது இவள் கணவனுக்கே முதல் உரிமை என்ற நிதர்சனமான உண்மை மறுபுறமும் மாறி மாறி அலைக்கழிக்கும். ஆனாலும், உதட்டில் புன்னகையுடனும், கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணீருடனும் தன் மகளை, மருமகளாக இன்னொரு வீட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் அப்பாவின் மனதில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்!

இப்படி ஒரு அப்பாவின் வாழ்வு முழுவதுமே சிறு சிறு நெகிழ்ச்சியுறும் தருணங்களால் நிறைந்தவையே. ஆனால், நம் கண்களுக்குத்தான் அது தெரிவதில்லை. நாம் நம் அப்பாவிடமிருந்து எவ்வளவு தொலைவில் இருந்தாலும், அவரிடம் எவ்வளவு கோபப்பட்டாலும், அவர் நம் மீது வைத்திருக்கும் அன்பும் காதல் என்றும் குறையாது. சின்னச் சின்ன  தருணங்களிலேயே மனநிறைவு அடையும்.

அப்பாக்களுக்கு நிகர் அப்பாக்கள் மட்டுமே!

-ந. ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிகையாளர்)
படிக்காதவர்கள் படிக்க



தந்தையே ஆண்டுக்கு ஒரு முறை
நீ என்னை தட்டிக் கொடுத்தால்
அந்த ஆண்டு முழுவதும்
எனக்கு வேண்டிய சக்தி கிடைத்துவிடுகிறது.
ஆனால்
நீ என்னை ஆண்டு முழுவதும்
தட்டிக் கொடுத்தால்
எனக்கு அனைத்து உலகத்தையும்
ஆளும் சக்தி வந்துவிடும்.

கவிதை எழுதும் ஆசையில் நான் தந்தையர் தினத்திற்காக கிறுக்கியது

அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. Replies
    1. ஆமாக மிகவும் அருமையாக இருந்ததினால்தான் நான் இங்கே பகிரிந்து இருக்கிறேன்

      Delete
  2. ம் எல்ல்ல்ல்ல்லாம் படித்தாகி விட்டதுப்பா! அப்பான்னால் அப்பா தான்!

    ReplyDelete
    Replies

    1. அப்படியா எல்லாம் படித்துவீட்டீர்கள் என்றால் உங்களிடம் கேள்விகள் கேட்க வேண்டியதுதான்

      Delete
  3. மாணவப் பத்திரிக்கையாளருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மாணவ பத்திரிக்கையாளரை பாராட்டியதற்கு நன்றி

      Delete
  4. அருமையான கட்டுரை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மாணவ பத்திரிக்கையாளரை பாராட்டியதற்கு நன்றி

      Delete
  5. மிக்க நன்றி... இதைப் பகிர்ந்தமைக்கு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.