Tuesday, November 10, 2015



avargal unmaigal
பீஹார் படிப்பினை : பாஜக கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்

பாஜக கட்சியின் தலைவர்கள் கூட்டம் போட்டு தோல்விக்கான காரணங்களை ஆராய்வதற்கு பதிலாக பாஜக ஆதரவாளர் சொல்லும் இந்த கருத்தை உண்மையாக உணர்ந்து செயல்படும் என்றால் அடுத்த 10 ஆண்டுகளும் பாஜகதான் ஆட்சி செய்யும். இந்த பதிவை பேஸ்புக்கில் எழுதியவர்  அச்சுதன் ஐயங்கார் . அவரின் அனுமதியுடன் இங்கே அது பதியப்படுகிறது. எனது தளத்தில் மோடியை விமர்சித்து பல பதிவுகள் வந்து இருக்கின்றன. அதெல்லாம் நாட்டு நடப்புகளை அறிந்து எழுதப்பட்டது.


இந்த பதிவு பாஜக ஆதரவாளாரால் எழுதப்பட்ட ஒரு மாறுபட்ட பதிவு. காரணம் மற்ற கட்சியினரை போல தாங்கள் தலைவர்கள் செய்வது எல்லாம் சரி என்று ஜால்ரா போடாமல் அங்கு நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார். அதனால் அதை இங்கே மறுபதிவு செய்கிறேன் .அதுமட்டுல்ல அச்சுதன் சொல்லிய கருத்துகள் மிக சரி என என் மனதிற்கு பட்டதாலும் பலவிதமான கருத்துகளை எனது தள வாசகர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு இது இங்கு வெளியிடப்படுகிறது . 
இங்கு கலரில் ஹைலைட் பண்ணியதும் கிராபிக்ஸ்மிக்ஸ் மட்டும்  நான்தான் அதைதவிர அவர் எழுதியதை அப்படியே வெளியிட்டு இருக்கிறேன்

அன்புடன்
மதுரைத்தமிழன்

பீஹார் படிப்பினை :

பீகார் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தந்துள்ள சில படிப்பினைகளை எடுத்துக் காட்ட விழைகிறேன்! கசப்பு சுவை பிடிக்காதவர்கள் படிக்கத் தேவையில்லை!!

1. தனி மனிததுதி: தனி மனிதர் துதியால் கட்சி வெல்ல வாய்ப்பே இல்லை அது மோடியாக இருந்தாலும் சரி, அமீத் ஷாவாக இருந்தாலும் சரி! இதை நேரடியாகவே சொல்ல விழைகிறேன்! மோடி மந்திரம் என்ற ஒன்றெல்லாம் உண்மையில் கிடையாது. அப்படி ஒன்று இருப்பதாகவும் அதன் மூலம் இனி நாட்டில் மத்தியிலும், எல்லா மாநிலங்களிலும் பாஜக ஆட்சி மட்டுமே இருக்கும் என்றும் காங்கிரஸ் சோனியா, ராகுல் எல்லோரும் இத்தாலிக்கு மூட்டை கட்ட வேண்டி வரும் என்பது போலவும் பற்பல பொருட்களில் எழுதப்பட்ட/பேசப்பட்ட விஷயங்களை வைத்துதான் இதை சொல்கிறேன்! மோடி மெஜாரிட்டியுடன் ஆட்சியமைத்தது ஒரு சந்தர்ப்பம் அதாவது ஒரு வாய்ப்பு! அவ்வளவே! அதன் மூலமே எதிர்காலத்திலும் அப்படியே ஆகும் என்று எண்ண இயலாது! தாயம் உருட்டும் போது எப்போதோ ஒரு வாய்ப்பில் தாயமோ அல்லது ஆறோ விழுகிறதல்லவா அதே போல இதுவும் ஒரு பிராபபிலிட்டி அவ்வளவுதான்! மோடியின் ஆட்சி நற்பலன்களை தரவில்லை என்றால் திரும்பவும் காங்கிரஸ் இன்னொரு பத்தாண்டு பொற்காலத்தைக் காண வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை!!

2. மிகை வர்ணனை: மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் மிகையான அளவில் வர்ணிக்கப்பட்டன! அதை அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்றே எண்ணுகிறேன்! இன்னும் பப்பு ராகுல் காந்தியே கூட மோடி எப்போது இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறார் என்று கிண்டலடித்தார்! மோடியின் சுற்றுப் பயணங்களால் நாட்டுக்கு பல பயன்கள் வந்தன என்றாலும் கூட வழக்கம் போல பாஜகவின் பிரச்சாரப் பிரிவு குறட்டை விட்டதால் பயன்களை விடவும் பயணங்கள் பலனற்றவை போல வர்ணிக்கப்பட்டன. மக்கள் மனதிலும் அதே அபிப்பிராயம் உண்டாகக் காரணமானது!

3. அபிரிமித எதிர்பார்ப்பு: மோடி என்ற தனி மனிதரை வைத்து கட்சி அபிரிமிதமான பலன்களை எதிர்பார்த்தது! மோடி பத்துப் பதினைந்து இடங்களில் தோரணையுடன் பேசினால் போதும் கட்சி வென்று விடும் என்று பாஜகவினர் எதிர்பார்த்தனர்! ஆனால் பீகார் போல ஜாதிக் கட்டமைப்பு, நக்சல் ஆதரவு உள்ள பிற்போக்கான மக்களைக் கொண்டுள்ள மாநிலத்தில் அது எடுபடாது என்பதை அவர்கள் உணரவில்லை! கிட்டத்தட்ட அதே நிலை மாறுபட்ட தன்மையில் தமிழ்நாட்டில் உள்ளது! இங்கு பீகார் போலன்றி முன்னேற்றம் அதிகமாக இருந்தாலும் கூட தமிழக மக்கள் ஜாதிக் கட்டமைப்பு மற்றும் திராவிட வாதத்தால் அதிகம் கவரப்பட்ட நிலையில் உள்ளனர். இங்கும் பாஜக பாடு கஷ்டம்தான்! இங்கெல்லாம் கர்நாடகாவில் எடியூரப்பா போல ஒரு தலைவர் கட்சிக்கு செல்வாக்கை கொண்டு வரும் வகையில் உழைக்கத் தயாராக இருத்தல் அவசியம்!

4. ஊழல்: நாட்டிலுள்ள படித்த நடுத்தர மக்கள் பலரும் பாஜக ஊழலில் ஈடுபடாத கட்சி என்பதை நம்புகின்றனர். இதுவே அக்கட்சியின் பலமாக உள்ளது! ஆனால் பாஜக எந்தெந்த ஊழல்களை எல்லாம் வரிசைப்படுத்தி மக்களிடம் தெரிவித்து ஆட்சியைப் பிடித்ததோ அந்த ஊழல் வழக்குகள் மற்றும் கறுப்புப் பணம் போல விஷயங்களில் எந்த சரியான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதே உண்மையாகும்! இன்னும் சிபிஐ போல அமைப்புகள், அதிகாரவர்க்கம் ஆகியவை பாஜக வந்து விட்டதா இனி நிலக்கரி ஊழல், 2ஜி ஊழல் எல்லாவற்றிலும் முனைப்பாக இருந்து ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்றெல்லாம் எண்ணப்போவதில்லை. ஏனென்றால் அவர்களும் அதில் புறங்கையை நக்கியிருப்பார்கள்!! அதனால் அந்த வழக்குகளில் பாஜக அரசு தீவிரமாக கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கொண்டு விரைவில் தீர்ப்பு வழங்கும் நிலையைக் கொண்டு வர வேண்டியது அவசியம்! ஆனால் 2ஜி வழக்கிலோ அவ்வளவு ஏன் கேபிள் திருடன் வழக்கில் கூட அரசு இயந்திரம் சறுக்குகிறது!

5. செயல்பாடுகள்: நண்பர் Karthik Srinivasan அவர்கள் பதிந்திருந்தார் ! மோடி அரசு அவருக்கு அதிகமாக வாக்களித்த நடுத்தர மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறியிருந்தார்! அது ஓரளவு உண்மையென்றே கொள்ளலாம்! ஆனால் இது பீகார் போல பின்தங்கிய மாநிலத்துக்கு பொருந்தாது என்றாலும் கூட தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு பொருந்தும்! இதில் மோடிஅரசு உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் எவ்வளவுதான் சலுகைகள் நீங்கள் தந்தாலும் நடுத்தர வர்க்கம், மாத சம்பளம் பெறும் வர்க்கம் என்றைக்குமே தொழிலதிபர்கள் போல உயர்வர்க்கம் ஆகப் போவது கிடையாது ! அப்படியிருக்க மாத சம்பளம் வாங்கும் பெரும் அளவிலான மக்களுக்கு ஓரளவேனும் வருமான வரி போல சலுகைகள் வழங்கினால் ஒன்றும் குறைந்து போகாது! ஆனால் உயர்வர்க்கத்திடம் மென்மையாக உள்ள அரசு நடுத்தர மக்களிடம் மிகக் கடுமையாக உள்ளது! ஒரு லட்ச ரூபாய்கள் ஒருவர் மாத சம்பளம் பெற்றால் கூட வருடம்சம்பாதிக்கும் பன்னிரண்டு லட்சங்களில் சுமார் மூன்று லட்ச ரூபாய்கள் அளவில் வருமான வரி செலுத்த வேண்டியுள்ளது! இதற்கு மோடி அரசு முன்னுரிமை கொடுத்து நிவாரணம் தரலாம்!

6. ஹிந்துத்துவம் : இப்போது நான் சொல்வதைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் ! பாஜகவின் பெரிய பலம் ஆர்எஸ்எஸ் ! அதன் பலவீனமும் ஆர்எஸ்எஸ் தான்!! இது மிக உண்மையான விஷயம்! உதாரணமாக சொன்னால் இந்த மாட்டிறைச்சி விவகாரத்தை எடுத்துக் கொள்ளலாம்! இவ்வளவு அவசரமாக சட்டம், தடை எல்லாம் போட்டு நாட்டில் மாட்டிறைச்சி தின்று பழகிய எவனாவது தின்னாமல் விட்டு விடப்போகிறானா? ஆனால் அதை செய்தார்கள்! எதிர்க்கட்சிகளுக்கு குற்றம் சாட்ட ஒரு வாய்ப்பை இவர்களே ஏற்படுத்திக் கொடுத்தார்கள்! இன்னும் ஹிந்துத்துவம் என்ற தன்மையில் பாஜகவின் அஜெண்டா அது எப்போதுமே கை வைக்க இயலாத நிலையில்தான் உள்ளது!! ராமர் கோவில் ஆகட்டும், பொது சிவில் சட்டம் ஆகட்டும் இது எதுவுமே நடைமுறையில் சாத்தியமற்ற விஷயங்கள்! என்றைக்கேனும் இந்த நாட்டில் எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலில் வேண்டுமானால் இவற்றை செய்யலாம் அல்லது இந்திராகாந்தி போல எமெர்ஜென்சி கொண்டு வந்தால் செய்யலாம்! அப்படியிருக்க ஏன் மத சம்பந்தமான விஷயங்களில் ஓவர் ஆக்டிங் செய்ய வேண்டும்? நீங்கள் அண்டர்ப்ளே செய்தாலே அதை மிகைப்படுத்தி சொல்ல பலரும் தயாராக இருக்கையில் ஓவர் ஆக்டிங் செய்தால்?? ஹிந்துக்களை ஒருங்கிணைக்கும், ஹிந்துக்களுக்கு அணுக்கமான கட்சி என்பதுடன் நிறுத்திக் கொண்டால் நல்லது! ஆனால் யாரோ ஒரு எம்பி, யாரோ ஒரு சாமியார் இதைப் பேசிவைக்கிறார்கள்! தலைவலி தானாக வந்து சேருகிறது! நண்பர் ஒருவர் இட்ட பதிவை படித்தேன்! கட்சி மிச்சமிருக்கும் நான்காண்டுகளில் (உண்மையில் மூன்றரை) தீவிரமாக ஹிந்துத்துவத்தை அரங்கேற்ற வேண்டுமாம்! விளங்குமா? நான் முன்பே சொன்னாற்போல காங்கிரஸ் கையில் திரும்ப பத்தாண்டுகள் ஆட்சியைக் கொடுக்கும் வழிதான் இது என்பதில் என்னளவில் சந்தேகமே இல்லை !!

இந்தத் தேர்தலுக்குப் பின்பாவது பாஜக தன்னுடைய செயல்பாடுகளை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறேன்! இல்லையென்றால் பீகார்கள் தொடரும் !

எழுதியவர்  அச்சுதன் ஐயங்கார்



5 comments:

  1. "விழலுக்கு இரைத்த நீர்" அவங்க இன்னும் நாங்க தோக்கவே இல்லைன்னு சொல்றாங்கா....நீங்கா என்னான்னா?

    ReplyDelete
  2. ஆணித்தரமான கருத்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. சரியான கருத்தை சொல்லியிருக்கிறார். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. இதை பா.ஜா.கா செய்தது என்று சொல்லத்தக்கது இந்த 1 1/2 ஆண்டுகளில் நடக்கவேயில்லை. மோடி வந்தால் 'இந்துத்வா' வரும் என்ற பிம்பம் இருக்கும்போது, அல்லக்கைகளைக் கடுமையாக அமைதிப்படுத்தியிருக்க வேண்டாமா? வெறும் வாயால் வடை சுட்டால், ஓட்டு எப்படிக் கிடைக்கும்? ஓவர் சவுண்டு உடம்புக்கு ஆகாது. பீகாரில் பிரதமரோ அல்லது பி.ஜெ.பி தலைகளோ சொன்ன எதுவும் நம்பும்படி இல்லை. 1 1/2 வருடத்தில் சொன்ன எதைச் செய்திருக்கிறார்கள் அல்லது அதை நோக்கிச் சென்றிருக்கிறார்கள்? மோடி & கூட்டம் தவறான பாதையில் செல்கிறார்கள். இது ஊருக்குப் போகும் வழி அல்ல.

    ReplyDelete
  5. பதிவு இருக்கட்டும். உங்க banner மேட்டர் என் அண்ணிக்கு தெரியுமா??? யார்கிட்டயோ பழகினதா சொல்றீங்களேன்னு கேட்டேன்!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.