Thursday, March 7, 2013





கலைஞரின் நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு அப்ப உங்களுக்கு?

கலைஞர் இலங்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் அதனை இப்போதுதான் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை படித்ததும்தான் கலைஞர் இவ்வளவு அப்பாவியாக இருந்திருக்கிறார் என்பதை பார்க்கும் போது மிகவும் வியப்பாகவும் இருக்கிறது. அவர் எப்படி ஏமாந்தார் என்பதை மிக தெளிவாகவும் நேர்மையாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் சிலர் இதை இவர் பவர் ஸ்டாரை வைத்து படம் எடுப்பதற்காக எழுதி கதை வசனம் என்று கிண்டலடிக்கிறார்கள். அவர்களை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

கலைஞர் எழுதி வெளியிட்ட அந்த  கதை வசனத்தை (மன்னிக்கவும் வாய்தவறி வந்துவிட்டது  ) அறிக்கையை படிக்காதவர்கள் படிக்க அதனை கிழே வெளியிட்டுள்ளேன். வழக்கம் போல சிவப்பு எழுத்தில் இருப்பவைகள் மதுரைத்தமிழன் எழுதியவைகள்தான்


இறுதிக் கட்டப் போரின் போது, யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இலங்கை அரசு வெளியிட்ட பொய்யான அறிவிப்பை நம்பி, தாம் உண்ணாவிரதத்தைக் கைவிட நேர்ந்ததாக திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

26.4.2009 அன்று விடுதலை புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் .நா.சபை ஆகியவற்றின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்கிறோம். இந்த காலவரையற்ற போர் நிறுத்தம் உடனே அமலுக்கு வரும். இலங்கை ராணுவம் நடத்தி வரும் போரால் தமிழ் மக்கள் அனுபவிக்கும் துன்பம் உச்சநிலையை எட்டியுள்ளது. இலங்கை அரசு போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள்.

26ஆம் தேதி வந்த இந்தத் தகவல்களுக்குப் பின் அன்றிரவு முழுவதும் நான் தூங்கவில்லை. போர் நிறுத்தம் பற்றி இலங்கை அரசு ஏதாவது அறிவித்ததா என்று டெல்லியிலே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டே இருந்தேன்.( இதென்ன கிரிக்கெட் மேட்சா ஸ்கோர் கேட்பது மாதிரி எத்தனை பேர் செத்தார்கள் என்று கேட்பதற்கு) உள்துறை அமைச்சர் .சிதம்பரத்தை பலமுறை தொடர்பு கொண்டேன்.

பிரதமரும் என்னோடு தொடர்பு கொண்டார். ( அவர் தொடர்பு கொண்டார் என்று சொன்ன நீங்கள் அவர் பேசினாரா என்றும் சொல்லி இருக்கலாம் காரணம் இத்தாலி மேடம் ஆர்டர்  தரவில்லையென்றால் அவர் வாய் திறக்காது அல்லவா )வெளிநாடுகளிலிருந்து ஏராளமான தமிழர்கள் என்னை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பேசிக் கொண்டே இருந்தார்கள்.

அதே ஆண்டு ஜனவரி மாதத்தில் நான் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த அதே நாளில் பகல் 11 மணி அளவில் இலங்கை பாதுகாப்பு கவுன்சில் கூடி ஆலோசனை நடத்தியது.

முல்லைத் தீவில் நடத்தப்பட்டு வரும் போர், அதன் தொடர்ச்சியாக நான் உண்ணாவிரதம் இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என்றும், அதன் முடிவில்( கலைஞர் எனது அண்ணன் மாதிரி அவர் உண்ணாவிரதம் இருந்து உடலை வருத்துவது எனக்கு மனக் கஷ்டமாக இருக்கிறது என்று இலங்கை அதிபர் சொன்னாதால் ) இலங்கை வடக்குப் பகுதியில் நடத்தப்பட்டு வந்த போரை முடிவுக்குக் கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு, 12 மணி அளவில் இலங்கை அரசு ஓர் அறிக்கையினை வெளியிட்டது.

இலங்கை அரசு வெளியிட்ட அந்த அறிக்கையின் அடிப்படையில்; அன்றைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி 27.4.2009 அன்று வெளியிட்ட அறிக்கையில் போர் நடவடிக்கைகள் முற்றுப் பெற்று விட்டதென்றும், கனரகத் துப்பாக்கிகள், போர் ஆயுதங்கள் போன்றவை குடிமக்களை பெருமளவிற்குக் கொல்லும் என்பதால் இலங்கை பாதுகாப்புப் படைகள் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.( அதை அப்படியே நம்பிட்டோமுங்க ) குடிமக்களை மீட்பதற்கும், அவர்களைக் காப்பாற்றுவதற்கும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதில் இலங்கைப் பாதுகாப்புப் படைகள் இனி கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டதோடு, அதன் நகல் ஒன்றினையும் (  (எவனோ ஒருவன் பிரதமர் & சோனியா காந்தி அனுப்பிய நகல் போல அனுப்பியதை நீங்க அப்படியே நம்பிட்டீங்களே )நான் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கே அனுப்பி, உண்ணாவிரதத்தை என்னை முடித்துக் கொள்ளும்படி பிரதமரும், சோனியா காந்தியும் கேட்டுக் கொண்டனர். ( உண்ணாவிரதத்தை என்னை முடித்துக் கொள்ளும்படி பிரதமரும், சோனியா காந்தியும் கேட்டுக் கொண்டனரா அல்லது இலங்கையில் உள்ள தமிழர்களை முடித்து கொள்ளும்படி கேட்டு கொண்டனரா என்ற உண்மையை சொல்லி இருக்கலாமே)

அவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலும், மற்றும் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும், நண்பர்களும் நேரில் வந்து உண்ணாவிரதத்தை கைவிடும்படி வலியுறுத்தியதன் அடிப்படையிலும் மதியம் 1 மணி அளவில் நான் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டேன்.

இலங்கை அரசு அறிவித்த போர் நிறுத்தத்தை உண்மையென்று நானும் நம்பி, இந்திய அரசும் அதை நம்பி எனக்குத் தெரிவித்ததால் உண்ணாவிரதத்தை நான் திரும்பப் பெற்றேன்.( உங்களை மாதிரிதான் தமிழர்களும் உங்களின் இந்த அறிக்கையை உண்மையென்று அப்படியே நம்பி விட்டார்கள் )

நாம் நம்பியது மாத்திரமல்ல, அமெரிக்க அரசே அதை நம்பி, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் ராபர்ட் உட் இலங்கை அரசின் அறிவிப்பையும், விடுதலைப் புலிகளின் அறிவிப்பையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.( அமெரிக்காரன் எவனையும் நம்பவே மாட்டான் ஆனால் அவன் தம்பி ராஜபட்சே சொன்னதைதான் நம்பிவிட்டானா ) ஆனால் அதற்குப் பின்னரும் இலங்கை சிங்கள அரசு ராஜபக்சேயின் சிங்கள பேரினவாதப் பிடிவாதத்தினால் களத்தில் நின்ற போராளிகளையெல்லாம் கொன்று குவித்தனர். இன்னமும் அந்தக் கொடுமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

போர் நிறுத்தப்பட்டதாக சிங்கள அரசு பொய் சொன்னதே ஒரு போர்க்குற்றம்தானே?( அது குற்றமாக இருந்தால் அதை அப்படியே அப்பாவியாக நம்பியதும் நீங்கள் செய்த குற்றம்தானே ?) இதற்கு வழி காணத்தான் தற்போது தி.மு.. ஆட்சியிலே இல்லா விட்டாலும்கூட, ‘டெசோஇயக்கத்தை மீண்டும் ஏற்படுத்தி அதிலே நானும், பேராசிரியர் அன்பழகனும், தமிழர் தலைவர் வீரமணி, தொல்.திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், சுப்பு லட்சுமி ஜெகதீசன் உறுப்பினர்களாக இடம்பெற்று அதன் சார்பாக பல போராட்டங்களையும், மாநாடுகளையும், கருத்தரங்குகளையும் நடத்தி வருகிறோம்.( என்னங்க எல்லா வயசானவங்களையும்  கூட்டி இருக்கிறீங்க... இது முதியோர் தின மாநாடு அல்லவைதானே .நல்ல காமெடிங்க.... கருத்தரங்கம் நடத்தி அதில் நன்றாக பேசுபவர்களுக்கு அவார்டு தரப்போறீங்களா என்ன ? இதில் இளைஞர்கள் யாரையும் சேர்க்கவில்லையா?

அந்த வரிசையில்தான் இன்று டெல்லியில்டெசோசார்பில் பல நாட்டுப் பிரதிநிதிகளும், இந்திய நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துகொள்ளும் கருத்தரங்கினை நடத்துகிறோம். அதுமாத்திரமின்றி வரும் 12ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் ( அரசியல் தலைவர்கள் தாங்கள் செய்ய வேண்டிய வேலைகளை எப்போதும் செய்வதில்லைதானே  இதில் வேலை நிறுத்தம் என்று சொல்வதென்ன ) செய்வதென்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.

12ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தை எப்போதும் போல வெற்றிகரமாக ஆக்கித் தர வேண்டியது தமிழகத்திலே உள்ள அனைத்துச் சாராரையும் சேர்ந்ததாகும். ( அது ரொம்ப சிம்பிளுங்க.. உலக நாடுகளில் உள்ள கிரிக்கெட் வீரர்களையெல்லாம் தமிழகத்திற்கு கூட்டி வந்து ஊருக்கு ஊர் அந்த நாள் கிரிக்கெட் மேட்ச் நடத்துங்க. அப்பறம் பாருங்க உங்க வேலைநிறுத்தம் வெற்றி பெறுகிறதா இல்லையா என்று ) இந்த வேலை நிறுத்தம் என்பது நம்முடைய தொப்புள் கொடி உறவு கொண்ட ஈழத் தமிழர்களுக்காக நடைபெறுகிறது என்பதை உணர்ந்து, அதனை வெற்றிகரமான ஒன்றாக ஆக்கித் தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.( இந்த தொப்புள் கொடி உறவுன்ன என்னங்க கொஞ்சம் யாரவது விளக்க முடியுமா? )

மத்திய அரசு இனியும் தாமதிக்காமல் ஜெனீவா நகரத்தில் .நா. மனித உரிமை ஆணையத்திலே இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை முழுமனதாக ஆதரிக்க முன்வர வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்து, அதற்கான அறிவிப்பினை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.(அவர்கள் முழுமனதாக ஆதரிக்கும் வரை மீண்டும் உண்ணாவிரத்தை ஆரம்பியுங்கள். இந்த தடவை முன்பு போல ஏமாந்துவிடாதீர்கள். இந்த தடவை பிரதமர் அல்லது சோனியாவிடம் இருந்து வந்த நகல் என்று யாரும் காண்பித்தால் நம்பாதீர்கள். மத்திய அரசு ஆதரித்தால் அதனை நான் என் வலைத்தளத்தில் வெளியிடுகிறேன் அதனைப் பார்த்த பின் தாங்கள் உண்ணவிரதத்தை கைவிடுங்கள் அது சரியா? முடிந்தால் எனது வலைத்தளத்தில் ஃப்ளோவராக சேர்ந்து விடுங்கள் )

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.


---------------------------------

டிஸ்கி : பிரச்சனைகளை அரசியல் தலைவர்கள் தீர்த்துவிடுவார்கள் என்று நம்பும் இந்தியர்களும், இலங்கை பிரச்சனைக்கு இந்திய தலைவர்கள் உதவுவார்கள் என்று இவ்வளவு மக்களை பலி கொடுத்தும் இன்னும் நம்பும் இலங்கை தமிழர்களும் முட்டாள்களே. இதை சொல்வதற்கு மனதற்கு வலிக்கிறதுதான் இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அன்புடன்
மதுரைத்தமிழன்





2 comments:

  1. நீங்க நேர்மைக்கு பாராட்ட வேண்டும் என்றால் தமிழக அரசியல் தலைவர்களை பாராட்டியிருக்க வேண்டும். எதற்காக கருணாதிக்கு விசேட பாராட்டுகள்.விசேட பாராட்டுக்குரியவர்கள் சீமானும் வைகோவும்.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் வேகநரி, எல்லோருக்கும் திட்டுவதற்கு என்றால் முதலில் கிடைப்பது இந்த கருணாநிதி மட்டும் தான்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.