Friday, January 5, 2024

 புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களின் கவனத்திற்கு
  

avargal unamigal


இலக்கிய உலகில் புதியவர்கள் இன்று கவனிக்கப்படுவது கடினம்.  ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன அவர்களில் நாமும் ஒரு ஆசிரியராக எப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை அறிவது மிகவும் முக்கியம்.

புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் புதிய எழுத்தாளர்களே புத்தகங்களை எழுதி வெளியிட உங்களுக்கு ஆசை இருக்கலாம் .அதன் காரணமாக எழுதியும் வெளியிடலாம். ஆனால் எழுதி வெளியிட்ட புத்தகங்களை, உங்கள் நண்பர்கள் தவிர்த்துப் பலரும் வாங்கி படிக்க நீங்கள் சிறிதளாவது முயற்சிகள் எடுக்க வேண்டும் . அப்படி இல்லை என்றால் வெளியிடுவதில் ஒரு அர்த்தமும் இல்லை.

நீங்கள் ஒரு புத்தகம் எழுதி வெளியிட நினைக்கும் போதே அல்லது அப்படியொரு நினைப்பு மனதில் எழும் போது நீங்கள் புத்தகத்தின் முதல் வரியை எழுத ஆரம்பிக்கும் முன் நீங்கள் செய்ய வேண்டியது , வலைப்பதிவை உருவாக்குவது அவசியம் வலைப்பதிவு என்பது உங்கள் தொழில்முறை திறன்களை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த தகவல் தொடர்பு சேனலாகும்.அதோடு  சோசியல் மீடியா தளங்கள் அனைத்திலும் உங்களுக்கென்று ஒரு கணக்கைத் தொடங்க வேண்டும்.. மக்கள் தங்களுடைய ஓய்வு நேரத்தை இணையத்தில் செலவிடுகிறார்கள் மற்றும் அவர்கள் பெரும்பாலான தகவல்களை ஆன்லைனில் பெறுகிறார்கள் எனபது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.


சோசியல் மீடியா கணக்குகளை துவங்கிய பின்னர்  எழுத்தாளர்கள் மற்றும் அவர்களின் எழுத்தைப் படித்து  விமர்சிப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களை உங்கள் லிஸ்டில் சேர்க்க வேண்டும் அல்லது அவர்களின் சோசியல் மீடியா  பக்கங்களை நீங்கள் பஃலோ செய்ய வேண்டும்.

அடுத்தாக அவர்களின் புத்தகங்களைப் படிக்க வேண்டும் மற்றும் அவர்களின் புத்தக விவாதங்களில் கலந்து கொண்டு உங்கள் கருத்துகளை எண்ணங்களை அழகாக எடுத்துரைக்க வேண்டும். அப்படி நீங்கள் சொல்லும் கருத்துக்கள் பலரைக் கவர்ந்து இழுக்க வேண்டும் , அதுதான் முக்கியம் .இதற்கான திறமை உங்களிடம் இருந்தால்தான் நீங்கள் எழுதும் புத்தகங்கள்மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாங்க முயற்சி செய்வார்கள் .அதுமட்டுமல்ல நீங்கள் யார் என்பதும் உங்கள் கருத்துக்கள் எவ்வளவு செறிவாக இருக்கிறது என்பதை அறிந்து கொள்வார்கள்.

_________________________________________________
 


_________________________________________________

எழுத்தாளர்கள் வலைப்பதிவையும் சமுக இணைய தளங்களில் கணக்கையும்  தொடங்குவதற்கான சில முக்கிய காரணங்கள் இங்கே:

    நீங்கள் தொழில்துறை தலைப்புகளைப் பற்றி எழுதலாம், சிறுகதைகளை இடுகையிடலாம் மற்றும் நீங்கள் ஈர்க்கக்கூடிய மற்றும் உற்சாகமான எதையும் பற்றி உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். வாசகர்கள் பொதுவாக இந்த வகையான உள்ளடக்கத்துடன் இணைகிறார்கள்.  மறந்தும் உங்கள் தளத்தில் அரசியல் பற்றியோ மதம் பற்றியோ தேவை இல்லாமல்  எழுதிப் பதிவிடக் கூடாது இது முக்கியம் .

எதற்கு அனைத்து தளத்திலும் பதிய வேண்டுமென்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் மிகப் பிடிக்கும் உதாரணமாகச் சிலருக்கு பேஸ் புக் சிலருக்கு டிவிட்டர் சிலர்  இன்ஸ்டாகிராம் சிலர் வாட்ஸப் இப்படிப் பல தளங்களைச் சொல்லலாம் .சிலர் சில தளங்களில் மிகப் பிரபலமாக வலம் வருவார்கள் .அதுமட்டுமல்ல ஒவ்வொரு தளமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் வயதினர் அதிகம் பயன்படுத்துவார்கள் .அவர்களைக் கவர இப்படி நாம் பல தளங்களிலும் களமாட வேண்டும். இதையெல்லாம் குறைந்தது ஒரு வருடங்களாகத் தொடர்ந்து செய்து வர வேண்டும் .உங்களின் பெயர் சோசியல் மீடியாவில் பலரும் அறிந்திருக்கும் படி செய்ய வேண்டும்.


உங்கள் படைப்புகளை இலக்கிய இதழ்களுக்குச் சமர்ப்பிக்கவும்  செய்ய முயற்சிகள் செய்ய வேண்டும். ஆன்லைலின் பல தளங்கள் கதைகளை வெளியிடுகின்றன. அந்த தளங்களின் ஆசிரியர்களை தொடர்பு கொண்டு முதலில் உங்களின் சிறுகதைகளை, படைப்புகளை வெளியிட முயற்சி செய்யுங்கள். அப்படி உங்கள் படைப்புகளை ஒரு பத்திரிகைக்கு      சமர்ப்பிக்கும் முன் பிழைகள் இல்லாமல் இருக்க  பலமுறை  கவனமாக படிக்கவும்.    சமர்ப்பிக்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும். ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் அத்தகைய பத்திரிகைகளில் வெளியிடுவதன் மூலம்  அவர்கள் முதல் அங்கீகாரத்தைப் பெறலாம், இது அவர்களின் படைப்பு பாதைகளில் நம்பிக்கையை உணர உதவுகிறது.


    உங்கள் வலைப்பதிவில் மற்றும் சமுக இணைய தளங்களில் மற்றவர்களின்  புத்தகங்களை மதிப்பாய்வு செய்யலாம். இது உங்கள் எழுத்துத் திறனை வெளிப்படுத்தவும் இலக்கியத்தில் நிபுணராக உங்களை நிலைநிறுத்தவும் உதவுகிறது.

இப்படி இதைச் செய்யும் போதே நீங்கள் மெதுவாக நீங்கள் எழுதி வெளியிட நினைத்த நூலை எழுத ஆரம்பிக்கலாம் .அதை அவசர அவசரமாக எழுதாதீர்கள் மிக மெதுவாக நன்றாக யோசித்து யோசித்து எழுதுங்கள். ஒரு அத்தியாயமோ அல்லது ஒரு கட்டுரையையோ எழுதி முடித்தவுடன் அதற்குச் சிறிது இடைவெளிவிட்டு மீண்டும் அதைப் படிக்கும்போது, அதில பல மாற்றங்களைத் திருத்தங்களை நீங்கள் நிச்சயம் கொண்டு வருவீர்கள்.  இப்படிப் பல முறை செய்யும்போது உங்கள் எழுத்தும் எண்ணமும் மிக மெருகூரும். இப்படியாகப் புத்தகம் எழுதி  முடித்தவுடன் அதைச் சில காலம் தொடாமல் அதுபற்றிச் சிந்திக்காமலிருந்துவிட்டு மீண்டும் நீங்கள் அதை எடுத்து படிக்கும்போது அதை எப்படி மேலும் சிறப்பாகச் சொல்லாம் என்று உங்களுக்குத் தோன்றும் .அதை எழுதி அதன் பின் புத்தகங்கள் வெளியிடுங்கள்.

அதன் பின் உங்கள் புத்தகம் பலரின் பேசு பொருளாக இருக்கும். விற்பனையும் அதிகரிக்கும் அப்படி இல்லையென்றால் நீங்கள் வெளியிடும் புத்தங்களை உங்களின் சில நண்பர்கள் விலை கொடுத்து வாங்குவார்கள் .சிலருக்கு நீங்கள் புத்தகங்களை அன்பளிப்பாகப் பார்க்கும்போது கொடுக்க வேண்டும் .அவ்வளவுதான் மீதி கரையான் அரித்துத் தூக்கிப் போடும்  நிலைதான் வரும்.

முதலில் நீங்கள் யார் என்று சமுகத்திற்குத் தெரிய வேண்டும் .அதன் பின்தான் உங்கள் எழுத்துகள் மற்றவர்களுக்குத் தெரியவரும்.

புத்தகம் வெளியிடப்படுவதற்கு முன்பே, விற்பனையை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிடுதல் முக்கியம். உங்கள் புத்தகத்தின் இலக்கு வாசகர்களை அடைய நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை யோசிக்கவும்.  மறக்காமல்  உங்களின் பல்வேறு சோசியல் மீடியா தளங்களில்     உங்கள் புத்தகத்திற்கான வலைத்தளம் அல்லது சமூக ஊடகப் பக்கத்தை உருவாக்கி அங்கு  உங்கள் புத்தகத்தின் சுருக்கத்தை, மதிப்புரைகளை, மற்றும் புதிய தகவல்களைப் பகிரலாம்.

 உங்கள் புத்தகத்தை முன்பதிவு செய்ய வாய்ப்பு வழங்குங்கள். இது உங்கள் வாசகர்களை உற்சாகப்படுத்தவும், வெளியீட்டின்போது விற்பனையை அதிகரிக்கவும் உதவும்.  உங்கள் புத்தகத்தைத் தேர்ந்தெடுத்த எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களுக்கு அனுப்பவும். நேர்மறையான விமர்சனங்கள் உங்கள் புத்தகத்தை வாங்குவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். உங்கள் எழுத்தை எழுத்தாளர்களோ அல்லது விமர்சகர்ளோ விமர்சிக்க நீங்கள் அவர்களோ நல்ல உறவில் இருக்க வேண்டும். இதற்காகத்தான் சோசியல் மீடியாக் கணக்குகளை சிலவருடங்களுக்கு முன் தொடங்கி அவர்களோடு நல்ல நட்பு கொண்டுவர வேண்டும் என்பது


புத்தகம் வெளியிடப்பட்ட பிறகு, விற்பனையைத் தொடர நீங்கள் செய்யக்கூடிய சில விஷயங்கள் இங்கே:

உங்கள் புத்தகத்தை வினியோகஸ்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். உங்கள் புத்தகத்தை அதிக கடைகளில் கிடைக்கச் செய்ய இது உதவும்.உங்கள் புத்தகத்தைச் சமூக ஊடகங்களில் பகிரவும். உங்கள் புத்தகத்தை வாசித்த வாசகர்களிடம் அவர்களின் கருத்துக்களைப் பெறவும்.


உங்கள் புத்தகத்திற்கான நிகழ்ச்சிகள் அல்லது பேச்சுவார்த்தைகளை ஏற்பாடு செய்யவும். இது உங்கள் வாசகர்களுடன் நேரடியாக இணைந்து, உங்கள் புத்தகத்தை ஊக்குவிக்க உதவும்.


முக்கியமாக


உங்கள் புத்தகத்தின் இலக்கு வாசகர்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் யார்? அவர்கள் எதைப் படிக்க விரும்புகிறார்கள்? உங்கள் புத்தகம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.    உங்கள் புத்தகத்தை உயர்தரமாக எழுதவும். உங்கள் எழுத்து தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும், வாசகர்களைக் கவரக்கூடியதாக இருக்க வேண்டும்.    உங்கள் புத்தகத்தை விற்பனை செய்வதில் தீவிரமாக இருங்கள். ஒரு புத்தகத்தை எழுதும்போது நிறைய உழைப்பு தேவைப்படுகிறது, ஆனால் அதை வாங்குபவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் கூடுதல் முயற்சி தேவைப்படுகிறது.

என்னுடைய இந்தப் பதிவு  உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். உங்கள் புத்தகத்தை வெற்றிகரமாக வெளியிடுவதற்கும், உங்கள் வாசகர்களுடன் இணைவதற்கும் நான் வாழ்த்துகிறேன்.

_________________________________________________

AI  செயற்கை நுண்ணறிவு படங்களும் எனது பார்வையும்  


அரசியல்தான் இதுவும் ஒரு தேர்தல் அரசியல்தான்  


பாஜக தலைவர் அண்ணாமலையுடன் 'பிரேமை'லதா விஜயகாந்த நடத்திய கூட்டணி கட்சி பேச்சு வார்த்தை தோல்வியா?  

_________________________________________________
அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. நல்ல ஐடியாக்கள் மதுரை. ஆனால் பொதுவாகவே விலை கொடுத்து வாங்கி வாசிக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது மக்களிடையே. காரணம் வாசிப்பதை விட மீடியாக்களின் பக்கம் திசை திரும்புதலால். நான் அறிந்த வரையில் பெரிய எழுத்தாளர்கள், ஒரளவு பெயர் இருக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்கள் தான் விற்பனையாகும் என்பதே .

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.