Saturday, April 22, 2023

 12 மணிநேர வேலை நேரத் திட்டம் நலம் யாருக்கு?
 

 
@https://avargal-unmaigal.blogspot.com



12 மணிநேர வேலை நேரம் என்பது யாருக்கு நலம் என்று பார்த்தால் நிச்சயம் தொழிலாளிக்கு நிச்சயம் நன்மை இருக்காது, தொழிலாளிக்கு நன்மை பயக்கும் விஷயத்தை கார்போரேட் நிறுவனங்களும், அரசாங்கமும் நிச்சயம் செய்ய முன்வராது என்பது மட்டும் நிச்சயம். இந்த 12 மணி நேர வேலை நேரத் திட்டம் என்பது கம்பெனிகளுக்கு லாபம் தரக் கூடியது. அரசாங்கத்திற்கும் நன்மை தரக் கூடியது . தமிழகம் முன்னேறிய மாநிலமாக  இருக்க வேண்டுமானால் இந்தியா சீனாவைப் போல வர வேண்டுமானால் இந்த சட்டம் மிக அவசியம் . இந்த திட்டம்  நாட்டின் ஒரு பகுதி மக்கள் நலமாக வாழ, ஒரு பகுதி மக்கள் அடிமாடாக இருக்க ஏற்படுத்தப்படும் திட்டம் என்பதைத் தவிர இதில் வேறு ஒன்றுமில்லை


இந்த திட்டம் எல்லா துறைகளிலும் புகுத்தப்படப் போவதில்லை ,சில குறிப்பிட்ட  துறைகளில் முக்கியமாகப்  பொருட்களை உற்பத்தி மற்றும் அதை டெலிவ்ரி செய்யும் துறைகளில் மட்டும்தான் பயன்படுத்தப்படும்... உதாரணத்திற்கு ஆப்பில் போன் போன்ற மின்னணு பொருட்கள் கார் மற்றும் தொழில் துறைக்கான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களைச் சொல்லாம்.


இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் அன்னிய முதலீடுகள் தமிழகத்திற்கு வர  வாய்ப்புக்கள் அதிகம் இல்லையென்றால் இவைகள் குஜராத் உபி போன்ற  பாஜக ஆளும் மாநிலங்களுக்குச் சென்றுவிடும் இதுதான் இந்த திட்டம் கொண்டு வர முக்கிய காரணம் . இதனால் அரசியல் தலைகளுக்கு ஒரு பக்கம் மறைமுக வருமானம் நிச்சயம் உண்டு என்பதாலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்த விரும்புகிறாகள் என்பது உண்மை


அடுத்தாக கார்பொரேட் கம்பெணிகளுக்கு என்ன நன்மை. என்பது பற்றிப் பார்க்கலாம்

அவர்களது  தொழிற்சாலைகள் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் பொருட்களை  தொடர்ந்து  எந்த வித தங்கு தடையின்றி தயார் செய்யும். அதனால் அவர்களது பொருட்கள் உலக  மார்கெட்டில் தடையில்லாமல் கிடைக்கும், அடுத்தாக இந்த தொழிற்சாலைகளில் 8 மணி நேர ஷிப்டில் வேலை நடக்கும் போது முதல் ஷிப்டில் வேலை பார்ப்பவர்களுக்கு சராசரி கூலியும் அடுத்த ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு சில ரூபாய்கள் அதிகமாகவும்  மூன்றாவது ஷிப்டில் வேலை செய்பவர்களுக்கு  இன்னும் சற்று அதிகமாகவும் தருவார்கள் அமெரிக்காவில் இப்படித்தான் தருகிறார்கள் .அப்போதுதான் மூன்றாவது ஷிப்டில் வேலை செய்யத் தொழிலாளர்கள் தயாராக இருப்பார்கள். இப்படி அதிகம் தருவதைத் தவிர்க்கவே இந்த 12 மணி நேர வேலையைக் கொண்டு வருகிறார்கள்.

இந்த 12 மணிநேர வேலை நேரத்தைக் கொண்டு வரும் நிறுவனங்கள் இந்த 12 மணி நேரத்தில் அவர்களின் ஓய்வு நேரத்தைத் தவிர மீதி நேரம் முழுவதும் மிஷின் போல வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள் .ஆரம்பக் காலத்தில் தொடர்ந்து ஒரே வேலையைச் சுறுசுறுப்பாக வேலை செய்பவர்கள் சில காலம் கழித்து பல்வேறு காரணங்களினால்  (மனநலம் உடல் நலம் குடும்ப நலம் ) அந்த வேலையில் தொய்வு ஏற்படும் போது அவர்கள் அந்த வேலையிலிருந்து தூக்கி எறியப்பட்டு புது ஆட்களை அந்த இடத்திற்கு நிரப்பிக் கொள்வார்கள் . இந்த நிறுவனங்களில் யூனியன்கள் இருக்காது அப்படி இருந்தாலும் அது நிறுவனத்துக்கு ஆதரவாகச் செயல்படுவதாகத்தான் இருக்கும் .

இந்த 12 மணி நேர வலை என்பது சிந்தித்து க்ரியேட்டிவாக பண்ணும் வேலையாக இருக்காது ஒரே வேலை நாள் முழுவதும் திரும்பத் திருப்ப செய்வதாகத்தான் இருக்கும். ஆரம்பகாலத்தி ஒரே வேலையைத் தொடர்ந்து செய்வதாக அதில் வேகம் அதிகரிக்கும் .ஆனால் காலப் போக்கில் தொய்வு ஏற்படத்தான் செய்யும் அப்படி தொய்வு ஏற்படும் போது அந்த நிறுவனங்கள் இந்த தொழிலாளிகளைக் கருவேப்பிலையாகப் பயன்படுத்தித் தூக்கி எறியும். அப்போது எந்த நலச சட்டமும் அந்த தொழிலாளிக்கு ஆதரவாக இருக்காது

இந்த நிறுவனங்கள் அனைத்து  இந்தியாவை வளமாக்க வல்லரசு  நாடாக ஆக்க இந்தியா நோக்கி வருவதில்லை இந்திய மக்களின் குறைந்த ஊதிய லேபர் மார்க்கெட்டை எண்ணித்தான் வருகின்றன. அவர்களின் லாபத்தை நோக்கித்தான் வருகின்றன. இந்தியத் தலைவர்களும் மக்களின் நலனைக் கருதிக் கொண்டு இவைகளை அனுமதிப்பதில்லை அவர்களுக்குச் சலுகைகள் வழங்குவதில்லை இந்த நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் வெளிநாட்டு வங்கிகளில் அவர்களின் பேலன்ஸ் உயர்வதற்காகத்தான் அனுமதிக்கிறார்கள்..  

இந்தியாவிற்குள் நுழையும் மேலை நாட்டுக் கம்பெனிகளுக்குதான் என்னென்ன சலுகைகளை அரசாங்கம் வாரி வழங்குகின்றன. வரியில் சலுகை மின்சாரத்தில் சலுகை நிலத்தில் சலுகை ஏன் இந்தியச் சட்டங்களிலிருந்தும் சலுகை இயற்கை வளங்களைப் பயன்படுத்தத் தடையில்லாத சலுகை  இப்படிப் பல சலுகைகளைப் பெற்று லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் தங்கள் லாபத்தை அப்படியே தங்கள் நாட்டிற்கு எடுத்து சென்றுவிடுகின்றன் .அதே சமயத்தில் சட்டதிட்டங்களை மதிக்காமல் எந்த நேரத்திலும் சலுகைகளைப் பெற்று அனுபவித்த பின் தொழிலாளிகளை நடுத்தெருவில் நிற்க விட்டும் செல்லும் நிலைமையும் நாம் கண்கூடாகத்தான் பார்க்ககிறோம் .அவர்கள் சம்பாதிக்கும் லாபத்து ஐம்பது சதவிகிதத்தை மட்டும் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற சட்டத்தை அரசாங்கம் போட்டுத்தான் பார்க்கட்டுமே அதையெல்லாம் செய்து மக்கள் நலனைக் காப்பாற்ற மாட்டார்கள் . இவ்வளவு சலுகைகளையும் இந்திய கம்பெனிகளுக்கு செய்தால் இந்திய நிறுவனங்கள் முன்னேறதா என்ன? அல்லது இந்தியாதான் முன்னேறாதா என்ன? நம்மிடம் என்ன குறை அறிவிலா அல்லது உழைப்பிலா?

இப்படி இந்தியா நோக்கி வரும் நிறுவனங்கள்  பல அளவற்ற சலுகைகளைப் பெற்றாலும்  உலக அரசியல் சூழ்நிலை காரணமாக எந்த நேரத்திலும் தீடிரென்று தங்களது நிறுவனங்களை வேறு நாட்டிற்கு மாற்றிக் கொண்டு சென்றுவிடுவார்கள் அதன் பின் அந்த நாட்டின் மக்களின் கதி?????

கொரோனாவிற்கு காரணம் சீனாதான் என்று காரணம் சொல்லி எத்தனை நிறுவனங்கள் பல நாடுகளுக்கு இடம் மாறுகின்றன என்பதைப் பார்த்தாலே புரியும் அந்த மக்களின் கதி என்ன என்பதைக் கொஞ்சம் யோசித்துத்தான் பாருங்களேன்,

மக்கள் நலம்???

மக்கள் நலம் என்பது கேலிக்குரியதாகத்தான் இருக்கிறது இப்போதே 8 மணி நேர வேலைக்கு செல்லுபவர்களுக்கு அந்த வேலைக்கு செல்லுவதற்காகப் பல மணி நேரங்களைச் செலவிட்டுத்தான் செல்ல வேண்டி இருக்கிறது,  சிறு ஊர்களை தவிர பெரிய மாநகரங்களில் குறைந்தது பயணம் செய்யவே  போக வர 3 மணிநேரம் ஆகிறது , இப்போதே குழந்தைகளைச் சரிவரக் கவனிக்க முடியாமல் போகிறது ,அதனால் குழந்தைகளின் மன நலம் கெடுவதோடு, பெற்றோர்களின் மனநலம் மற்றும் உடல் நலமும் பாதிக்கிறது , இது ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் மிகவும் அதிகமாகப் பாதிக்கும் மற்ற மக்கள் எல்லாம் இவர்களின் உழைப்பால் பலன் பெறுபவர்களாக இருப்பார்கள். இப்படி பலன் பெறுபவர்கள் மட்டுமே இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசிக் கொண்டிருப்பார்கள்  ,.ஒரு சிறு உதாரணம் தொழிலாளர் தின விடுமுறை என்பது உழைக்கும் தொழிலாளர்களுக்காகக் கொண்டு வரப்பட்டது ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர் தினம்  அன்று தொழிலாளர்கள் வேலைக்குச் செல்கிறார்கள் அந்த நிறுவனத்தின் கார்பெரேட் அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் மட்டும்தான்  விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நிஜம் நான் வசிக்கும் அமெரிக்காவிலும் அதுதான் நடக்கிறது,

 12 மணி நேர ஷிப்டை வரவேற்பவர்கள் அனைவரும்  சீனா  போல  இந்தியா  வல்லரசாக வேண்டும் என விரும்புகிறார்கள் என்பதில் எந்தச்  ஒரு சிறு சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்களில் யாரும் இப்படி உடல் உழைப்பில் ஈடுபட்டவர்கள் அல்ல  அவர்கள்தான் அமெரிக்காவிலிருந்து  தமிழகம் வரை பல வித மான ஊடகங்களில் துடித்துக்  கொண்டு இருக்கிறார்கள்.. இப்படிப்பட்ட அனைவரையும் 12  மணிநேர ஷிப்டில் குறைந்தது சில ஆண்டுகளாக் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டுவரும் வரை அவர்களின்  இந்தியா வல்லரசாக வேண்டும் என்ற துடிப்பு அடங்காது என்பதுதான் உண்மை


மக்கள் நலனில் உண்மையிலே அரசாங்கத்திற்கு அக்கறை இருக்குமென்றால் இந்த நிறுவனங்களைப் பெரிய நகரத்தில் நிறுவாமல் அதற்குச் சற்று அருகில் இருக்கும் சிறிய நகரங்களில் அமைக்க வேண்டும், மேலும் இந்த நிறுவனம் செயல்படும் இடத்திற்கு மிக அருகாமையில் தொழிலாளர்களுக்குக் குடியிருப்புகளை அரசாங்கமோ அல்லது அந்த நிறுவனமோ  அமைத்து குறைந்த பட்ச வாடகையில் விட வேண்டும் மேலும் அதற்கு அருகாமையில் அவர்களின் குழந்தைகள் படிக்கப் படிப்பு வசதிகளையும், மருத்துவ நிலையங்களையும், போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் .அப்படிச் செய்தால்தான் அந்த குடும்பம் நலமாக இருக்கு குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியும் அதனால் அந்த குடும்பம் முன்னேரும் சமுகம் முன்னேறும் தொழிலும் வளரும்.


ஆனால் இதை எல்லாம் அரசாங்கம் கொஞ்சம் கூடச் செய்ய முன்வராது என்பது உண்மை

இந்த திட்டத்தால் ஏற்படும்  எதிர்மறை விளைவுகள்: & நேர்மறை விளைவுகள்: என்ன என்பதைச் சுருக்கமாக இங்கு நாம் பார்ப்போம்

எதிர்மறை விளைவுகள்:

 நீண்ட வேலை நேரம் தொழில்துறை செயல்பாடு, போக்குவரத்து மற்றும் ஆற்றல் நுகர்வு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், இது அதிக அளவு மாசு மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவுக்கு வழிவகுக்கும்.

 உடல்நல பாதிப்புகள்: நீண்ட வேலை நேரம் தொழிலாளர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தலாம், இது சுகாதாரச் செலவுகள் அதிகரிப்பதற்கும் வாழ்க்கைத் தரம் குறைவதற்கும் வழிவகுக்கும்.

    வேலை-வாழ்க்கை சமநிலை: நீண்ட வேலை நேரங்கள் மோசமான வேலை-வாழ்க்கை சமநிலைக்கு வழிவகுக்கும், இதன் விளைவாக ஓய்வு, குடும்பம் மற்றும் ஆரோக்கியமான மற்றும் நிலையான வாழ்க்கை முறைக்குப் பங்களிக்கும் பிற செயல்பாடுகளுக்குக் குறைவான நேரம் கிடைக்கும்.

ஒட்டுமொத்தமாக, இந்தியச் சூழலில் 12 மணி நேர வேலையின் தாக்கம், வேலையின் தன்மை, தொழில்துறை மற்றும் இருப்பிடம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தது. அனைவருக்கும் நிலையான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்காக அத்தகைய கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கு முன் சாத்தியமான நன்மைகள் மற்றும் குறைபாடுகளை மதிப்பிடுவது முக்கியம்.

நேர்மறை விளைவுகள்:

    அதிகரித்த உற்பத்தித்திறன்: நீண்ட வேலை நேரம் உற்பத்தித்திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும், இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

    வேலை உருவாக்கம்: நீண்ட வேலை நேரம் அதிக வேலைகளை உருவாக்கலாம், இது வேலையின்மை விகிதங்களைக் குறைக்கவும் இந்தியப் பொருளாதாரத்தை ஆதரிக்கவும் உதவும்.

    மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பு: அதிக பொருளாதார வளர்ச்சியானது, சுற்றுச்சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பொது போக்குவரத்து மற்றும் ஆற்றல் திறன் கொண்ட கட்டிடங்கள் போன்ற உள்கட்டமைப்பில் முதலீடுகளை அதிகரிக்க வழிவகுக்கும்


கடைசியாக இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டுமா எதிர்க்க வேண்டுமா என்றால் உங்களுக்கு வழங்கப்படும் சாய்ஸ் ஆதரிக்க மட்டும்தான் எதிர்க்க உங்களுக்கு சாய்ஸ் இல்லை அப்படி எதிர்த்தாலும் உங்களின் குரலைக் கேட்கக் கூடிய மனநிலையில் அவர்கள் இருக்கப் போவதில்லை.. அவர்களுக்கு எல்லாம் அவர்களின் சுயநலம் மட்டுமே முக்கியம் அதனால் மக்களின் ஒரு பகுதிக் கஷ்டப்படுவதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல

 
@avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்

 

கொசுறு

மோடி இஸ்லாமிய வெறுப்பில் வோட்டை அறுவடை செய்க்கிறார். ஸ்டாலின் மோடி வெறுப்பில் வோட்டை அறுவடை செய்கிறார் அவ்வளவுதான் வித்தியாசம்  இதை தவிர இருவரும் செய்வது அனைத்தும் ஒன்றுதான், சொல்லப்போனால் தமிழக்த்தில் மோடிஜியாக பவனி வர தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின் என்பதுதான் உண்மை

 




1 comments:

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.