Saturday, November 4, 2023

 நான் என் மனைவிக்கு உதவுவதே இல்லை ஆனாலும் எங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க " இது"தான் காரணம்
 

avargal unmaigal




வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்வதில்லை என்பதில் நான் பெருமை அடைகின்றேன் மேலும் நான் அவளுக்கு உதவி செய்வதில்லை என்று அவளும் மகிச்சியாகத்தான் இருக்கிறாள்.


உடனே நீங்கள்  என்னை  பெண்ணிய எதிர்ப்பு, பிற்போக்குதனம், பெண் இன விரோதி என முத்திரை குத்துவதற்கு முன் நான் என்ன சொல்லவருகின்றேன் என்பது புரிந்து கொண்டு அதன் பின் என்ன முத்திரை குத்த வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்து கொண்டு முத்திரை குத்துங்கள் அவரசரப்பாடாதீர்கள்

எங்கள் குடும்ப நண்பர் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு  நேற்று இரவு எங்கள் வீட்டிற்கு வந்தார். அவருக்காக தயாரித்து உணவுகளை பரிமாறி அவருடன் பேசி மகிழ்ந்தோம். நீண்ட நேரம் பேசிய பிறகு அவரை கொஞ்சம் டிவி பார்த்திட்டு இருங்கள் .நான் போய் சமையலறையை ஒழித்துவிட்டு ,பாத்திரங்களை கழிவி விட்டு வருகிறேன் என்றேன்.

அதற்கு, அவர் நான் என்னவோ செவ்வாய்க் கிரகத்திற்கு ராக்க்கெட் அனுப்ப ஒரு ராக்கெட்  தயாரிக்கப் போவது போல ஒரு பார்வை பார்த்து உங்கள் மனைவிக்கு நீங்கள் உதவப் போவதில் மிக மகிழ்ச்சி என்று என்னைப் பாராட்டிவிட்டு, தான் அப்படியெல்லாம் அவர் வீட்டில் செய்வதில்லை காரணம்  என் மனைவிக்கு உதவுவதற்காக கடந்த வாரத்தில் கூட வீட்டைச் சுத்தம் செய்தேன் .ஆனால் அதற்கு அவள் எனக்கு நன்றி கூட சொல்லவில்லை .அதனால் பொதுவாக நான் என் மனைவிக்கு உதவுவதே இல்லை என்றார்.


சமையலறைக்குச் செல்லப் போன நான் அப்படியே அவர் அருகில் வந்து அமர்ந்து, நான் என் மனைவிக்கு உதவுவதற்குப் போகவில்லை .அதுமட்டுமல்ல என் மனைவிக்கு என் உதவி தேவையும் இல்லை... அவளின் தேவை எல்லாம் வாழ்க்கைக்கு ஒரு துணை  ஒரு தோழன்,  ஒரு நல்ல பார்ட்னர் மட்டும்தான் .நானும் அவளும் இந்த  வீட்டின் எங்கள் குடும்பத்தின் பங்கு தரகர்கள் .அதனால் அனைத்து செயல்பாடுகளிலும் எங்கள் இருவருக்கும் பங்குண்டு. அதனால் நான் செய்யும் வீட்டு வேலை என்பது அவளுக்கான உதவி இல்லை .எனது குடும்பத்திற்கான எனது வேலைதான் .அதனால் அவள் எனக்குக்கோ நான் அவளுக்கோ நன்றிகள் சொல்லிக் கொண்டதில்லை என்றேன்.

நான் என் மனைவிக்கு  உதவி செய்வதற்காகச்  சமைக்கவில்லை , ஏனென்றால்  நான்  சாப்பிட , நானும்  சமைக்கின்றேன்.


மேலும் தொடர்ந்து ,நான் என் மனைவிக்கு  உதவி செய்வதற்காக வீட்டைச் சுத்தம் செய்யவில்லை, ஏனென்றால் நானும் அந்த வீட்டில்  வசிக்கிறேன்,  அதனால் நான் அதைச் சுத்தம் செய்கின்றேன்.

சாப்பிட்ட பிறகு  பாத்திரங்களைக் கழுவ நான்  அவளுக்கு உதவி செய்யவில்லை, ஏனென்றால் நானும்தான் பாத்திரங்களைப்  பயன்படுத்துகிறேன்.

நான் என் மனைவிக்கு  உதவுவதற்காக என் குழந்தையைப் பள்ளிக்குச் செல்ல உதவவில்லை . ஏனென்றால் அந்த குழந்தை என்னுடையது. அதனால்  நான் ஒரு தந்தையாக  என் கடமையைச் செய்கின்றேன்.

இப்படி பாத்திரம் கழுவ வீடு துடைக்கத் துணிதுவைக்கக் குழந்தையை ரெடி பண்ண என் மனைவிக்கு உதவி செய்யவில்லை . காரணம் இவையெல்லாம் என்னுடையவைகள் என்பதால் அதை நான் செய்கின்றேன் . நான் ஆண்மகன் என்பதால் இப்படிச் செய்வதை இழிவாக கருதுவதில்லை. அதனால் இந்த வீட்டில் நான் உரிமையுள்ளவனாக இருப்பதால் நான் இதை எல்லாம் செய்கின்றேன் ஆனால் அப்படிச் செய்வது என்பது நான் அவர்களுக்குச் செய்யும் உதவி அல்ல


இறுதியாக நண்பரிடம் மிக மரியாதையாக  அவரது மனைவி வீட்டைச் சுத்தம் செய்தல், துணி துவைத்தல், பெட்ஷீட் மாற்றுதல், குழந்தைகளைக் குளித்தல், சமைத்தல், ஏற்பாடு செய்தல் போன்றவற்றைக் கடைசியாக எப்போது  செய்தார்  என்று கேட்டேன்,

அதற்கு அவர் என் மனைவி எப்போதும் அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார் என்றார்.  சரி அப்படியென்றால் நீங்கள் அதற்கு எல்லாம் அவருக்கு நன்றியைச் சொன்னீர்களா கடைசியாக எப்போது நன்றி சொன்னீர்கள் எனக் கேட்டேன்.

அதற்கு அவர்  நான் எதற்கு என் மனைவிக்கு நன்றி சொல்ல வேண்டும் இது எல்லாம் அவர் செய்ய வேண்டிய வேலைகள் அல்லவா என்று சொல்லி விசித்திரமாக என்னைப் பார்த்தார்

உடனே அவரிடம் நீங்கள் எப்போதாவது  ஒருமுறை தரையைச் சுத்தம் செய்யும் போது, ​​குறைந்த பட்சம்  உங்கள் மனைவியிடம் இருந்து ஒரு நன்றியைப்  பெருமையுடன் எதிர்பார்த்திருக்கிறீர்கள்... அது ஏன்?  நன்றியை எதிர்பார்க்கும் நீங்க அதைப்  அவருக்கும் கொடுக்க வேண்டுமென்று நீங்கள் எப்போதாவது யோசித்ததில்லையா?

ஒரு வேளை, உங்களிடம் இப்படிச் செய்வது எல்லாம்   நமது  கலாச்சாரம்  ஒரு பெண்ணின் பணி என்றும் , ஒரு விரலை அசைக்காமல் இதையெல்லாம்  பெண்கள் செய்ய வேண்டும் என்று  முன்னோர்கள் உங்களுக்குத்  தவறாகக்  கற்பித்திருக்கலாம்.

ஆனால் நம் முன்னோர்கள் பெண்களை அடக்கி வாழ இப்படிக் கற்பித்தது எல்லாம் இந்த காலத்திற்குக் கொஞ்சம் கூட உதவாது

எனவே, நீங்கள் எப்படிப் பாராட்டப் பட வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதே அளவு தீவிரத்துடன்  உங்கள் மனைவியையும் பாராட்டுங்கள்.  அதே நேரத்தில் உங்களுக்கு இணையாக வேலைக்குச் செல்லும்  இந்த காலத்தில் அவளும் இந்த வீட்டின் பார்ட்டனர்தான் உங்களுக்கு இணையானவர்தானே என்று  மதிப்பு கொடுங்கள்

அவள் கையைப் பிடித்து உண்மையான துணையாக நடந்துகொள்ளுங்கள்,  வீட்டிற்கான உங்களது  பங்கை எடுத்துச் செய்யுங்கள், அதைவிட்டுவிட்டு  வெறுமனே சாப்பிட, உறங்க, குளித்து, பாலுறவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வரும் விருந்தினரைப் போல் நடந்து கொள்ளாதீர்கள்...

நமது சமுதாயத்தில் மாற்றம் நம் வீடுகளிலிருந்தே தொடங்குகிறது,  அதை உணர்ந்து நம் குழந்தைகளுக்கு உண்மையான கூட்டுறவு உணர்வைக் கற்றுக்கொடுங்கள் அது அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் .அப்படி இல்லையென்றால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு டைவோர்ஸில்தான் போய் நிற்பார்கள் என்றேன்.

மனைவியிடம் எப்போது மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் என் நண்பருக்கு நான் சொன்னது புரிந்திருக்கும் என் நினைக்கின்றேன். இதுவும் அவர் மண்டைக்குப்  புரியவில்லை என்றால் அவர் வீட்டில் எலியும் பூனையுமாக அவர் இருக்க வேண்டியதுதான்..

இதற்கு மேல் நம்மால் எப்படி அவருக்கு உதவ முடியும்???


என் திருமணம் காதல் திருமணம்தான் திருமணத்திற்கு முன் நாம் எப்படி இருக்க வேண்டும் எப்படி வாழ வேண்டும் குடும்பத்தினரை யாரை எங்கே வைக்க வேண்டும்  என்பதையெல்லாம் முடிவு செய்து கொண்டுதான் நாங்கள் எங்கள் திருமண வாழ்க்கையைத் தொடங்கினோம் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒற்றுமையுடன்தான் வாழ்கின்றோம்.

 எங்களிடம் ஒரு ஒப்பந்தம் உள்ளது. நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் .ஒருவொருக்கொருவர் இடம் கொடுக்கிறோம். அவ்வாறு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். நான் என் மனைவிக்கு உதவி செய்தால் நான் வழக்கத்திற்கு மாறான ஒன்றை செய்கின்றேன் என்றுதான் அர்த்தம் .அது அப்படி இல்லை ஒவ்வொரு கணவரும் செய்ய வேண்டியைத்தான் நான் செய்கின்றேன் எ.ன் மனைவிக்கு பயந்ததோ அல்லது அவளைவிட கிழானவன் என்றோ அர்த்தம் இல்லை. நான் அவளை மதிக்கின்றேன் மற்றும் நான் அதை என் செயல்களால் நிருபிக்கின்றேன்.

"பெருமையாக இருப்பது என்பது நம்மிடையே உள்ள இந்த புரிதலில் இருந்து" வருகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்


3 comments:

  1. நல்ல பதிவு.
    என்றும் இந்த அன்புடன், புரிதலுடன் பெண்மையை மதித்து வாழுங்கள். வாழ்க்கைதுணையின் கையை பிடித்துகொண்டு வாழ்க்கை பயணத்தில் மகிழ்ச்சியாக பயணம் செய்யுங்கள். நம்பிக்கையை ஆதரவை வழங்கி கொண்டே இருங்கள்.வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. மதுரை, சூப்பர் பதிவு போங்க! சரியான பாயின்ட். நம்குடும்பம் என்று நினைத்துவிட்டால் உதவி என்பதை விட நீங்கள் சொல்லும் கருத்துகள்தான். நம் குடும்பத்துக்காக நாம் செய்கிறோம்..

    ரொம்பப் பிடித்ததிருக்கு பதிவு. நீங்கள் எப்பவுமே உங்க குடும்பத்தில் ஈடுபாடுடன் இருப்பவர் என்பது தெரியும். எப்போதும் இப்படியே தொடரட்டும். இப்படியான நல்ல புரிதல் இதுதான் ஒரு குடும்பத்திற்கு மிக மிக அவசியமான ஒன்று.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.