Monday, September 21, 2026

 சீனாவின் AI பாய்ச்சலும், மங்கிவரும் பொருளாதார உண்மைகளும்!
   


 
#AIvsEconomy #TechnologyVsEconomy #PropertyCrisis #ChinesePropertyCrisis #DebtCrisis #YouthUnemployment #FutureOfWork #AIJobs #AIEconomy #TechAndJobs #DigitalEconomy



செப்டம்பர் 24-ம் தேதி அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஷி ஜின்பிங்-டிரம்ப் சந்திப்பு நடக்குது. கிட்டத்தட்ட பத்து வருஷம் கழிச்சு ஷி ஜின்பிங் வெள்ளை மாளிகைக்குப் போகிறார்.  இந்த நேரத்தில் சீனாவை பற்றிய செய்திகள் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது

சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள ஒரு முரண்பாட்டின் மையத்தில் உள்ளது சீனா. ஒருபுறம், அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளையும் மீறி, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் சீனா நிகழ்த்திவரும் பாய்ச்சல் உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், மறுபுறம் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்குச் சீனாவின் உள்நாட்டுப் பொருளாதாரம் கடுமையான சோதனைகளையும் தேக்க நிலையையும் சந்தித்து வருகிறது என்ற தகவல்கள்தான் அங்கிருந்து வருகிறது. தொழில்நுட்பத்தில் விண்ணை முட்டும் லட்சியமும், மறுபுறம் தரைதட்டி நிற்கும் பொருளாதார யதார்த்தமும் இணைந்து சீனாவின் எதிர்காலத்தை எந்தப் பக்கம் நகர்த்தப் போகின்றன என்பதை நான் படித்து அறிந்த வகையில் இங்கே  மிக எளிமையாக  எனக்கு தெரிந்த வகையில்  பகிர்கின்றேன்


அமெரிக்கா சிலிகான் பள்ளத்தாக்கில் கோடிக்கணக்கான டாலர் முதலீடுகளை நம்பியிருக்க, சீனா முற்றிலும் மாறுபட்ட மற்றும் சவாலான ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்தது.   அமெரிக்காவின் அதிநவீன சிப் தடையை மீறி, சீன ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாக்கிய DeepSeek, Kimi  போன்ற மாடல்கள் உலகத் தொழில்நுட்பச் சந்தையையே உலுக்கியுள்ளன. குறைந்த செலவில் இயங்கக்கூடிய இந்த மாடல்கள், மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்திற்கு நேரடிச் சவாலாக மாறியுள்ளன. அதுமட்டுமல்லாமல் வெறும் கேளிக்கைக்காக அல்லாமல், உற்பத்தித் துறை, மின்சார வாகனங்கள் (EV), மற்றும் விநியோகச் சங்கிலி மேலாண்மை (Supply Chain) ஆகியவற்றில் தொழில்சார் பயன்பாடுகளாக AI-ஐ ஆழமாகப் பதித்து வருகிறது பெய்ஜிங். 


தொழில்நுட்பத்தின் காரணமாக  ஒருபுறம் ஒளிர்கிறதென்றால், மறுபுறம் சீனாவின் அடிமட்டப் பொருளாதாரம் மிகப் பெரிய பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.  சீனாவின் மிகப்பெரிய பொருளாதார எஞ்சினாக இருந்த ரியல் எஸ்டேட் மற்றும் சொத்துச் சந்தை கடுமையாகச் சரிந்துள்ளதால், நடுத்தர மக்களின் சொத்து மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.  ஊதியத் தேக்கம் மற்றும் நுகர்வு மந்தநிலை காரணமாக  மக்களிடம் பணப்புழக்கம் இல்லாததால் உள்நாட்டுத் தேவையும் நுகர்வும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதீத உள்நாட்டுக் போட்டியின் காரணமாக  லாபத்தைப் பற்றிய கவலை இல்லாமல் நிறுவனங்கள் தங்களுக்குள்ளேயே விலையைக் குறைத்து அடித்துக்கொள்வது, பல வணிகங்களை நஷ்டத்திற்குள்ளாக்கி வருகிறது. இதனால் வேலைவாய்ப்பும் ஊதியமும் மேலும் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது.


தற்போதைய நிபுணர்களின் ஆய்வுகளின்படி, சீனா தற்போது ஒரு இருமுனைப் பொருளாதாரமாக மாறி வருகிறது . ஒரு முனையாக மின் வாகனங்கள், சூரிய சக்தி தளங்கள், மற்றும் அதிநவீன செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் உலகை வெல்லத் துடிக்கும் இலட்சியமிக்க அரசு ஆதரவு பெற்ற பெருநிறுவனங்கள் என்றும் மறுமுகமாக சொத்துச் சந்தை சரிவு மற்றும் விலைப்போட்டியால் நசுக்கப்பட்டு, வாங்கும் சக்தியை இழந்து தவிக்கும் சாதாரணக் குடிமக்கள் என்பதாக இருக்கிறது

சீனாவின் வீடுகள் விற்கவில்லை இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகள் இல்லை நடுத்தர மக்கள் தங்களது கையில் இருக்கும் பணத்தைச் செலவழிக்கவே பயப்படுகிறார்கள். உள்ளூர் அரசுகளோ கடனில் திணறுகின்றன. அதாவது, சீனா தன் கையில் ஒரு அதிநவீன ரோபோட்டைத் தூக்கி வைத்துக் கொண்டு பெருமை பேசுகிறது . ஆனால் அடிவயிற்றில் அடி வாங்கிய பொருளாதாரத்தை எப்படித் தூக்கி நிறுத்துவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தொழில்நுட்பம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், அன்றாடம் வியாபாரம் நடக்கும் சந்தைகளிலும், மக்களின் பாக்கெட்டுகளிலும் பணம் புழங்கினால்தான் அந்த நாடு உண்மையாக வளரும்.

இப்போது சீனா எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை மக்கள் மத்தியில் நம்பிக்கை இல்லாததுதான். முன்பு போல ரியல் எஸ்டேட் கொடிகட்டிப் பறக்கவில்லை, தொழிற்சாலைகள் முன்பு போல் லாபம் தரவில்லை. மக்கள் விலைக் குறையும் என்று காத்திருந்து கடைக்குப் போகாமல் காசைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் வியாபாரம் முடங்குகிறது. ஏ.ஐ துறை சில திறமையான பொறியாளர்களுக்கு வேண்டுமானால் நல்ல சம்பளம் தரலாம்; ஆனால் கோடிக்கணக்கான சாதாரண மக்களுக்கு அது நேரடியாகச் சோறு போடுவதில்லை. ஏற்றுமதியை மட்டுமே நம்பி உலக நாடுகளுக்கே பொருட்களை அள்ளித் தெளித்தால், உள்ளூரில் மக்கள் வாங்கும் சக்தியை இழக்கும்போது அது மிகப்பெரிய வர்த்தகச் சண்டையாக மாறிவிடும். 

அரசாங்கத்தின் ஒட்டுமொத்த கவனமும் மூலோபாயத் தொழில்நுட்பங்கள் மற்றும் உலகளாவிய ஆதிக்கத்தின் மீதே இருப்பதால், உள்நாட்டு மக்களின் வாழ்வாதார மேம்பாடு பின்தங்க நேரிட்டுள்ளது. 

அமெரிக்காவுடனான மூலோபாயப் போட்டியில் வெல்வதற்காக சீனா தனது ஒட்டுமொத்த மூலதனத்தையும் உயர் தொழில்நுட்பங்களில் குவித்து வருகிறது. ஆனால், உள்நாட்டு நுகர்வுச் சந்தையை வளர்க்காமல், உற்பத்தி செய்யும் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மட்டுமே நம்பியிருப்பது நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

செயற்கை நுண்ணறிவில் சீனா நிகழ்த்தும் இந்த மாபெரும் பாய்ச்சல், அதன் பொருளாதாரத் தேக்கத்தை மறைக்கப் போதுமானதா அல்லது அந்தப் பாய்ச்சலே நாட்டின் ஒட்டுமொத்த சமநிலையை மாற்றிவிடுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும்!

எனவே, ஷி ஜின்பிங் அமெரிக்காவுடன் என்னதான் தொழில்நுட்ப ஒப்பந்தங்கள் பேசினாலும், சீனக் குடும்பங்களின் முகத்தில் மீண்டும் நிம்மதியான புன்னகை திரும்பினால்தான் அந்த டிராகன் நிஜமாகவே உயரே பறக்க முடியும்.

சீன டிராகனுக்கு AI இறக்கை காலில் கடன்சங்கிலி! இந்திய வேலைகளுக்கு ?  https://avargal-unmaigal.blogspot.com/2026/09/ai-chinaeconomy-artificialintelligence.html


அன்புடன்
மதுரைத்தமிழன்

#AIvsEconomy, #TechnologyVsEconomy, #PropertyCrisis, #ChinesePropertyCrisis, #DebtCrisis, #YouthUnemployment, #FutureOfWork, #AIJobs, #AIEconomy, #TechAndJobs, #DigitalEconomy, #சீனா, #செயற்கைநுண்ணறிவு, #ChinaEconomy, #DeepSeek, #Geopolitics, #FutureOfWork, #MaduraiTamilan

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.