Sunday, September 6, 2026

 மனசு செய்யுற மாயாஜாலம்
    

#Overthinking #MentalPeace #Mindset #SelfCare #TamilQuotes #LifeLessons #Psychology #RelationshipAdvice #SelfImprovement #InnerPeace #TamilArticle #MotivationTamil


ஒரு  'ப்ளு டிக்' விழுந்ததுக்குப் பிறகு நம்ம வாழ்க்கையைப் பற்றிய தீர்ப்பை மனசு எப்படி எழுதிவிடுது.

இரவு 10:30 மணி.  வாட்ஸ்அப்பில் ஒருவருக்கு முக்கியமான மெசேஜ் அனுப்புகிறோம். 'ப்ளு டிக்' விழுகிறது.  நம்க்கு தெரிகிறது அவர் படித்துவிட்டார் என்று.. ஆனால் பதில் இல்லை. முதல் இரண்டு நிமிடம் பரவாயில்லை... பிஸியாக இருப்பாரு   என நினைக்கிறோம்  ஆனால் ஐந்து நிமிடம் கழித்து மனசு மெதுவாக அதன் வேலையை ஆரம்பிக்கும். எதுக்கு பதில் வரல நாம் ஏதாவது தப்பா சொல்லிட்டோமா  அல்லது  நம்  மேல கோபமா   அல்லது வேண்டுமென்றே தவிர்க்கிறாரா  நாம் அவருக்கு அவ்வளவு முக்கியமில்லையா .

பத்து நிமிடத்தில், நடந்தது ஒரு பதில் வராத மெசேஜ் மட்டுமே. ஆனா நம்ம மனசு அதுக்கு கதை எழுதி, வசனம் எழுதி, பின்னணி இசை போட்டு, நம்மையே கதாநாயகனாக்கி, கடைசியில் நம்மையே காயப்படுத்திவிடும்.

அடுத்த நாள் அவர் போன் செய்து சொல்வார்  நேத்து ராத்திரி திடீர்னு உடம்பு சரியில்ல பா… டாக்டர்கிட்ட போயிட்டு வந்ததும் தூங்கிட்டேன் என்று அப்போதான் புரியும்... நம்மை காயப்படுத்தியது அவர் பதில் அனுப்பாதது இல்லை அவர் அமைதியாக இருந்த இடத்தில் நம் மனசு எழுதிய கதை என்று.

காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கப் போற வரைக்கும் நம்ம மனசு ஓயாமல் ஏதோ ஒரு கதையைச் சொல்லிக்கிட்டேதான் இருக்கு.

நம் மேனேஜர் சொல்வார் இந்த வேலையை இன்னும் கொஞ்சம் கவனமா  நீங்க செஞ்சிருக்கலாம். அவர் அந்த வேலையைப் பற்றிதான் சொல்லி இருப்பார். ஆனா நம் மனசு உடனே மொழிபெயர்க்கும்.

நாம்  சரியில்லை. நமக்கு சரியா வேலை  செய்ய தெரியல எல்லாரும் நம்மைப் பற்றி மோசமா நினைக்கிறாங்க.  நம் வேலைக்கே ஆபத்து வந்துடுச்சு. உண்மையில் பிரச்சினையின் பெரும்பகுதி வெளியே இல்லை. நடந்த விஷயத்தை விட, அதற்கு நம் மனசு கொடுக்கும் அர்த்தம்தான் நம்மை அதிகமாகக் காயப்படுத்துகிறது.

மனசு நம்ம எதிரி இல்லை. அது நம்மை ஆபத்திலிருந்து காப்பாற்றத்தான் எப்போதும் தயாராக இருக்கும் காவலாளி. ஆனா சில காவலாளிகளுக்கு சந்தேகம் அதிகம். வீட்டுக்கு வந்த உறவினரையே திருடன் என்று நினைத்துவிடுவார்கள் அல்லவா நம் மனசும் சில நேரம் அப்படித்தான்.

யாராவது அமைதியாக இருந்தால், ஏதோ பிரச்சினை என்று சொல்லும்.யாராவது விமர்சித்தால்,  நமது  தோல்வி என்று சொல்லும். மற்றவர் சந்தோஷமாகப் புகைப்படம் போட்டால்,  நம் வாழ்க்கை மோசம் என்று சொல்லும். அது சொல்வதெல்லாம் உண்மை இல்லை. ஆனா நாம் அதை உண்மை என்று நம்பிவிட்டால், அது நம் நாளை முழுவதும் நடத்த ஆரம்பித்துவிடும்.

இதோ  நான் வாழ்க்கையில் பார்த்து, படித்து,  அறிந்து , உணர்ந்து  , கொஞ்சம் காயப்பட்டு, கொஞ்சம் கற்றுக்கொண்ட மனசின் சில மாயாஜாலங்கள் உங்களின் பார்வைக்காக


1. பதில் வராத இடத்தை மனசு பயத்தால் நிரப்பும் ஒரு மெசேஜ்க்கு பதில் வரவில்லை என்றால், உண்மையில் நமக்குத் தெரிந்தது ஒன்றுதான். அவர் இன்னும் பதில் அனுப்பவில்லை. அவ்வளவுதான். ஆனா அதற்கு மேல் சேர்க்கப்படும் அனைத்தும் பெரும்பாலும் நம் ஊகம். என்னைத் தவிர்க்கிறார். இந்த நட்பு முடிந்துடுச்சு.என்னை மதிக்கவே மாட்டார். இந்த ஊகங்கள் தான் மனசை அதிகம் சோர்வடைய வைக்கும். அடுத்த முறை உங்களிடம் நீங்களே சொல்லுங்கள் . எனக்கு முழு உண்மை தெரியாது. நான் இப்போ ஊகிக்கிறேன். இந்த ஒரு வரி,  நம் மனசு ஓடும் வேகத்தைக் குறைக்கும்.

 2. விமர்சனம் ஒரு திருத்தம்  மனசு அதைத் தீர்ப்பாக மாற்றும் . இந்த display இன்னும் neat-ஆ இருக்கலாம்.  இந்த count-ஐ மறுபடியும் check பண்ணுங்க. இந்த வேலை கொஞ்சம் கவனமா செய்யணும். இப்படி மேனேஜர் சொல்வது  ஒரு சிறு திருத்தம். ஏன்னா மேனஜேர் என்றால் அப்படித்தான் அவளின் அனபவதின் காரணமாக சில திருத்தங்கள் சொல்லுவார்கள் ஆனா சிலருக்கு அது மாலை வரை மனசுக்குள் ஓடிக்கொண்டே இருக்கும் .எனக்கு எதுவுமே சரியா வரல. அவர் என்னை நம்ப மாட்டார். நான் இதுக்குத் தகுதியே இல்ல.

ரு வேலையில் குறை இருந்தால், அந்த வேலையை சரி செய்யலாம். ஆனா நான் குறையானவன் என்று முடிவு செய்துவிட்டால், அதைச் சரி செய்வது கஷ்டம்.

விமர்சனம் வந்தால் இரண்டு கேள்விகள் மட்டும் போதும்  இதில் நான் சரி செய்யக்கூடியது என்ன? இதில் என் மனசு தேவையில்லாமல் சேர்த்துக்கொண்ட கதை என்ன. முதல் கேள்வி உங்களை வளர்க்கும். இரண்டாவது கேள்வி உங்களைக் காப்பாற்றும்.

3. சரி என்ற ஒரு வார்த்தைக்கு மனசு ஐந்து அர்த்தம் போடும் .நீங்கள் ஒரு விஷயம் சொல்கிறீர்கள். எதிரில் இருப்பவர், சரி என்கிறார். அவ்வளவுதான்.

ஆனா குரல் கொஞ்சம் குளிர்ச்சியா இருந்தால், முகம் சற்று மாறி இருந்தால், நம் மனசு உடனே விசாரணை ஆரம்பிச்சிடும் .என் மேல கோபமா நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா என்னைப் பிடிக்கலையா ஒவ்வொரு முகபாவனையையும் உங்கள் வாழ்க்கையின் ரகசியக் குறியீடாகப் படிக்காதீர்கள். சில நேரம் அவர்கள் சோர்வாக இருப்பார்கள். சில நேரம் வேறு பிரச்சினையில் இருப்பார்கள்.சந்தேகம் தொடர்ந்து உறுத்தினால், ஊகிக்காதீர்கள். மெதுவாகக் கேளுங்கள்.
நீங்க சரியா இருக்கீங்களா  நான் ஏதாவது தவறா பேசிட்டேனா என்று தோணிச்சு.  பல உறவுகள் சண்டையால் உடைவதில்லை. பேசாமல் ஊகித்ததால் குளிர்ந்து போகின்றன.

4. சில நேரம் நம்ம கோபம் தற்போதைய விஷயத்துக்காக இல்லை 

குழந்தை பாலைச் சிந்திவிட்டது. வீட்டில் ஒருவர் பொருளை எடுத்த இடத்தில் வைக்கவில்லை. ஆபீஸில் ஒருவர் அதே கேள்வியை மூன்றாவது முறையாகக் கேட்டார். நாம் வெடித்துவிடுகிறோம். பிறகு நமக்கே தோன்றும்: இதுக்காக இவ்வளவு கோபப்பட வேண்டியதா?வேண்டியதில்லை. அந்தக் கோபம் பால் சிந்தியதற்காக மட்டும் இல்லை. நாள் முழுக்க யாரும் கவனிக்காத உழைப்புக்காக இருக்கலாம். வேலை அழுத்தமாக இருக்கலாம். யாரும் நம்மை புரிஞ்சுக்கலையே என்ற வலியாக இருக்கலாம்.

கோபம் வரும்போது உடனே பதில் சொல்லாதீர்கள். ஒரு நிமிடம் நின்று கேளுங்கள் .நான் உண்மையில் எதற்காக கோபப்படுகிறேன் சில சமயம் பதில், நம்ம நினைத்ததைவிட ஆழமாக இருக்கும்.

5. மற்றவர்களின் புகைப்படத்தைப் பார்த்து உங்கள் வாழ்க்கையைத் தீர்ப்பளிக்காதீர்கள் .பேஸ்புக்கில்  நன் நண்பர்களின் குடும்பப் படம். அனைவரும் சிரிக்கிறார்கள். நல்ல வீடு. நல்ல உடை. குழந்தைகள் சந்தோஷம். கணவன்-மனைவி சிரிப்பு. அதைப் பார்த்து,  ஹும்ம்ம் எல்லாருக்கும் வாழ்க்கை நல்லா இருக்கு. நமக்கு மட்டும் ஏன் இப்படியிருக்கு என்று தோன்றலாம்.

ஆனா ஒரு புகைப்படம் வாழ்க்கை இல்லை. அந்தப் படத்துக்கு அரை மணி நேரம் முன்பு அவர்கள் சண்டை போட்டிருக்கலாம் ஏன் திமமும் சண்டை சச்சரவுகள் இருக்கலாம் ஆனால் பொது வெளியில் ஹோட்டலில் அதுவும் புகைப்படம் எடுக்கும் நேரத்தில் அப்படி யாரும் எடுக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் வெளியிட்ட புது கார் புகைப்படத்திற்கு  பின்னால் கடன் தவணை இருக்கலாம். வெளிநாட்டுப் பயணத்துக்கு பின்னால் பல வருட சேமிப்பும், சொல்லப்படாத கவலைகளும் இருக்கலாம்.

நாம் மற்றவர்களின் சன்னல் வழியே பார்க்கும் வாழ்க்கையோடு, நம் வீட்டுக்குள் இருக்கும் முழு வாழ்க்கையை ஒப்பிடுகிறோம். அது நியாயமா? உங்களுடைய போட்டி நேற்றைய உங்களோடு மட்டுமே இருக்கட்டும்.

6. எல்லோருக்கும் கிடைக்க முயற்சிக்கும்போது, உங்களுக்கே நீங்கள் கிடைக்காமல் போகலாம்

யாராவது உதவி கேட்டால் உடனே சரி  என்று சொல்வது. யாராவது அழைத்தால்  உடனே செல்லவது . ஆபீஸில் கூடுதல் வேலை கொடுத்தால்  மறுக்காமல் செய்வது. வீட்டில் எல்லோருடைய பிரச்சினையையும் காது கொடுத்து கேடபதும். இப்படி எல்லோருக்கும் நல்லவராக இருப்பவர்கள் ஒரு நாள் உள்ளுக்குள் ரொம்ப காலியாகிவிடுவார்கள். யாரிடமும் பேச மனசு வராது. சிறிய சத்தமும் எரிச்சலாக இருக்கும். அது நீங்கள் கெட்ட மனிதர் ஆகிவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறி இல்லை. நீங்கள் உங்களுக்கான இடமே இல்லாமல் வாழ்ந்துவிட்டீர்கள் என்பதற்கான அறிகுறி.

இப்போ என்னால முடியாது. எனக்கு கொஞ்சம் நேரம் தேவை. நான் யோசிச்சு சொல்றேன். இந்த மூன்று வாக்கியங்கள் சுயநலம் இல்லை; சுயமரியாதை.

 7. யாரும் பாராட்டாத நாளில் கூட உங்கள் உழைப்பு வீணாகாது

ஒரு வீட்டில் தினமும் யாரோ ஒருவர் அமைதியாக நிறைய வேலை செய்வார். சமைப்பார். சுத்தம் செய்வார். குழந்தைகளை கவனிப்பார். பில் கட்டுவார். ஆனா யாரும் நீ ரொம்ப கஷ்டப்படுற என்று சொல்லாமல் ஒரு நாள் முடிந்துவிடும். அப்போ மனசு கேட்கும். நான் செய்றதுக்கு யாருக்காவது மதிப்பு இருக்கா  இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் அதை வார்த்தையாகச் சொல்லத் தெரியாது. யாரும் பாராட்டவில்லை என்பதற்காக உங்கள் உழைப்பு அர்த்தமற்றதாக ஆகிவிடாது.

ஆனா அமைதியாக எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இருக்கவும் வேண்டாம்.  நான் ரொம்ப சோர்வா இருக்கேன். கொஞ்சம் உதவி வேணும். இந்த ஒரு வரியைச் சொல்லக் கற்றுக்கொள்வதும் மனநலத்தின் ஒரு பகுதி.

 8. இரவு தூக்கம் இல்லாத நேரத்தில் வாழ்க்கையைத் தீர்மானிக்காதீர்கள் .இரவு 1 மணி. தூக்கம் இல்லை அப்போது பழைய தவறுகள் எல்லாம் நினைவுக்கு வரும். அடுத்த மாத செலவு நினைவுக்கு வரும். யாரோ சொன்ன ஒரு வார்த்தை நினைவுக்கு வரும். எதிர்காலம் முழுவதும் இருட்டாகத் தெரியும். அந்த நேரத்தில் மனசு சொல்வதை வைத்து வாழ்க்கையைத் தீர்மானிக்காதீர்கள். அது உங்கள் வாழ்க்கையின் முழு உண்மை அல்ல. அது தூக்கமில்லாத மூளையின் அவசரக் கூட்டம். 

முடிந்தால் தூங்கிவிட்டு காலையில் பாருங்கள். பிரச்சினை மறைந்துவிடாமல் இருக்கலாம்; ஆனால் அதை பார்க்கும் மனசு மாறிவிடும்.

 9. எல்லா மனிதர்களையும் புரியவைக்க முடியாது நாம் நேசிக்கும் சிலரிடம் நம் வலியைப் புரியவைக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்வோம். நான் சொல்றது உங்களுக்கு ஏன் புரியல எத்தனை முறை இதைப் பற்றி பேசுறது நான் காயப்படுறேன் என்று தெரியலையா. சிலர் புரிந்துகொள்ளத் தெரியாமல் இருப்பார்கள். சிலர் புரிந்துகொள்ள விரும்ப மாட்டார்கள்.  இதை ஏற்றுக்கொள்வது கஷ்டம். ஆனா ஒரே கதவை தினமும் தட்டிக்கொண்டே இருந்து, அந்தக் கதவு திறக்காது என்பதையும் ஒருநாள் புரிந்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட இடங்களில் அவர்களை மாற்ற முயல்வதைவிட, உங்களைப் பாதுகாப்பது முக்கியம்.

 10. தன்னம்பிக்கை பெரிய பேச்சில் பிறப்பதில்லை ஒருநாள் நான் பெரிய ஆளாகணும் என்று நினைப்பது நல்லது. ஆனா அதற்கு முன்னால், இன்று உங்களுக்கே கொடுத்த ஒரு சின்ன வாக்குறுதியைக் காப்பாற்றுங்கள். 

காலை 10 நிமிடம் நடப்பேன். இந்த வாரம் செலவை எழுதுவேன். இன்று தேவையில்லாமல் கோபப்பட மாட்டேன். தூங்குவதற்கு முன் மொபைலை வைப்பேன். இந்தச் சின்ன விஷயங்களை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, மனசு மெதுவாக ஒரு விஷயத்தை நம்ப ஆரம்பிக்கும் என்னால் என்னைக் கவனித்துக்கொள்ள முடியும். தன்னம்பிக்கை என்பது கண்ணாடி முன் நின்று சொல்லும் வசனம் இல்லை. உங்களுக்கே நீங்கள் நம்பகமானவராக மாறுவது.

11. மனசு எதிர்காலத்தை கணிக்காது; பயத்தை மட்டும் காட்டும்

நான் தோற்றுடுவேன்.எல்லாம் கெட்டுப் போயிடும்.அவங்க என்னை ஏற்றுக்க மாட்டாங்க. இந்த எண்ணங்கள் எதிர்காலத்திலிருந்து வந்த தகவல்கள் இல்லை; பயந்த மனசு காட்டும் எச்சரிக்கைகள். அடுத்த முறை இப்படி தோன்றினால், இது நடக்கும் என்று சொல்லாதீர்கள். இப்படி சொல்லுங்கள்:

இது நடந்தால் என்ன செய்வேன் என்று என் மனசு பயப்படுது.  அப்போது பயம் பெரிய சுவராகத் தெரியாது; சமாளிக்க வேண்டிய ஒரு விஷயமாகத் தெரியும்.

 12. உதவி கேட்பது பலவீனம் இல்லை நான் யாருக்கும் பாரமா இருக்கக் கூடாது என்று நினைத்து, பலர் தங்கள் வலியை உள்ளுக்குள் பூட்டி வைக்கிறார்கள். வெளியில் சிரிப்பார்கள். வேலை செய்வார்கள். ஆனா இரவில் தனியாக இருக்கும்போது மனசு தாங்க முடியாமல் போகும். 

நீண்ட நாட்களாக தூக்கம், பசி, வேலை, உறவுகள் எல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறதா? மனம் எப்போதும் கனமாக இருக்கிறதா உங்களை காயப்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லது வாழவே வேண்டாம் என்ற எண்ணம் வருகிறதா

தனியாகச் சுமக்க வேண்டியதில்லை.  அனுபவம் மிகுந்த க்டும்பத்தில் நம்பிக்கையான ஒருவரிடம் பேசுங்கள்.  அல்லது மனநல நிபுணரிடம் உதவி கேளுங்கள். உதவி கேட்பது உடைந்துவிட்டதன் அடையாளம் இல்லை; நீங்கள் உங்களை இன்னும் கைவிடவில்லை என்பதற்கான தைரியமான சான்று.

மன அமைதி என்பது பிரச்சினைகளே இல்லாத வாழ்க்கை அல்ல. நடந்த விஷயத்தையும், அதைப் பற்றி நம் மனசு எழுதும் கதையையும் பிரித்துப் பார்க்கக் கற்றுக்கொள்ளும் வாழ்க்கை.

இதை எழுதுவது புத்தகத்தில் படித்த சில வரிகளை உங்களிடம் சொல்லுவதற்காக இல்லை. நானும் பல நேரங்களில் மனசு எழுதிய கதைகளை நம்பி காயப்பட்டிருக்கிறேன். பிறகு தான் தெரிந்தது  எல்லா எண்ணங்களும் உண்மை இல்லை என்று.

இவைகள் வாழ்க்கையை மாற்றும் பெரிய ரகசியங்கள் இல்லை. தினமும் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றும் எளிய நிஜங்கள். அவ்வளவுதான்.

இதைப் படிக்கும்போது உங்கள் மனசுக்குள் யாராவது ஒருவரின் முகம் வந்திருந்தால், இந்தப் பதிவை அவர்களுக்கும் அனுப்புங்கள். சில நேரங்களில் நாம் பகிரும் ஒரு நல்ல வார்த்தை, ஒருவரின் பெரிய மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.


சனிப்பிரதோஷமும்... சர்க்கரை வியாதி சங்கமமும்!   https://avargal-unmaigal.blogspot.com/2026/09/satire-weddinganniversary-diabeticfood.html


அன்புடன்
மதுரைத்தமிழன்

#Overthinking #MentalPeace #Mindset #SelfCare #TamilQuotes #LifeLessons #Psychology #RelationshipAdvice #SelfImprovement #InnerPeace #TamilArticle #MotivationTamil #உளவியல் #மனசு #மனஅமைதி #வாழ்க்கைஉண்மைகள் #மனஅழுத்தம் #சுயமுன்னேற்றம் #சிந்திக்கச்_சில_வரிகள் #வாழ்க்கைத்_தத்துவம் #மனநலம் #உறவுகள் #சுயமரியாதை #தன்னம்பிக்கை #அனுபவம்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.