Sunday, July 28, 2019

ஜனநாயகத்தின் வீழ்ச்சியை குறிக்கும் 2 சிக்கல்கள்

30 ஆண்டு அயல்நாட்டு தொழில்முறை வாழ்க்கை, அது வழங்கிய சிறந்த அனுபவத்திற்கு பின்னரே நான் தேர்தல் அரசியலுக்குள் இறங்கினேன். என்றேனும் நேரம் வாய்த்தால் அதைப்பற்றி விரிவாக எழுதுவேன் என நம்புகிறேன். தற்போது ஜனநாயகத்தின் வீழ்ச்சியை குறிக்கும் 2 சிக்கல்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முதலாவதாக சட்டமன்றத்தின் பங்களிப்பு எந்தளவு சுருக்கப்பட்டுள்ளது என்பதற்கான புள்ளிவிவரத்தை காணலாம். ஒரு மாதகாலம் நடைபெற்ற, ஜூலை 20ல் முடிந்த, மானிய கோரிக்கை மீதான அமர்வின் கடைசி நாளன்று சில மணி நேரத்தில் தமிழக சட்டமன்றம் 16 புதிய மசோதாக்கள் & சட்ட திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது.


அவற்றில் 4 மசோதாக்கள் மீதான விவாதத்திற்கு மொத்தம் 12 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டது. நிறைவேற்றப்பட்ட 16ல் 13 மசோதாக்களின் பிரதிகள் அமர்வில் கடைசி 3 நாட்களில்தான் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அதிலும் 3 மசோதாக்கள் இறுதி நாளில் நாங்கள் சட்டசபை வந்தடைந்த பின்னரே வழங்கப்பட்டது.

80களில் எம்ஜிஆர் அரசு சட்ட மேலவையை நீக்கிய பின்னர் எஞ்சியிருப்பது ஒரு சட்ட அவை மட்டுமே என்பது நினைவு கொள்ளத்தக்கது. சட்டமன்ற உறுப்பினர்கள் மசோதா நிறைவேற்றப்படும் வரை அதனை பார்க்கக்கூட இயலாது எனில், இங்கு அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்துகின்ற சட்டமன்றத்தின் பங்களிப்பு எங்கே?

ஆளுங்கட்சி கொண்டுவரும் சட்டங்களுக்கு கேள்வியின்றி ஒப்புதலளிக்கும் கருவியாக சட்டமன்றம் செயல்படுகிறது. இந்நிலைமை ஏற்பட காரணி & அதன் தீர்வுகளை அறிவார்ந்தோர் விவாதத்திற்கு விடுகிறேன். விவாத விமர்சனங்களற்ற தன்மை எம்மாதிரி சிக்கல்களை உருவாக்குகிறது என சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பல்வேறு அரசு கொள்கை அறிக்கைகள் & சட்ட முன்வரைவுகளில் அடிப்படை கணித அறிவற்ற நிலை தெரிகிறது. நடைமுறை & அரசியல் தளத்தில் இது எம்மாதிரியான தாக்கங்களையும் ஏற்படுத்தும் என்ற அளவில் அக்கறையற்ற பிழை கணக்குகள் காணப்படுகின்றன. இவை எவராலும் கேள்விக்குட்படுத்தாதது கவலை அளிக்கக்கூடியதாகும்.

அரசின் ஒவ்வொரு துறையிலும் புள்ளிவிவர பிழைகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. அவற்றைப் பற்றி துறைவாரியாக தொடர் கட்டுரைகள் எழுத முடிவெடுத்துள்ளேன்.  உயர்நீதிமன்ற தீர்ப்பையொட்டி மீட்டுருவாக்கப்பட்ட நில கையகப்படுத்தும் சட்டத்திலுள்ள புள்ளி விவரங்களிலிருந்து தொடங்கலாமென நினைக்கிறேன்

இந்த மசோதாவின் முதல் மற்றும் விரிவுரை பக்கத்தை இணைத்துள்ளேன்(மசோதா தற்போது சட்டமாக்கப்பட்டுவிட்டது). விரிவுரை பக்கத்தில் புள்ளி விவரங்களை சற்றே கருத்தில் கொள்ளுங்கள். வெளிப்படையாக தாங்கள் கையகப்படுத்தியதில் 5.8% மட்டுமே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.




இந்த சட்டம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறுவதற்காக கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வழங்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களை பார்ப்போம்:

மீதமுள்ள 22,431 ஹெக்டர் நிலங்களை கையகப்படுத்த செலவாகும் மொத்த தொகை= ரூபாய் ஒரு "1.85 லட்சம் கோடிகள்".

இந்த புள்ளிவிவரம் அடுத்த கேள்விக்கு இட்டுச்செல்கிறது.
2019-20 ஆண்டின் தமிழக பட்ஜெட் ரூ.2.75லட்சம் கோடி. இவற்றில் 70%மேல் அரசு ஊழியர் ஊதியம், ஓய்வூதியம், வட்டி போக மீதமுள்ளது ரூ.60,000 கோடி மட்டுமே. இந்நிலையில் நிலம் கையகப்படுத்த
ரூ.1.85 லட்சம் கோடி  திரட்ட எத்தனை ஆண்டுகள் ஆகும்?

நினைவில் கொள்ளுங்கள்!
அரசு ரூ.60000 கோடி அளவில் மூலதன முதலீடு, திட்டங்கள், ரேசன் பொருட்கள், உதவித்தொகைக்கு பயன்படுத்தப்படும் நிலையில் ஆண்டுதோறும் நிலம் கையகப்படுத்த சில ரூ.1000கோடி ஒதுக்கினால் ஓரளவு பயனுள்ளதாக அமையும். அரசு நிதி பற்றாக்குறையில் உள்ள நிலையில் கடனும் பெற முடியாது.




நில கையகப்படுத்தலுக்கு ரூ.1.85 லட்சம் கோடியை வழங்க குறைந்தது ஒரு தசாப்தத்திற்கு மேலாகும் என்பதுதான் உண்மை நிலவரம். இந்த காலம் வரை இழப்பீடு வழங்கப்படாத நிலவுடமையாளர்களின் நிலைமை என்னவாகும்? கையகப்படுத்தப்பட்டும் பயன்படுத்தப்படாத 95% நிலங்களால் ஏற்படும் நஷ்டத்திற்கு பதில் என்ன?




3வது கேள்வி?

1.85லட்சம் கோடிக்கு நிலத்தை கையகப்படுத்தி 1.8லட்சம் வேலைவாய்ப்புகளை மட்டும் உருவாக்க முடியுமெனில் அது சிறந்த முதலீடா?
ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க நிலத்திற்கான செலவு 1கோடி எனில் சாலை வசதி, கட்டுமானம், மின்சாரம், நீர் முதலிய கூடுதல் முதலீடுகளுக்கு எத்தனை கோடிகள் ஆகும்?

அரசியல்வாதிகளை குறைகூறும் முன் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்துகிறேன். ஊடக வெளிச்சம் இருந்தும்கூட இப்பிரச்சினை பற்றி, புள்ளி விவரங்களின் நம்பகத்தன்மை குறித்து பொதுமக்கள் &ஊடகங்களிடமிருந்து எந்த கேள்வியும் எழுந்ததாக எனக்கு தெரியவில்லை. அரசியல்வாதிகள் சமூகத்தை தானே பிரதிபலிப்பார்கள்?



பதிவு எழுதியவர் டாக்டர் பி. தியாக ராஜன்

Dr P Thiaga Rajan (PTR)


5 comments:

  1. அரசின் புள்ளிவிவரங்கள் குறித்து மக்கள் கவலப் படுவதில்லை ஏன் என்றால் வர்களில் ப்சலருக்கு அதுபற்றி ஒன்றுமே தெரியாது

    ReplyDelete
  2. சட்டமன்றமோ இல்லை அங்குள்ள உறுப்பினர்களோ, ஏன் மாநகராட்சி கவுன்சிலர் வரையில், மக்களைப் பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? அவர்களுக்குத் தேவை வாக்குகள் மட்டுமே.

    இதே பிரச்சனைதான் அரசு அலுவலகங்களிலும். அங்கும் யாரும் வேலை பார்க்க ஆசைப்படவில்லை, சம்பளம், ரெகுலரான கிம்பளம், இன்னும் அதிக சம்பளத்துக்குப் போராட்டம், அப்புறமும் வேலை செய்ய மனமின்மை...இதைத்தான் காண முடியும்.

    ReplyDelete
  3. பொதுமக்கள் விலகியிருக்கிறார்கள், அவர்களில் சிலர் தேர்ந்தெடுக்கும் உறுப்பினர்களும் கண்டுகொள்வதில்லை, அல்லது கைகட்டப்படுகின்றனர்.. விடுதலை உணர்வு போல மக்கள் மனங்களில் வரவேண்டும்! அப்போதான் விடிவு, சகோ!

    ReplyDelete
  4. சட்டமன்றத்திலும் சரி, பாராளுமன்றத்திலும் சரி, மசோதாக்களைப் புரிந்துகொண்டு, விவாதிக்க வேண்டும் என்ற் எண்ணமுடைய உறுப்பினர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? இவர்களையெல்லாம் மீறிக்கொண்டுதான் சில நல்ல காரியங்கள் அரசாங்கத்தில் நடந்துவிடுகின்றன. முதல் முறை உறுப்பினர் ஆவோருக்குக் கூட இத்தகைய ஆர்வம் இருப்பதில்லை என்பது வருத்ததிற்குரியது.

    -இராய செல்லப்பா (தற்போது நியூ ஜெர்சியில்)

    ReplyDelete
  5. இந்தப் பதிவு இதில் உள்ள விசயங்கள் இதுவரையிலும் என் கண்ணில் படாமல் இருந்தது ஆச்சரியமே. பிடிஆர் மகன் மேல் மிகுந்த மரியாதை உண்டு. அவர் இதில் கொடுத்துள்ள விபரங்கள் மிக மிக முக்கியம். ஆனால் நிதின் கட்காரி எடப்பாடியை விட ஆர்வமாக உள்ளார். அடுத்து இரண்டு வருடம் தான் உள்ளது. முடிந்தவரைக்கும் சுருட்டி சிக்கலில் கொண்டு போய் விடலாம் என்று நினைக்கின்றார்கள் போல. அடுத்த வருடம் மிகப் பெரிய வேடிக்கையை தமிழகம் சந்திக்கப் போகின்றது. அப்போது இதனை வைத்து ஒரு பதிவு எழுத இந்த விமர்சனத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.