Thursday, July 9, 2015





இந்த காலத்திற்கு ஆங்கிலம் மட்டுமே போதும் என்று  பெரும்பான்மையான தமிழர்கள் கருதி, தமிழை ஒதுக்கி வைத்து, தமிழில் என்ன இருக்கிறது என்ற சிறப்பை அடுத்த சந்ததிக்குத் தெரியாமலே  அழித்து கொண்டிருக்கிறார்கள்..

அதனால் தமிழகத்தில் தமிழ் வழி அழியுது. அதே நேரத்தில் ஆங்கில  மற்றும் ஹிந்தி மொழிபயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது. ஆனால் தமிழகத்தில் அழியும் தமிழ் அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதை நான் சொல்லவில்லை அமெரிக்காவின் புகழ் பெற்ற டிவி நிறுவனமான என்பிசிநியூஸ் செய்தி வெளியிட்டு இருக்கிறது


 Jun 30 2015, 9:10 am ET Tamil Language SchoolsOn the Rise in United States தமிழகத்தில் ஆங்கில  மற்றும் ஹிந்தி மொழிபயிலங்களின் எண்ணிக்கை உயர்கிறது


தமிழகத்தில்  ஆங்கிலத்தை வளர்த்த தமிழனால் ஏன் தமிழை வளர்க்க முடியவில்லை?  அதற்கான காரணம் என்னவென்று பார்த்தால் தமிழ் மீதான ஒரு வகையான  அறுவருப்பு தமிழர்கள் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான் இன்றைய கால கட்டத்தில் நம் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மம்மி டாடி என்று  சின்னஞ்சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் புலம் பெயர்ந்து ஆங்கிலம் பேச கூடிய நாடுகளில் வசிக்கும் மக்கள் தாய்மொழியின் அருமையை உணர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கின்றனர்


அது மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர்கள் மிக அதிகம் இங்குள்ள குழந்தைகள் ஆங்கில வழி கல்வி கற்பதால் தமிழக்த்தில் இருந்து வரும் ஆங்கிலம் அதிகம் தெரியாத தாத்தா பாட்டிகளிடையே பேசுவது கடினமாக உள்ளது. தாத்தா பாட்டியை விரும்பாத குழந்தைகளே இல்லை. அதனால் இங்குள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழை கற்று கொடுக்க முயற்சிக்கிறார்கள் ஆனால் தாங்கள் கற்றுதருவதைவிட ஏதாவது தமிழ் கற்றுக் கொடுக்கும் இடங்களில் படித்தால் மிக எளிதாக குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். இதனால்தான் என்னவோ  ஒவ்வொரு மாநிலத்தில் இருக்கும் அநேக தமிழ் சங்கங்களும் அல்லது அங்குள்ள கோவில்களிலும் தமிழ் கற்று கொடுக்கப்படுகின்றன. இப்படி கற்றுக் கொடுக்கும் குழுக்களில் 1998 ல் ஆரம்பிக்கபட்ட கலிபோர்னியா தமிழ் அகடமி  மிக சிறந்த இடத்தை பிடித்து வளர்ந்து கொண்டிருக்கிறது.  இந்த பள்ளிகளில் தமிழ்  பேசமட்டுமல்ல எழுத படிக்கவும் கற்று தருகிறார்கள். அது மட்டுமல்லாமல் இசை நடனம் நாடகம் போன்ற தமிழ் பண்பாட்டை போதிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து நடத்தி வருகிறது என்பது இங்கு குறிப்பிடதக்கது

California Tamil Academy was founded in 1998 in the Bay Area, and now has six branches, 40 affiliated schools http://www.catamilacademy.org/branches.html in 13 other states and two other countries, 5,500 students, and 700 volunteers including teachers and parents. California Tamil Academy provides academic and technical support to help those who want to start independent Tamil schools. Some public schools give students high school credit for studying Tamil at language schools.


இந்த நிலமை நீடித்தால் வருங்காலத்தில் தமிழகத்தில் வளரும் குழந்தைகள் தமிழ் கற்றுக் கொள்ள அமெரிக்கா நோக்கி வந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை..

அது போல அமெரிக்கா குழந்தைகள் தண்ணி அடிக்க கற்றுக் கொள்ள தமிழகத்திற்குதான் வர வேண்டி இருக்கும்... எப்படி ஒரு மாற்றம்.


இந்த வீடியோவில் வரும் தமிழ்பாடலை கேட்க தவறாதீர்கள்


டிஸ்கி : தமிழகத்தில் இருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு வரும் இந்த தலைமுறை இளைஞர்கள் பலரை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன அதில் பலருக்கு தமிழ் பேச மட்டும்தான் தெரிகிறது எழுதவோ பேசவோ தெரியவில்லை . இதில் எங்கள் குடும்பங்களை சேர்ந்த இளம் வயதினரும் அடங்கும். இதைப் பார்த்து என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. நல்ல வேளை என் மகளுக்கு தமிழ் பேச வருகின்றது நாங்கள் சொல்லிக் கொடுக்காமலே அதனால் நாங்கள் அவளை தமிழ் எழுத படிக்க பள்ளிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம்

அன்புடன்
மதுரைத்தமிழன்

23 comments:

  1. தமிழா ... இந்தியா சென்ற போது என்ன இது.. நீ தமிழில் எழுதுகின்றாயாமே என்று நிறைய கிண்டல் அடிதோர் உண்டு. மற்றும் .. உறவினர் பிள்ளைகள் என்னோடு பேசும் போது ..அங்கிளிடம் ஆங்கிலத்தில் பேசு என்ற அதட்டல்.
    ஆனால் அமெரிக்காவிலும் சரி, மற்ற மேலை நாடுகளிலும் சரி... மாமாவிடம் தமிழில் பேசு என்று மட்டும் அல்லாமல்...
    நீ தமிழில் எழுதுகின்றாயா .. பாராட்டுக்கள் என்ற வார்த்தைகள் மட்டும் தான் வரும்.

    சரியான பதிவு... வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. வணக்கம்,
    தாங்கள் கடைசியில் சொன்னவை வேதனை மிகுந்தவை,
    ஆனாலும் நல்ல பதிவு,
    நம் மொழியின் இன்றைய உண்மை நிலையை உரைத்தீர்,
    இந்நிலை மாறும் என நம்புவோம்,
    நன்றி.

    ReplyDelete
  3. தமிங்கலம் (TANGLISH)
    [https://vetrichezhian9.wordpress.com/தமிங்கலம்-tanglish/]

    ReplyDelete
  4. அனைத்தும் பெற்றோர்கள் மூலமே என்பது திண்ணம்...!

    ReplyDelete
  5. கலிஃபோனியா தமிழ் அகடெமி பற்றி கோயம்புத்தூரில் நடந்த தாயகம் கடந்த தமிழ் எனும் கலந்தாய்வுக் கூட்டத்தில் அறிய முடிந்தது.

    உண்மைதான் தமிழ் தாயகம் கடந்து தான் வாழ்கின்றது. இங்கு அதற்குப் பெற்றோர்களின் அறியாமை அதாவது தமிழ் பயின்றால் எதிர்காலம் சிறப்பாக இருக்காது. ஆங்கிலம் மட்டுமே வேண்டும் என்ற ஒரு மாயையில் சிக்கி இருப்பதாலும், பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் அதைத் திறமையாக, ஆர்வத்துடன், மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும், கதை வடிவிலும், அதில் ஆர்வம் தோன்றும் வகையிலும் கற்பிக்காததாலும்...
    தமிழ் நாடு பாட திட்டமும் தமிழை அழகாகப் படைத்தால், நம் ஊமைக்கனவுகள் விஜு ஆசான் போல தமிழைப் படைத்துக் கற்பித்தால், தேன்மதுர க்ரேஸ் போல தமிழைப் படைத்தால், சொல்லிக் கொடுத்தால் நம் மாணவர்களுக்குத் தமிழ் ஏன் கசக்கும்? எப்படிக் கசக்கும்? இவர்களின் மூலம் நாம் பல நல்ல தமிழ் கற்பதற்கு நாம் கொடுத்துவைத்தவர்கள்....வலை உலகிற்கும், இறைவனுக்கும் நாம் நன்றி உரைக்க வேண்டும்....இவர்களைப் போன்றவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்ததற்கு...

    நல்ல விஷயம் தமிழா, தங்களின் மகள் தமிழ் பேசுவதற்கும் கற்பதற்கும்....பெற்றோர் எவ்வழி சேய் அவ்வழி!

    ReplyDelete
  6. தங்களுக்கும், தங்கள் மகளுக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
  7. அருகாமை உயரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஒன்றை விட்டு தூர, பிரிந்து இருக்கும்போதுதான் அதன் அருமை தெரியும். அந்த வகையில் நீங்கள் சொல்வது போல நடக்கும் காலம் கூட வரலாம்!

    ReplyDelete
  8. இந்த நிலைமையை எண்ணி வருத்தப்படாத நாளே இல்லை. தமிழ்மேல் எனக்கு ஆசை (மொழிப்பற்று. கவிதை கட்டுரை திறமையெல்லாம் இல்லை). என் வளர்ந்த குழந்தைகளுக்கு எழுத படிக்கத் தெரியாது. அது முக்கியம் என்ற எண்ணமே இல்லை. ரொம்பக் கஷ்டமாக இருக்கு. ஆங்கிலப் பாடல்களையே கேட்டுக்கொண்டிருக்கும் அவர்களைப் பார்த்து ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கு. நான் தமிழில்தான் அவர்களிடம் பேசுவேன். இந்த நிலைக்கு அரசு கட்டாயம் ஏதாவது செய்யவேண்டும். (தமிழ் எல்லாவகையான பள்ளிகளிலும் (சி.பி.எஸ்.ஸி முதற்கொண்டு) 12வது வகுப்பு வரை கட்டாயமாக்கப்படவேண்டும். (தமிழகத்தில்). ஆனால் செய்யவேண்டியவர்களே மெட்-ரிகுலேஷன் பள்ளி நடத்துகிறார்கள்.

    மதுரையாரே.. இன்னும் கொஞ்ச காலத்தில், வத்தக்குழம்பு வேண்டுமென்றால், அமெரிக்காவின் ஒரு கம்பெனி ஆரம்பித்து தமிழ்னாட்டில் விற்றால்தான் அடுத்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை சாப்பிடும்.

    ReplyDelete
  9. Sorry to comment in English. Actually, I thought the same thing when I went to India recently. Tamil people in Tamilnadu have some kind of aversion to tamil. And they seem to encourage English and Hindi learning.

    CTA is doing tremendous job in USA to promote tamil. Even many tamil schools follow CTA syllabus for their curriculum.

    Thanks for sharing.

    ReplyDelete
  10. என் மகன் கூட ஹைதராபாத்தில் பிரி கே ஜி போகும்பொழுது என்னிடம் ஏன் நான் மட்டும் அம்மா அப்பா என்கிறேன் மத்த எல்லாரும் மம்மி டாடி தானே சொல்றாங்க . ஆயா கூட உங்க மம்மி ன்னுதான் சொல்றாங்க என்றான்.அப்புறம் தமிழரின் அடையாளம் அது என்று சொல்லிப் புரியவைத்தேன். இப்பவும் வீட்டில் அம்மா அப்பத்தான் பேசுவது தமிழ்தான் .

    ReplyDelete
  11. இது அமெரிக்க தமிழர்களின் தமிழ் மொழிப் பற்று என்று நினைக்கவில்லை. நம்ம குழந்தைகள் அமெரிக்க கலாச்சாரத்தை கடைபிடித்து எங்கே கேர்ள்பிரண்ட் -பாய்பிரண்ட் வைச்சுக்குவார்களோ, அல்லது பெண் வயிற்றை தள்ளிகிட்டு வந்துடுவாளோ என்ற பயத்தின் ஒரு பகுதிதான் இது. இந்த பயத்தினால் பல குடும்பங்கள் - கர்நாடக சங்கீதம், பரத நாட்டியங்கள், ஸ்லோகம் போன்றைவைகளை கற்றுக் கொடுத்து எப்படியாவது தமிழ்நாட்டுடன் பிணைக்க முயற்சிக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான் மொழிப்பற்றும். நம்மாட்கள் அமெரிக்கா வந்து மெரிஸிடிஸ் காரும் மேன்சனும் வாங்கினாலும் பிள்ளைக்கு ஜாதி பார்த்துதான் கல்யாணம் செய்யவேண்டும் என்கிற அளவுக்கு பிற்போக்குத்தானம் உள்ளவர்கள், ஆண் குழந்தை பெற விஞ்ஞானத்தை மிஸ் யூஸ் பண்ணுபவர்கள். இவர்களில் உண்மையான மொழிப்பற்று இருப்பவர்கள் 5% க்கும் குறைவு என்பது எனது அனுமானம். மேலும் மொழிப்பற்று பெரும்பாலும் முதலாம் தலைமுறையோடு முடிந்துவிடும். இவர்களின் பேரக்குழந்தைகள் முழு அமெரிக்கர்களாவே வளருவார்கள். ஆனால் இந்த அழுத்தம் தமிழ்நாட்டிலேயே வசிப்பவரிடையே இல்லாத காரணத்தில் மொழிமோகமும் குறைவாக இருக்கிறது, அவ்வளவுதான்.

    ReplyDelete
  12. சகோதரரே இங்கும் கனடாவில் நிறைய தமிழ் பள்ளிகூடங்கள் இருக்கின்றன. குழந்தைகள் தமிழ் மட்டும் அல்ல நடனம், வாய்பாட்டு, மிருதங்கம் என்று எல்லாமும் கற்றுக் கொள்கிறார்கள். நிகழ்சிகளும் ஏராளமாக நடக்கின்றன. என் பிள்ளைகளும் ஆரம்பத்தில் தெரியாமல் தான் இருந்தார்கள் இப்போ புரிந்து பேசுகிறார்கள். ஆனால் வீட்டில் நாம் தமிழ் பேசினாலும் ஆங்கிலத்தில் தான் பதில் வருகிறது . உறவினர்களுடன் தமிழில் நன்றாக உரையாடுகிறார்கள் அதனால் எனக்கு ரோமப்ப மகிழ்ச்சி எழுத வாசிக்க அவ்வளவாக வரவில்லை தான் . ஆனாலும் என் பேரப்பிள்ளைகளுக்கு நான் நன்கு கற்றுக் கொடுப்பேன் எல்லாம். பதிவுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் ...!

    ReplyDelete
  13. ஆமாம். நாங்களும் இந்தியாவில் இருந்திருந்தால் எங்கள் குழந்தைகளை தமிழ் மீடியத்தில்தான் சேர்த்திருப்போம். உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என்று வாழ்ந்திருப்போம். இந்தியாவில் இருப்பவர்களுக்கு தமிழின் அருமையே தெரியவில்லை. முதலில் அங்கிருக்கும் அனைத்து ஆங்கில மீடியம் பள்ளிகளையும் மூடச்செய்ய புரட்சி செய்வது மிகவும் அவசியம். தமிழா இன உணர்வு கொள்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல காமடி சார், என்னமோ உங்களை அடிச்சு தொரத்தி குழந்தைகளை ஆங்கில மீடியத்துல படிக்க வைக்க வெளிநாடு அனுப்புன மாதிரி எழுதறீங்க. உடனே இந்தியாவுக்கு போய் புள்ளைகள தமிழ் மீடியத்துல படிக்க வையுங்க. யாரு உங்களை தடுத்தா? உங்க குழந்தைகள் வெளிநாட்டுல ஆங்கில கல்வி பெறுவேண்டும்., ஆனா தமிழ்நாட்டு இளிச்சவாயன் இனஉணர்வுடன் ஆங்கில மீடியத்த மூடிட்டு தமிழ் மீடியத்துல படிக்கணும். அப்புறம் காலேஜில் போய் 'பப்பரபா'ன்னு முழிக்கணும். சூப்பர். இந்தியை எதிர்த்த கருணாநிதி பேரன் இந்தி படிச்சதால மத்திய மந்திரி ஆன கதை மாதிரி இருக்கு. ஊருக்கு உபதேம்... வாழ்க!!!

      Delete
    2. நந்தவனத்தான், அதைத்தானே நானும் சொல்லியிருக்கிறேன்!

      Delete
    3. வெளிநாட்டில் வாழ்ந்தால், அந்த நாட்டவங்க பாஷை ஆங்கிலத்தில் தான் அவசியம் படித்தாக வேண்டும். மிகவும் நியாயமமானது. தமிழகத்தில் தமிழில் படிக்காம, தமிழில் பேசாம வேறு எந்த நாட்டிற்கு சென்று தமிழில் படிப்பது?
      தமிழகத்தில் வாழுபவர்கள் தமிழை அருவருப்புடன்,வெறுப்புடன் பார்ப்பதால், ஆங்கிலத்தை கடவுளின் பாஷையாக போற்றுவதாலுமே இந்த இழி நிலை.
      மதுரைத்தமிழனுக்கு பாராட்டுக்கள்.

      Delete
  14. உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழர்கள் தம் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க முயல்கின்றனர். இங்கு கனடாவில் வாழும் தமிழர்களும் அவ்வாறே சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால் எதார்த்தத்தில் வட அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களின் அடுத்த தலைமுறையினரது முதல் மொழியாக என்னவோ அந்தந்த நாட்டு மொழியாகவே இருக்கின்றன என்பது தான் உண்மை. சில பெற்றோர்கள் மட்டுமே சிரத்தை எடுத்து தமிழை ஒரு கூடுதல் மொழியாக கற்பிக்கின்றனர். அதிலும் சிலரே அடிக்கடி தமிழ்நாட்டுக்கு கூட்டிக் கொண்டு போய் வருகின்றனர். அதிலும் சிலர் மட்டுமே அங்கு சில வாரங்களாகவது கழிக்கின்றனர். அவ்வாறு தமிழைக் கற்று, தமிழ்நாட்டுக்கு அடிக்கடிப் போய் அங்கே ஒரு சில வாரங்களாவது தங்கி வந்தால் மட்டுமே தமிழ் மொழியானது அப் பிள்ளைகள் மனதில் பதிகின்றன. மற்றபடி தமிழை வாரயிறுதி நாட்களில் மட்டும் கற்றுக் கொண்டு 18 வயதை அடைந்ததும் தமிழோடு எவ்வித பிணைப்புமின்றி போய் எதோ கொஞ்சம் தமிழ் பேச வரும், பேசினால் புரிந்துக் கொள்வார்கள் என்ற நிலையில் சிலரை நான் சந்தித்தும் இருக்கின்றேன். சுத்தமாக தமிழே தெரியாமல் பேசினால் புரிந்து கொள்வார்கள் என்ற நிலையில் உள்ளோரையும் கண்டதுண்டு. என்ன இருந்தாலும் தாய்நாட்டோடு தொடர்பில் இருக்க விரும்புவோர் தம் பிள்ளைகளுக்கு தமிழ் கற்பிப்பது மிகச் சிறப்பு. கலிபோர்னியா தமிழ் கல்விக்கழகத்தின் பாடத்திட்டங்கள் மிகவும் சிறப்பானவை என்பதை கேள்வியுற்றிருக்கின்றேன்.

    ஆனால் தமிழகத்தில் சிதையும் தமிழானது மற்றொரு புலத்தில் வளரும் என்ற வாசகத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. தமிழை தமிழ் தாயகத்தில் மட்டுந்தான் வளர்த்துக் கொள்ள முடியும். தமிழகத்துக்கு வெளியே கணிசமாக ஒரே வட்டாரத்தில் தமிழர்கள் பெருமளவில் குடிபெயரும் போது அங்கு தமிழ் உயிர்ப்புடன் இருக்க வாய்ப்புக்கள் அதிகம். அவ்வாறான சூழல்களை நாம் மலேசியா, இலங்கையில் காண்கின்றோம். ஆனால் தமிழர்கள் சிறுபான்மையினராக, அதைவிடவும் தனித்தனிக் குடும்பங்களாக புலம்பெயரும் போது தமிழானது ஒன்றிரண்டு தலைமுறைக்கு மேல் அங்கு உயிர்ப்புடன் இருக்கும் சாத்தியங்கள் குறைவு. தமிழைக் கற்பித்து வந்தால் இரண்டாம் மொழியாக ஒன்றிரண்டு தலைமுறைகள் வாழக் கூடும். அவ்வளவே !

    ReplyDelete
  15. தமிழகத்தில் தமிழ் மொழி மீதான ஒரு வெறுப்புணர்வும், மாற்றாந்தாய் மனோபாவமும் அதிகம் எழுந்திருக்கின்றது. ஒரு சிலரைத் தவிர கணிசமான வெகுமக்கள் தமிழால் என்ன பயன்? அதை ஏன் கற்க வேண்டும்? தமிழ் என்பதை ஒரு பேச்சுமொழியாக வைத்திருந்தால் மட்டும் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். கணிசமான உயர் மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினர் அதனையும் கடந்து தமிழை வீடுகளில் பேசவும் கூச்சப்படுகின்றனர். சென்னையில் பல இடங்களில் தம் பிள்ளைகளோடு செயற்கைத்தனமான ஆங்கிலத்தில் சம்பாசணை செய்வதைக் கண்டேன். பள்ளிகளில் பலரும் இந்தி, பிரஞ்சு மொழிகளை இரண்டாம் பாடமாக எடுத்துக் கற்கின்றனர். தமிழைக் கைவிட்டுவிட்டனர். உயர் மற்றும் உயர்நடுத்தர வர்க்கத்தினரது சம்பாசணை மொழியாக ஆங்கிலமும் தமிழும் கலந்த மொழியாக உருவாகி வருகின்றது. இது தான் பெருமையானது என்ற எண்ணம் ஏனைய வர்க்கத்தினரையும் சென்றடைந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஆங்கிலம் தமிழ் கலந்த கிரியோல் மொழிப் பேச்சும், ஆங்கில வழிக் கல்வியை நோக்கியும் தமிழ் சமூகம் நகர்கின்றது. தமிழ் ஊடகங்களான தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், இணையதளங்கள், வானொலிகள் எல்லாம் இதனை நோக்கி நகர்ந்துவருகின்றன.

    பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தமிழ் ஒரு வாழும் மொழியாக வளர்ந்துவந்திருப்பினும் தமிழகத்தில் ஒன்றிரண்டு தலைமுறைகளோடு தமிழானது அழியும் நிலைக்கு வந்துவிட்டுள்ளது. எவ்வாறு தமிழ் மொழியானது இந்தியா முழுவதும் பேசப்பட்டு அழிந்து இந்தோ-ஆர்ய மொழிகளால் நிரப்பப்பட்டனவோ. அவ்வாறான நிலை தமிழ் உட்பட தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றுக்கும் வரும் காலம் தொலைவில் இல்லை. இது தான் எதார்த்தம்.

    ReplyDelete
  16. பிள்ளைகள் தமிழ் படிக்காமல் இருப்பது பெற்றோர்களால்தான்....
    முதலில் அவர்கள் மாற வேண்டும்.

    ReplyDelete
  17. தமிழ் அமெரிக்காவிலாவது வாழ்கிறதே! அதுவரைக்கும் ஆறுதல்! ஆங்கில மோகம் பலரை தாய்மொழியைத்துரத்திவிடச் சொல்லுகின்றது. நன்றி! உங்களின் பதிவொன்றை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! நேரம் கிடைக்கையில் சென்று பார்க்கவும்! நன்றி!

    ReplyDelete
  18. தமிழில் பேச முடியாத பேரனோடு தாத்தாவின் பாசம் என்றும் அவரது ஆதங்கம் என்றும் ஒரு காணொளியுடன் பதிவு எழுதி இருந்தேன் தமிழர்கள் எங்கிருந்தாலும் முதலில் வீட்டில் தமிழ் பேச வேண்டும் சுட்டி இதோ http://gmbat1649.blogspot.in/2015/03/blog-post_9.html

    ReplyDelete
  19. நீங்கள் சொல்வது உண்மை
    நல்ல தகவலை கூறியுள்ளீர்கள்.
    தமிழக பெற்றோருக்கு நல்ல சாட்டையடி.

    ReplyDelete
  20. தமிழ் நாட்டிலே எவ்வளவு காலம் படிச்சாலும், என்ன படிச்சாலும் அந்த படிப்பாலே ஒரு ஞாயமான சம்பளம் பெறக்கூடிய வேலையை அடைந்து கொள்ளக்கூடிய " தொழில் அறிவை " படித்து கொடுப்பதே இல்லை. இவ்வளவு காசை கொட்டிக்கொடுத்து " இங்கிலீஷை " யாவது படித்து கொள்வோமே என்று படிப்பது தான். அந்த " இங்க்லீஷ் " புலமை ( ! ) பெரும் புகழ், அமெரிக்காவிலும். இங்கிலாந்திலும் இருப்பவர்களுக்கு தான் புரியும்.
    இங்கே தமிழ் படிப்பதற்கும், படிப்பிப்பதற்கும் காரணம் தமிழ் பற்றல்ல அய்யா, இங்குள்ள மன இறுக்கத்தை செலவின்றி போக்கிக்கொள்ள ஒரு வடிகால் வேண்டுமே, அதற்குத்தான். பெரிய பெரிய புகழாரமெல்லாம் சூட்டதீர்கள். குண்டான் சட்டியில் குதிரை ஓட்ட இதுதான் வழி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.