Sunday, November 29, 2026

 
தமிழக வகுப்பறைக்குள் இருப்பது  வாத்தியார்தானா இல்லை வேட்டையாடும் ஓநாய்களா?
   

#POCSO, #ChildSafety, #SchoolSafety, #TamilNadu, #ProtectOurChildren, #Childline1098, #TamilNews, #StopChildAbuse, #போக்சோ, #குழந்தைகள்பாதுகாப்பு, #பெற்றோர்விழிப்புணர்வு, #மதுரைத்தமிழன்


அப்பாவிகளே, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பும் முன் ஒரு கணம் நில்லுங்கள்!


கல்விக்குக் குருவாக இருக்க வேண்டிய தமிழக ஆசிரியர்கள், இன்று கலவியின் வக்கிரக் குருவாக மாறி வருகிறார்களா என்ற அச்சம் ஒவ்வொரு பெற்றோரின் வயிற்றிலும் நெருப்பைக் கொட்டுகிறது. மாதம் மும்மாரி பெய்கிறதோ இல்லையோ, மாதந்தோறும் ‘போக்சோ’ செய்திகள் தவறாமல் வந்து கொண்டிருக்கின்றன. எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்ற புனித வார்த்தையை இந்த நவம்பர் மாதத்தின் செய்தித்தாள்கள் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துவிட்டன. இன்று பாடப்புத்தகங்களைத் திருத்தி எழுத்தறிவித்தவன் வக்கிரப் கயவன்  என்று எழுத வேண்டிய கேவலமான நிலைக்குத் தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

வெறும் முப்பது நாட்களுக்குள்  இந்த நவம்பர் மாதத்தில் மட்டும்  தமிழகத்தின் வெவ்வேறு மூலைகளில் ஏழுக்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு மாவட்டம் அல்ல. ஒரு தனியார் பள்ளி அல்ல. வடக்கே விழுப்புரம், தருமபுரி தொடங்கி, சேலம், ஈரோடு, கோவை வழியாக மதுரை, திருநெல்வேலி வரை தமிழகத்தின் கல்வி வரைபடம் முழுவதுமே கறைபடிந்து கிடக்கிறது.

இந்த நவம்பர் மாதத்தில் மட்டும் அரங்கேறிய கொடூரங்களைப் பாருங்கள்:

நவம்பர் 13  திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் எட்டாம் வகுப்பு மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் அருள் பாக்கியம் கைது.

நவம்பர் 16  சேலம்: ஆத்தூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் கண்களை வர்ணித்தும், கைகளால் இதயக் குறியீடு காட்டியும் சில்மிஷம் செய்த ஆசிரியர் கம்பி எண்ணினார்.

நவம்பர் 19  விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது பிஞ்சுக் குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் திருவிக்ரமன் கைதானார். தலைமை ஆசிரியரே வேலியாக இல்லாமல் பயிரை மேயத் தொடங்கினால், அந்தப் பள்ளியின் கதவுகளை யார் நம்பித் திறப்பது?

நவம்பர் 21  ஈரோடு: குமலன்குட்டையில் பதின்மூன்று வயது மாணவிகள் நான்கு பேருக்குத் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி ஆசிரியர் விஜயசாரதி கைதானார்.

நவம்பர் 22  மதுரை: பிளஸ்-2 மாணவியைக் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறித் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியர் சிறைக்குச் சென்றார்.

நவம்பர் 24  தருமபுரி:  மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஆசிரியர் ஆறுமுகம் கைது.

நவம்பர் 27  கோயம்புத்தூர்: அரசுப் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் ஆசிரியர் செந்தில்குமார் கம்பி எண்ணினார்.

இந்த ஏழு சம்பவங்களையும் உற்று நோக்கினால் நெஞ்சைப் பதற வைக்கும் உண்மைகள் முகத்தில் அறைகின்றன. ஐந்து சம்பவங்கள் அரசுப் பள்ளிகளில். ஒன்று அரசு உதவி பெறும் பள்ளியில். ஒன்று தனியார் பள்ளியில். ஏழை, எளிய மக்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கும் அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளே இன்று பாதுகாப்பற்ற கூண்டுகளாகவும், வக்கிரத்தின் கூடாரங்களாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. ஐந்தாம் வகுப்புச் சிறுமிகள் முதல் பிளஸ்-2 மாணவிகள் வரை, ஏன் எட்டாம் வகுப்பு மாணவன் கூட இந்த ஓநாய்களின் பார்வையிலிருந்து தப்பவில்லை.

பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய கைகள், இன்று பிஞ்சுகளின் உடல்களைத் தீண்டுகின்றன. மரியாதைக்குரிய ‘வாத்தியார்’ என்ற சொல்லே இன்று அச்சத்தோடு உச்சரிக்கப்படும் அவல நிலைக்கு ஆசிரியர் சமூகம் தலைகுனிய வேண்டியுள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் நல்லவர்கள்தான் என்பதை மறுக்கவில்லை. ஆனால் இந்த சிலரின் செயல்கள் அந்த நல்ல பெயரையே கறைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஒரே ஒரு ஆறுதல்  சேலம் மற்றும் ஈரோடு சம்பவங்களில் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் குழந்தைகள் நலக்குழுவினரும் (Childline 1098) விவகாரத்தை மூடிமறைக்காமல் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று சொல்லி, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாயை அடைத்து, குற்றவாளிகளை வேறு ஊருக்கு இடமாற்றம் செய்து தப்பிக்க வைப்பார்கள். இப்போது அந்த மௌனம் உடையத் தொடங்கியிருக்கிறது.

ஆனால் வெறும் கைதுகளும், பணியிடை நீக்கங்களும் இந்த நோய்க்கு மருந்தாகிவிடுமா ஒவ்வொரு முறை ஒரு ஆசிரியர் கைதாகும்போதும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், கண்காணிப்புக் குழு அமைக்கப்படும் என்று அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் வழக்கமான அறிக்கைகளை வாசித்துவிட்டுக் கடந்து விடுகிறார்கள். அடுத்த வாரம் வேறொரு மாவட்டத்தில் இன்னொரு ஆசிரியர் கைதாகிறார். வகுப்பறைக்குள் கையில் பிரம்புடன் நுழைந்த ஆசிரியர்களைப் பார்த்துப் பயந்த காலம் போய், இன்று ஆசிரியர்களின் பார்வையைப் பார்த்துப் பிள்ளைகள் நடுங்கும் அவலம் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

மேலே சொன்னவைகள் வெளிவந்த செய்திகள் ஆனா வெளிவராமல் இன்னும் எத்தனை செய்திகள் மறைந்து கிடைக்கின்றன. எத்தனை பெண் குழந்தைகள் தினம்தினம் வெளியே சொல்ல முடியாமல் அவதிக் குள்ளாகின்றன என்பதை நினைத்தால் நெஞ்சம் பதபதைக்கின்றது

பெற்றோர்களே, இனியும் மௌனமாக இருக்காதீர்கள்!   பள்ளியின் பெயர் கெட்டுவிடும் பிள்ளையின் எதிர்காலம் பாதிக்கும் என்று பயந்து, நடந்ததை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்கும் பழைய புத்தியை இன்றே தூக்கி எறியுங்கள். இன்றிரவே உங்கள் பிள்ளைகளிடம் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசுங்கள். பள்ளியில் யார் எப்படிப் பழகுகிறார்கள், எந்தப் பார்வை சரியில்லை, யாருடைய தொடுதல் வித்தியாசமாக இருக்கிறது என்று தயங்காமல் கேளுங்கள். உங்கள் பிள்ளைக்கு மட்டுமல்ல  பள்ளியில் படிக்கும் மற்ற எந்தக் குழந்தைக்கும் ஏதேனும் அசம்பாவிதம் நடந்திருப்பதை நீங்கள் அறிந்தால், அதை மூடிமறைப்பது நீங்களும் அந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருப்பதற்குச் சமம். உடனே 1098 அல்லது காவல்துறையின் உதவியை நாடுங்கள். அது போல நீங்கள்  நல்ல ஆசிரியர்களாக இருந்தால் உங்கள் மாணவ மாணவிகளிடம் இது போன்று கேளுங்கள். தவரு செய்தது சக ஆசிரியர் நண்பர் என்பதற்க்காக மறைக்காதீர்கள் அவர்கள் உங்கள் குழநதைகளுக்கு இது  போன்ற தீங்கு செய்தால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதை இங்கே இவர்களுக்காக செய்யுங்கள்.

நவம்பர் மாதத்தின் இந்த ஏழு கைதுகள் வெறும் செய்தித் துணுக்குகள் அல்ல. நம் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு விடப்பட்டிருக்கும் அபாய மணிகள். இனியாவது அறிக்கை அரசியலை நிறுத்திவிட்டு, பள்ளிகளைக் குழந்தைகளுக்கான பாதுகாப்பான கோட்டைகளாக மாற்ற அரசு உருப்படியான நடவடிக்கை எடுக்குமா? இல்லை டிசம்பர் மாதப் பட்டியலுக்காகக் காத்திருக்கப் போகிறோமா?

நாளை மற்றொரு வீட்டில் நடக்கும் அவலம், இன்று நம் வீட்டுக் கதவைத் தட்டாமல் இருக்க வேண்டுமானால் பெற்றோர்களே இன்றே விழித்துக்கொள்ளுங்கள்!


நாட்டு நடப்புகளைச் சாடும் நையாண்டி கார்டூன்கள்!  https://avargal-unmaigal.blogspot.com/2026/11/editorial-cartoon-political-satire.html 
Editorial Cartoon", "Political Satire", "Cartoon Journalism"
 

அன்புடன்
மதுரைத்தமிழன்

#POCSO, #ChildSafety, #SchoolSafety, #TamilNadu, #ProtectOurChildren, #Childline1098, #TamilNews, #StopChildAbuse, #போக்சோ, #குழந்தைகள்பாதுகாப்பு, #பெற்றோர்விழிப்புணர்வு, #மதுரைத்தமிழன்

Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.