Sunday, June 11, 2023

தமிழக ஆசிரியர்களின் கவனத்திற்கு.....

 

avargal unmaigal



நல்ல ஆசிரியர்களின்  சேவை சமுகத்திற்கு மிக முக்கியமானது. ஒரு மருத்துவரால் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும், ஆனால் ஒரு "நல்ல" ஆசிரியரால் ஒரு சமுகத்தையே காப்பாற்ற முடியும். இங்கு நான் நல்ல ஆசிரியர் என்று அழுத்திச் சொல்லும் போது, உடனே உங்களில் சிலர்  அப்படியானால் கெட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்களோ  என்று கேள்விகள் கேட்கக்கூடும் அல்லது சந்தேகம் வரும். எல்லா  ஆசிரியர்களும் நல்லவர்கள்தான் . அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நல்லவர்கள் எல்லோருக்கும் கற்பிக்கும் தகுதிகள் வந்துவிடாதல்லவா?

இங்கு நான் நல்ல ஆசிரியர் என்று சொல்பவர்கள் சிறப்பாகக் கற்பிக்கத் தகுதி வாய்ந்தவர்களைத்தான் குறிப்பிடுகின்றேன் .அப்படிச் சொல்லக் காரணம் வேலையற்றவனுக்கு வாத்தியார் வேலை என்று சொல்வது போல இன்று ஆசிரியர் தொழிலுக்கு வருபவர்கள் பலர் வேறு எந்த நல்ல வேலைக்குத் தகுதியில்லாமல் அல்லது சிறப்பாகச் செய்ய இயலாத காரணத்தினால் தாங்களும் ஏதாவது வேலை செய்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றக் கடைசியாகத் தேர்ந்தெடுப்பது ஆசிரியர் வேலையைத்தான் அதுவும் அரசுப் பள்ளியில் யாரையாவது பிடித்து பணம் கொடுத்து சிபாரிசு காரணமாக வேலையில் சேர்ந்து காலம் பூராவும் தங்கள் தகுதியைக் கொஞ்சமும் வளர்த்துக் கொள்ளாமல் அரைத்த மாவை அரைப்பது போலச் சிலர் இருக்கிறார்கள். இதற்குச் சிலர் விதிவிலக்காக இருக்கலாமே தவிர பெரும்பான்மையானவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்.

ஒருவருக்கு நன்றாகக் கற்பிக்கத் தெரிந்தால்தான், கற்பிப்பது அவருடைய விருப்பமாக இருக்கும்.  வேறு வழியில்லாமல் பலர் கற்பித்தலையே கடைசி விருப்பமாகத் தேர்வு செய்வதை நான் பார்த்திருக்கிறேன். நான் சொல்வது உங்களைக் காயப்படுத்தினால்  மன்னிக்கவும் .ஆனால் அத்தகையர்கள் கற்பிக்கச் செல்லக்கூடாது என்று நினைக்கிறேன். ஒரு நல்ல ஆசிரியர் அந்த தொழிலை மனமுவந்து தான் கற்றவற்றை மேலும் பலருக்கு மிகச் சிறப்பாக கற்றுக் கொடுத்து சந்தோஷபடுவர்தான். அப்படிப்பட்டவர்களால்தான் ஒவ்வொரு நாடும் சிறப்பாகச் செயல்படுகிறது.

தமிழகத்தில்  ஆசிரியர்களுக்கு மரியாதை கிடைப்பதில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எனது தனிப்பட்ட அனுபவத்தில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் நல்ல ஆசிரியர்களிடம் மிகுந்த மரியாதையுடன் இருப்பதை நான் எப்போதும் கண்டிருக்கிறேன். கற்றுக்கொள்வதற்கும் பகிர்ந்து கொள்வதற்கும் விரும்புபவருக்குக் கற்பித்தல் என்பது ஒரு (evergreen career) பசுமையான வாழ்க்கையாகும்

 
avargal unmaigal



இதையெல்லாம் இப்ப நான் எழுதக் காரணம் இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் பள்ளிக் கூடங்கள் திறக்கவிருக்கின்றன. மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் பலவித கனவுகளோடு தங்கள் குழந்தைகள் நன்றாக கற்று சமுகத்தில் ஒரு பெரிய இடத்தை அடையவேண்டும் என்ற நோக்கத்தில் பெரும்பாடுபட்டு தங்கள் குழந்தைகளை அனுப்புகிறார்கள் .அவர்களின் கனவுகள் கருகிப் போகிவிடாமல் காக்கச் செய்வது என்பது ஆசிரியர்களிடம் மட்டும் உள்ளது என்பதால் என் அறிவிற்குப் உட சில விஷயங்களை இங்கு ஆசிரியர்களுக்கு எடுத்த சொல்ல விரும்புகிறேன். இது நல்லது என்று உங்கள் மனதிற்குப்பட்டால் பயன்படத்துங்கள்
 

முதலில் உங்களிடம் சொல்ல விரும்புவது  கல்வி கற்க வரும் மாணவர்களிடம் மிகக் கடுமையாகவும் அதே நேரத்தில் மிக ஜாலியாகவும் இருக்க வேண்டாம் .மிதமான கண்டிப்புடன் கொஞ்சம் கருணையாக இருக்க முயலுங்கள்.

பள்ளிகள் திறந்த முதல் நாளில் மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பேசச் செய்து, அவர்கள் ஆசைகள் என்ன அவர்கள் குடும்ப பின்னணிகள் என்ன என்று கேட்டுத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப அவர்களிடம் எப்படி நடந்து கற்றுக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யுங்கள். அடுத்தபடியாக மாணவர்களிடம் உங்களால் வைக்கப்படும் தேர்வுகள் உங்களின் நிலை என்ன என்பதை அறியத்தானே தவிர உங்களை அறிவாளிகள் முட்டாள்கள் என்று வகுப்பில் அறிவிக்க அல்ல என்பதைத் தெளிவுபடுத்துங்கள் அதன்  பின் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் ரேங்கை வகுப்பில் அறிவிக்கப் போவதில்லை அது போல மாணவர்களும் தாங்கள் பெற்ற மதிப்பெண்களை மற்றவர்களிடம் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் சொல்லிவிடுங்கள். இங்கு அமெரிக்கப் பள்ளிக் கூடங்களில் ஒரு மாணவர் பெற்ற மதிப்பெண் மற்ற மாணவர்களுக்குத் தெரியாது மாணவர்களும் அதை ஒருவருக்கொருவர் ஷேர் செய்து கொள்ள மாட்டார்கள். மேலும் சரியாக படிக்காத மாணவர்களின் பெற்றோர்களை தனியாக அழைத்து தனி ருமில் வைத்து மாணவன் நன்றாகத்தான் படிக்கின்றான் அவன் மேலும் சிறப்பாக படிக்க இன்ன இன்ன செய்ய வேண்டும் என்று  அவர்களிடம் கனிவாக எடுத்து சொல்லுங்கள் இதனை வகுப்பு ஆரம்பிக்கும் முன் அரை மணினேரத்திற்கு முன்னால் பெற்றோர்களை அழைத்து பள்ளியின் அட்மின் அறையில் வைத்து பேசி அனுப்புங்கள்.


நீங்கள் கற்றுக் கொடுக்கும் போது சில மாணவர்களுக்கு எளிதில் புரியாது அப்படிப்பட்ட மாணவர்களிடம் நீ என்னிடம் டியூசனுக்கு வா என்று சொல்லாதீர்கள். அதற்குப் பதிலாக லஞ்ச டயத்தில் என்னுடன் சாப்பிடவா என்று அழைத்து அந்த நேரத்தில் அவனுக்குச் சற்று விளக்கிச் சொல்லித் தரலாம். லஞ்ச டயத்தில் மற்ற ஆசிரியர்களுடன் அரட்டை அடிப்பதில் என்ன லாபம் உங்களுக்குக் கிடைத்துவிடப் போகிறது .அதற்குப் பதில் இப்படிச் செய்தால் உங்கள் மாணவன் சிறப்பாக கற்றுக் கொள்வான்தானே ? அது உங்களுக்குச் சிறப்புதானே ?இங்கு அமெரிக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இப்படித்தான் செய்கிறார்கள். இங்குள்ள ஆசிரியர்கள் இப்படிச் செய்யக் காரணமும் உண்டு அது அந்த ஆண்டில் அவரின் வகுப்பில் எத்தனை பேர் சிறப்பாகத் தேர்ச்சி பெறுகிறார்கள் என்பதை வைத்து அந்த ஆசிரியரின் தகுதியும் தீர்மானிக்கப்படுகிறது


அடுத்தாக உங்களுக்குச்சொல்ல விரும்புவது நீங்கள் மாணவர்களுக்கு ஹோம் வொர்க் தரும் போது அன்று நடத்திய பாடத்திலிருந்து கொடுப்பதற்குப் பதில் அடுத்த நாள் நீங்கள் நடத்த விரும்பும் பாடத்தைப் படித்து வரும்படி செய்யுங்கள் .அப்படிச் செய்யும் போது நீங்கள் பாடம் நடத்தும் போது அது எளிதாக மாணவர்களுக்குப் புரிவதோடு அவர்களுக்கு எழும் சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவடைவார்கள்.

அடுத்தாக அடுத்த நாள் நடத்தும் பாடத்தை முதல் நாள் படித்து வரும் மாணவர்களிடம் பாடம் நடத்தும் முன் ஒரு சில மாணவர்களிடம் அவர்கள் புரிந்து கொண்டது என்ன என்று கேளுங்கள் அவர்கள் சொல்வதைக் கேட்டு வேறு சில மாணவர்களிடம் அந்த மாணவர் சொல்வது சரிதானா என்று கேட்டுவிவாதியுங்கள். அதன் பின் நீங்கள் அந்த பாடத்தை அப்படியே புக்கில் உள்ளதை வரிக்கு வரி வாசிக்காமல் அந்த பாடத்தை சம்மரைஸ் செய்து அதனை மாணவர்களுக்குக் கற்பியுங்கள். அதுவே அவர்களுக்கு போதுமானது.


மாணவர்களிடம் அடுத்த நாள் நடத்தும்  பாடத்தை முதல் நாள் படித்து வரச்  சொல்லும் நீங்களும் அந்த பாடத்தை நடத்துவதற்கு முன்னால் நன்கு படித்து அதை மேலும் எப்படி எளிதாக்கி மாணவர்களுக்கு நடத்த முடியும் என்பதை யோசியுங்கள். நீங்களும் பல தரப்பட்ட மாணவர்களுக்கு நடத்தும் போது அவர்களின் நிலைக்கு ஏற்றவாறு நடத்த இணையத்தைப் பயன்படுத்தி அது சார்பாகப் பலவற்றைக் காணொளியாகவும் எழுத்து வடிவில் சொல்லி இருப்பதையும் படித்து அறிந்து கொண்டு அதைக் குறிப்பெடுத்துச் செயல்படுங்கள். மேலும் அந்த குறிப்புகளை மாணவர்களுக்குக் கொடுங்கள். அவர்கள் அதைச் சென்று பார்த்துப் படித்து பயன் அடைவார்கள் .மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணையத்தை தங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்.


இப்படிச் செய்வதுதான் மாணவர்களுக்கு அல்லது இந்த சமுகத்திற்கு நீங்கள் செய்யும் நல்ல சேவை .அதைவிட்டுவிட்டு சமுக இணையதளங்களில் ஏதாவது எழுதிக் கிறுக்கிவிட்டு அதற்கு எத்தனை லைக்ஸ்  மற்றும் கருத்துக்கள் வருகிறது என்று எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். சமுக இணையதளங்களில் நீங்கள் பிரபலமாவதை விட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மத்தியில் நீங்கள் மிகச் சிறப்பான நல்ல ஆசிரியர் என்று பிரபலமடைய முயற்சி செய்யுங்கள் .இப்படிச் செய்வதால் காலம் கடந்தும் பல மாணவர்களின் மத்தியில் நீங்கள் பிரபலமாக நிற்பது நிச்சயம். சமுக இணையதளங்களில் சேவை செய்ய லட்சக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள் .ஆனால் மாணவர்களுக்கு உண்மையான சேவை செய்ய மிகக் குறைந்தளவு ஆட்களே இருக்கிறார்கள் அதை ஆசிரியர்களான உங்களால் மட்டுமே செய்ய முடியும்.

ஆசிரியர்களே உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கோ உடல்நிலை சரியில்லை என்றால் எவ்வளவு பணம் செலவழித்தாலும் பரவாயில்லை என்று ஒரு நல்ல மருத்துவரை அல்லது மருத்துவமனையை நாடுவீர்களோ அதைப் போன்ற  எதிர் பார்ப்புடன்தான் பல பெற்றோர்கள் தங்களின் வியர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை தங்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக தங்களின் தகுதிக்கு மீறிச் செலவழித்து பள்ளிக்குக் கட்டணம் செலுத்தி பள்ளிக்கு அனுபுக்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பு நல்ல ஆசிரியரும்  நல்ல  பள்ளிக் கூடம் என்பதாகத்தானே இருக்கும். அதைப் பூர்த்தி செய்வதுதானே உங்கள் கடமை..

சிந்தியுங்கள் செயல்படுங்கள் காலம் கடந்தும் உங்கள் பெயர் சமுகத்தில் நிலலைத்து நிற்கச் செயல்படுங்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி. எனது பதிவுகளில் வார்த்தைகள் எப்போதும் மிகக் கடுமையாக இருப்பதாகவே பலரும் சொல்லுகிறார்கள் அது போல இந்த பதிவில் கடுமையான வார்த்தைகள் ஏதும் இருந்து .அது உங்களைக் காயப்படுத்தி இருந்தால் அதற்காக இப்போதே நான் இங்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்

2 comments:

  1. நீங்கள் வெளிநாட்டுக் கல்வி முறையை, ஊரில் கொண்டுவரச் சொல்லுறீங்கள் போல இருக்கு, நல்ல விசயம் தான் ஆனால் அங்கு அது எவ்வளவு தூரம் சாத்தியப்படுமோ தெரியாது...

    ReplyDelete
  2. தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.