Thursday, June 30, 2022

 பிரதமரின்  மௌனம்   நாட்டில் நடக்கும் வெறுப்பு குற்றங்களுக்கு ஒப்புதல் அளிப்பது போல இருக்கிறதா?

 

@avargal unmaigal



தேச தலைவர்கள் என்பவர்கள் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுபவர்கள். தேசத்தில் உள்ள மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவார்கள்.. ஆனால் இப்போது உள்ள தேச தலைவர்களோ, தேச வளர்ச்சிக்குப் பாடுபடுவதை விட்டு விட்டு மத வளர்ச்சிக்குப் பாடுபடுவதாகக் காண்பித்துக் கொள்கிறார்கள் நன்றாகப்  புரிந்து கொள்ளுங்கள் அவர்கள் மத வளர்ச்சிக்குப் பாடுபடுவதாகக் காண்பித்துக் கொள்கிறார்களே தவிர ,மத வளர்ச்சிக்குப் பாடுபடுவதில்லை. இதைச் சொல்லக் காரணம் மதவளர்ச்சிக்கு பாடுபடுவார்கள் மதங்கள் போதிக்கும் அன்பை  அல்லவா விதைக்க வேண்டும் ஆனால் அவர்கள் மதங்கள் பெயரில் விஷத்தை அல்லவா விதைக்கிறார்கள். விஷம் விதைத்து அன்பை அறுவடை செய்ய முடியாது .ஆனால் அப்படிச் செய்ய முடியும் என்று தலைவர்கள், அதற்கான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு என்று மக்களுக்குப் புரிந்தும் அமைதியாக ,அந்த தலைவர்களின் செயல்களுக்குப் பலத்த ஆதரவைக் கண்மூடித் தனமாகத் தருகிறார்கள்

இன்று ஒரு  அப்பாவி மனிதனின் தலை துண்டிக்கப்படுகிறது.
மத வெறுப்பை விதைத்தவர் தலைமறைவாக இருக்கிறார்
தேசம் பதட்டமாக உள்ளது.
தேச தலைவர் அது பற்றி  வாய் திறக்காமல் கருத்துகள் சொல்லாமல் மெளனம் காத்துக் கொண்டு இருக்கிறார்.

பொறுப்பாகச் செயல்பட்டு பிரச்சனைகளின் ஆணி வேரைக் கண்டுபிடித்து அதைப் பற்றி விவாதித்து இனிமேலும் அப்படி ஒரு நிகழ்வு நடை பெறாவண்ணம் செயல்படுவதற்குப் பதிலாகச்  செய்தி சேனல்களோ பிரச்சனை என்ற தீயை அணைப்பதற்குப் பதிலாக அது மேலும் மேலும் அதன் பங்கிற்குத் தீயை மூட்டிக் கொண்டு இருக்கிறது..



இதன் விளைவே இரண்டு இஸ்லாமியக் கொலையாளிகளால் ,ஒரு சாதாரண இந்து மதத் தையல்காரர்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம். இந்த செயலால்  இரு மதங்களைச் சார்ந்தவர்களுக்கும் எந்த வித பலனும் இல்லை.. ஆனால் வெறுப்பை விதைத்த அரசியல் தலைவருக்கு இதனால் வாக்கு எண்ணிக்கை அதிகரித்து இருக்கும் ,அதுதான் அந்த  தலைவருக்கு வேண்டும்.

அப்படிப்பட்ட தலைவர்களின் செயல்களைக் கண்டு கொள்ளாமல் கண் மூடி ஆதரித்தால் இன்னும் பல அப்பாவிகள் மடிந்து கொண்டுதான் இருக்கிறார்கள் & இருப்பார்கள்.  பரபரப்பான செய்திகள் விவாதங்கள் நடை பெற்றுக் கொண்டுதான் இருக்கும்,  மறந்து விடாதீர்கள் நாளைய செய்திகளில்,  விவாதங்களில் உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரே கூட செய்தியாக விவாத பொருளாக இருப்பார். நீங்கள் அழுது கொண்டிருப்பீர்கள் .உங்களுக்கு ஆறுதல் சொல்ல யாரும் இருக்கமாட்டார்கள் . ஆனால் உங்களைச் சுற்றி மீடியாக்கள் கேமராக்கள் உங்கள் அழுகைகளைப் படம் பிடித்து செய்திகளாக்கிக் கொண்டிருக்கும். உங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரின் இழப்பு உங்கள் குடும்ப அஸ்திவாரத்தையே ஆட்டி உருக்குலைத்து விடும்... ஆனால் உங்கள் குடும்பத்தினரின் இழப்பால்
தேச தலைவருக்குச் செல்"வாக்கு"கள் கூடும்.


இந்த மத வெறுப்பினால்  ஏற்படும் பலிகளுக்கு எந்த அரசியல் தலைவர்களின் குடும்பங்களோ அல்லது பெரிய தொழில் அதிபர்களின் குடும்பங்களோ அல்லது பிரபலங்களின் குடும்பங்களோ பலியாவது இல்லை .பலி ஆவது எல்லாம் அப்பாவி மக்களின் குடும்பங்களில்தான்.

இஸ்லாமியக் கொலையாளிகள் கொன்றது அப்பாவி தையல்காரரைத்தானே ஒழிய, வெறுப்பை விதைத்த தலைவர்களை அல்ல ,அது போல மாமிசம் வைத்த அப்பாவிகள்தான் இந்து கொலையாளிகளால் அடித்துக் கொல்லப்படுகிறார்களே ஒழிய, மத வெறுப்பை விதைக்கும் சிறுபான்மை தலைவர்களை அல்ல.

இதற்கு முடிவு மக்களிடம்தான் உள்ளது. அதனால் நீங்கள் எது நல்லது என்ற சிறப்பான முடிவை எடுக்காத பட்சத்தில் வருங்காலத்தில் உங்கள் குடும்பத்திலிருந்து வெறுப்பை விதைக்கும் தலைவர்களின் வளர்ச்சிக்காகப் பலி கொடுக்க தயாராக இருங்கள்.


இந்தியாவின் நலனுக்காக, மனித நேயத்திற்காக, அரசியலிலிருந்து மதத்தை ஒதுக்கித் தள்ள வேண்டும், மேலும் மதம் மற்றும் வெறுப்புணர்வைத் தங்கள் விற்பனைப் பொருளாக ஆக்கிக் கொள்ளும் அனைத்து அரசியல்வாதிகளையும் தூக்கி எறிய வேண்டும்.


இதை ஒவ்வொரு மதத்திலும் உள்ள ஒவ்வொரு மதப்பற்று அதிகம் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.


மதத்தை வளர்க்க மத தலைவர்கள் செயல்படட்டும், தேசத்தை வளர்க்கத் தேச தலைவர்கள் ஈடுபடட்டும் . எப்போது தேச தலைவர்கள் பொருளாதாரம் மக்கள் நலம் பற்றிப் பேசாமல் மதம் பற்றிப் பேசினால் அவர்களைப் புகழாமல் உடனடியாக தூக்கி எரியுங்கள்.

நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் உங்களுக்கான உங்கள் சந்ததிகளுக்கான நல்வாழ்க்கையை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க முடியும் அது உங்கள் கையில்தான் இருக்கிறது

நீங்கள் வாழ விரும்புவது நரகத்திலா அல்லது நல்ல நகரத்திலா என்பது உங்களின் கையில்தான் உள்ளது

அமைதி, அமைதி அமைதி

டிஸ்கி : அனைத்து வன்முறைகளும் தவறு மற்றும் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும், ஆனால்...அரசியல் சார்ந்த வன்முறையால் யாருக்கு லாபம் என்று எப்போதும் தேடுங்கள். எப்போதும் ஒரு மனிதன்  உயிரை இழப்பதைப் பற்றி அவர்கள் உண்மையில் கவலைப்படுவதில்லை. அதை வெறுப்பு மற்றும் பகைமைக்கு பயன்படுத்துவதில்  தலைவர்கள் அக்கறை காட்டுகிறார்கள்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. இது போல் எண்ணங்களே இல்லை என்பதால் தான் அவன் வெங்கோலன்... அதன் தொண்டர்கள் மனிதர்களே அல்ல...

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.