Tuesday, June 28, 2022


 

@avargalunmaigalஎடப்பாடி ஒன்றும் எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற ஒரு ஆளுமை மிக்க தலைவர் அல்ல.

கடந்த வாரத்திலிருந்து எடப்பாடி மற்றும் பன்னீர் செல்வத்திற்கிடையேயான போட்டி நடுத் தெருவில் வந்து நிற்கிறது. இதில் எடப்பாடியின் கை ஓங்கி நின்று, தலைமை இடத்திற்கு வந்தாலும் அவர் ஒன்றும்  எம்ஜிஆர் ஜெயலலிதா போன்ற ஒரு ஆளுமை மிக்க தலைவர் அல்ல. அதனால்  தனக்குக் கிடைத்த தலைமை பதவியை வைத்து அதிமுக உறுப்பினர்கள் அனைத்து பேரையும் அணைத்துச் சென்று வோட்டுகளாக அள்ள முடியாது.

இப்படிச் சொல்லக் காரணம், தன் கட்சியில் தனக்கு எதிராக முரண்படுபவர்களைப் பக்குவமாக அரவணைத்துச் செல்பவனே தலைமை பதவியில் நீடித்து நிற்க முடியும் .அதுவும் தன் கட்சியில் ஜெயலலிதாவால் முதல்வராக நியமிக்கப்பட்டு இருந்த பன்னீர் செல்வத்தை ஒதுக்கலாம் ஆனால் அவரை ஒதுக்குவதன் மூலம் அவர் சார்ந்த சமுகத்தையும் ஒதுக்குவது மாதிரிதான் எடப்பாடியின் அவசர செயல்பாடுகள் இருக்கின்றன.


எடப்பாடி காலில் விழுந்து, காலை வாரித்தான்  இப்போதையை நிலைக்கு வந்து இருக்கிறார். ஆனால் பன்னீர் செல்வமோ ஆளுமை மிக்க ஜெயலலிதாவால் அடையாளப்படுத்தப்பட்டு பதவிக்கு வந்தவர்.. அதுவும் எடப்பாடியுடன் சில முரண்பாடுகள் இருந்தாலும் இறுதியில் எடப்பாடி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இதுவரை ஒத்து போய்தான்  வந்து இருக்கிறார். அப்படிப்பட்டவரை எந்த வித ஒரு அடிப்படை காரணமும் இல்லாமல் தீடிரென்று குற்றம் சுமத்தி கட்சியிலிருந்து ஓரங்கட்டுவது அதுவும்  எந்த வித ஒரு எலக்ஷனும் அருகில் இல்லாத இந்த நேரத்தில் செய்வது என்பது எடப்பாடிக்கு ஒரு மிகப் பெரிய சரிவு என்றுதான் சொல்ல வேண்டும்.

பன்னீர் செல்வத்தை ஒதுக்குவதன் மூலம் தென் பகுதி மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோரின் ஆதரவுகளை இழக்க நேரிடும் .அது கட்சிக்கு ஒரு பெரிய பாதிப்பு என்பது அரசியல் புரிந்தவர்கள் ஒத்துக்கொள்வார்கள் .அதிமுகவின் ஆளுமைகள் ஆன எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சாதி சார்பற்று இருந்ததால்தான் கட்சி மிக வலுவாக வைத்து இருந்தனர். அதில் சேதம் ஏற்பட்டால் கட்சிக்கு பெரும் இழப்புதான்

ஆளுமை என்பது கட்சிக்கு முரண்பட்ட மாற்றுக் கட்சியைச் சார்ந்தவர்களையும் சாமர்த்தியமாக அணைத்து அரவணைத்துச் செல்வதில்தான் இருக்கிறது. அப்படி இருக்கையில் சொந்தக் கட்சியில் முரண்படுபவர்களை அணைத்து அரவணைத்து ஒரு தலைவரால் செய்ய முடியவில்லை என்றால் அவர் பெரும் தோல்வியைத்தான் வருங்காலத்தில் சந்திப்பார்

இப்போது எடப்பாடிக்குக் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்களின் அதிகபட்ச ஆதரவுகள் இருப்பதால் இப்போது கட்சித் தலைமை பதவியில் நீடிக்கலாம் .ஆனால் கட்சி தொடர்ந்து நீடிக்கத் தொண்டர்களின் ஆதரவுதான் தேவை. அதைக் கண்ணாடி போலச் சிதறவிட்டால் பலன்  கிடைக்கப் போவது இல்லை.

மேலும் இருவருக்கிடையே நடக்கும் போட்டியின் காரணமாகக் கட்சியின் சின்னமான இரட்டை இலை முடக்கப்பட்டால் அதைவிட மோசம் ஏதுவுமில்லை.

இப்போது எடப்பாடியின் ஆதரவாளர்களான ஜெயக்குமார், மணி, மற்றும் சண்முகம் போன்ற பலர் பன்னீர் செல்வம் கட்சிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர் செய்த துரோகம் என்ன என்பதைப் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லவில்லை மொட்டையாக குற்றம் செய்துவிட்டார் என்று கூறுவதை மக்கள் ஏற்கமாட்டார்கள் .எடப்பாடி முதல்வராகப் பதவி ஏற்றதிலிருந்து அவருடன் பன்னீர் சற்று முரண்பட்டு வந்தாலும் இறுதியில் என்னவோ எடப்பாடியின் விருப்பத்தின் படிதான் நடந்து வந்து இருக்கிறார் .அப்படி இருக்க அவசரப்பட்டு ஏன் இப்படி எடப்பாடி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படுவது அவரை அவரே வீக்காக்கிக் கொள்வது போலத்தான். அதிமுகவின் நிலை தேதிமுக நிலை போல ஆகிவிடக்கூடாது ஆக்கியும் விடக் கூடாது


எதுவும் எப்போது மாறலாம் . தலைவர்களின் கணிப்பும் நமது கணிப்பும் எந்த நேரத்திலும் மாறலாம் என்பதால் நடப்பதைச் சற்று ஒதுங்கி இருந்து நாம் பார்ப்போம்


கொசுறு :
@avargal unmaigalஅன்புடன்
மதுரைத்தமிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.