நூபுர் ஷர்மா பேசியது சரி என்றால் மோடி ஏன் அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்?
எதை, எங்கே, யார் ,எப்போது, எப்படிப் பேச வேண்டும் என்ற ஒரு முறை இருக்கிறது. அதன்படி பேசினால்தான், அதன் கருத்து மக்களுக்குச் சரியாக போய்ச் சேரும் . உதாரணமாக உடம்பு எப்படி இருக்கிறது என்று யார் கேட்கிறார்கள், எந்த தொனியில் கேட்கிறார்கள் என்பதைப் பொருத்து அதன் அர்த்தம் மாறும். பாஜகவின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பாளர் நூபுர் ஷர்மா நபிகள் குறித்த கருத்து ஒன்றைக் கூறி இருந்திருக்கிறார். இதை ஒரு சாதாரண ஆள் ஒருவர் பொது வெளியில் பேசி இருந்தால் அதற்கு இவ்வளவு எதிர்ப்பு வந்து இருக்காது. அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று போயிருக்கும்.
ஆனால் பாஜகவின் கொள்கைகள் என்ன ,அவர்கள் எப்படி மாற்று மதத்தைக் கையாளுகிறார்கள் என்பது உலகமே அறிந்த உண்மை. அப்படி இருக்கும் போது அதன் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பாளர் நூபுர் ஷர்மா ஒரு கருத்தைப் பொதுவெளியில், அதுவும் மீடியாவில் ஒரு ஆக்ரோஷத்துடன் கதறுகிறார் என்கிற போது அதை யாரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதிலும் இஸ்லாமியர்கள் முகம்மது நபியை தங்களின் உயிருக்கும் மேலாக நேசிப்பவர்கள் அப்படி இருக்கும் போது அவரை இழிவு செய்யும் முற்படும் போது அவர்கள் கோபம் கொள்வது இயல்பு..
பலர், நூபுர் ஷர்மா என்ன இல்லாத எதையுமா சொல்லி விட்டார் மதப் புத்தகத்தில் உள்ளதைத்தானே சொல்லி இருக்கிறார் என்கிறார்கள். ஆமாம் அவர் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார் ஆனால் சொல்லிய இடம் & விதம் இழிவுபடுத்தும் விதமாகத்தான் கூறி இருக்கிறாரே ஒழியப் பாராட்டும் விதமாகச் சொல்லி இருக்கவில்லை என்பதை சின்னபுள்ளைகள் கூட புரிந்து கொள்வார்கள்தானே?
இது வினைக்கான எதிர்வினை என்று கூறுகிறார்கள் சரி எது வினை, எது எதிர்வினை என்று விளக்கம் கேட்டால் அதற்கு சரியாக பதில் சொல்லாமல் மொட்டையாக எல்லோரும் எங்களின் கடவுளை விமர்சிக்கிறீர், அதனால்தான் நாங்கள் உங்களை விமர்சிக்க வேண்டியுள்ளது என்று கூப்பாடு போடுகிறார்கள். சரி யார் உங்கள் மதத்தை விமர்சனம் செய்தது , இழிவு படுத்தியது , என்ன சிக்கல் என்று எந்த தெளிவும் குறை சொல்பவர்கள் எவரிடமும் இல்லை. சரி உங்கள் கூற்றுப்படி தேவையற்ற விமர்சனத்தை செய்தது யார், அவரின் மீது அரசு என்ன சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தது அப்படி எடுக்கவில்லை என்றால் எடுக்காத அரசை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு மற்ற மதத்தை இழிவுபடுத்துவது எந்த வகையில் நியாயம் என்ற கேள்விக்கும் பதிலே வராது.
இப்போது நூபுர் ஷர்மா கூறியது தப்பு இல்லை என்று ஆக்ரோஷத்துடன் கூறுபவர்கள், சில காலம் முன்பாக வைரமுத்துவும் ஒரு புத்தகத்திலிருந்ததைத்தானே மேற்கோள் காட்டி பேசி இருந்தார் .அப்புறம் ஏன் ஜீயர் சுவாமிகளிலிருந்து இப்போது நூபுர் ஷர்மாவிற்கு ஆதரவாகப் பேசியவர்கள் எல்லோரும் வைரமுத்துவிற்கு எதிராகப் போராடியது ஏன்? தங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
சரி அதையெல்லாம் விட்டுவிடுவோம், நூபுர் ஷர்மா சொல்லியது சரி என்றால் அதற்கு அரபு நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் போது மோடி எதற்காக அவர்களின் கோபத்தைக் கண்டு அஞ்சி நூபுர் ஷர்மாவை தன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் பண்ணி இருக்கிறார் , நியாமாக இருந்தால் மோடி என்ன சொல்லி இருக்க வேண்டும் .என் நாட்டுப் பெண் ஒருத்தி புத்தகத்தில் எழுதி இருப்பதைத்தானே பேசி இருக்கிறார் .அது எப்படி தப்பாக இருக்க முடியும், அதற்கு எப்படி நீங்கள் எதிர்ப்பை எங்கள் நாட்டுத் தூதரை அழைத்துச் சொல்ல முடியும் என்று பதிலுக்கு அவர்களுக்குக் கண்டனம் எழுப்பி அல்லவா இருக்க வேண்டும் . அப்படி இல்லாமல் தன் கட்சியைச் சார்ந்தவரை, தன் நாட்டுக் குடிமகளை மற்றவர்களுக்காகப் பலி கொடுத்தது ஏன்? ஒரு நாட்டின் கெளரவத்தை காப்பாற்ற வேண்டிய மோடி ஏன் கோழையாக வாய் மூடிக் கொண்டு இருக்கிறார் .ஒரு வேளை அவர் படித்த பொலிடிக்கல் சைன்ஸ் பட்டப்படிப்பில் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருக்கிறதா என்ன?
நாம் 310 இடங்களை மோடிக்கு பெருமளவில் கொடுத்தும் அந்த அதிகாரத்தை எப்படி பயன்படுத்துவது என்று நமது பிரதமருக்குத் தெரியவில்லை. அது தெரிந்திருந்தால் நம் இந்தியாவின் கெளரவம் இன்று இப்படி சிரிக்கும்படி ஆகி இருக்காது.
பாசிசத்தின் இயல்பு இதுதான். சிக்கலில் மாட்டிக்கொண்டால் தவறு செய்தவர் தங்களை சார்ந்தவர் என்றாலும் அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்லி கழட்டிவிடுவதுதான் வழக்கம்.
அதுமட்டுமல்ல நூபுர் ஷர்மாவை கட்சியிலிருந்து விலக்கியது மட்டுமல்ல ,அந்த விலக்கியதற்காக அவருக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை அவரது விலாசத்துடன் பொது வெளியில் வெளியிட்டு அவருக்கும் அவரது குடும்பத்தினர் உயிருக்கும் அச்சுருத்ததலை ஏற்படுத்தும்படி பாஜக செய்தது ஏன்? இதுதான் அவருக்குக் கொடுக்கும் பாதுகாப்பா?
தவறுகள் செய்வது இவர்கள் ஆனால் குறை சொல்லுவது என்பதோ மற்றவர்களை என்ன நியாயம்டா?
இந்தியா ஒரு மிகப் பெரிய ஜனநாயக நாடு அந்த நாட்டை ஆளும் பொறுப்பை அந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஆதரவு கொடுத்து ஒருவரை தேர்ந்தெடுத்து தலைவர் ஆக்கினால் ,அந்த தலைவர் அந்த நாட்டிற்கு மற்றும் நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பாடுபட்டு அவர்களை உச்சத்திற்குக் கொண்டு பெருமை சேர்ப்பதுதான் .அந்த தலைவரின் கடமையே தவிர, மதவெறுப்பை வளர்த்து அதில் குளிர் காய்ந்து தனக்கு ஆதரவு அளித்த மக்ககளை முட்டாளாக்கி அவர்களின் வாழ்வைச் சீரழிப்பது சிறப்பான செயல் இல்லை.
நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியைப் பேச்சளவில் வைத்துக் கொண்டு செயலில் மதவெறுப்பை வளர்ப்பதினால் எந்த நாடும் உச்சத்திற்குச் செல்வதில்லை அழிவிற்குத்தான் செல்லும்
பிரிவியையை நிறுத்தி; நமது தேசம் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக ஒன்றுபடத் தொடங்குங்கள். அரசியல் வாதிகள் வகுப்புவாத பிரிவினைவாத அரசியலில் இருந்து பலன்களைப் பெறுவார்கள் மற்றும் அவர்களள் சுகமாக வாழ அதனை பயன்படுத்தி கொண்டு தங்கள் வாழ்க்கையை அனுபவிப்பார்கள். ஆனால்பொது மக்களோ வெறுப்பு மற்றும் பகைமைக்கு ஆளாகி வாழ்க்கையை தொலைத்து நிம்மதில் இல்லாமல் வாழ நேரிடும்.
இதை இனிமேலாவது தலைவர் மற்றுமல்ல மக்களும் உணர்ந்து மதவெறுப்பை களைந்து ஒருவருக்கொருவர் அன்புடன் பழகி நல்லபடியாக வாழ முயற்சிக்க வேண்டும்.. இன்றைய காலத்தில் இப்படிச் செய்வது இந்தியாவில் எளிதல்ல என்றாலும் அப்படிச் செய்தால்தான் நம் வருங்கால சந்ததிகள் அமைதியாக வாழ முடியும். நமக்காக இல்லாவிடிலும் நம் வருங்கால சந்திகளுக்காக நாம் இதைச் செய்யத் தொடங்க வேண்டும்.
ஜெய் ஸ்ரீராம் , ஓம் சக்தி பரா சக்தி, அல்லாஹு அக்பர் , கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
அன்புடன்
மதுரைத்தமிழன்
// கழட்டி விடுவது வழக்கம் // என்பது நூற்றுக்கு நூறு உண்மை... எடுத்துக்காட்டு மகாத்மாவை கொன்றது...
ReplyDelete
Deleteஅத்வானியை ஒரு தலைவராக கூட மதிக்காதது.... இந்த நிலை மோடிக்கு வர இன்னும் தூரம் அதிகம் இல்லை என நினைக்கின்றேன்