Saturday, January 22, 2022

 

@avargal unmaigal

இந்த செய்தி சாரு நிவேதிதாவின் கண்களில்படாமல் இருக்க வேண்டும்.. இல்லையென்றால் அவர் வயிறு எரிந்து சாபம் விடுவது என்னவோ உண்மை



 
ரூ.100-க்கு 642 பக்கங்கள்... 15 நாட்களில் 5,000 புத்தகங்கள் விற்பனை... 'புதுமைப்பித்தன் கதைகள்' நூலுக்கு மகத்தான வரவேற்பு
the-goal-is-to-bring-literary-reading-to-the-younger-generation-the-seer-reader-circle

சென்னை: ரூ.100 மட்டுமே விலையிலான 642 பக்கங்கள் கொண்ட 'புதுமைப்பித்தன் கதைகள்' நூலுக்கு மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. அச்சடிக்கப்பட்ட 5,000 முதல் பதிப்பு நூல்கள் விற்பனையாகியுள்ளதோடு, மேலும் 3,000 நூல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுமைப்பித்தனின் குறையாத மவுசை பறைசாற்றும் இந்த நிகழ்வுக்குப் பின்னால் இருக்கிறது, சீர் வாசகர் வட்டம். கல்லூரிகளில் படிக்கும் இளைய தலைமுறையினரிடம் இலக்கிய வாசிப்பைக் கொண்டு சேர்ப்பதே இலக்கு என்கிறார் சீர் வாசகர் வட்டத்தின் அமைப்பாளரான கவிஞர் தம்பி.

'புதுமைப்பித்தன் கதைகள்' நூல்: சென்னை புத்ககக் காட்சியில் வெளியிடுவதற்காக சீர் வாசகர் வட்டம் என்ற அமைப்பு 'புதுமைப்பித்தன் கதைகள்' என்ற 642 பக்கங்கள் கொண்ட நூலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது. இதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி இந்த நூல் குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்தநிலையில் கரோனா பரவல் காரணமாக புத்தக் காட்சி ஒத்திவைக்கப்பட்டது.

விற்று தீர்ந்த முதல் பதிப்பு: இலக்கிய தேடலுக்கும், வாசிப்பு அனுபவத்துக்கும் புத்தக காட்சி நடைபெறாதது, ஒரு பெரிய பிரச்னையாக இருக்காது என்பதை உணர்த்தும் வகையில், சீர் வாசகர் வட்டத்தின் 'புதுமைப்பித்தன் கதைகள்' நூல் வாசகர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. டிசம்பர் 26-ஆம் தேதி அறிவிப்பு வெளியான நாள் முதல், வாசகர்களின் பேராதரவைப் பெற்ற இந்த நூலுக்கான முன்பதிவை கடந்த ஜனவரி 10-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டுள்ளது. காரணம், அச்சடிக்கப்பட்ட 5,000 முதல் பதிப்பு நூல்கள் விற்பனையாகியுள்ளதோடு, மேலும் 3,000 நூல்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் பதிப்புக்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

நூலின் சிறப்பு: சிறுகதைகளின் முன்னோடியான புதுமைப்பித்தனின் கதைகள் நூலை இதற்கு முன் பல்வேறு பதிப்பகங்கள் பதிப்பித்துள்ளன. ஆனால், 642 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை இளைய தலைமுறை வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக 100 ரூபாய்க்கு விற்பனை செய்ய சீர் வாசகர் வட்டம் முடிவு செய்தது. இந்த நூலில் உள்ள கதைகளை சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் வீ.அரசு தொகுத்துள்ளார். மலிவு விலை என்பதால் தரமற்ற நிலையில் இல்லாமல், கெட்டியான அட்டையுடன், தரமான தாளில் வெளிவந்துள்ளது இந்த நூல்.

இந்த நூல் குறித்து நம்மிடம் சீர் வாசகர் வட்டத்தின் அமைப்பாளர் கவிஞர் தம்பி பகிரும்போது, "நாங்கள் நன்செய் பிரசுரம் என்ற பேரில் மாணவர்களுக்கான கலை இலக்கிய இதழை தொடர்ந்து நடத்தி வருகிறோம். 10 ரூபாய் மதிப்பிலான அந்த இதழில் மாணவர்களின் படைப்புகளே இடம்பெறும். நன்செய் பிரசுரம் சார்பில் இயங்கும் அமைப்புதான் சீர் வாசகர் வட்டம். புத்தக காட்சி ஒத்திவைக்கப்பட்ட சூழலிலும், சீர் வாசகர் வட்டத்தின் சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள 'புதுமைப்பித்தன் கதைகள்' நூலுக்கு வாசகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மொத்தமுள்ள 102 கதைள், பல பரிமாணக் கதைகள், எளிய கதைகள் மற்றும் தழுவல் கதைகள் என்ற 3 பிரிவுகளின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளன. பல பரிமாணக் கதைளின் தலைப்பின் கீழ் 60 கதைகளும், எளிய கதைகளின் தலைப்பின் கீழ் 31 கதைகளும், தழுவல் கதைகள் தலைப்பின் கீழ் 11 கதைகளும் உள்ளன. சீர் வாசகர் வட்டத்தைச் சேர்ந்த 105 பேர் இதற்காக நன்கொடை வழங்கியுள்ளனர்.

இது முதல் முயற்சி அல்ல, ஏற்கெனவே பெரியாரின் "பெண் ஏன் அடிமையானாள்" நூலை 10 ரூபாய்க்கு கொண்டு வந்து தமிழகம் முழுவதும் 3 லட்சம் பிரதிகளை விற்பனை செய்துள்ளோம். தொடர்ந்து அறிவு இயக்கமாக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், தற்போது இந்த நூல் வெளிவந்துள்ளது. இந்த முயற்சி பதிப்பாளருக்கும் வாசகருக்கும் இடையிலான இடைவெளியை குறைத்துள்ளது. எங்களது நோக்கம் பல நூறு தலைப்புகளில் நூல்களை கொண்டு வருவதல்ல, ஏதாவது ஒரு தலைப்பிலான நூலை லட்சக்கணக்கான இளம் வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான். பல்வேறு ஊர்களில் இருந்து, மழைக்கு கூட புத்தக கடைகள் பக்கம் ஒதுங்காதவர்கள் இந்த நூலை வாங்கிச் செல்வதாகவும், முதல்முறை வாசகர்கள் பலர் வாங்கிச் சென்றதாகவும் வரும் தகவல்கள் மகிழ்ச்சியளிக்கிறது. அடுத்தடுத்து பல படைப்புகளைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக ஒருவரது நூலகத்தில் இடம்பெற விரும்பும் அனைத்து முக்கியப் புத்தகங்களும் கொண்டு வர முயற்சிப்போம். மேலும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகக் காட்சி எப்போது தொடங்கினாலும், 10,000 புத்தகங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும்'' எனத் தெரிவித்தார்.

Courtesy : பதிவை எழுதியவர்  குமார் துரைக்கண்ணு. வெளியிட்டவர்கள் : இந்து தமிழ் திசை 
 
 

3 comments:

  1. நல்ல தகவல்கள்.  பாராட்டப்பபடவேண்டிய முயற்சி.  என்னிடம் ஒரு புதுமைப்பித்தன் கதைகள் தொகுப்பு இருக்கிறது.  சில வருடங்களுக்கு முன்னர் வாங்கியது.  அதில் 642 கதைகள் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.  என்ன விலை என்றும் பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  2. தலைப்பு நீங்க வைச்சதுதானே!!! ஹாஹாஹா சிரித்துவிட்டேன்.

    நூல்கள் பற்றிய தகவல்கள் அறிய முடிகிறது

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.