Saturday, November 6, 2021

 

@avargal unmaigal

ஜெய்பீமும் சமுக இணையதளங்களில் வலம் வரும் போலி அனுதாப அலையும்


#ஜெய்பீம்  படம் பார்த்தேன். நம் சமூகத்தில் இன்னும் பல்வேறு வடிவங்களில் நிலைத்து நிற்கும் சமூகப் பாகுபாட்டின் கடினமான உண்மைகளை திரையில் தைரியமாக முன்வைக்கிறது.  இந்த படம் சமுகத்தின் கண்களைக் கொஞ்சமாகத் திறக்கும்.  படக் குழுவிற்கு மனம் திறந்த பாராட்டுகள் முதலில்.


#ஜெய்பீம் சமுகத்தில் நடக்கும் அவலங்களை  அதை அறியாத உணராத மேட்டுக் குடி மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு படமாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. இந்த படத்தில் நடித்தவர்கள் மிகச் சிறப்பாக தங்கள் பாத்திரங்களை ஏற்று நடித்து இருக்கிறார்கள் படம் எடுத்துச் சென்றவிதமும் அருமை போராடிக்காமல் செல்லுகின்றது அவ்வளவுதான்.


இந்த படத்தைப் பார்த்ததும் சில நாட்கள் மன உலைச்சல் இருந்தது தூக்கமே வரவில்லை என்று பலரும் எழுதி இருப்பதைப் பார்க்கும் போது எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை காரணம் இப்படி பலர் சொல்லுவதன் மூலம் அவர்களை  மனதில் ஈரம் மிக்க மனிதர்களாக இந்த சமுகத்திற்குக் காட்டு வேண்டும் என்ற வெளிப்பாடுதான் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதுதான் என் கருத்து

எனக்கு இந்த படம் மன உலைச்சலைத் தரவில்லை காரணம் இது போன்ற பல சம்பவங்களைச் சிறுவயது முதல்  மதுரையிலிருந்த காலம் முதல் அமெரிக்காவில் இன்று வசிக்கும் இன்றைய தினம் வரை தினம் தினம் பார்த்து அனுபவித்து வருகின்றேன். இந்த மாதிரி சம்பவங்களைப் பார்க்கும் போது பாதிக்கப்பட்டவர்களின் மீது மிக அனுதாபமும் பாதிப்பிற்கு உட்படுத்துவார்கள் மீது கொலைவெறிதான் வருகிறது. எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் அல்லது அதிகாரம் இல்லாமல் சந்தர்ப்பம் வாய்த்தால் இப்படிப்பட்டவர்களைச் இப்படிப்பட்டவர்களைப் பழிக்கு பழி வாங்கி  இருப்பேன். ஆனால் அதிகாரம் உள்ளவர்களோ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் அதுதான் நிஜம்.

இந்த படம் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராக நடந்தாக சொல்லப்படுகிறது, நன்றாக யோசித்துப் பாருங்கள் இப்படிப்பட்ட சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டும்தான் ஏற்படுகிறதா என்ன? ஏன் உலகமெங்கும் உள்ள மதத்தினருக்கும் இனத்தினருக்கும் எதிராக இப்படிப் பட்ட சம்பவங்கள் இன்றும்  நடந்து கொண்டுதான் இருக்கின்றன.( ஏன் பெண் இனத்திற்கு எதிராகவும் வன்முறைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சிறு உதாரணம் பொள்ளாச்சி பாலியில் கொடுமை. அதற்குச் சட்டம் இன்னும் என்ன செய்து கொண்டு இருக்கிறது ) பெண் இனமும் தாழ்த்தப்பட்ட இனமாகத்தானே நடத்தப்படுகிறது


குற்றங்கள் செய்த எத்தனையோ இஸ்லாமியத் தீவிரவாதிகள் உலாவிக் கொண்டிருக்கும் வேளையில் குற்றம் செய்யாத எத்தனை அப்பாவி இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளின் பெயரால் சிறையில் வாடிக் கொண்டு இருக்கிறார்கள் அது போல எத்தனை கருப்பு இன மக்கள் மற்றும் வேற்று இன மக்கள் பல இடங்களில் உலகமெங்கும்  சிக்கிச் சீரழிந்து வருகின்றனர்.

இப்படி பலரும் உலகமெங்கும் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அதில் ஒரு சிலர்தான் நல்ல போலீசாரின் கண்களிலோ சமுக ஆர்வலர்களின் கண்களிலோ அல்லது வக்கீல் மற்றும்  நீதிபதிகளின் கண்களில்பட்டு சட்ட ரீதியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்

உங்களில் பலருக்கும் தெரிந்து இருக்கும் உலகில் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனப்படும் அமெரிக்காவில் சட்டதிட்டங்கள் ஒரு அளவிற்கு நியாயமாக இருக்கும் இடத்தில் கூட பட்டப்பகலில் ஒரு அப்பாவி கருப்பு இனத்தைச் சார்ந்தவரைப்  போலீசார் அவரின் கழுத்தில் அழுத்திச் சாக அடித்தார் என்பது. இவ்வளவிற்கும் அதை ஒருவர் வீடியோ எடுக்கிறார் என்று தெரிந்தும் அதை அவர் செய்து இருக்கிறார் அப்படி இருக்கையில் தமிழக சிறையில் விசாரணை கைதி இறப்பது என்பதில் ஆச்சிரியம் இல்லை.


தமிழக சிறையில் மின்சார வயர் கடித்து கைதிகள் இறப்பதும் சிறை பாத்ருமில் கைதிகள் வழுக்கி விழுந்து கைகால்கள் முகங்கள் அடிபடும் போது சந்தோஷமாகக் கொண்டாடியவர்கள்தான் இந்த படத்தைப் பார்த்து தூக்கம் வரவில்லை மன உலைச்சல் இருக்கிறது என்று தங்கள் இதயம் ஈரமானது என்று சமுக வலைத்தளங்களில்  கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
. போலீசாருக்கு குற்றவாளிகளை பிடித்து வர மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது அதன் பின் குற்றவாளிகளை விசாரித்து தண்டனை கொடுக்க நீதிபதிகள் இருக்கிறார்கள். அந்த நீதிபதிகள் தவறு இழைத்தால் அப்போது பொதுமக்கள் ஒன்று சேர்த்து நீதிக்கு எதிராக போராடலாம். ஆனால் தமிழகத்தில் இந்தியாவில் நடப்பது என்னவோ அதற்கு எதிர்மாறாக இருக்கிறது


உலகமெங்கிலும் உள்ள மேல் சாதியினர் மட்டுமல்ல மற்ற சாதியினர் இனத்தவர்கள் எல்லோரும் தாங்கள் போட்டு மிதிக்க ஒரு சிலராவது இருக்க வேண்டும் என்றுதான் நினைத்து  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதுதான் கசக்கும் உண்மை  பலரும் தங்களுக்கு இணையாக எல்லோரும் இருந்துவிடக் கூடாது என்றுதான் நினைக்கின்றனர் அதனால்தான் ஒரு மனிதனோ அல்லது  ஒரு சமுகமோ ஒரு சாதியினரோ நன்றாகப் படித்து தன் அளவிற்கு வந்துவிடக் கூடாது என நினைக்கின்றனர் ஆனால் இந்தியாவில் இது மிக அப்பட்டமாக இருக்கிறது..

இந்த எண்ணம் மக்களிடையே மட்டுமல்ல அரசியல் கட்சிகளுக்கிடையே அதுவும் அந்த கட்சிகளின் தலைவர்களுக்கிடையேயும் இருக்கின்றது. ஒரு கட்சியின் தலைவருக்கு இணையாக அந்த கட்சிக்கு மாடாக உழைக்கும் ஒரு  கட்சி உறுப்பினர் சரிக்குச் சமமாக உட்கார்த்தாதுதான் விட முடியுமா என்ன? அல்லது தலைவர் பதவிக்குப் போட்டி இட்டுதான் விட முடியுமா என்ன?





@avargalunmaigal

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :

இந்த படத்தைப் பார்த்து தங்கள் இதயங்களை ஈரமிக்கவர்களாக காண்பித்துக் கொண்டவர்கள்.. இப்படிப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு உடனடியாக சென்று உதவி செய்வதன் மூலம் தங்களை உண்மையாகவே ஈரமிக்கவர்களாக காட்டிக் கொள்வார்களா?
 

06 Nov 2021

6 comments:

  1. ஜெய்பீம் படம் பார்த்தேன். நடித்தவர்கள் எல்லாம் அருமையாக நடித்து இருந்தார்கள். நல்ல வக்கீல், நல்ல போலீஸார், நல்ல நீதிபதி, நல்ல சமூக ஆர்வலர்கள் மூலம் நீங்கள் சொன்னது போல பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி கிடைத்த உண்மை சம்பவத்தை எடுத்து இருக்கிறார்கள்.

    ReplyDelete
  2. உண்மை.
    சீரியலில் மருமகளைக் கொடுமை செய்யும் மாமியார், சீரியல் மாமியாரைப் பழிப்பார். மாமியாரை கெட்டவராக அவர் மனது நினைக்கும் ஆனால் உண்மையில் தன்வீட்டில் மருமகளைக் கொடுமைப் படுத்துவார். அதுபோலத்தான் இதுவும். நிஜ வாழ்க்கையில் பிறர்மீது வருத்தமோ பரிதாபமோ இரக்கமோ ஓரளவுக்கு மேல் இருக்காது. திரைப்படங்களின் தாக்கமும் அப்படிப் பட்டதுதான்.

    ReplyDelete
  3. யதார்த்தமான பதிவு. சிறப்பு.

    ReplyDelete
  4. உங்களின் பார்வையும் சரி...

    ReplyDelete
  5. மதுரை படம் நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால் உங்கள் கோணம் மிகவும் வித்தியாசமான நான் மனதில் அவ்வப்போது நினைக்கும் கருத்துகளைச் சொல்லியிருக்கிறீர்கள்.

    கீதா

    ReplyDelete
  6. படம் பார்க்கவில்லை. ஆனால் உங்கள் விமர்சனம் வித்தியாசமான கோணத்தில் நல்லா சொல்லியிருக்கீங்க நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துகள் என் மனதில் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.