Saturday, May 8, 2021

 


ஜெயலலிதாவால் 'பெண்களுக்குச்' செய்ய முடியாததை ஸ்டாலின் செய்து சாதிப்பாரா?



எனக்குத் தேவை புகழுரைகள் அல்ல ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள்தான் தேவை  என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின்  அவர்களே இதோ உங்களுக்கான ஆக்கப் பூர்வமான செயல்திட்டம்



தமிழக முதல்வராகப் பதவி ஏற்றதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும். ஸ்டாலின் அவர்களே கட்சித் தலைவர் ஆகுவதிலோ அல்லது முதல்வர் ஆகுவதிலோ பெருமை ஏதுமில்லை. காரணம் அடிமைகளும் கட்சித் தலைவர்களாகவும் முதல்வராகவும் ஆட்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் மக்கள் தலைவராக ஆவது என்பதில்தான் பெருமை... அப்படிப்பட்ட தலைவராக நீங்கள் ஆவதில்தான் உங்களுக்குப் பெருமை..  அந்த பெருமையை நீங்கள் பெற வேண்டும்

 
முதல்வராகி நீங்கள் சில நல்ல திட்டங்களை ஆரம்பித்து அடி எடுத்து வைத்து இருக்கிறீர்கள்.. அதற்காகப் பாராட்டுக்கள். அதில் ஒன்று மகளிர்கள் மீது அக்கறை கொண்டு அவர்கள்  சாதாரண பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்ய உத்தரவு. நல்ல திட்டம்தான்.. ஆனால் இப்படி  இலவசத் திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான செலவுகளை ஈடுகட்ட வேறு வகைகளில் வருமானம் ஈட்ட வேண்டும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று.. அந்த வேறு ஒரு திட்டம் மறைமுகமாகப் பெண்களைத்தான் பாதிக்கும் காரணம் அவர்கள்தானே குடும்ப பாரங்களைச் சுமக்கிறார்கள். அதனால் இலவசமாகக் கொடுப்பதற்குப் பதிலாக எல்லோரும் பயன் பெறும் வகையில் மலிவு விலையில் பல திட்டங்களைக் கொடுத்து உண்மையில் பலனடையச் செய்யுங்கள்


பொதுவாக ஒரு கருத்து உண்டு பெண்கள் பொறுப்பான பதவிகளிலிருந்தால் பெண்களுக்கு நல்லது என்று சொல்லுவார்கள் காரணம்  பெண்களின் மனதை ஒரு பெண்தான் நன்கு அறிவாள். ஆனால் அது உண்மையில்லை என்று பல இடங்களில் நிருபிக்கபட்டு இருக்கிறது. பெண்களுக்குப் பெண்கள் இரங்குவதைவிட ஆண்கள் இரக்கம் கொண்டு பல உதவிகளைச் செய்து இருக்கிறார்கள் செய்தும் வருகிறார்கள். ஆனால் பெண்கள் பொறுப்பான பதவிளுக்கு வரும் போது ஆணவத்தோடுதான் செயல்பட்டுக்  கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு ஜெயலலிதாவையும் நிர்மலா சீதாராமனையும் உதாரணங்களாகக் காட்டலாம்

ஒரு பெண்ணின் மனதைப் பெண் அறிவாள் ஆனால் ஜெயலலிதா அதை அறியவில்லையே  என்ற பதிவை 2017 எழுதி வெளியிட்டேன் அதில்

ஒரு பெண்ணுக்குத் தான் பெண்ணின் மனதை அறியமுடியும் என்பார்கள். அது கூட ஜெயலலிதா விஷயத்தில் உண்மையாக வில்லை.. அவர் ஒரு பெண்ணாக இருந்தும் மற்ற பெண்களின் மனதை அவர்கள் தினம் தினம் அனுபவிக்கும் வேதனைகளை அறிந்து அதற்காக எந்தவொரு விஷயத்தையும் செய்யாதவரை எப்படி உங்களால் சாதனையாளர் என்று சொல்ல முடிகிறது.


பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் பெண்கள் கழிப்பறை இல்லாமல் எப்படி வேதனைப்படுகிறார்கள் அதுமட்டுமல்லாமல் பொது இடங்களில் கழிப்பறை இல்லாமல் எத்தனை பெண்கள் தினம் தோறும் கஷ்டப்படுகிறார்கள் இதற்கு எல்லாம் அதிகாரப்பவரில்  இருந்த இவர் என்ன செய்தார் என்று சொல்லமுடியுமா உங்களால் ?அவர் பெரிய சாதனை செய்துவிட்டார் என்கிறீர்களே இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா?


ஒரு பெண் தாம்பரத்திலிருந்து பாரிஸ்வரை இருசக்கர வாகனத்திலோ அல்லது வேறு வாகனங்களிலோ பயணம் செய்யும் ஒரு அவசரத்திற்கு இந்த பாதையில் எங்காவது ஒதுங்க ஒரு இடம் உண்டா சொல்லுங்கள். ஆண்களுக்கு என்ன, தாம்பரத்தில் பாரிஸ்வரை உள்ள பாதைகள் அனைத்தும் கழிவறைதான் ஆனால் பெண்களுக்கு?


ஸ்டாலின் அவர்களே அன்று ஜெயலலிதாவை நோக்கி எழுப்பட்ட கேள்வியை இப்போது உங்கள் பார்வைக்குப் படும் என்ற நோக்கில் பொதுபதிவில் மீண்டும் வெளியிடுகின்றேன்.. இந்த பதிவு  உங்கள் கண்ணில்படும் என்றால் அதற்கான நடவடிக்கை எடுத்து ஒரு பெண்ணின் மனதை ஆண்கள் நன்கு அறிவார்கள் அதற்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பதை நிரூபியுங்கள்,

ஸ்டாலின் அவர்களே எனக்குத் தேவை புகழுரைகள் அல்ல ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள்தான் தேவை  என்று சொன்ன உங்களுக்காக இதோ ஆக்கப்பூர்வமான செயல்திட்டம்


தமிழகம் தோறும் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் சில மைல்களுக்கு ஒரு கழிப்பறையைக் கட்டி பெண்கள் மனம் மலரச் செய்யுங்கள் இதைச் செய்தால் நிச்சயம் அவர்கள் மனதில் என்றும் நிலை நிற்பீர்கள்,



1981ஆம் ஆண்டு, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் அவர்களால் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு  மதுரை மாநகரில் நடத்தப்பெற்றது. அப்போது மதுரையில் பல இடங்களில் இப்படி பொதுகழிப்பறைகள் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. தமிழ் மாநாடா கழிப்பறை மாநாடா என்று அப்போது பேசப்பட்டு வந்தது. அந்த அளவிற்கு அது மிகச் சிறப்பாகச் செயல்பட்டுப் பல ஆண்டுகள் இருந்து வந்தது



அது போல உங்கள் ஆட்சியிலும் கழிப்பறைகள் கட்டுப்பட்டு மக்கள் பலன் பெற வழி செய்யவேண்டும்.. இப்படிக் கட்டப்படும் கழிப்பறைகளுக்கு பராமரிப்பு செலவு எப்படிச் செய்வது என்றால் அப்படிக் கட்டப்பட்ட கழிப்பறைகளை பொது நிறுவனங்கள் அல்லது பெரிய நிறுவனங்கள் தத்து எடுத்துக் கொண்டு அந்த கழிப்பறை வெளிச் சுவரில் அவர்கள் நிறுவனங்களின் விளம்பரங்களை இலவசமாகச் செய்து கொள்ளலாம் ஆனால் அதற்குப் பதிலாக  அந்த கழிப்பறையை பராமரிப்பு பணிகளுக்கான செலவுகளை அந்த நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளலாம். இதனால் அந்த பெரும் நிறுவனங்களும் சமுக நலனில் அக்கறை கொண்டு செயல்பட முடியும் மக்களும் அரசாங்கமும் பலன் பெற முடியும்.. அதுமட்டுமல்ல இதனை செய்வதன் மூலம் சிறு வேலை வாய்ப்பையும் ஏற்படுத்த முடியும்தானே..


எனக்குத் தேவை புகழுரைகள் அல்ல ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்கள்தான் தேவை என்று மாவட்ட ஆட்சியாளர்களுக்குச் சொன்னதை மக்களுக்கும் சேர்த்துச் சொன்னதாக எடுத்துக் கொண்டு என் கருத்தைச் சொல்லி இருக்கின்றேன்.


இதை உங்களால் செய்ய முடியுமா ஸ்டாலின் அவர்களே


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. சிறந்த ஆலோசனை... அவர் கவனத்திற்கு கொண்டு சென்றால், நடக்கும் என்றே தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்து பகிர்விக்கும் நன்றி தனபாலன்

      Delete
    2. ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்து சொல்பவர்களில் சில பேரின் கண்களுக்கு இந்த பதிவு பட்டால் பலன் கிடைக்க வாய்ப்பு உண்டு.. நம்மால முடிந்தது இப்படிபட்ட பதிவுகளை கருத்துக்களை ஆளுபவர்களுக்கு எடுத்து சொல்வதுதான்.. அவ்ர்களின் செயல்களை விமர்சிப்பதுமட்டும் நம் கடமை அல்ல நல்ல செய்திகளை எடுத்து சொல்வதும் நம் கடமை

      Delete
  2. நல்ல யோசனை.
    அவர் கவனத்திற்கு போய் செயலுக்கு வந்தால் பெண்கள் வாழ்த்துவார்கள்.
    ஒரு காணொளி பார்த்தேன் பெண் காவலர் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் சிரம படும் காணொளி.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் பார்த்த ஒரு காணொளி தமிழ் சினிமா படத்தில் வந்த காணொளியாகத்தான் இருக்க வேண்டும் அந்த படத்தை நானும் பார்த்தேன் என்ன ஒரு அவஸ்தை அது

      Delete
  3. நல்ல யோசனை.  அவற்றைக் கட்டணக் கழிப்பிடமாக இல்லாமல் இலவசக் கழிப்பிடமாக அமைத்தால் நல்லது.  ஆனால் சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. தலைவர்களும் சமுக நலன் கொண்ட நிறுவனங்களும் நினைத்தால் நிச்சயம் முடியும்

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.