ஆக்சிஜன் கொள்ளளவை ஒரே ஆண்டில் அதிகரித்த மதுரை: எப்படி?
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்சிஜன் சேமிப்பு கலன்கள். |
நாடு முழுவதும் மருத்துவமனைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் திணறிவரும் நிலையில்,மதுரை அரசு தலைமை மருத்துமனையில் ஆக்சிஜன் சேமிப்பு வசதி அதிகரிக்கப்பட்டு, ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இது நடந்தது எப்படி?
மதுரையில் உள்ள அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனை இந்தியாவின் மிகப் பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்று. 2,500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் செயல்படும் இந்த மருத்துமனை, இந்தியாவில் 24 மணி நேரமும் அனைத்து பிரிவுகளிலும் மூன்றாம் நிலை மருத்துவ வசதி கிடைக்கும் வெகுசில மருத்துவமனைகளில் ஒன்று.
மரண ஓலங்கள் கேட்கும் போது என் மனதில் எழுந்தவை...
அதன் மூலம் 400 படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த மருத்துவமனையில் 20,000 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்ஸிஜனை சேமித்து வைக்கக்கூடிய கொள்கலன் நிறுவப்பட்டிருக்கிறது. 400 படுக்கைகளுக்கு மட்டும் கொடுப்பட்டிருந்த இணைப்பு, மேலும் 700 படுக்கைகளுக்குத் தரப்பட்டு மொத்தம் 1,100 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் இணைப்பு தரப்பட்டிருக்கிறது.
இது தவிர, மதுரையில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் தோப்பூரில் அமைந்திருக்கும் அரசு நெஞ்சக மற்றும் தொற்று நோய் மருத்துவமனையிலும் புதிதாக திரவ ஆக்சிஜன் கொள்கலன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த இரண்டு பணிகளும் கொரோனாவின் முதல் அலை சற்று ஓய்ந்திருந்த காலத்தில் நடந்து முடிந்திருக்கின்றன.
"கொரோனாவின் முதல் அலை பரவ ஆரம்பித்தபோது, கடுமையான நோய்த் தொற்றுடன் மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் ஜாகிர் ஹுசைன். ஏப்ரல் முதல் மே மாதத்தின் நடுப்பகுதி வரை அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு 70 சதவீதம் அளவுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
அவர் சிகிச்சையில் இருந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 45 நாட்கள் அவருக்கு ஆக்சிஜன் அளிக்கப்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்ட மொத்த ஆக்சிஜன் அளவு, சுமார் 45 லட்சம் லிட்டர். 45 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நலம் பெற்றார். கொரோனா தாக்கினால் என்ன சிகிச்சை அளிப்பது என்று முழுமையான நெறிமுறைகள்கூட உருவாகாத காலகட்டத்தில் இது நடந்தது.
அந்தத் தருணத்தில்தான் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை உணர்ந்தோம்" என்கிறார் மதுரைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான சு. வெங்கடேசன்.
அந்தத் தருணத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு அதிகாரியாக மதுரை மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்டார் டாக்டர் சந்திரமோகன். அவரும், மாவட்ட ஆட்சித் தலைவர் வினய், நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ஆகியோர் கலந்தாலோசித்து, உடனடியாக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொள்கலன் அளவை அதிகரிப்பது என முடிவுசெய்தனர்.
சிறப்பு அதிகாரி சந்திரமோகனுடன் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன்
இதில் மூன்று பணிகள் இருந்தன. ஒன்று கொள்கலனை நிறுவுவது. அடுத்ததாக படுக்கைகளுக்கு குழாய் மூலம் இணைப்புக் கொடுப்பது. அடுத்ததாக ஆக்சிஜன் செல்லும் அளவைக் கண்காணிக்கும் ஃப்ளோ மானிட்டர்களை நிறுவுவது. இந்த மூன்றுக்கும் தனித்தனியாக டெண்டர் விடப்பட்டது. டெண்டர் பணிகள் முடிந்த பிறகு, இதற்கான பொருட்கள், ஆட்கள் ஆகியவை பாண்டிச்சேரி, பெங்களூர் ஆகிய இடங்களில் இருந்து வர வேண்டியிருந்தது.
ஆனால், மாவட்ட நிர்வாகம் இதில் தீவிர கவனம் செலுத்தியதால், ஒட்டுமொத்தப் பணிகளும் மூன்றரை மாதத்திற்குள் முடிந்தன. கடந்த செப்டம்பர் மாத வாக்கில் ராஜாஜி மருத்துவமனையில் 20,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட திரவ ஆக்சிஜன் கொள்கலன் நிறுவப்பட்டுவிட்டது. படுக்கைகளுக்கும் இணைப்புக் கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 1,542 படுக்கைகளில் 848 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடையவை.
மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை தவிர, தோப்பூரில் இருந்த அரசு நெஞ்சக மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையிலும் கொரோனா நோயாளிகளுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. அங்கு சிகிச்சையில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டுமென்றால், டி - சிலிண்டர் எனப்படும் ஆளுயர ஆக்சிஜன் சிலிண்டர்கள் மூலம்தான் அவை அளிக்கப்பட்டுவந்தன. அதனால், முப்பது படுக்கைகளுக்கு மட்டுமே ஆக்சிஜன் வசதி இருந்தது.
"அந்தத் தருணத்தில் தோப்பூரிலும் ஆக்சிஜன் வசதியை நிரந்தரமாக ஏற்படுத்த முடிவுசெய்தோம். அதன்படி, இங்கிருந்த காச நோயாளிகள் ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தோப்பூர் மருத்துவமனை முழுமையான கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. பிறகு, 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் பொருத்தப்பட்டது" என்கிறார் தோப்பூர் அரசு நெஞ்சக மற்றும் தொற்றுநோய் மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலரான காந்திமதிநாதன்.
இந்தக் கலன் பொருத்தப்பட்ட பிறகு இங்கு மொத்தமுள்ள 260 படுக்கைகளில் 140 படுக்கைகளுக்கு நேரடியாக ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.
"முதன் முதலில் கொரோனா தாக்கியபோது, மதுரையைப் பொறுத்தவரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் வசதி ஏதும் இல்லை. மக்கள் அனைவருமே அரசு மருத்துவமனையைத்தான் நம்பியிருக்க வேண்டும். அந்தத் தருணத்தில்தான் படுக்கைகளின் எண்ணிக்கையையும் ஆக்சிஜன் அளிக்கும் வசதியையும் அதிகரிக்க வேண்டுமென முடிவெடுத்தோம்" என்கிறார் மதுரைக்கான கொரோனா கட்டுப்பாடு சிறப்பு அதிகாரியான சந்திரமோகன்.
தோப்பூர் அரசு தொற்றுநோய் மற்றும் நெஞ்சக மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் சேமிப்புக் கலன். |
தமிழ்நாட்டில் இப்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், ஆக்சிஜன் வசதிகளுடன் புதிதாக 12,500 புதிய படுக்கை வசதிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருகிறது. அதில் மதுரைக்கென 250 படுக்கைகளே ஒதுக்கப்பட்டிருக்கின்றன. "காரணம், ஏற்கனவே இங்கு போதுமான படுக்கை வசதிகளை ஏற்படுத்தியிருப்பதுதான். இப்போது இந்தியாவே ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் போது எங்களால் நிலைமையைச் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதற்குக் காரணம், முதல் அலையின் போது எடுத்துக்கொண்ட சிறப்பு நடவடிக்கையும் அதற்காக உழைத்த மனிதர்களும்தான்" என்கிறார் சு. வெங்கடேசன்.
மதுரையைப் பொறுத்தவரை ஏப்ரல் 27ஆம் தேதி நிலவரப்படி, 4,073 பேர் கொரோனாவுக்காக சிகிச்சைபெற்று வருகின்றன. இதுவரை அந்த மாவட்டத்தில் 29,005 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 502 பேர் உயிரிழந்துள்ளனர்.
முரளிதரன் காசிவிஸ்வநாதன்
Courtesy பிபிசி தமிழ். Thanks
எவ்வளவு பெரிய சாதனை அதை அசாதாரணமான நேரத்தில் சத்தமில்லாமல் வெகுவிரைவாக விளம்பரங்கள் இல்லாமல் செய்து முடித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.இது போன்ற செயல்களை அனைத்து மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதியில் உறுதி செய்ய வேண்டும்.
அன்புடன்
மதுரைத்தமிழன்
பாராட்டுகளும் வாழ்த்துகளும் மிகச் சிறப்பான பணிக்கு டாக்டர், ஆட்சியர், வெங்கடேசன் அவர்களுக்கும்.
ReplyDeleteஇங்கு அரசு மருத்துவமனைகள் நன்றாகச் செயல்படுவதாகத்தான் தெரிகிறது. என் உறவினர்கள் நண்பர்கள் உட்பட சொல்வது நானும் இங்கு நேரில் தெரிந்து கொண்டது.
நட்பு ஒருவரின் மாமனாருக்கு (வயதானவர்) கொரோனா. மும்பையில் அரசு மருத்துவமனையில் நல்ல சாப்பாடு, தால் சூப் என்று.....ஆக்சிஜன் தேவைப்பட அதுவும் எல்லாமே இலவசமாக நல்ல கவனம் கொடுக்கப்பட்டு இப்போது வீட்டிற்கு வந்தாச்சு.
கீதா
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் சில குறைகள் இருந்தாலும் அது மிக சிறப்பாகவே செயல்பட்டது & செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பது உண்மைதான்
Deleteசபாஷ்... நல்ல செய்தி.
ReplyDelete
Deleteஇந்த செய்தி ஒன்றுதான் நான் படித்தவைகளில் பாசிட்டிவான செய்தி ஸ்ரீராம்
சிறப்பு...
ReplyDeleteநேற்று அங்கும் அபாய கட்டத்தை நெருங்குவதாக சொல்லியுள்ளார்...
பாதுக்கப்பாக இருந்து கொள்ளுங்கள் தனபாலன் மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் அதிகம் தூரம் இல்லை
Deleteநல்ல செய்தி.
ReplyDeleteஎல்லா மருத்துவமனைகளும் இவ்வாறு அமைத்தால் மனித உயிர் காக்கப்படும்.
சிறப்பு அதிகாரி மக்களவை உறுப்பினர் இருவருக்கும் உடன் பணிபுரிந்த நைவருக்கும் வாழ்த்துக்கள், நன்றிகள்.
Deleteஅதிகாரிகளும் ஆளுபவர்களும் இது போல தேவையை அறிந்து உடனுக்குடன் செயல்பட்டால் பிரச்சனைகளே இல்லை
அனைவருக்கும்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteநல்ல செய்தி. மருத்துவமனைகள் இந்த மாதிரி அக்கரையுடன் இருந்து விட்டால் பிரச்சனை,பயம் ஏதுமில்லை. மதுரை ராஜாஜி மருத்துவமனையின் ஆக்ஸிஜன் சேமிப்பு விபரம், அதன் நன்மைகள் குறித்து அழகாக விளக்கியுள்ளீர்கள். அதற்காக உழைத்த மக்களவை உறுப்பினர், மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர்களுக்கு வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இந்த செய்தி பிபிசியில் வந்த செய்தி பாசிடிவு செய்தி என்பதால் Copy Paste செய்து பதிந்து இருக்கின்றேனம்மா
Delete