Sunday, January 26, 2020

தாத்தா பாட்டி சொன்ன கதை ... 1 thatha patti stories

தாத்தா பாட்டி கதை சொன்ன மாதிரி  மிகவும் சுவராஸ்மாக சொல்ல இந்த காலத்தில் யாரும் இல்லை எந்த டிவி நிகழ்ச்சிகளும் யூடியுப் விடியோக்களும் இல்லை




ஒவ்வொருவருக்கும் தாத்தா பாட்டி என்றாலே அவர்கள்  நமக்குச் சிறுவயதில் சொன்ன கதைகள் நினைவுக்கு வரும் ஆனால் இந்த கதைகளே தெரியாமல்  இந்த காலங்களில் பல குழந்தைகள் டிவியில் வரும்  சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளைப் பார்த்து வளர்கின்றன.. காரணம் இந்த காலத்தில் பலருக்கு இது போன்ற கதைகள் தெரிவதில்லை அதுமட்டுமல்லாமல் பொறுமையாக உட்கார்ந்து குழந்தைகளுக்குச் சொல்வதுமில்லை.



குழந்தைகளை நேசிக்கும் பெற்றோர்கள் இது போல உள்ள கதைகளைச் சொல்லி மகிழ வேண்டும் அவர்களுக்கிடையேயான உறவுகள் பலப்பட வேண்டும் என்பதால் நான் சிறுவயதில் கேட்டு மகிழ்ந்த கதைகளை இங்கே தருகிறேன். இது போன்ற கதைகள் உங்களிடம் இருந்தாலும் நீங்களும் எழுதி அனுப்பலாம் அதையும் நான் பகிர்கிறேன் . நாம் ரசித்து மகிழ்ந்த கதைகளை முடிந்தால் அழியாத இந்த இணையம் மூலம் நாம்  அடுத்த சந்ததிக்குக் கொண்டு சேர்ப்போம்


வாலு போச்சு கத்தி வந்தது டும் டும்
என்ற கதையை இங்கு முதல் கதையாகப் பதிவு செய்கிறேன்.


ஒரு  குரங்கு குட்டி, சாலை வழியாகக் குதித்துக் குதித்து போய்க் கொண்டிருந்துச்சா  அப்படி குதிச்சு  குதிச்சு போய்க் கொண்டிருக்கும் போது  அதன்  வாலில் ஒரு முள் குத்திடுச்சாம். குத்தினதும் அதுக்கு ரொம்ப வலிச்சுதாம்.........பாவம் அதனால வலி தாங்க முடியலை..... அதுக்கு .என்ன செய்வது, எப்படி முள்ளை எடுப்பது என்று தெரியலையாம்.......


சுற்றிச் சுற்றிப் பார்த்ததாம்....அங்கே சாலை ஓரம் உள்ள ஒரு மரத்தடியில் ஒரு  முடிவெட்டுபவர் ஒருவருக்கு ஷேவ் பண்ணிக் கொண்டு இருந்தாராம்.................. அவர் கையில் கத்தியைப் பார்த்ததும், குரங்குக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டதாம்..............


நேர அவரிடம் போய், "என் வாலில் முள் குத்தி விட்டது, எடுத்து விடுங்கள் "என்றதாம்..................


அவரோ பயந்து போய்  அய்யயோ ! என்னால் முள் எடுக்க முடியாது ...  டாக்டர் தான் அதை நல்லா எடுப்பார்  அவரிடம் போ என்றாராம்.


"ஏய், ........நீயும் தானே கத்தி வெச்சிருக்க  நீயே எடு என்று அவரை  மிரட்டியதாம் அந்த குரங்கு.


அவரும் பயந்து கொண்டே, அதன் வாலை பிடித்து, முள்ளை எடுக்கப் பார்த்தாராம்....குரங்கோ ஓரிடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்ததால், முள்ளை எடுக்க முடியவில்லை அவரால்..... அதனால் அவர் சொன்னாராம் , " இதோ பார் குரங்கே, இப்படி நீ ஆடிக் கொண்டிருந்தால் முள் வராது , உன் வால் தான் வெட்டுப்படும் .எனவே, கொஞ்சம் வாலை ஆட்டாமல் இரு என்றாராம்.


 சரி என்று சொன்னதே தவிர அவர் முள்ளை எடுக்கும்போது சட் என்று வாலை ஆட்டிவிட்டதாம்....அவ்வளவுதான், கூரான கத்தி பட்டுத் துளி வால் வெட்டுப் பட்டு போச்சாம்........ரத்தமும் வந்துச்சாம்.........


அவ்வளவு தான், ரத்தத்தைப் பார்த்துப் பயந்து போன குரங்கு ஒரேயடியாகக் கூப்பாடு போட்டதாம். இவர் என் வாலை வெட்டிட்டார்..............இவர் என்வாலை வெட்டிட்டார்  என்று.


என்னடா இது வம்பாய் போச்சு...இன்று யார் மூஞ்சியில் முழித்தோமோ என்று தன்னையே நொந்து கொண்டு, குரங்கைச் சமாதானப்படுத்தப் பார்த்தார் அவர்


ஏய், குரங்கே குரங்கே!.....கத்தாதே, ஏதோ தவறு நடந்து போச்சு, இப்போ என்ன செய்யலாம்? என்று கேட்டாராம்..............


கோபமாய் இருந்த குரங்கு, "நீ ஒண்ணும் எனக்கு முள்ளை எடுக்க வேண்டாம், உன் கத்திய குடு, நானே எடுத்துக்கறேன்" என்றதாம்.


அதற்கு அவர், " இல்லை நான் முள்ளை எடுத்துவிட்டேன், கொஞ்சநேரம் வலிக்கும் பிறகுச் சரியாகிவிடும், வேண்டுமானால் ஒரு கட்டுப் போட்டு விடவா?" என்று கேட்டாராம்.


யோசித்த  குரங்கு, வாலில் கட்டுப் போட ஒப்புக்கொண்டது. அவரும் அதக்கு கட்டுப் போட்டுவிட்டார். இருந்தாலும் அது குரங்கு ஆச்சே, பிடிவாதமாய் எனக்கு ஒரு  கத்திவேண்டும் என்று கேட்டது. இவரும், சரி போய் தொலையட்டும் என்று ஒரு பழைய கத்தியை அது கிட்டே தந்தாராம்.

@AVARGAL UNMAIGAL


குரங்கும் கத்தியை எடுத்துக்கொண்டு மேலும் நடந்து போச்சாம்..

கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு இருந்தால் சும்மா இருக்குமா கை .மேலும் அது குரங்கு வேற.....எனவே, கையில் கத்தியைப் பிடித்துக்கொண்டு சுழற்றியபடி போச்சாம்...


கொஞ்ச தூரத்தில் ஒரு பாட்டி கூடை பின்னிக்  கொண்டிருந்தாளாம்...........அவள் கஷ்டப்பட்டு கூடை பின்னுவதைப் பார்த்த குரங்கு,
@AVARGAL UNMAIGAL

" பாட்டி, பாட்டி, இப்படி வெறும் கையில் கஷ்டப்பட்டு கூடை பின்னரையே, இந்தா இந்த கத்தியை வைத்துக்கொள் இது உனக்கு ரொம்ப உதவியாகப்  பின்ன இருக்கும் என்றதாம்.

பாட்டிக்கு அந்த கத்தி  தேவை என்றாலும்..............இது குரங்காச்சே, இதன் மனசு எப்பவும் ஒன்று போல இருக்காதே என்று தயங்கினாளாம் ....

அதைப் பார்த்த குரங்கு, " தயங்காதே பாட்டி..., இந்தா என்றதாம்.

அந்த பாட்டியும், சரி என்று வாங்கிக்கொண்டாளாம் ...அந்த கத்தியை வைத்து ஒரு ரெண்டு சுத்து கூட பின்னி இருக்க மாட்டா,  அதற்குள் பழசான அந்த கத்தி உடைந்து விட்டதாம்......
அவ்வளவு தான் இதைப் பார்த்துக்கொண்டே இருந்த குரங்குக்கு ரொம்ப கோபம் வந்து விட்டதாம். . நீ பாவம் என்று நான் கத்தி கொடுத்தால் அதை உடைத்து விட்டாயா என்று சத்தம் போட்டதாம்.

பயந்து போன பாட்டி வேண்டுமானால் கத்திக்குப் பதிலாக இந்த குட்டிக் கூடையை நீயே வெச்சுக்கோ என்று சொன்னாளாம்.

சரி என்று சொல்லி, பாட்டியிடமிருந்து அந்த கூடையைப் பிடுங்கிக்கொண்டு வந்து விட்டதாம் குரங்கு.

கொஞ்ச தூரம் அந்த அரைகுறையாகப் பின்னப்பட்ட  கூடையுடன் நடந்த அந்த குரங்கு....

அங்கு ஒருத்தர் மாம்பழம் வித்துக்கொண்டு இருந்தாராம்....அவரிடம் கூடை இல்லாததால் சிறிய துண்டில் வைத்துக் கொண்டு விட்டுக்கொண்டு இருந்தாராம்.....

இதைப் பார்த்த குரங்கு அவரிடம் போய், " ஏம்பா! உனக்குக் கூடை வேண்டுமா? " என்று கேட்டதாம்..

அவர் எங்கேடா இந்த குரங்கு எல்லா பழங்களையும் நாசப்படுத்திவிடுமோ என்று பயந்து ஆமாம் ஆமாம் வேண்டும் என்று சொன்னானாம்...

இந்தா இதை எடுத்துக்கோ, உன் பழங்களை இதில் வைத்துத் தூக்கிக்கொண்டு போய் உன் வியாபாரத்தைக் கவனி..என்று அன்பாகச் சொன்னதாம்..

அவனும் சரி என்று வாங்கி, அதில் பழங்களை அடுக்கி, தூக்கினாராம் , தூக்கும் போது  அந்த .கூடை பிய்ந்து எல்லா பழங்களும் கொட்டிபோச்சாம்....

அதைப் பார்த்துக் கொண்டிருந்த குரங்குக்குக் கோபம் வந்து விட்டது ......நல்லதுக்கே காலம் இல்லை, நீ பாவம் என்று நான் நினைத்தால்.........என்ன செஞ்சு  வைத்திருக்கே ? " என்று சத்தம் போட்டது........

பயந்து போன அந்த அவர், " நீ குரங்கு  ஆனால்  உன்னைப் பார்த்தால் நல்ல பசி யாக இருப்பது போல இருக்கு, அது தான் உனக்கு இவ்வளவு கோவம் வருகிறது,  அதனால்  உன் கூடைக்குப் பதிலாக இரண்டு மாம்பழம் தரேன் வாங்கிக் கொள் ..... அதைச் சாப்பிட்டுப் பசியாறு " என்று அன்பாய் சொன்னாராம்........

அந்த குரங்குக்கு அப்போது தான் நினைவில் வந்தது, காலையிலிருந்து தான் எதுவுமே சாப்பிடாதது.எனவே அவர் தந்த  இரண்டு மாம்பழங்களை வாங்கிக்கொண்டு  சாப்பிட ஆரம்பித்தது
@AVARGAL UNMAIGAL

அது குட்டி குரங்கானதால், ஒரு மாம்பழம் சாப்பிட்டதுமே அதுக்கு 'தொப்பை' ரொம்பி போச்சு....அப்படியே கொஞ்சநேரம் தூங்கி விட்டது. அந்த மாம்பழ வியாபாரியும் போய்விட்டான்.....கண்ணு தொறந்து பார்த்தல் சாயங்காலமாகிவிட்டது...

மீண்டும் குரங்கு தன நடைப் பயணத்தைக் குதித்துக் கொண்டே தொடர்ந்தது.....கொஞ்ச தூரம் போனதுமே ஏதோ சூப்பர் வாசனை காற்றில் வந்தது...அந்த வாசனையைப் பிடித்துக்கொண்டே மேலும் நடந்தது அந்த குரங்கு....

பார்த்தால் ஒரு பொட்டிகடை போல ஒரு ரோட்டோர  கடையில் ஒருத்தர் தோசை வார்த்துக்கொண்டிருந்தார்..........அவரிடம் இந்த குரங்கு போய் நின்று கொண்டது .....

ஏய் ஏய்....எனக்கு ஒரு தோசை தரியா என்று கேட்டது..........நிமிர்ந்து பார்த்த அவர், சரி பாவம் இந்த குரங்க் அதற்கு ரொம்ப பசிக்குது போல என நினைத்து அதற்கு ஒரு தோசை தந்தார்.....அதைத் தின்ற குரங்கு இன்னும் கேட்டது......

அதற்கு அவர்  ஏதோ பாவம் என்று ஒர் தோசை தந்தால் இன்னும் கேட்கிறாயே..போ..போ...என்று விரட்டினார் ......

அதற்குக் குரங்கு சொன்னது, " உன் தோசை ரொம்ப நல்லா இருக்கு அது தான் கேட்டேன், நீ சும்மா தரவேண்டாம் இந்த பழத்தை வைத்துக்கொண்டு இன்னும் இரண்டு தோசை கொடு" என்று கேட்டது.
@AVARGAL unmaigal

அவருக்குப் பாவமாய் போச்சு, 'பாவம் குட்டி குரங்கு, வழி தெரியாமல் தனியாய் மாட்டிக்கொண்டுவிட்டது போல இருக்கு, அதுக்கு பசிக்கிறது என்று  அதன் மேல் இரக்கம் கொண்டு, எனக்குப் பழம் எல்லாம் வேண்டாம்.....ஆனால் இன்னும் இரண்டு தோசை தான் தருவேன், அப்புறமும் நீ எனக்கு தொல்லை தரக்கூடாது..சரியா  என்று கேட்டார்.....

அதற்கு ஒப்புக்கொண்ட குரங்கு இரண்டு தோசை வாங்கிக்கொண்டு, பழத்தை வைத்து விட்டே புறப்பட்டது......அதன் நாணயத்தை எண்ணி வியந்தான் கடைக்காரன்.

மீண்டும் ஒரு தோசை சாப்பிட்டதும் அந்த குட்டி குரங்குக்கு தொப்பை ரொம்பி போச்சு......எனவே, பாக்கி ஒரு தோசையை எடுத்துக்கொண்டு நடந்தது...

கொஞ்ச தூரத்தில் ஒருத்தர் ஒரு டமாரம் வாசித்துக்கொண்டிருந்தானாம் , அது இந்த குரங்குக்கு ரொம்ப பிடித்துப் போகவே அவனை நெருங்கியது அது...

அவனிடம் போய் நின்று கொண்டு , அவன் வாசிப்பதைப் பார்த்தது..........அவரோ குரங்கைப் பார்த்துப் பயந்து ஓட்டம் எடுத்தார், இதுவும் விடாமல் அவரை பின் தொடர்ந்து ஓடியது.......

அவர் ஓடிய களைப்பில் சற்று நின்றார்......இது அவர் முன்னாடி போய் குதித்தது..


அவர், " குரங்கே உனக்கு என்ன வேண்டும் .....நான் என் சாப்பாட்டுக்காக வாசிக்கிறேன்......நீ வந்து கெடுத்து விட்டியே......என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்டார்.


உடனே குரங்க் , உனக்குச் சாப்பாடு தானே வேணும்?....இந்தா தோசை என்றதாம்...அவனுக்கு ஆச்சரியமாய் போச்சு.........என்னடா இது குரங்கு நமக்குத் தருகிறதே என்று.....

எதனாலும் இப்போது ரொம்ப பசி அவனுக்கு, எனவே குரங்கு தந்த தோசையை வாங்கி சாப்பிட்டான்.......பார்த்துக்கொண்டே நின்று இருந்த குரங்கு, அவன் சாப்பிட்டதும்....


ஏன் என் தோசையைச் சாப்பிட்டாய்? எனக்கு பசிச்சா நான் என்ன பண்ணுவது என்று கேட்டது.....


அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான்.......உடனே இந்த குரங்கு,  சரி சரி அந்த தோசைக்குப் பதிலாய் இந்த டமாரத்தைக் கொடு என்று பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாம் ........


டமாரத்தை எடுத்துக்கொண்டு போய் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்து கொண்டதாம்.....காலையிலிருந்து நடந்ததை இப்படி பாட்டாகப் பாட ஆரம்பித்தது அந்த குரங்கு..
@avargal unamigal

வாலு போச்சு கத்தி வந்தது ......டும் டும் டும்.............


கத்தி போயி கூடை வந்தது ......டும் டும் டும்.............


கூடை போயி மாம்பழம் வந்தது ......டும் டும் டும்.............


மாம்பழம் போயி தோசை வந்தது ......டும் டும் டும்.............


தோசை போயி டமாரம் வந்தது ......டும் டும் டும்....டும் டும் டும்.............

என்று  டமாரத்தை  அடித்து உடைத்துப்  போட்டுவிட்டு காட்டுக்கு ஓடி போச்சாம்............

கதைகள் சொல்ல தாத்தா பாட்டிக்கள் தயாராக இருந்தாலும் கேட்கத்தான் பேரனும் பேத்திகளும் தயாராக இல்லை.. அப்படித்தான் இன்றைய சமுகம் பிள்ளைகளை வளர்த்து வருகிறது
 
அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி : கீதா சாம்பசிவம் இப்படிப்பட்ட கதைகளைப் பேரக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறாரா அல்லது குழந்தைகளுடன் உட்கார்ந்து டோரா பார்த்துக் கொண்டிருக்கிறாரா

 __________________________________________________________________________________________________
 அடப்பாவி அமெரிக்க ாக்டர்கள் எல்லாம் இவ்வளவு   மோசமடா?


இதைப்படித்தும் வாய்விட்டு சிரிக்காதவர்கள் ஒரு நல்ல டாக்டரை உடனே பார்க்கவும் 

 _________________________________________________________________________________________________

1 comments:

  1. பிரமாதம் சகோ எனக்கு பிடித்த கதை.. சிறுவயதின் இனிய நினைவலைகளைக் கொண்டு வருகிறது.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.