Sunday, February 2, 2020


@avargal unmaigal
தர்பாரும் கே.டி என்ற கருப்புதுரையும்

நஷ்டத்தில் ஒடிக் கொண்டிருக்கும் ரஜினியின் தர்பார் படத்திற்கு ஆதரவு தரும் வகையில் கடந்த வார இறுதியில் அவரின் படத்தை தியோட்டருக்கு சென்று பார்த்தேன். தியோட்டருக்கு சென்று படம் பார்க்காமல் இருக்கும் நான் இந்த படத்தை மட்டும் சென்று பார்த்தேன்.இதுதான் என்னால் அவருக்கு செய்யும் உதவி


இந்த படத்தை சீனுக்கு சீன் விமர்சனம் செய்வது என்பது வேலையற்றவர்களின் செயல் அதனால் படம் பார்த்து கொண்டிருந்த போது என் மகள் சொன்ன ஒரு கமெண்ட் மட்டும் போதுமானது என நினைக்கிறேன் அதுவே இந்த படத்தின் தன்மையை சொல்லிவிடும்.


இந்தப் படத்தில் மூன்று பெண்களைக் கடத்தி வைத்திருக்கும் ரெளடியைப் பிடிக்க போலீஸ் ஆபிசர் ரஜினி படிகளில் வேகமாக ஏறுவதை பார்த்துக் கொண்டிருக்கும் போது என் மகள் அடித்த கமெண்ட் ,அப்பா ரஜினி இந்த வயதில் கஷ்டப்பட்டு படியில் ஏறுவதை பார்க்கும் போது பாவமாக இருக்கிறது பேசாமல் வில்லன் கிழே வந்து ரஜினியை மேலே தூக்கி சென்று அதன் பின் சண்டைக் காட்சியில் இறங்கி இருக்கலாம் என்றாள். அவள் சொன்னதை பல முறை எண்ணி சிரித்து கொண்டு இருக்கிறேன்....


இப்படித்தான் ரஜினியின் நடிப்பு இந்தப் படத்தில் இருக்கிறது. இந்த படத்தில் நயன்தாரவை குழம்பில் போடும் கருவப்பிலை மாதிரி உபயோகப்படுத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் 
நயன்தாராவும் பணத்திற்காக தன் ரசிகர்களுக்கு துரோகம் செய்து இருக்கிறார் என சொல்லலாம்


கோலமாவு கோகிலாவில் நயன்தாரா யோகி பாபுடன் நடித்து 50 கோடிக்குமேல்  லாபத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.....அப்படிப்பட்ட திறமையான நடிகையுடன் நடித்தும் ரஜினியின்  தர்பார்  65 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது என்றால் ரஜினியிடம் புதிய சரக்கு கொஞ்சம் கூட இல்லை என்றுதான் அர்த்தம்..... பரட்டை இனிமேல் வயசுக்கு ஏற்ற கதாபாத்திரங்களில்   நடிக்கவும்

இளமை பருவத்தில் வயதான வேஷம் போட்டு நடிப்பது மிகவும் எளிது ஆனால் வயதான காலத்தில் இளமையாக  வேஷம் போட்டு நடித்தால் அது சிறப்பாக வாராது என்பதை ரஜினி புரிந்து கொள்வாரா?


நீயூஜெர்சியின் முகநூல் பிரபலம் கீதா சந்திரா அவர்களின் கே.டி என்ற கருப்புதுரை பட விமர்சனத்திற்கு அப்புறம் அந்த படத்தை நேற்று இரவில் Net flix ல்பார்த்தேன். இது படம் என்று சொல்வதை விட ஒரு சிறந்த ஒவியன் படைத்த அற்புதமான சித்திரம் என்று சொல்வதுதான் மிக சரியாகும்

எண்பது வயதான  கே.டி என்ற கருப்பு துரை  வளர்த்த பாசம் கண்னை மறைக்கும் அளவிற்கு பணத்தாசை பிடித்த குழந்தைகளிடமிருந்து அவர்களின்  மோசமான சிகிச்சையிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு ஓடுகிறார், அதே சமயத்தில் இளம் வயதில் கைவிடப்பட்ட எட்டு வயது குட்டி ஒரு கோவிலில் வளர்கிறார். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் இணைந்து ஒரு அழகான நதியை போல குதுகுலத்துடன் ஆர்பரித்து செல்வது போலத்தான் இந்த படத்தின் கதை செல்லுகிறது.. ​​இது இரண்டு மணிநேர தடையற்ற வேடிக்கையாகும், கிராமப்புற பிண்ணனியில் எடுக்கப்பட்ட இந்த படம் மனதை  தொட்டு செல்கிறது என்பதைவிட மனதை தொட்டு அப்படியே பல மணி நேரம் நிற்கிறது என்றுதான் சொல்லவேண்டும்

இது வழக்கமான தாத்தா-பேரப்பிள்ளை கதை அல்ல , மகிழ்ச்சியற்ற வயதானவர் மற்றும் சிரிப்புக் குழந்தை சிறுவன் இப்படி தொடர்பில்லாத இரண்டு நபர்களிடையே உருவாகும் பிணைப்பை இந்த படம் ஆராய்கிறது 



இந்தபடத்தை பார்த்த பின் மனதில் நினைத்தது ரஜினி மேக்கப் ஏது போடாமல் இந்த படத்தில் தாத்தா கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கலாம் அப்படி தைரியாமாக அவர் இந்த படத்தில் நடித்து இருந்தால் அவர் சினிமா நடிப்பில் இன்னொமொரு திறப்பு முனையாக இருந்து மக்கள் மனதில் இன்னும் சிறப்பாக நின்று இருப்பார் என நினைக்கிறேன். இது போன்ற கதாபாத்திரங்களைத்தான் ரஜினியேற்று அவர் நடிப்பை நிலை நாட்டனுமே தவிர இன்னும் பழைய ஸ்டைலில் நடித்தால் நஷ்டத்தைதான் சந்திக்க வேண்டி இருக்கும்

வல்லமாய் தாராயோ, கோலா கோலாய முந்திரிகா, மற்றும் மூன் மூனு வர்தாய் ஆகியோரை இயக்கிய மதுமிதாதான் இந்த படத்தை ‘KD Engira Karuppudurai’: 'கே.டி. என்கிற கருப்புதுரையை இயக்கிஉள்ளார்.

==========================
கீதா சந்திரா  அவர்களின்   கே.டி என்ற கருப்புதுரை பட விமர்சனத்தை இங்கே இணைத்து இருக்கிறேன்.. அதை படித்த பின் என்னை மாதிரி நீங்களும் கண்டிப்பாக இந்த படத்தை பார்ப்பீர்கள் என நினைக்கிறேன்..


Net flix ல் KD என்ற கறுப்புதுரை என்ற படம் பார்த்தேன். சமீபத்தில் இது போல் ஒரு அழகான உணர்வுச் சித்திரத்தைப் பார்க்கவில்லை. கோமாவில் இருந்து நினைவு மீண்ட ஒரு வயதான கிழவர் தான் பெற்ற மகன்களால் தனக்கு நேரவிருந்த ஆபத்திலிலிருந்து உயிர் தப்பி வழியில் எதிர்கொண்ட ஒரு அனாதைச் சிறுவனுடன் பயணிக்கும் ஒரு கவிதை.
குட்டியாக நடிக்கும் சிறுவன் ஒரு குதூகலப் பட்டாசு. படம் நெடுக பாட்டனும் பேரனும் சீண்டலும் , எடக்கும், பாசமுமாய் தீட்டிய அற்புத காவியம் . தாத்தனின் பிரியாணி ஆசையைப் பிசினசாக்கும் சாகசம், சீட்டியடிக்கக் கற்றுக் கொடுக்கும் குஷி, எம் ஜி யார் படத்தைப் பார்த்து பரவச நிலையில் இருக்கும் பாட்டனை ரசிக்கும் பேரனின் அழகு, அட டா படத்தின் நீளத்தளவு பதிவிலும்்சொல்லிக் கொண்டே போகலாம் . ஆனால் நீங்களும் பார்க்க வேண்டும் என்பதால் இத்தோடு நிறுத்துகிறேன்....கதையோடு இழையோடும் பின்னணி இசை அபாரம்.

படத்தின் உயிர் நாடி அதன் nativity. அவரவரது இயல்பான லுக் .... பார்க்கும் அத்தனை கிராமியப் படங்களிலும் சகலரும் கறு கறு வென்றிருக்க , சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கதாநாயகி மட்டும் விஜய் மல்லய்யாவின் காலண்டர் பெண் போல் எரிச்சலூட்டுகையில் ....... ( இது பற்றி வேறொரு சமயம் எனது நண்பனிடம் ஆதங்கப் படுகையில்்அவன் நான் பண்ணிய முறுக்கைக் காபியில் ஊற வைத்தபடி...” நீ கறுப்புங்கறதால உனக்கென்னவோ வெள்ளை ஹீரோயின்கள்னா அலர்ஜி.. நாங்களலாம் கண்ணுக்குக் குளிர்ச்சியா யாரையாச்சும் பாக்க வாணாமா என்று கடுப்படித்தான் )
படத்தில் ஹீரோயின் கூட கடைசி ஒரே ஒரு காட்சியில் வரும் எழுபது வயது பாட்டி என்பதைப் படித்தால் அவன் சத்தியமாய்்இந்தப் படத்தைப் பார்க்க மாட்டான் . ஆனால் சாணி தெளித்த கையைக் கழுவித் துடைத்தபடி ஒரு மெல்லிய நாணம் படற அவள் முகச் சுருக்கங்களில் தெரியும் காதல் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும் .
அகில உலக அளவில் பல விருதுகளைக் குவித்திருக்கும் இந்தப் படத்தில் பெரியவராக நடிக்கும் மு ராமசாமிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் , குட்டியாக நடிக்கும் நாகாவிஷாலுக்கு குழந்தை நட்சத்திரத்திற்கான விருதும் கிடைக்கவில்லையென்றால் நிச்சயம் விருதுக்கு அவமானம்.


அருமையான படத்தை இயக்கிய மதுமிதா அவர்களுக்கும் அதை அழகான முறையில் விமர்சித்து இந்த படத்தை பார்க்க செய்து மாலை பொழுதை இனிமையாக்கிய  கீதா சந்திரா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. ரஜினி படத்துக்கு நஷ்டம் எப்படி வரும்? கொஞ்சம் யோசிங்க....... ஒரு முருங்கைக்காயை 6 ரூபாய்க்கு வாங்கி, 7 ரூபாய்க்கு விற்றால் லாபம். டிமாண்ட் வந்தால் 10 ரூபாய்க்கு விற்று 4 ரூபாய் லாபம் பார்க்கலாம். 6 ரூபாய்க்கு முருங்கைக்காய் கிடைக்கும்போது, ஸ்பெஷல் மர முருங்கை என்று 100 ரூபாய்க்கு வாங்கி அதை விற்று லாபம் சம்பாதிக்க நினைப்பதால்தான் இந்தப் பிரச்சனை. ஹா ஹா. கடைசி கால சிவாஜி மாதிரி, சரியான கதை ரஜினிக்கு வாய்ப்பதில்லை.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.