Monday, June 29, 2015



என் தேசம்! என் மக்கள்! நான் !

எனது கடந்த பதிவான இந்தியர்கள் இப்போதுதான் இப்படியா அல்லது எப்போதுமே இப்படியதானா  என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதி வெளியிட்டு இருந்தேன். அதைப்படித்த ஒரு நண்பர் சார் நீங்கள் வெளிநாட்டில் வசிப்பதால் இந்தியாவை பற்றி இப்படி குறைகளை சொல்லி பதிவு இட்டு இருக்கிறீர்கள் என்று சொல்லி ஆதங்கப்பட்டார். மேலும் இது போன்ற இந்தியாவில்தானே நீங்கள் படித்து வளர்ந்தீர்கள் ஆனால் இப்ப குறை சொல்லி பதிவு இடுகிறீர்களே இது நியாமா என்று கேட்டார். அதற்கு நான் சொன்னது நம் நாட்டில்  வசிக்கும் போது அது குறைகளாக என் கண்ணிற்கு தெரியவில்லை ஆனால் மேலை நாட்டிற்கு வந்த பின் இங்குள்ள சூழலை பார்த்த பின்தான் நாம் செய்பவைகளில் எந்த அளவிற்கு தவறுகள் இருக்கின்றன என்பது நம் கண்களுக்கு தெரிகின்றது அதனால் என்னுள் எழுந்த ஆதங்கமே அந்த பதிவிற்கு காரணம் அதை தவிர இந்தியாவை எந்த வகையிலும் தரம் தாழ்த்தி பேசுவதில்லை  காரணம் இன்னும் இந்தியா என் பிறந்த தேசமே என்று அவருக்கு விளக்கம் அளித்தேன் அதன் பின் என் பதிவிற்கு கருத்து சொன்ன விமல் ராஜ் தானும் அது போல ஒரு பதிவிட்டு இருப்பதாக சொன்னார் . அதுதான் என் தேசம்! என் மக்கள்! நான் !  அதை எழுதிய விமல் இந்தியாவில்தான் வசிக்கிறார்.வெளிநாட்டில் அல்ல. இவரின் பதிவிற்கு என்ன பதில் சொல்லப் போகிறீங்க நண்பரே அவருக்கும் என்னைப் போலவே இந்தியாவைப் பற்றிய ஆதங்கம்தான்... அதை அவரின் அனுமதியுடன் இங்கே பதிகிறேன்... படித்து கருத்து சொல்லுங்கள்


என் தேசம்! என் மக்கள்! நான் !

என் தேசத்தில் படித்தால் வேலை கிடைக்காது - ஆனால் நடித்தால் நாடே கிடைக்கும்.

என் தேசத்தில் வீட்டில் கொள்ளையடித்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் லட்சம் கோடி ஊழல் செய்தவனை மூன்று ஆண்டுகளில் விடுவித்து விடுவார்கள்.

என் தேசத்தில் கொலை பாதகம் செய்தால் ஆயுள் தண்டனை கொடுப்பார்கள் - ஆனால் பிரதமரை கொல்ல உதவினால் 20 வருடங்களில் விடுதலை செய்யபடுவார்கள்.

என் தேசத்தில் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஓட்டு போட தயங்குவார்கள்- ஆனால் ஐந்து மணி நேரம் வரிசையில் நின்று இலவச தொலைக்காட்சி, விலையில்லா கிரைண்டர், மிக்சி வாங்குவார்கள்.

என் தேசத்தில் தேர்தலில் யாரை தேர்ந்த்தெடுக்க வேண்டும் என்று யோசிக்க மாட்டார்கள்- ஆனால் சூப்பர் சிங்கரில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று யோசிப்பார்கள்.

என் தேசத்தில் ஒவ்வொரு வனத்தையும் செல்வமாக பார்ப்பார்கள்-ஆனால் அந்த வனங்களை அழித்து கட்டிடம் கட்டுவார்கள்.

என் தேசத்தில் விவசாயத்தை நாட்டின் முதுகெலும்பு என சொல்வார்கள் - ஆனால் விவசாய நிலங்களை பிளாட் போட்டு விற்றுவிடும்படி செய்வார்கள்.

என் தேசத்தில் இன ஓற்றுமை பற்றி பெருமையாக பேசுவார்கள்-ஆனால் ஒரே மொழி பேசும் மக்களின் தேசத்தை இரண்டாக பிரிப்பார்கள்.

என் தேசத்தில் மத ஒற்றுமை பற்றி மேடையில் பேசுவார்கள் -ஆனால் அடுத்த மதத்து கோவிலை இடிப்பார்கள்.

என் தேசத்தில் அரசியல் சரியில்லை, அரசியல்வாதிகள் சரியில்லை என குறை கூறுவார்கள்- ஆனால் காசு வாங்கி ஓட்டை விற்று, கர்மவீரர் போன்றோரை தோற்க்கடிப்பார்கள்.

என் தேசத்தில் கருத்து சுதந்திரம் பற்றி வாய்கிழிய பேசுவார்கள் - ஆனால் ஃபேஸ்புக்கில் லைக் போட்டால் உள்ளே தள்ளி விடுவார்கள்.

என் தேசத்தில் ஜனநாயகம் பற்றி பெருமைப்பட பேசுவார்கள் - ஆனால் ஒரே குடும்பத்தினரிடம் தலைமை ஆட்சியை ஒப்படைப்பார்கள்.

என் தேசத்தில் பெண்ணியம் பற்றி பக்கம் பக்கமாக பேசுவார்கள்- ஆனால் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடு எனப் பேர் வாங்கி கொடுப்பார்கள்.

என் தேசத்தில் சாதி மத பேதம் இல்லாமல் ஒன்றுபடுவோம் என சொல்வார்கள்- ஆனால் படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் முதலில் சாதிக்கு தான் முன்னுரிமை தருவார்கள்.

என் தேசத்தில் காவல் துறை லஞ்சம் வாங்குகிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் முந்நூறு ரூபாய் ஃபைன் கட்ட வேண்டிய இடத்தில், போக்கு காட்டி நூறு ரூபாய் அன்பளிப்பு கொடுத்து தப்பிப்பார்கள்.

என் தேசத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்கிறார்கள் என குறை சொல்வார்கள்- ஆனால் பத்தாவது படிக்கும் பெண்ணுக்கு காசு கொடுத்து டிரைவிங் லைசென்ஸ் எடுத்து கொடுப்பார்கள்.

என் தேசத்தில் சினிமாவில் அரைத்ததையே அரைக்கிறார்கள் என விமர்சிப்பார்கள்- ஆனால் நல்ல படங்களை வீட்டில் டவுன்லோட் செய்து பார்ப்பார்கள்.

என் தேசத்தில் முன்னால் ஜனாதிபதியை அவமதித்தால் விட்டு விடுவார்கள்-ஆனால் சினிமாவில் ஒரு மத தீவிரவாதியை  காட்டினால் படத்தை தடை செய்ய கோருவார்கள்.

என் தேசத்தில் சமூக கருத்துகளையும், தேச பற்றினையும், நல ஒழுக்கதினையும் பற்றி நிறைய பதிவு செய்வார்கள் -ஆனால் அதை அவர்கள் மனதில் பதிய வைக்காமல், சமூக வலைதளங்களிலும், இணைய தளத்திலும் மட்டும் பதிந்து விடுவார்கள்... நம்மை போல!!!

நன்றி !!!-பி .விமல் ராஜ் அவரது   இணையதளம்  பழையபேப்பர்
Posted on Wednesday, February 19, 2014 by விமல் ராஜ் https://www.facebook.com/vimalraj86


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி !!!

    ReplyDelete
  2. யார் சொன்னாலும் வருத்தப்பட வேண்டிய உண்மை மாறாது...

    ReplyDelete
  3. வருத்தப் பட வேண்டியது என்றாலும் மாற்றப்பட வேண்டியது! மாறத்துவங்குவோம் முதல் ஆளாக!

    ReplyDelete
  4. உண்மை சுடுகிறது. சரி.. அடுத்தவன் முதலில் பூனைக்கு மணி கட்டட்டும் என்று எப்போதும்போல் விட்டுவிட வேண்டியதுதான். இந்தியாவில் இருந்தால் என்ன.. வெளினாட்டில் வசித்தால் என்ன.. சொல்வது என்னவோ உண்மைதான். தெரியாமலா சொன்னார்கள், 'உண்மை சுடும்' என்று.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.